அவள் வந்தாள்!

பரவி நிலவு பால்பொழியப்
பனியும் தண்மைத் தேன்பொழிய,
மரமும் மலையும் மலைத்திருக்க,
மண்ணும், விண்ணும் களைத்திருக்க,
விரவிக் காற்றில் மணம்வீசி
வெள்ளைப் பூக்கள் விரிகின்ற
இரவில் அவளும் நடந்துவந்தாள்
எல்லா அழகும் கடந்துவந்தாள்.
குறிஞ்சி, முல்லை, வயல்மருதம்,
கொஞ்சும் அலையின் நெய்தலென
அறிந்த நான்கு நிலத்திணைகள்
ஆர்ந்த வடிவாய் அவள்வந்தாள்.
இறைஞ்சும் எழிலின் இறைவியென
இயைந்த ஒயிலாய் அவள்வந்தாள்.
முறிந்த நெஞ்சப் புண்ணாற்றும்
மூலி கையாய் அவள்வந்தாள்!