சுமதியை, அவள் தத்தெடுத்திருந்த பெண் சுபா எங்களிடம் அழைத்து வந்தாள். சுபாவின் கையை இறுக்கிப் பற்றியபடியே சுமதி வந்தாள். மகன் முருகனும் கூட வந்தான்.
இரண்டு வருடமாகச் சுமதிக்கு அடிக்கடி தலைவலி. அத்துடன், படபடப்பு, தூக்கம் சரியாக வருவதில்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை என்பாளாம். தனிமையில் அதிகரிக்கும், கூட யாராவது இருந்து விட்டால் எந்த விதமான தொந்தரவும் இருக்கவே இருக்காதாம். அப்பாவின் மரணத்திற்குப் பிறகே
இப்படி நடப்பதாகச் சொன்னார்கள்.
மனோதத்துவ பரிசோதனையில் இந்த குணாதிசயங்கள் “ந்யூராட்டிக் டிப்ரெஷன்” (Neurotic Depression)இன் அறிகுறி என்பது ஊர்ஜிதமானது. இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டது என்பதை இங்குப் பகிரப் போகிறேன்.
சுமதி வறுமைக் கோட்டிற்குச் சற்று மேலே இருப்பவள். ஒரு காலத்தில் செழித்து வாழ்ந்த விவசாய குடும்பம். இப்போது அவள் பட்டணத்தில் வாழ்வைத் தேடி வந்ததின் விளைவு!
இன்றைய தேதியிலும் அவள் உடன் பிறந்தவர்கள் விவசாயிகள். எண்பது வயதிலும் அப்பா தன்னால் முடிந்ததைச்செய்து வருகிறார். எழுவது வயதான அம்மா, கணவருக்கு ஈடு கொடுப்பவள். கடுமையாகப் பேசி விமர்சிப்பதால், பலர் இவளுடன் உறவை முறித்துக்கொண்டார்கள்.
சுமதியின் இரண்டு அண்ணன்மார்களும் கல்யாணத்திற்குப் பிறகு தங்களுடைய குடும்பத்துடன் தனியே வசிக்கிறார்கள். அம்மாவின் புண்படுத்தும் வார்த்தைகளே இந்த முடிவிற்குக் காரணம் என்று கூறினார்கள். மூன்றாவது அண்ணன் விவசாய பொருட்கள் வியாபாரியாக இருந்தார்.
தங்கை பிரசவத்தில் இறந்துவிட்டாள். அம்மாவின் கண்டிப்பினால் அண்ணன்கள் சுமதியிடம் அதிக பாசத்தைக் காட்டினார்கள், அவளுக்குக் கல்யாணம் ஆகும் வரையில்.
அண்ணன்கள் விவசாயத்தில் கை கொடுக்க, சுமதி சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது என்ற பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வாள். சுமதியை இரண்டாம் வகுப்புடனும் அண்ணன்களை ஐந்தாம் வகுப்புடனும் படிப்பை நிறுத்தி விட்டார்கள். சுமதிக்குத் தோழிகளுடன் பேச, விளையாட அனுமதி கிடையாது.
நான்கு வருடங்களுக்கு விளைச்சல் குறைந்து விட்டதில் குடும்பம் சற்று கஷ்டப்பட்டது. விவசாயத்தின் வருமானத்தில் தான் சுமதி கல்யாணத்திற்குச் சேமித்து வந்தார்கள். அந்த சேமிப்பிலிருந்து கஷ்டத்தைப் போக்க எடுக்க வேண்டியதாயிற்று. அந்தச் சமயம் பார்த்து, சுமதியின் கல்யாணத்திற்கு வரன்கள் வந்தன. அவர்களில் ஒருவர், இருபது வயதான சுந்தரம். அவன் எந்த செலவும் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள முன் வந்தான். சுமதியைப் பற்றி கேள்விப் பட்டதால் தங்களது குடும்பத்திற்குப் பொருத்தமாக இருப்பாள் என்பதால் தான்.
கல்யாணம் ஆனது. அப்போது சுமதியின் வயது பதினாறு. சுந்தரம் குடும்பத்தினரும் விவசாயிகள். அவன் மூத்த மகன் என்பதால் தன் பெற்றோருடன் இருந்தான். கூட சுந்தரத்தின் இரு தம்பிகளுக்கும். தங்கைகளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டன.
சுந்தரத்தின் பெற்றோர் வயோதிக நிலையிலிருந்ததால் வேலைகளைப் பிள்ளைகள் பங்கு போட்டிருந்தார்கள். சுமதியின் கைப்பக்குவம் எல்லோருக்கும் பிடித்திருந்ததால், அவளுக்குச் சமையல் கட்டு என்று முடிவானது. சுந்தரம் ஆதரவாக இருந்ததால் எல்லாவற்றையும் அழகாக எடுத்துச் சென்றாள். எல்லோரும் அவளைப் புகழ்ந்து பேசினார்கள்.
வாழ்க்கை இவ்வாறு நல்லபடி போய்க் கொண்டிருந்தது. திருமணம் ஆகி ஏழு எட்டு வருடங்கள் ஓடின. குழந்தை பிறக்கவில்லை. சுந்தரம் அதை ஒரு விஷயமாகக் கருதவில்லை. ஆனால் சுமதியின் சுந்தரத்தின் சகோதரி உஷா இதைப் பற்றி தன் கருத்தைப் பேச ஆரம்பித்தாள். தன் பெண்ணை இரண்டாவது தாரமாகக் கட்டித் தருவதாகக் கூறினாள். சுந்தரம் சரியென்று சொல்லவில்லை. சுமதி மிகவும் பயந்து விட்டாள்.
உஷா மிகப் பிடிவாதமாக வற்புறுத்தினாள். திருமணத்திற்கு சம்மதித்த சுந்தரம், சுமதியை விவாகரத்துச் செய்ய மறுத்தான். மறு கல்யாணத்திற்குப் பின்னும் அங்கேயே அவள் தங்கும் படி செய்தான்.. சுமதி இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. ஏனென்றால் அவளுடைய அம்மா வீட்டைப் பொறுத்தவரை, அவரவர் தன் குடும்பத்தில் வருகிற பிரச்சனைகளை தானே சமாளிக்க வேண்டும் என்று. தீர்மானமாக இருந்தார்கள் .
சுந்தரத்திற்கு மறு திருமணம் நடந்த அடுத்த வருடமே இரண்டாவது மனைவி ஆண்மகவை ஈன்றாள். முருகன் என்ற பெயர் சூட்டினார்கள். சுந்தரமும் அவனுடைய இரண்டாவது மனைவியும் சேர்ந்து வேலைக்குப் போவதால் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சுபாவுடையதானது. இவளிடமே இருப்பதால் முருகன் அவளை “அம்மா” என்றே அழைத்தான். சுமதி பூரித்துப் போனாள்.
சுந்தரத்தின் மற்றொரு தங்கை தனக்குப் பிறந்த பெண் கருநிறம் என்றதால் அடியோடு அந்தக் குழந்தையை வெறுத்தாள். இதை சுமதி கேள்விப் பட்டதும் அந்தக் குழந்தையை தானே தத்தெடுத்துக் கொண்டாள். இவள் தான் சுபா. என்றுமே சுமதி பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டாள்.
இப்படி மூவரானது சுமதியின் உறவுகள். அந்த இன்னொரு தங்கை வசதியானவளாக இருந்ததில் எப்போதாவது பணம் கொடுப்பாள். சுந்தரம் வீட்டின் ஒரு அறையை இவர்களுக்கு என்று வைத்தார்கள். குழந்தைகளை வளர்க்க சுமதியும் , தையல், பூத் தொடுப்பது போன்ற கைத் தொழில்கள் செய்ய ஆரம்பித்தாள்.
இவ்வாறு போய்க்கொண்டு இருக்கையில் சுந்தரத்திற்கு வலது பக்கத்தில் பக்கவாதம் வந்தது. சிகிச்சை செய்து ஒர் அளவு குணமாகிக் கொண்டிருந்தான். ஆனால் வேலைக்குப் போக முடியவில்லை. சுந்தரத்தினால் இனி சம்பாதிக்க முடியாது என கருதினாள் அவனுடைய இரண்டாவது மனைவி. விவாகரத்து பெற்று அல்லது சுந்தரத்தைத் துறந்து அவர்கள் பக்கத்தில் குடியிருந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டாள்.
சுமதி தன்னால் முடிந்தவரை உழைத்து, சுந்தரத்தைப் பார்த்துக் கொண்டு, சுபா-முருகன் இருவரையும் படிக்க வைத்தாள். சுபாவிற்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்தாள். சுந்தரத்தின் இரண்டாவது தம்பி சுபாவைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தான். அவன் நடத்தை சுமதிக்குப் பிடிக்காதலால், அதைத் தட்டிக் கழித்து விட்டாள். அவன் சுமதியிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.
சுபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து முடிக்கையில் முருகன் ஸ்கூல் முடித்திருந்தான். மேற்கொண்டு டிப்ளோமா படிக்க விரும்பினான். பணப் பற்றாக்குறை. ஆனால் அவனைப் படிக்க வைக்க வேண்டும் என்று சுமதிக்கு இருந்தது. சுமதி இவ்வாறு பொறுப்புகளை தனி ஒருத்தியாக ஏற்பதைப் பார்த்து, மனம் சோர்ந்து சுந்தரம் மரணம் அடைந்தான். அன்றிலிருந்து பகிர யாரும் இல்லை என்பதை சுமதி உணர்ந்தாள். மனம் வருந்தியது.
முருகனை மேற்கொண்டு படிக்க வைக்க ஆசைப் பட்டாள். வழி தெரியவில்லை. எங்கே தன்னுடைய இயலாமையினால் படிப்பு நின்று விடுமோ என்று நினைத்து வாடிப் போனதில் சுமதிக்கு மன உளைச்சல் நேர்ந்தது. இந்த நேரத்தில் தான் சுபா அவளை எங்களிடம் அழைத்து வந்தாள்.
முருகனுக்கு தன்னால் இப்படி நேர்ந்தது என்ற குற்றப் மனப்பான்மை வாட்டியது. அவனையும் சுமதியுடன் கூடவே பார்க்கத் தொடங்கினேன். முருகன் படிக்க விரும்புவதை ஊக்கப்படுத்தும் வகையில் சுமதியை யோசிக்கச் செய்தேன். அவளுக்கு உறுதுணையாக முருகன் இருக்கும் படியான பாதைகளைப் பற்றி அவர்களை யோசிக்கச் செய்தேன்.
சுமதி அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் வங்கியில் விசாரிக்க முடிவெடுத்தாள். முருகன் தன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் பேச முடிவெடுத்தான். மேற்கொண்டு முன்னேற பாதை இருக்கிறது என்று தெரிய வந்ததே சுமதியை அசுவாசப் படுத்தியது. இரண்டு நாட்களில் திரும்பி வந்தார்கள். வங்கிக்குத் தேவையான ஆதரவை சுமதியின் பூ வாங்கும் வாடிக்கையாளார் ஒருவர் செய்வதாகச் சொன்னாள்.
முருகன் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததை காலேஜ் தலைமை ஆசிரியர் கவனித்து படிப்பிற்குப் பண உதவி (scholarship) இருப்பதைப் பற்றி கூறினார். இதுபோன்ற சலுகைகளைப் பற்றிய பல தகவல்களைத் தந்தார். இந்த தகவல்கள் புரிய வர, சுமதி அமைதி அடைந்தாள்.
அம்மாவும் மகனும் (வளர்ப்பு மகன் என்ற சாயல் எதிலும் தென் படவே இல்லை) மிக சந்தோஷப் பட்டார்கள். முருகனின் கவலை, தான் படிக்க வெளியூர் போனால் யார் தன் அம்மாவைப் பார்த்து கொள்வார்கள் என்று. இருவருக்கும் தெரியாமல் சுபா என்னைச் சந்தித்தாள்.
சுபா தன் கணவனுடன் வந்தாள். இருவரும் அந்த இரண்டு வருடம் சுமதி தங்களுடன் இருப்பதை விரும்பவதாக தெரிவித்தார்கள். சுமதி இதை ஒப்புக் கொள்ள மறுப்பதாகச் சொல்லி சுபா வருந்தினாள். இவர்களை சுமதி முருகனுடன் சேர்ந்து வரச்சொல்லி அனுப்பி வைத்தேன்.
அதற்கு முன்பு சுமதி ஸெஷனுக்காக என்னிடம் வந்தாள். தனக்கு மனத் தோழனாக சுந்தரம் இருந்ததைப் பற்றி விளக்கினாள். சமீப காலமாக தனக்குப் பேசி, பகிர யாரும் இல்லாதது போல இருப்பதாகக் கூறினாள். இதை விலாவாரியாகப் பேச தன்னுடைய கூடப் பிறந்தவர்களைப் பற்றி பகிரச் செய்தேன்.
கல்யாணம் ஆகும் வரையில் கூடப் பிறந்தவர்களுடன் பாசமாக, மன ஒற்றுமையுடன் இருந்ததை ஞாபகம் செய்யச் செய்ய அவர்களுடன் உறவை மீண்டும் புதுப்பிக்க நினைத்தாள். செய்தாள். இதுவும் மனதிடத்தை அதிகரித்தது.
கூடப் பிறந்தவர்களை சந்திக்கையில் சுமதி பலவற்றை கவனித்தாள். குறிப்பாக, ஒவ்வொருவரும் தன்னுடைய பிள்ளைகளுடன் இருப்பதை. சுமதியை தங்களுடன் சுபாவும் கணவரும் அழைத்து வந்தார்கள். அவர்களுடன் இந்த இரண்டு வருடம் சுமதி இருந்தால் அது எப்படி தனக்கும் உதவும் என்பதை வர்ணித்தார்கள். சுபாவும் கணவரும் உற்சாகத்துடன் சொன்னதே சுமதியை உருக்கியது.
முருகனின் மேல் படிப்பு பக்கத்து டவுனில் அமைந்தது. அங்கேயே ஹாஸ்டலில் இருக்கச் சொன்னார்கள். இருப்பதற்கு முருகன் முடிவு செய்தான். அடுத்த மூன்று செஷங்களில் சுபாவுடனும் கலந்து ஆலோசித்து அம்மாவின் இருப்பிடம், நிம்மதி பற்றி முடிவெடுக்கப் பட்டது. சுபாவுடன் இருக்க சும்டஹியிடம் பரிந்துரைத்தான். சுமதி சுபாவுடன் இருக்க ஒப்புக் கொண்டாள். மனம் நிம்மதி அடைந்தாள்.
சுந்தரம் இல்லாததற்கு ஈடுகட்ட முடியாது எனத் தோன்றியது. சுபா வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எட்டு பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு விட்டு அழைத்து வருவதென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டாள். இனி மீதி வாழ்க்கை இப்படி பல பிள்ளைகளுக்காக என்ற எண்ணத்தை ஏற்றுக் கொண்டு மனத்தெளிவுடன் வாழ்ந்தாள் சுமதி.