
அந்த பக்தன் கோவிலில் பெருமாள் சன்னதியில் நின்று மனமுருக பிரார்த்திக் கொண்டான்
பெருமாள் புன்முறுவல் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தார்
பெருமாளே நான் இயக்கிய திரைப்படம் நாளை வெளிவருகிறது ஆனால் இன்றிரவே அது வலையில் வெளி வந்து விடும் நாங்களும் எவ்வளவோ போராடிப் பார்த்து விட்டோம் எங்களால் piracy மை தடுக்க முடியவில்லை அக்கிரமங்கள் நடக்கும் வந்து அப்பாவிகளை ரட்சிக்கும் ஆபத்பாந்தவா வா இந்த பைரசியை தடுத்து எங்களைப் போன்ற இயக்குனர்களை காப்பாற்று
கன்னத்தில் போட்டுக் கொண்டான்
கண்ணீர் விட்டான்
மாதவன் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்
பக்கத்திலிருந்த தாயாருக்கு கண்கலங்கியது என்னஇருந்தாலும் அன்னை அல்லவா
இன்றிரவே படத்தைப் பார்த்துவிட்டு படம் திரைக்கு வரு முன்பே எனக்கே கதை சொல்கிறார்கள் இது வயிற்றில் அடிப்பது இல்லை?
அடுத்தவன் உழைப்பை திருடி பெருமைப் பட்டுக்கொள்வது அதர்மம் இல்லையா?
கேசவன் புன்னகை ஓவியம் போல மாறாமல் இருந்தது
தேவி கண்ணனை கடைக்கண்ணால் பார்த்தாள்
அவள் முகம் வாடி இருந்தது
அன்று மாலை பாற்கடலில் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனின் பாத் கமலங்களை பற்றி லேசாக அழுத்தி விட்டுக் கொண்டிருந்தாள் மகா லக்ஷ்மி
அவள் முகத்தில் சிறு கோபம் இணைந்திருந்தது
பிரபோ இது உங்களுக்கே ஞாயமாக தெரிகிறதா?
தேவி பல ஆண்டுகளாக தொடர்ந்து நீயே ஓய்வில்லாமல் கால்களை அழுத்தி வருகிறாய் இது ஞாயமில்லைதான் நான் வேண்டுமானால்
போதும் உங்கள் ஹாஸ்யம் நான் கூற வந்தது இன்று முறையிட்ட உங்கள் பக்தனைப் பற்றித்தான்
யார் அந்த சினிமா கதாசிரியர் இயக்குனர்தானே
பரவாயில்லையே கோடிக்கணக்கான பக்தர்களிடையே அவனை சட்டென நினைவு கூர்ந்தது எவ்விதம்
லக்ஷ்மி! அவன் கதறியதைப்பார்த்து உலக மாதா உன் கண்களில் நீர் சுரந்ததை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?
நீங்கள்தான் கொஞ்சமும் பரிதாபப்படாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தீர்களே? சரி இப்போது அவன் என் பக்தன் அவன் கேட்டபடி நீங்கள் பைரசியை அழித்து சினிமாவைக் காப்பாற்றினால் என்ன?
எனக்கு அதில் விருப்பமில்லை?
ஏன்?
நம்பிக்கைத் துரோகம் என்றானே இவன் செய்த துரோகம் தெரியுமா? யாரோ எழுதிய கதையை தன் கதை என்று போட்டு படம் எடுத்தானே அந்த கதாசிரியர் மனம் எவ்வளவு பாடு பட்டிருக்கும் என யோசித்தானா குறைந்த பட்சம் கதை எழுதியது நானில்லை என ஒப்புக் கொண்டானா இது நம்பிக்கை துரோகம் இல்லையா? ஒரு நல்ல எழுத்தாளனின் நல்ல படைப்பை தன் படைப்பாக பறை சாற்றிக் கொண்டானே இது வயிற்றில் அடிப்பது இல்லையா?
நாதா இவ்வளவு விஷயம் உள்ளதா ஆனால் எல்லோரும் அப்படி இல்லையே
நாம் இப்போது இவனைப் போன்றவர்களைப் பற்றிதானே பேசுகிறோம்
இருந்தும்…..
நல்லவர்களுக்காக பெய்யும் மழை
கெட்டவர்களுக்காக ஏற்படும் ஊழிக்காற்று
இவற்றின் ஆதாயங்களுக்கும் சேதாரங்களுக்கும் பாரபட்சம் கிடையாது
அண்ணலே உமது விளையாட்டு புரிந்தது
உனக்கு ஏற்கனவே புரிந்தது என நான் அறிவேன்
சரி நம்ம பக்தனுக்கு இந்த தவறுகளுக்கு என்ன தண்டனை
அவன் எடுத்த இந்த படம் வெற்றிகரமாக ஓடும்
இது தண்டனையா எனக்கே புரியவில்லை
ஆம் அந்த வெற்றி களிப்பில் தான் ஜெயித்து விட்ட மமதையில் தனக்கு எல்லாம் தெரியும் என படங்கள் எடுப்பான் அவை கேவலமாக தோற்றுப் போகும் சினிமாவிலிருந்து ஒதுக்கப் படுவான் எதாவது ஒரு தொலைகாட்சி தொடரில் எபிசோட் டைரக்டர் ஆவான் TRP இல்லையென வேலை போகும். இதற்கிடையில் தன் திறமையால் முன்னுக்கு வந்து ஒரு இயக்குனர் யார் கண்டார்கள் இவனிடம் ஏமாந்தவனாகவே இருக்கலாம் அவனிடம் உதவி இயக்குனாராக சேருவார் இதை விட வேறு என்ன தண்டனை அவனுக்குத் வர முடியும்
பரந்தாமா உன் நீதி மன்றமே தனி உன் தீர்ப்புகளும் தனி ரகம்
மகாலக்ஷ்மியும் புன்னகை புரிந்தாள்