ராஜசிம்மன்
‘புத்தன் வந்த திசையிலே போர்’- என்றான் ஒரு கவிஞன். இந்திய சரித்திரத்தின் ஒவ்வொரு ஏட்டிலும் – போர் தனது வாளால் எழுதிய ரத்தக்கறை! சென்ற இதழில் சாளுக்கிய விக்ரமாதித்யனும் பல்லவ பரமேஸ்வரனும் அடித்துக்கொண்டதைப் பார்த்தோம். கி பி 680 ல் இந்த இருவரும் ஒரே வருடத்தில் காலமானர். அதற்குப் பிறகு நடந்ததைப் பார்ப்போம்.
சாளுக்கிய கதை:
விக்ரமாதித்யன் மகன் வினயாதித்யன் கி பி 681 முதல் 696 வரை சாளுக்கிய அரசை ஆண்டான். வினயாதித்யன் மகன் விஜயாதித்யன். வினயாதித்யன் வட இந்தியாவில் ஒரு படையெடுத்து வென்றான். அந்தப் போரில் இளவரசன் விஜயாதித்யன் சாகசங்கள் செய்திருந்ததான். விஜயாதித்யன் கி பி 696 முதல் 733 வரை அரசாண்டான்- 37 வருடம்! அவன் காலம் அமைதிக் காலம். அதனால் நாட்டில் செல்வம் கொழித்தது. ஆலயங்கள் பல எழுப்பினான்.
பல்லவர் கதை:
பரமேஸ்வரன் கி பி 680ல் காலமானான். அவன் மகன் யுவராஜா ராஜசிம்மன் மன்னனானான். இவனும் கி பி 720 வரை அரசை ஆண்டான். நாற்பது வருடம்!
வினயாதித்யன், விஜயாதித்யன் அதே நேரம் சாளுக்கிய நாட்டை ஆண்டனர். இவன் காலமும் பொதுவாக அமைதிக் காலம். ஆலயங்கள் பல எழுப்பினான். அழகிய கைலாசநாதர் ஆலயம் எழுப்பினான். மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் அமைத்தான். இலக்கியம் வளர்த்தான். மகா கவி தண்டி அவன் அரசவையை அலங்கரித்தார். அவர் ராஜசிம்மனின் ஆசிரியர். பாண்டிய நாடும் அமைதியாக இருந்தது. தென்னிந்தியா ஒரு அமைதிப்பூங்கா ஆயிற்று.
இப்படி அமைதியாயிருந்தால் ‘சரித்திரம் பேசுகிறது’ எழுதுவதற்கு சமாச்சாரம் எங்கே?
‘ஒய் திஸ் கொலவேரி’ – என்று தானே கேட்கிறீர்கள்?
நாம் என்ன செய்வோம்? நமக்கு வேண்டியது சுவாரஸ்யமான கதை.
ராஜசிம்மனும் , விஜயாதித்யனும் பொட்டு வைத்துக்கொண்டு பொங்கல் சாப்பிட்டார்கள் என்று கதை சொன்னால் நீங்கள் அடிக்கவருவீர்கள்!!
அந்த அமைதிக்கு முன் ஒரு சிறு கதை விரிகிறது.. (ஆமாம் போர் தான்!):
வினயாதித்யன், ராஜசிம்மன் இருவரும் ஒரே நேரம் அரசனாகினரல்லவா?
வினயாதித்யன் தந்தை விக்ரமாதித்யன் – தன் தந்தை புலிகேசி அழிக்கப்பட்ட அவமானமும், பரமேஸ்வரனிடம் தான் பெற்ற சில தோல்விகளும் -மனதை அரித்திருந்தது. சாகும் தருணம்: “வினயாதித்யா .. இந்தப் பல்லவனைப் பழி வாங்கினால் தான் என் கட்டை வேகும்” – என்றான்.
சாளுக்கியத்துக்கும் பல்லவத்துக்கும் இடையே இருந்தது கங்க நாடு. வினயாதித்யன் முதலில் கங்கபாடியைத் தாக்கினான். கங்கன் முதலாம் சிவமாறனை தோற்கடித்து பிறகு ராஜசிம்மனை தாக்கினான். போர் கடுமையாக நடந்தது. போரில் ஒரு முடிவும் ஏற்படாமல் முடிந்தது. இரு தரப்பினரும் தங்கள் தங்கள் தலைநகருக்கு திரும்பினார்கள்.
பல்லவ நாட்டில் மழை பெய்யவில்லை. கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. கஜானா – மூலபண்டாரம் – வற்றியது. பஞ்சத்தால் காஞ்சிபுரம் பொலிவிழந்தது. கவி தண்டி , மற்றும் அரசவை அறிஞர்களும் காஞ்சி விட்டு நாடெங்கும் திரிந்தனர். ராஜசிம்மனும் சில காலம் காஞ்சி நகர் துறந்தான். மூன்று வருடம் பஞ்சம். ராஜசிம்மனும் காஞ்சி வந்தான். ஒரு நாள் புத்த துறவி ஒருவர் காஞ்சிக்கு வந்தார். அவரது பெயர் வச்சிரபோதி.
ராஜசிம்மன்: “துறவியே! மழை வருமாறு தாங்கள் இறைவனை வேண்டுங்கள். மற்ற சமயக் குறவர்களும் தங்கள் இறைவனை வேண்டுங்கள்”. வேண்டுதல் பலனளித்தது.
வானம் கண்ணீர் விட்டது. பல்லவ நாடு மகிழ்ந்தது. ஒரு வருடத்தில் நாடு செழிப்பானது. ராஜசிம்மன் உடனே கைலாசநாதர் ஆலயம் கட்ட ஆரம்பித்தான். சில வருடம் கழிந்தது. கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டு முடிந்தது.
ராஜசிம்மன் அரசகுருமார்களை சந்தித்து கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தான். பூசலார் என்ற நாயன்மார் – திருநின்றவூரில் -தானும் சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது முடியாமல் போகவே – தனது மனத்திலேயே ஆலயம் கட்டி – அதற்குக் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். ராஜசிம்மன் குறித்த அதே நாள்! ராஜசிம்மன் கனவில் சிவன் தோன்றி “பூசலார் கட்டிய கோவிலில் அன்று எழுந்தருளுவோம். உனது கும்பாபிஷேகம் செய்ய வேறு நாள் பார்த்துக்கொள்” என்று கூறி மறைந்தார்.
ராஜசிம்மன் திருநின்றவூர் சென்று பூசலாரை சந்தித்து “ஐயா! உங்கள் கோவில் எங்குள்ளது? அதைக் காட்டுங்கள்” -என்றார். பூசலார் திகைத்தார். தமது வரலாற்றை மன்னனிடம் கூறினார். ராஜசிம்மன் தனது கனவைப் பற்றிப் பூசலாரிடம் சொன்னார்.
அகக்கோவில் கட்டிய அன்பருக்கு வணக்கம் செலுத்தி மீண்டான்! (நன்றி: பெரியபுராணம் எழுதிய சேக்கிழார்).
சில வருடங்களுக்கு அமைதி நிலவியது. ஆனால் நீறு பூத்த நெருப்புப்போல பகை (யுத்தங்கள் தான் வேறென்ன) அடுத்த தலைமுறையில் தொடரும். ஆவலுடன் காத்திருக்கும் வாசக நண்பர்களே.. விரைவில் சந்திப்போம்.