என்ன பிடிக்கும் ? வாட்ஸ் அப்பில் வந்தது

 மனதைத் தொடும் கதை. 

வாட்ஸ் அப்பில் வந்தது

எழுதியது யார் என்று தெரியவில்லை 

யாராயிருந்தாலும் அவர் நம் பாராட்டுக்குறியவர். 

 

Image result for சிறுகதை

என்ன பிடிக்கும் ?

 

“அண்ணா, டாக்டர்ஸ் என்னதான் சொல்றாங்க?” ராதுவின் குரலில் பதட்டம்.

” அதேதான்மா. அப்பாவுக்கு ஹார்ட் பம்பிங் ரேட் ரொம்ப குறைச்சலா இருக்கு. ஏற்கெனெவே ரெண்டு சர்ஜரி ஆனதால இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. முடிஞ்ச அளவு மருந்து கொடுத்தாச்சு. இருக்கற வரைக்கும் அவரை சந்தோஷமா வச்சிக்குங்கன்னுதான் சொல்றாங்க”.

” இப்போ அப்பா எப்படி இருக்கார்?”

“நார்மலா எப்பவும் போலதான் இருக்கார். இந்த நிமிஷம் வரை பைன்”.

” அண்ணா, நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நான் பசங்களை கூட்டிட்டு இன்னும் ரெண்டு நாள்ல வரேன். நீ ரகு அண்ணாவையும் எல்லோருடனும் வரச்சொல்லு. எல்லாருமா சேர்ந்து அப்பாவோட நாலு நாள் இருக்கலாம். “

” சரிடாம்மா . நான் அவன்கிட்ட பேசறேன்.”

” அம்மாவுக்குத் தெரியுமா?”

” தெரியாது. ஹாஸ்பிடல் போனோம். சரியாகி வந்துட்டார்னுதான் நினைச்சிண்டு இருக்கா”.

” அப்படியே இருக்கட்டும். அம்மாவை கவலைப்படுத்த வேண்டாம்”.

” சரி, நீ டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லு. நான் காரை எடுத்துண்டு ஸ்டேஷனுக்கு வரேன்”.

சாப்பிடும்போது அம்மாவிடமும் அப்பாவிடமும் ராதுவும் ரகுவும் வருவதைப் பற்றி சொன்னான் ரவி. அவ்வளவுதான், அம்மாவுக்கு இரண்டு இறக்கை முளைத்த மாதிரி ஆகி விட்டது. அப்பாவின் மலர்ந்த முகம்தான் அவருடைய சந்தோஷத்தின் அறிகுறி.

” எனக்கே ஒரு வாரமா அவா ரெண்டு பேரையும் குழந்தைகள் எல்லாரையும் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. நல்லதாய் போச்சு. கொஞ்சம் சாமான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன். நீ சித்த போய் மெஷின்ல அரைச்சுண்டு வந்துடு. குழந்தைகளுக்கு கொஞ்சம் பட்ஷணம், அப்புறம் கொஞ்சம் கஞ்சி மாவு, சாம்பார் பொடி, புளிக்காய்ச்சல், சேவை மாவு. ரகு பொண்டாட்டிக்கு என் கை முறுக்கு ரொம்ப பிடிக்கும் …”

” அம்மா,அம்மா… நிறுத்து கொஞ்சம் மூச்சு விடு..எல்லாம் பண்ணலாம். எங்க எல்லாருக்கும் என்ன பிடிக்கும்னு சொல்றியே, அப்பாவுக்கு என்னல்லாம் பிடிக்கும் சொல்லு”.

உங்கப்பாக்கு நான் என்ன பண்ணி குடுத்தாலும் பிடிக்கும்தான்”. கீற்றாய் மின்னி மறைந்த நாணம் கலந்த பெருமை அவள் வைரத்தோடை மங்கச் செய்தது.

” சரி, அப்பாக்கு பிடிச்சதா ரெண்டு ஐட்டம் சொல்லு பார்ப்போம்.”

” நான் தினமும் அவர் இலைல எஸ்ட்ராவா என்ன போடறேன்னு பார்த்து தெரிஞ்சுக்கோடா”. அம்மா சிரித்தபடி எழுந்து சென்றாள்.

ரவிக்கு ஒரு கணம் அம்மாவை நினைத்து கவலையாக இருந்தது. எப்படி தாங்குவாள்?

ராதுவும் ரகுவும் வந்தவுடன் வீடு களை கட்டி விட்டது. அம்மா சமையலறையோடு ஐக்கியம் ஆகி விட்டாள். அப்பாவை சாக்கு வைத்து எல்லோருக்கும் பிடித்தது எல்லாம் அம்மா செய்து தள்ளிக்கொண்டிருந்தாள். அப்பா எல்லோருடனும் சிரித்துப் பேசி மிக மகிழ்ச்சியாக இருந்தார். அப்பாவுக்குப் பிடித்த பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆளாளுக்கு ஆசையாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது ஷர்ட்டும் புடவையும் வாங்கினார்கள். வீடு வெகு நாட்கள் கழித்து கூச்சலும் கேலியும் விளையாட்டும் அமர்க்களமுமாய் ஆரவாரப்பட்டது. அப்பாவின் உடல்நிலையைப் பற்றிய கவலை கூட சற்று மறந்து விட்டது. சனிக்கிழமை அன்று வெளியில் போவதாகத் திட்டம் போட்டார்கள்.

“எனக்கு எல்லாருடனும் பீச் போகணும்னு ஆசை. அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாம். அம்மாவுக்கு ஒரு வேளை ரெஸ்ட்டா இருக்கட்டும்.” அப்பா சொன்னார்.

அன்றைய பொழுது மிக இனிமையாக கழிந்தது. மகிழ்ச்சித் தருணங்கள் எல்லாம் டிஜிட்டல் உதவியுடன் அமரத்துவம் பெற்றன. ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள். ” அப்பா, என்ன சாப்பிடறேள்?”
அப்பாவுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தார்கள்.

” அம்மா, உனக்கு என்ன வேணும்?”
” எனக்கு சாம்பார் இட்லி வேண்டாம்,காரமா இருக்கு.” ஒரு வாண்டு கத்தியது.
” இதே வேலை..எதையாவது ஆர்டர் பண்ண வேண்டியது, ஒரு வாய் சாப்பிட்டுட்டு வேண்டாங்க வேண்டியது. ” ராது குழந்தையிடம் சிடுசிடுத்தாள்.
” குழந்தையை வையாதே. நான் அதை எடுத்துக்கறேன். அவனுக்கு வேணுங்கிறதை வாங்கிக்கொடேன்” அம்மா .
” உனக்கு வேணும்ங்கிறதை சொல்லும்மா. இவனை விடு”.
” பரவாயில்லை, எனக்கு இட்லி போதும், அவன் கேட்கிறதை ஆர்டர் பண்ணு “.
குழந்தைகள் மிச்சம் மீதி வைத்ததை அம்மாவும் ராதுவும் பகிர்ந்து கொள்ள ஒரு வழியாக டின்னர் முடிந்தது.

திரும்ப வரும்போது அப்பா மிக நெகிழ்ச்சியாக இருந்தது தெரிந்தது.
இரவு தூங்குமுன் அம்மாவிடம் சொன்னார்.
” ரொம்ப நாள் கழிச்சு குழந்தைகள் எல்லோரோடும் இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யறதுகள். எத்தனை பேருக்கு இது வாய்க்கும்?”
” நீங்க சொல்றது சரிதான்”. அம்மா ஆமோதித்தாள்.
” ஆனா எனக்கு ஒரு சந்தேகம். எப்பவும் அப்பா, இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது, உடம்புக்கு ஆகாதுன்னு சொல்ற பசங்க இப்ப என்ன ஒரு ரெஸ்ட்ரிக்க்ஷனும் இல்லாம ஓவர் உபசாரம் பண்றதுகளேன்னுதான்.”
” ஒரு ரெண்டு நாள் எல்லாரும் சேர்ந்து இருக்கறதுனாலதான் இதெல்லாம். அப்புறம் நானே உங்க ரெகுலர் டயட்டுக்கு மாத்திடுவேன்”. அம்மா சிரித்தாள்.
“அதானே பார்த்தேன், சரி , தூங்கலாம். டயர்டா இருக்கு, நாளை காலம்பற மெல்ல எழுந்துக்கோ. லீவு நாள்தானே”.
” பார்க்கலாம். அதுவாவே சீக்கிரம் எப்பவும் போல முழிப்பு வந்துடும்.”
ஆனால் மறுநாள் காலை அம்மாவுக்கு சீக்கிரம் முழிப்பு வரவில்லை. எல்லோரும் எழுப்பியும் அவள் முழித்துக் கொள்ளவே இல்லை.
வீடு உறைந்து போனது. யாருக்கும் அம்மாவின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. அப்பா அப்பான்னு அம்மாவை கவனிக்காம விட்டிட்டோமோ, ஒரு நாள் கூட ஒரு வலின்னு கூட சொன்னது இல்லையே என்று புலம்பி மருகினார்கள். அதிர்ச்சியிலும்,துக்கத்திலும் பத்து நாட்கள் போனது தெரியவில்லை.
” அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொன்னால் சமையல்ல சேர்த்துடலாம்”.சமையல் மாமி ராதுவிடம் கேட்டார்.
“அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?…ரகு அண்ணா நீ சொல்லேன், அம்மாவுக்கு என்ன பிடிக்கும்? நான் இங்கே வரும்போதெல்லாம் அம்மா எனக்கு பிடிச்சதை செய்வா. அவளுக்கு என்ன பிடிக்கும்னு இப்போ ஒன்னும் தோணலியே..”
” அம்மாவுக்கு என்ன பிடிக்கும் ? ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்வாளே தவிர, அவளுக்குப் பிடிச்சதை கவனிக்கலையே, ரவி, நீ சொல்லு, அம்மாக்கு என்னல்லாம் பிடிக்கும் ?”
” ம்ம்..எப்பவும் எல்லாருக்கும் போட்டுட்டு அம்மா தனியாத்தான் சாப்பிடுவா..எனக்கு இது பிடிக்கும்னு எதுவும் அவ பண்ணினதா தெரியலையே..கடவுளே, என்ன இது..அம்மாக்கு என்ன பிடிக்கும் …”
” அப்பா, அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?”
” அம்மாவுக்கு… அம்மாவுக்கு என்ன பிடிக்கும்”?
*

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.