குவிகம் பொக்கிஷம் கர்வத்தின் விலை – உருதுக்கதை -சிராஜ் அன்வர்

Image result for சிப்பியும் காகமும்Image result for சிப்பியும் காகமும்

ஒரு முத்து மதிப்பு மிக்கதாக இருந்தால், அது விலை மதிப்பற்றது என்பார்கள். முத்துக்கள் சிப்பிப் புழுக்களில் விளைகின்றன. புழுக்கள் சிப்பிகளுள் வசிக்கும். அவை சமுத்திரத்தின் அடியில் கிடக்கும். அப்படிப் பட்ட சிப்பிப் புழு ஒன்றின் கதை தான் இது.

இந்தப் புழு தன்னிடம் தானே பெரும் மகிழ்வு கொண்டிருந்தது. உலகத்திலேயே தான் தான் அதிமுக்கியமான ஜீவன் என அது நம்பியது. உண்மைதான், பட்டுப் புழுவும் பயனுள்ளதே, ஆனால் பட்டு, முத்துக்களைப் போல் அதிக விலை பெற்றுத் தருவதில்லை. எனவே தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது தகும் என்று சிப்பிப் புழு கருதியது.

ஒரு நாள், கடலில் பெரும்புயல் வீசியது. அலைகள் உயரமாய், வீசிக் கொண்டு வெறியோடிருந்தன. இயற்கையே பயங்கரமாக தோன்றியது. அதனால் நமது சிப்பிப் புழு மென்மையான தன் கூட்டை மூடிக்கொண்டு, கடலின் கரையில் உறுதியாய்க் கிடந்தது. முயன்று, பாதுகாப்புக்காகக் கரைக்குப்போவது தன் தகுதிக்குக் கீழானது என்று அது எண்ணியது. அலைகள் வலிதாக இருந்ததால், அதன் தீர்மானத்துக்கு மாறாக, புழுவும் அதன் சிப்பியும் வாரி எடுக்கப்பட்டு கரை மீது எறியப்பட்டன. திறந்த கடற்கரையில் தான் இருப்பதைக் கண்ட புழு, எச்சரிக்கையாகத் தன் சிப்பி மூடியை உயர்த்தியது இடுக்கு வழியே உலகைப் பார்த்தது. அப்படி அது பார்க்கும் போதே, மற்றொரு பெரிய அலை அதைத் தூக்கி மேலும் தள்ளி மணலில் விட்டெறிந்தது. இப்போ, உண்மையிலேயே கலவரமான நிலைமை தான் அலைகள் அதன் மேலே புரண்டன; அதை உருட்டிப் புரட்டின. ஆயினும், அதை மறுபடியும் கடலுக்குள் இழுக்கப் போதிய பலம் அவற்றில் எதற்கும் இல்லை. அப்பாவி சிப்பிப் புழு அந்த இடத்திலேயே கிடந்தது. கடலுக்குள் திரும்பிப் போக வழியேயில்லை. அது மிகவும் கோபம் கொண்டது.

கரை அருகில் ஒரு சிறு மரம் நின்றது. அதில் ஒரு காகம் நெடு நேரமாக இருந்து, சிப்பிப் புழு படும் பாட்டைக் கவனித்தது. முடிவில், அது கீழே வந்தது. தன் அலகால் சிப்பி மீது தட்டி, “யாரது உள்ளே? கதவைத் திற” என்று அதட்டலாய் கூறியது.

சிப்பிப் புழு அதிருப்தி அடைந்தது. யாரோ மோசமான கழிசடை என்னைத் தொந்தரவு செய்கிறது” என்று அது தனக்குள் சொல்லிக் கொண்டது. பிறகு, “யார் அது?” என்று கத்தியது.

“நான் கழிசடை இல்லை. நான் ஒரு காகம் அதிலும் புத்திசாலிக் காகம். கதவைத் திறந்து வெளியே வா.”

“நான் ஏன் வெளியே வரவேண்டும்?”

“சும்மாப்பேசி மகிழ, அவ்வளவு தான் என்று காகம் மென்மையாய் சொன்னது.

“எனக்குப் பேச நேரமில்லை. நான் வெளியே வரவில்லை.”

“நல்லது. ரொம்ப சரி. ஆனால் அங்கே உள்ளே நீ என்ன பண்ணுகிறாய்?”

“நான் முத்து உண்டாக்குவதில் கருத்தாக இருக்கிறேன். மேலும், உன்னைப் போன்ற அசிங்கமான அழகற்ற ஒரு ஜந்துவுடன் நான் ஏன் பேசவேண்டும்?” என்று சிப்பிப் புழு மிடுக்காகக் கூறியது.

“ஒகோ-எவ்வளவு உயர்வு!” என்று காகம் சிரித்தது. “என் அருமை நண்பனே, நான் விரும்பியதெல்லாம் கடலின் அமைப்பு, அளவு பற்றிய சில கேள்விகளை உன்னிடம் கேட்கலாம் என்பது தான். இந்தப் பரந்த உலகம் பற்றிய சில விஷயங்களை உன்னிடம் சொல்லவும் விரும்பினேன்.”

“ஏனோ”

“ஏனென்றால், எனக்கு அறிவியலில் அதிக ஆர்வம். நான் ஒரு பல்கலைக்கழகத்தின் கூரை மேல் வசிக்கிறேன். அறிவியல் பேராசிரியரின் சொற்பொழிவுகளைக் கேட்கிறேன். அதனால் அறிவியலில் எனக்கு விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் கடல் பற்றியும், அங்கு நடப்பது குறித்தும் கேட்டறிய விரும்புகிறேன். புறா முட்டைகள், குருவி முட்டைகள் எல்லாம் அங்கு உள்ளனவா?”

“என்ன பேத்தல்” என்று வெடுக்கெனப் பேசியது சிப்பிப் புழு. “புறாக்களும் குருவிகளும் கடலில் இருப்பது போல் தான்!”

“அதைத் தானே நான் உன்னிடம் கேட்டறிய விரும்பினேன்.”

“மடத்தனமான கேள்விகள் கேட்காதே” என்றது சிப்பிப் புழு. “கடலில், என்னை போல், லட்சக்கணக்கான சிப்பிகள் இருக்கின்றன. ஆனால், அனைத்தினும் நானே பெரியவன். அதனால் நான் மற்ற சிப்பிகளுடன் பேசுவதில்லை. ஆயிரமாயிரம் வகை வர்ணமீன்கள் இருக்கின்றன; பல்லாயிரம் வகைச் செடிகள் இருக்கின்றன. அவ்வளவுதான். உன்னைப் போன்ற முட்டாள்தன அசட்டுப் பிராணிகள் அங்கு கீழே இல்லை.”

காகம் சிரித்தது. நீ என்னை முட்டாள் என்பதில் எனக்கு கவலை யில்லை. உண்மையில் நான் முட்டாள் இல்லை. நான் ஒரு காகம்- அதிலும், புத்திசாலிக் காகம், ஆனால், நண்பனே, நீ இதை எல்லாம் உன் சிறிய பொந்துக்குள் இருந்தபடியே சொல்கிறாயே, ஏன் நீ வெளியே வரக்கூடாது?”

“உனக்கு நல்ல பண்பு கிடையாதா? என்னுடன் நெருக்கமாய்ப் பேச உனக்கு என்ன துணிச்சல் நான் உன் நண்பன் இல்லை.”

“நீ கடல் அரசன் போல் அல்லவா பேசுகிறாய்!”

“சந்தேகம் இல்லாமல்-நான் தான் முத்துக்களை உண்டாக்குகிறேன். அது கடலுக்குக் கீர்த்தி சேர்க்கிறது. எல்லாம் என்னால் தான்” என்றது சிப்பிப் புழு.

காகம் குறும் சிரிப்புடன் சொன்னது: “அப்படியானால் நான் அவசியம் பார்க்க வேண்டும். இப்படி ஒரு அற்புதமான பொருளை நான் பார்த்ததேயில்லை.”

“நான் பொருள் இல்லை-நான் சிப்பிப் புழு, முத்துக்களை ஆக்குவோன்.”

“நல்லது, நல்லது. மாட்சிமை மிக்கவரே, தயவு பண்ணி வெளியே வந்து, உம்மைக் காணும் வாய்ப்பை எனக்கு அளிக்கமாட்டிரா?” என்று காகம் நகைச் சுவையுடன் கூறியது.

இல்லை; மாட்டேன். நான் கதவைத் திறக்க முடியாது. எனக்கு அதிக வேலை.”

“நீ உன் முத்தைப் பிறகு செய்யலாம். இப்ப கதவை திற. நான் எளிய, சாதாரண காகம், உன்னைப் போன்ற முக்கிய நபரை-முத்து செய்யக் கூடியவரை, பார்க்க ஆசைப்படுகிறேன். நான் முத்தையும் பார்க்க வேண்டும். என் வாழ்வில் இதுவரை நான் ஒரு முத்தைக் கண்டதில்லை.”

“நான் தான் சொல்லிவிட்டேனே, நான் திறக்கமாட்டேன். நீ பெரிய புத்திசாலி என்று நீ நினைத்தால், நீயே ஏன் அதை திறக்கக் கூடாது?”

சிப்பிப் புழு இப்படிக் காகத்தை கேலி பண்ண முடிந்தது. ஏனெனில், தன் சிப்பியின் மூடியை காகம் ஒரு போதும் திறக்க இயலாது என அது உறுதியாக நம்பியது.

ஆனால் இப்போது காகம் கோபம் கொண்டது.

“நல்லது. அது தான் உன் விருப்பம் என்றால், நான் செய்து காட்டுவேன். நடப்பது உனக்குப் பிடிக்காது போனால் என்னைக் குறை கூறாதே.” 

காகம் சிப்பியைத் தன் அலகில் கவ்விக் கொண்டு, மேலே மேலே பறந்து போயிற்று. ஒரு பாறை அடுக்கை அடைந்தது. மிக உயரே பறந்தபடி அது சிப்பியை பாறைக்கு நேராகப் போட்டது. சிப்பி தூள்துள்ளாகச் சிதறியது. காகம் அதன் பின்னே பாய்ந்தது. சிப்பிப் புழுவை அலகில் கொத்தியது. ஒரே விழுங்கில் முழுங்கித் தீர்த்தது.

பிறகு காகம் முத்தைப் பார்த்தது. முத்து அதனிடமிருந்து விலகி உருண்டோடிக் கொண்டிருந்தது. விலையில்லாத அந்த முத்து ஒரு சாணக் குவியலினுள் விழுந்ததை அது கவனித்தது. பின்னர் காகம் மேலெழுந்து வானத்தில் உயர்ந்து, மகிழ்வுடன் கத்தியவாறு, பறந்தது.

(உருதுக் கதை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.