இது எஸ் பேங்க். இதை பற்றி அனைவருக்கும் நல்லாவே தெரியும்.
ஆனால் நோ பாங்க்? படியுங்கள்!!

‘நோ பேங்’ என்னவோ தனியார் வங்கிதான், ஆனால் கிண்டி ஏரியாவில் மிகவும் பிரபலம்.
அரசு வங்கி எல்லாம் காற்று வாங்கிக் கொண்டு இருக்கையில் நோ பேங்கில் வேலை செய்பவர்களுக்கு ஏ சி யிலும் வியர்த்து வடியும்.அவ்வளவு வேலை.
ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள கூட்டத்தை விட வங்கிக்குள் சற்று கூட்டம் அதிகம் காணப்படும்.
அதுவும் ஐம்பது ரூபாயை கூட ஆன் லைனில் மாற்றும் இந்த நாட்களிலும்.
அதற்கெல்லாம் மொத்த காரணம் அந்த கிளையின் தலைமை மேனேஜர் ராகவனே.
ராகவனிடம் கேட்டால் A.R. ரஹ்மானின் ரசிகரான அவர் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்பார்.
அவ்வளவு தன்னடக்கம்.
சென்னையை சுற்றிலும் உள்ள பெரும்பாலான தொழிற் சாலைகளில் ‘ எங்கள் வங்கி நோ பேங்’ என்ற போர்டு காணப்படுவதற்கும் அவரே காரணம்.
அனைத்திலும் அவரது உழைப்பும், வாடிக்கையாளர்களிடம் வைத்து இருந்த உறவும் பளிச்சிடும்.
ராகவன் வங்கிக்கு வெளியே பூனை என்றால் வங்கி உள்ளே புலி.
அக்கவுண்டன்ட் ராமானுஜம் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு பின் பவ்யமான நமஷ்காரம் செய்வது நம் ராகவனுக்கே. அவ்வளவு பயம்
கேஷியர் சங்கரோ, ராகவனின் கேபினை தாண்டும் பொழுது குனிந்துதான் கடப்பார். கன்னத்தில் போட்டுக் கொள்வது மட்டும் இல்லை. அவ்வளவு மரியாதை.
லோன் ஆபிஸர் சுந்தரத்திடம் மட்டும்தான் தனக்கு சிரிக்கவும் தெரியும் என ராகவன் காட்டிக் கொள்வார்.
நடக்கப் போகும் சம்பவங்களில் நாம் அதிகம் சந்திக்கப் போவது ராகவன், சுந்தரம் இருவர் மட்டுமே. மற்றவர்கள் பற்றி நாம் அதிகம் கவலைப் பட வேண்டாம்.
இனி flashback
நான்கு மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். நீங்கள்தான் சுந்தரம் செய்தது சரியா, தவறா என சொல்ல வேண்டும்.
சுந்தரம் சம்பளம் வாங்கியவுடன் செய்யும் முதல் காரியம் , ஊரில் இருக்கும் பெற்றோர்கள் சிலவிற்கு பணம் அனுப்புவதே. கூடவே சிறுக சிறுக சேர்த்து தன் ஒரே தங்கையின் மணத்தையும் முடிவு செய்து விட்டான்.
திருமணத்திற்கு ஐந்து தினங்களே பாக்கி. தலைமை அலுவலகத்தில் இருந்து அவன் விண்ணப்பித்து இருந்த ஒரு லட்சம் ரூபாய் லோன் இன்னும் சாங்ஷன் ஆகி வர வில்லை.
இரண்டு தினங்களில் ஊருக்கு சென்று மற்ற வேலைகளை பார்க்க வேண்டும். பணம் இல்லாமல் ஊருக்கும் போக முடியாது.
வேலை ஓடாது குளம்பிப் போய் அமர்ந்து இருக்கையில் ராகவனிடம் இருந்து அழைப்பு.
புதிய லோன் புரபோஷல் ஒன்று, இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் முடிக்க உத்திரவுடன் சுந்தரம் கையில் கொடுக்கப் பட்டது.
ஏதாவது சந்தேகம் என்றால் பயனிர் லிமிடெட் என்ற அந்த கம்பேனியின் ஆடிட்டரிடம் கேட்டுக் கொள்ள சொல்லி பதில் பேச விடாமல் போனை கையில் எடுத்துக் கொண்டார் ராகவன்.
கவனக் குறைவுடன் பார்த்தாலுமே ‘பயனிர்’ கம்பேனி கொடுத்த கணக்கில் சுந்தரம் ஒரு பெரிய தவறை கண்டு பிடித்தான்.
அத்தவறை திருத்தினால் அவர்கள் கேட்பதில் பாதி கூட லோனாக தர முடியாது.
கடிதத்தில் விளக்கம் கேட்டு விட்டு லீவ் முடிந்து வந்து பார்த்துக் கொள்ளலாம் என எண்ணி ராகவன் கேபினுக்குள் நுழைந்தான்.
‘“ சார்! கம்பேனி கொடுத்துள்ள கணக்கில் சில தவறுகள் உள்ளன. விளக்கம் கேட்டு கடிதம் எழுதுகிறேன். பதில் வரட்டும் சார். அதற்குள் தங்கை திருமணத்திற்கு ஒரு வாரம் லீவில் சென்று வருகிறேன்” என்றான் சுந்தரம்.
அதற்கு ராகவன், “ என்ன இது சுந்தரம்? நாளை பரபோசல் H O போக வேண்டும். நான் மேலே நாளை அனுப்புவதாக கூறிவிட்டேன். இன்று எவ்வளவு நேரம ஆனாலும் முடித்து விட்டு நாளை ஊருக்கு போங்கள். தேவை என்றால் பயனிர் ஆடிட்டர் ஶ்ரீதரிடம் பேசி பதில் வாங்குங்கள்” என சற்று கடுமையாகவே கூறி விட்டார்.
வேறு வழி இல்லை. ஆடிட்டர் ஶ்ரீதர் நேரில் வந்து explain செய்வதாக கூறி , அவர் வரும் பொழுது இரவு மணி எட்டு. வங்கியில் சுந்தரம் மட்டும் புரபோசலில் தீவிரமாக இருந்தான்.
ஆடிட்டர் ஶ்ரீதர் நேரத்தை வீனாக்காமல் ” சார்! அந்த தவறு தெரிந்து செய்ததுதான்.
விளக்கமே கொடுக்க முடியாது. மேலே கூட தெரியும். நீங்களும் பார்த்த மாதிரி காட்டிக் கொள்ள வேண்டாம்” என கூறியதோடு. அல்லாமல் அவன் கையில் ஒரு பொட்டலத்தை தினித்தார்.
பிரித்து பார்த்த சுந்தரம் பதறி விட்டான். சுளையாக ஒரு லட்சம்.
துவக்கத்தில் கோபம், சந்தர்ப்ப சூழ் நிலையால் யோசனையாக மாறி, முடிவில் பொட்டலம் அவன் பையில் சென்றது.
சமயத்தில் கடவுளாக பார்த்து அனுப்பியது என மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டான்.
அடுத்த நாள் காலை வங்கி வந்து ராகவனிடம் ‘very good’ ஒன்று வாங்கி தங்கையின் திருமணத்திற்கு சென்று வந்தான்.
நேற்று மாலை வரை, உயிரையே போக்கும் அளவிற்கு பிரச்சனை பூதாகரமாகும் என நினைத்தே பார்க்க வில்லை சுந்தரம்.
(அப்படி என்னவாயிற்று அடுத்து பார்ப்போம்)
அன்று வங்கி வழக்கத்தை விட சற்று பரபரப்பாக இருந்தது.காரணம் ராகவன் அறையில் அமர்ந்து இருந்த Special Audit Team. அவர்கள் H O லிருந்நு வந்து இருந்தார்கள்.
ஊழியர்கள் எல்லோரும் அது வழக்கமாக நடக்கும் ஆடிட் இல்லை என புரிந்து கொண்டார்கள். ஏனெனில் அவர்களுடன் vigilance chief ம் உடன் இருந்தார்.
சுந்தரம், ராகவனுடைய அறைக்கு அழைக்கப் பட்டான்.
“ சுந்தரம்! இவர்கள் ஸ்பெஷல் ஆடிட் டீம். இந்த லிஸ்டில் உள்ள file அனைத்தும் கொடுங்கள்” என்று ராகவன் கூறினார்.
ஐந்தே பெயர்கள் இருந்த அந்த லிஸ்டில் கடைசியாக இருந்த பெயர் ‘ பயனிர் லிமிடெட்’. அதை பார்த்த உடன் சுந்தரத்திற்கு கால்கள் நடுங்குவது போலவும் , தலை சுற்றுவது போலவும் தோன்றியது.
நமக்குதான் ஏனென்று தெரியுமே.
சற்று தடுமாறிப்போன சுந்தரம், கேட்ட பைல்களை அவர்களிடம் சேர்ப்பித்தான்.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் நரகம் எப்படி இருக்கும் என்பதை செல்லாமலே உணர்ந்தான் சுந்தரம்.
ஐந்து கம்பேனிகளில் இருந்தும் சம்பந்தப் பட்டவர்கள் வரவழைக்கப் பட்டனர். பயனிரிலிருந்து ஶ்ரீதரன் வந்து இருந்தார். சுந்தரம் அவரை பரிதாபமாக பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடிய வில்லை.
ராகவன்தான் ஆடிட் டீமை வரவழைத்திருப்பார் என சுந்தரம் நினைத்தான். ராகவன் ஒன்றும் அறியாதவர் போல முகத்தை வைத்துக் கொண்டு சாதாரணமாக இருந்தார்.
மூன்றாவது நாள் ஆடிட்டர்கள் கிண்டி இந்தியன் வங்கி செல்கிறார்கள் என கேட்ட பொழுது சுந்தரத்திற்கு கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய் target அவன்தான் என தெரிந்து கொண்டான்.
காரணம், தங்கை திருமணம் முடிந்து வந்த பின் லோன் சாங்ஷன் ஆயிருந்தது. முதலில் பணத்தை என்ன செய்வது என தெரியாமல் தவித்தவன், பின்னர் அருகில் இருந்த கிண்டி இந்தியன் வங்கியில் போட்டு வைத்தான்.
அவன் பைத்தியம் பிடித்தவன் போல் ஆனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வேலை மட்டும் போனால் பரவாயில்லை. கைது ஆகி பேப்பரில் வந்து ஜெயில் அது, இது, என அவனால் கற்பனை கூட பண்ண முடிய வில்லை.
தற்கொலை செய்து கொள்வதுதான் ஒரே வழி என முடிவு செய்தான். ஆனால் அடுத்த நிமிடம் ஊரில் வயதான பெற்றோர் நினைவிற்கு வந்தார்கள். செய்தி கேட்டால் அவர்களும் உயிரை விட்டு விடுவார்களே என்ற பயம் வந்தது.
இறுதியாக ஒரு முடிவு எடுத்து தன்னை ராகவன் ஒருவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என நம்பினான்.
நேராக இந்தியன் வங்கி சென்று தன் கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.
அன்று மாலை ஆடிட் டீம் சென்று விட்டது. பெரும்பாலான ஊழியர்களும் சென்று விட்டனர்.
ஒரு லட்சம் ரூபாயை ராகவனிடம் ஒப்படைத்து கண்களில் நீர் வர நடந்த உண்மை அனைத்தையும் கூறினான் சுந்தரம்.
ராகவன் ஒன்றுமே கூறாமல் பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பியது சுந்தரத்திற்கு ஆச்சரியமாகவும், சற்று கவலையாகவும் இருந்தது.
இருந்தாலும் அன்று இரவு நிம்மதியாக தூங்கினான்.
மறு நாள் காலை ஆடிட் டீம் வர வில்லை.
சுந்தரத்திற்கு சற்று நிம்மதி.
ஆனால் Vigilance chief மட்டும் இருந்தார்.
சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் வண்டி வந்து நின்றதை சுந்தரம் கவனித்தான். அதில் மப்டியில் வந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் ராகவன் அறைக்கு சென்றார்கள்.
சுந்தரத்திற்கு சர்வ நாடியும் அடங்கி விட்டது. ராகவனிடம் இருந்து இவ்வளவு பெரிய துரோகத்தை எதிர் பார்க்க வில்லை. அவருக்காக இரவும் பகலும் எவ்வளவு உழைத்து இருப்பான். நன்றி கெட்ட மனிதன் என நினைக்கும் பொழுது, கண்கள் களங்கியது. பெற்றோர் கண்முன் வந்து நின்றனர்.
எல்லாம் முடிந்து விட்டது. ராகவனிடமிருந்து அழைப்புக்காக காத்திருந்தான் சுந்தரம்.
ஆனால் இது என்ன! ராகவனும், Vigilance Chief ம் போலீஸ் அதிகாரிகளுடன் செல்கிறார்கள்.
அவர்கள் சென்ற பின் ‘ ராகவன் லோன் கொடுத்ததில் முறை கேடுகள் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டாராம். இந்தியன் வங்கியில் அவரது லாக்கரை சீல் வைத்துள்ளார்களாம்.
அனைத்தையும் அவரே ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் கூட கொடுத்து விட்டாராம். அவரை கைது செய்துள்ளார்களாம்’ என ராகவன் கேபினை பார்த்துக்கொண்டே பயந்த குரலில் பக்கத்தில் இருந்தவர் கிசு கிசுத்தது சுந்தரம் காதுகளில் விழுந்தது.