ஒட்டாவா வில் ஒருநாள்!
ஒரு வெள்ளிக்கிழமை மாலை, யூ எஸ் ஸிலிருந்து கனடாவின் ரொரன்டோ வந்து சேர்ந்தேன். ஏர் கனடா அலுங்காமல் வானில் ஏற்றி இறக்கியது – வெஜிடேரியன் என்று, மஞ்சள் கலரில் உப்பு சப்பில்லாத ஒரு சாதமும், பன்னீர், காலிஃப்ளவர் போட்ட சப்ஜியும், பல்லை உடைக்கும் பிரட்டும், பழத்துண்டுகளும் கொடுத்தார்கள். ரோஸ்டட் பாதாம், முந்திரி பரவாயில்லை – அருந்திய பழரஸ பானங்கள் குறித்து நான் எழுதுவதாயில்லை!
ஒரு நாள் லோகல் டவுன் டவுன் (Downtown) சுற்றிவிட்டு, மறுநாள் ஞாயிறு அதிகாலை 8 மணிக்கு (!) தரைவழி கிளம்பினோம். கிட்டத்தட்ட 450 கி.மீ தொலைவில் உள்ள ஒட்டாவா (அட்டாவா என்கிறார்கள் இங்குள்ளவர்கள் – Ottawa ) சென்று, மறுநாள் திரும்புவதாகத் திட்டம்.
சாலைகள், கார்கள், ரூல்கள் எல்லாம் அமெரிக்கா போல்தான். சாலையின் இரு புறமும், அடர்ந்த பனி – ஸ்னோ – வெள்ளைப் பஞ்சு மெத்தை விரித்தாற்போல்! இலைகள் ஏதுமின்றி, வானை நோக்கிய கிளைகளுடன் மரங்கள், கிருத்துமஸ் மரங்கள் – கோன் வடிவில், அடர்ந்த பச்சை நிறத்தில், ஊசி முனைகளுடன் தட்டையான இலைகளுடன் – ஸ்காட்ஸ் பைன் மரங்கள் – பனித்தரையைத் துளைத்து வெளியே வந்தது போல் பனி போர்த்தி நின்று கொண்டிருந்தன. ஓக், லிண்டேன், வால்நட், ஏழெட்டு வகை ‘ஃபர்’ மரங்கள் இந்தப் பனிப் பிரதேசத்தில் காணப்படுகின்றன! போட்டோக்களிலும், ஆங்கிலப் படங்களிலும் பார்த்தது – நேரில் அதிசயமாயும், மனதுக்கு குளிர்ச்சியாயும் இருந்தது! கார் செல்லும் வேகத்தில், எதிரே வழுக்கிச்செல்லும் பனிபடர்ந்த இடங்களும், மரங்களும் மிகவும் ரம்யமான காட்சிதான்!
இங்கு ‘ஸெமி காண்டினெண்டல்’ சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை குளிரும், பனிப் பொழிவும் – ஏப்ரல் முதல் ஈரப்பதம் நிறைந்த கோடை! ஜனவரியில் குளிரும், பனியும், காற்றும் அதிகமாக இருக்குமாம் – (-5.4 ‘F to -21.6’F)!
ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் ஒட்டாவாதான் கனடாவின் தலை நகரம்! கலை, கலாச்சாரம், கிரியேட்டிவிடி நிறைந்த அழகிய நகரம். இங்குள்ள மியூசியம், காலரிகள் தேசீய அளவில் புகழ் பெற்றவை.
ஒண்டாரியோ வின் தென்கிழக்கில், ஒட்டாவா நதியின் தென் கரையில், காடின்யூ விலிருந்து க்யூபெக் வரை அமைந்துள்ளது ஒட்டாவா நகரம் (2790 sq km பரப்பளவுள்ளது). இது ‘ரிடெயு’ நதியும், ‘ஒட்டாவா’ நதியும் சேருகின்ற இடம்! இந்த நதிகள் போக்குவரத்துக்கும், நீர் மின்சக்தி எடுக்கவும் பயன்படுகின்றன!
பிரிட்டிஷ் எஞ்சினீயர் லெப்.கலோனல் ஜான்பை என்பவர், ரிடெயு நதியையும், ஒட்டாவா நதியையும் ஒரு கெனால் (203 கி மீ ) மூலம் இணைத்தார் – போக்குவரத்துக்காக. ஒட்டாவா நதியின் தென்கரையில், தனக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்கும் என ஒரு கிராமத்தை அமைத்தார். அது அவர் பெயரிலேயே ‘பைடவுன்’ என்றழைக்கப்பட்டது. 1855 ல் ஒட்டாவா நகரமாக சேர்க்கப்பட்டது!
‘அல்கான்குவின்’ என்னும் நேடிவ் அமெரிக்கர்கள் வியாபார நிமித்தம் ஒட்டாவா நதிக்கரையில் குடியேறியதும், 1613 ல் சாமுவேல் டி சாம்ப்ளயின் இந்த இடத்தை ‘நியூ ஃப்ரான்ஸ்’ எனப் பெயரிட்டதும் வரலாறு. 1857 ல் ஒருங்கிணைந்த கனடா, பிரிட்டிஷ் காமன்வெல்த்தின் டொமினியன் (அரசுரிமை) ஆயிற்று. விக்டோரியா மகாராணியால் ‘ஒட்டாவா’தலை நகரமாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஆங்கிலம், ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
ஒழுங்காக பராமரிக்கப்பட்ட சாலைகள், வான் முட்டும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள், கடைகள், ரெஸ்டாரெண்டுகள், வண்ண மயமான நியான் விளக்கு போர்டுகள், தலை முதல் கால் வரை மூடிய விண்டர் ஆடைகளில் மனிதர்கள் ( குளிருக்கு அஞ்சாத பெண்கள், அரை டிராயரில் அலைந்ததையும் பார்க்க முடிந்தது – நேடிவ் கனடா மக்களைக் குளிர் கண்டு கொள்வதில்லையாம்!). கையில் ஒரு காபி அல்லது பீர் டின் சகிதம், வாய் வழி குளிர்ப் புகை வர, எதையும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்த மக்கள்! பஸ்களும், தரையில் வழுக்கிச் செல்லும் மாடர்ன் டிராம் களும் அழகு! அண்டர்கிரவுண்ட் ரயில் அதற்கான ஸ்டேஷன் மேலே மெயின் சாலையில் – தேவைக்கேற்ப பயணிக்கலாம்!
போகிற வழியில் 70 – 80 மைல்களுக்கு ஒன்று வீதம், EnRoute என்னும் – (சொவனீர் ஷாப், காபி ஷாப் – Tim Hortons ல் கிட்டத்தட்ட நம்ம ஊர் காபி கிடைக்கிறது! – ரெஸ்ட் ரூம்கள்) – பயணிகள் சிறிது இளைப்பாறும் இடம் உள்ளது. விலை கூட என்றாலும், நன்கு பராமரிக்கப்பட்ட இடங்கள்!
ஒட்டாவா வில் மதியம் லஞ்ச் எதிர்பாராதது நம்ம ஊர் மலையாள சேச்சி உணவகம்
Thali – coconut lagoon –
சோறு , பூர இரண்டு , சப்ஜி , பப்படம் , சாம்பார் , தயிறு
என அமர்க்களம்!
சிரித்த முகத்துடன் (சந்தனம் மிஸ்ஸிங் )
உபசாரம் செய்த சேச்சிக்கு வயது இருபத்தைந்துக்குள்தான்!
பொடி நடையாக அருகே இருந்த பார்லிமெண்ட் கட்டிடம் சென்றோம். சுற்றிலும் பனி. மிகப் பழைய கட்டிடங்கள். மணிக் கூண்டு. வாசலில் ஏதோ ஒரு கட்சியினர் கொடிகளுடன் அரசுக்கு எதிரான கோஷங்கள் போட்டபடி நின்றிருந்தார்கள். போலீஸ் பந்தோபஸ்த்து, பந்தல், வாழ்க ஒழிக கூச்சல்கள், தலைமுறை சொல்லும் பேனர்கள் எதுவும் கிடையாது – ‘இதெல்லாம் ஒரு போராட்டம்’ என்றது மைண்ட் வாய்ஸ்!
The centennial flame – பார்லிமெண்ட் முன்பு ஒரு ஜோதி எரிந்துகொண்டிருக்கிறது – 1966 டிசம்பர் 31 ல் பிரதம மந்திரி லெஸ்டர் பி பியர்சன் முதன்முதலாக ஏற்றியது – முதல் 100 வருட கூட்டாட்சி நிறைவுக்கு! 2017 டிசம்பர் 13 ல் ஜஸ்டின் ட்ருடீன், 150 ஆண்டு நிறைவுக்கு, மீண்டும் ஜோதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜோதியைச் சுற்றி மாகாணங்கள் கூட்டமைப்பில் சேர்ந்த தேதிகள் பூவின் இதழ்கள் போன்ற வடிவில் குறிக்கப்பட்டுள்ளன.
கருநீல யூனிஃபார்மில், இடுப்பில் வாக்கி டாக்கியுடன் நின்றுகொண்டிருந்த செக்யுரிடி முக மலர்ச்சியுடன் பார்லிமெண்ட் டூருக்கு அனுப்பி வைத்தார். மினி ஏர்போர்ட் போல் ஒரு செக்யூரிடி செக் – பிறகு உள்ளே கைடுடன் சென்றோம் – கிரே கலர் யூனிஃபார்மில், வட்டமான முகத்தில் சிறு வட்ட ஷெல் ஃப்ரேம் கண்ணாடியுடன், ரெடிமேட் புன்னகை வீசியபடி வந்த கைட் மூன்று இடங்களில் நின்று பார்லிமெண்ட், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கூட்டம் நடக்கும் விதம், கமிட்டி மீட்டிங் நடக்கும் இடம் எல்லாம் காண்பித்தபடி, விவரித்தார். கேள்விகளுக்கு பதில் அளித்தார். பார்லிமெண்டின் மசோதாக்கள் கமிட்டியில் விவாதிக்கப்பட்டு, இறுதியில் பிரிட்டிஷ் ராணியின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாவதை விளக்கினார்! அங்கும் அன்பார்லிமெண்டரி வார்த்தைகள் பேசப்படுவதையும், அவை எவ்வாறு சபாநாயகரால் தடுக்கப் படுகின்றன என்பதையும் விவரித்தார். எங்கும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரிதான் என்று நினைத்தேன் – சபாநாயகரின் வானளாவிய அதிகாரம் பற்றிப் பேசவில்லை! உள்ளே, தலையில் குல்லாய் எதுவும் போடக் கூடாது என்றாள் – அங்கே பார்லிமெண்டிற்கு அளிக்கப்படும் மரியாதை வியக்க வைத்தது. மறக்க முடியாத அனுபவம்.
அருகருகே உள்ள இரண்டு, மூன்று கட்டிடங்கள் – குறுக்கே செல்லும் நீரோடைகள் பனியில் உறைந்து கிடந்தன. பார்லிமெண்ட் உறுப்பினர்கள் ‘ஸ்கேடிங்’ செய்தவாறு வருவார்களாம்! பழைய கட்டிடங்களின் அழகும், அமைப்பும் மாறாமல், புதிய வசதிகளைச் செய்து கொள்கிறார்கள்! நமது ஊரில் இடிக்கப் பட்ட புராதன கட்டிடங்கள் நினைவில் நிழலாடின!
கனடாவின் அத்லெட் டெர்ரி ஃபாக்ஸ், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக மேற்கொண்ட ‘ஓட்டப் பயணம்’ – அவர் புற்றுநோயால் ஒரு காலை இழந்தவர் – அவரது மனித நேயம், அவர் பெயரால் உலகம் முழுதும் நடத்தப்படும் ஓட்டங்களும், கிடைக்கும் நிதி உதவியும் வியக்க வைக்கின்றன. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் (23 வயதில் இறந்து விடுகிறார்) அவரது சிலை ஒன்று பார்லிமெண்டுக்கு எதிரில் வைத்துள்ளார்கள். மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய சிலை!
Major’s Hill Park – ‘நேஷனல் காபிடல் கமிஷன்’ஆல் பராமரிக்கப் படுகிறது. இதில் பார்லிமெண்ட்டும் சுற்றுப்புற இடங்களும் அடங்கும்.
இரவில் கை கால்கள் விறைத்துவிடும் குளிர் – காற்று வேறு ஊதி, ஊதிக் குளிரை அதிகரிக்கும். இரண்டு மூன்று லேயர் உடைகள் அவசியம்! மரங்களில் சீரியல் விளக்குத் தோரணங்களும், கடைகளின் நியான் விளக்கு போர்டுகளும், தூரத்தில் தெரியும் கட்டிடங்களும், உறைந்த பனிப் பொழிவுகளும், பனிகட்டி ஆறுகளும் – கண்களுக்கு விருந்துதான்!
நிறம் மாறும், ஆளுயர எழுத்துக்களில் OTTAWA – முன் நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்! 170 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் ‘பார்’, புகையிலைக்கான தனிக் கடை ‘Mr Smoke’ எனப் புருவம் உயர்த்தும் இடங்கள்.
குளிரில் பிச்சை எடுத்துக் காலம் தள்ளும் ‘ஹோம்லெஸ்’ மனிதர்கள் இங்கும் உண்டு.
மறுநாள் காலை சிறிது தாமதமாகக் கிளம்பினோம் – வந்தவழியே திரும்பினோம். காலை என்பதால் வீடுகளும் பனித் தொப்பிகளைக் கழற்றாமல் எங்களைப் பார்த்துச் சிரித்தன!
வழியில் ‘கோரா’ என்ற இடத்தில் ‘ப்ரஞ்ச்’ (காலை, மதிய உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்து உணவு!) சாப்பிட்டோம். காலை 5 முதல் மதியம் 3 வரை மட்டும் இயங்கும் இந்த உணவகங்கள் பிரசித்திபெற்றவை! பிரட், பன், கேக்குகள், வெஜ் சாலட்ஸ், பழங்கள், ஜூஸ் போன்றவை மட்டும். ஒரு முறை சாப்பிட்டால், அடுத்து இரண்டு வேளைக்குப் பசிக்காது – அவ்வளவு சுவை மற்றும் அளவு!!
பார்க்க வேண்டிய இடம் ஒட்டாவா!
ஜெ.பாஸ்கரன்.