பார்வை…! — நித்யா சங்கர்


Image result for பெண் பார்க்கும் படலம்

பெண் பார்க்கும் படலம்…

பெண் சுகுணாவின் பெற்றோர்கள் ராகவனும், மைதிலியும் ஓடியாடி வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளை முரளியின் பெற்றோர்கள் ஸ்ரீதரன், வைதேகியின் முகங்களில் ஒரு குதூகலம், பூரிப்பு…

நமது வழக்கப்படி, தங்களது விருப்புகள், வெறுப்புகள், எதிர்காலக் கனவுகள், திட்டங்கள் – இவற்றையெல்லாம்
தனியாகப் போய் அரை மணி நேரம் விவாதித்து விட்டு வந்திருந்தார்கள் முரளியும், சுகுணாவும்.

சுகுணாவின் முகத்தில் படர்ந்திருந்த வெட்கம் கலந்த பூரிப்பைப் பார்த்த ராகவன் மைதிலிக்கு மனதில் ஒரு பரவசம்-
ஒரு நிம்மதி. முரளியின் முகத்திலே ஒரு திருப்தியின் நிழலைக் கண்ட ஸ்ரீதரன் வைதேகி முகங்களிலும் ஒரு நிம்மதி.

சொஜ்ஜி, பஜ்ஜி, பரிமாறப்பட்டது. டிபன் சாப்பிட்டுக் கொண்டே உலகச் சமாசாரங்களையெல்லாம் குதூகலமாக
அலசிக் கொண்டிருந்தார்கள் இரு வீட்டாரும்.

‘மாப்பிள்ளை.. நம்ம சமுதாயத்தின் முக்கியமான காவியங்கள் – ராமாயணமும், மகாபாரதமும். கடவுள் அவதாரங்-
களான ராமரும், கிருஷ்ணரும் உண்மையாகவே முக்கியமான நாயகர்கள். நீங்கள் லை·ப்லே ராமரா இருக்க விரும்பறீங்-
களா, இல்லே கிருஷ்ணரா இருக்க விரும்பறீங்களா..?’ என்று கேட்டார் ராகவன் திடீரென்று.

ஒரு விநாடி கூட தயக்கமின்றி, ‘இதிலென்ன சந்தேகம்..? கிருஷ்ணரா இருக்கத்தான் விரும்புவேன்..’ என்றான் முரளி.

‘அப்படியா..” என்ற ராகவன் முகத்தில் சிறிது வாட்டம். ஒரு நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு, மற்றவர்கள் பேச்சில்
கலந்து கொண்டார்.

‘ஓ… ரொம்ப டைம் ஆச்சு…. அப்ப நாங்க கிளம்பறோம். போய் கலந்து பேசி ·போன் பண்ணறோம்’ என்று எழுந்-
தார் ஸ்ரீதரன்.

மாப்பிளை வீட்டார் விடை பெற்றுக் கொண்டு போய் அரை மணி நேரம் ஆகியிருக்கும்.

‘எனக்கு என்னவோ இந்த இடம் சரிப்படும் என்று தோணவில்லை… ‘ என்றார் ராகவன் சிறிது வருத்தத்துடன்.

‘என்ன சொல்றீங்க..?’ என்று கேட்டாள் மைதிலி சிறிது அதிர்ச்சியுடன்.

இந்த இடம் நிச்சயமாகக் குதிரும் என்று கனவு கண்டு கொண்டிருந்த சுகுணாவும் அதிர்ச்சியோடு நோக்கினாள்.

‘இல்லே.. ஏகபத்தினி விரதனான ராமனை விட்டு விட்டு எப்போது கோபியர்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் கிருஷ்-
ணரின் வாழ்க்கைதான் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னாரோ.. அங்கேயே எனது மதிப்பிலிருந்து ஹன்ட்ரட் பர்-
ஸன்ட் விழுந்துட்டார்… நாம் இவளைக் கட்டிக் கொடுத்துட்டு அவர் கோபிகா கிருஷ்ணன் போல் இருந்துட்டார்னா..?
கொஞ்சம் சலனத்துக்கு ஆளாயிட்டார்னா நம்ம மகளின் கதி…?’ என்றார்.

மைதிலியின் மனதிலும் சிறிது குழப்பம் ஏறியது.

கனவுகளில் மிதந்து கொண்டிருந்த சுகுணாவின் மனதில் ‘ஒரு வேளை.. அப்பா சொல்வது போல் இருந்து விட்டால்..’
என்ற சந்தேகம் எழுந்தது. கனவுகளுடன் இருந்த அவள் முகம் வாடிச் சூம்பியது.

‘இப்போ என்ன செய்யப் போறீங்க..? என்ன சோல்லப் போறீங்க…?’ என்றாள் மைதிலி.

‘அவர்கள் போய் டிஸ்கஸ் பண்ணிட்டு ·போன் பண்ணறேன்னு சொன்னாங்க இல்லையா… அவர்கள் கால் வந்ததும்
ஏதாவது பதில் சொல்லி சமாளிப்போம்’ என்றார் ராகவன் தீர்மானமாக.

‘டேய்.. பெண்ணின் அப்பா ராகவன் கேட்ட கேள்விக்கு, நீ ஏகபத்தினி விரதனான ராமன் போல் வாழணும்னு சொல்-
லியிருக்கணும். உன் பதிலைக் கேட்டு அவர் முகம் சிறிது வாடி விட்டது. ஆனால் அதை அவர் சாமர்த்தியமாக
மறைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார் தெரியுமா..?’ என்றார் ஸ்ரீதரன் முரளியை நோக்கி.

‘அப்பா உங்கள் பார்வையில் அப்படித் தோன்றலாம்.. பட் என் பார்வையில் இட் ஈஸ் டோடலி டி·பரண்ட்.. நீங்க
நம்ம காவியங்களைப் படிச்சீங்கன்னா, ராமர் இல்லற வாழ்க்கையிலே சந்தோஷமா வாழ்ந்த நாட்கள் ரொம்பக் கம்மி…
ஆனா கிருஷ்ணன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தார். என்னுடைய குடும்ப
வாழ்க்கையும் அப்படி சந்தோஷமா இருக்கணும்.. அதனாலே தான் அப்படிச் சொன்னேன். நீங்க அவங்களுக்கு ‘எஸ்’
ஸ¤ன்னு சொல்லிடுங்க…’ என்றான்.

‘இல்லடா… முறைப்படி பெண் வீட்டார்தான் ·போன் பண்ணி விவரம் கேட்கணும். அவங்க கால் வந்தா க்ரீன்
ஸிக்னல் குடுத்துடறேன்’ என்றார் குதூகலமாக.

ராகவனின் ·போன் காலுக்காக காத்திருந்தார்கள்.

 

இன்னும் சில பாடைப்பாளிகள் – களந்தை பீர் முகமது – எஸ் கே என்

களந்தை பீர் முகமது

Image result for இஸ்லாமியக் குடும்பம்

நெல்லை மாவட்டம் களக்காடைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாகக் கதை, கட்டுரை, விமர்சனம் என பல தளங்களில் இயங்கி வருபவர். ‘காலச்சுவடு’  இதழின் ஆலோசனைக் குழுவில்  பணியாற்றுபவர். இலக்கியச் சிந்தனை, த.மு.எ.ச, கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகள் பல இவரது பங்களிப்பை அங்கீகரித்துள்ளன

# # #

யாசகம் கதை இப்படித் தொடங்குகிறது

வாப்பா அன்று உற்சாகமாக வந்தார். முகத்தில் ஒரு மலர்ச்சி .அவர் செருப்பை கழட்டி போடும்போதே அந்தத் துள்ளல் தெரிந்தது. பொதுவாகவே வியாபாரம் இப்போதெல்லாம் நன்றாக இருப்பதாக அவர் சொல்வதை தவுலத் கேட்டிருக்கிறாள் வாங்கி வந்த காய்கறிகள் அன்றைக்கே விற்றுவிட்டால் நல்ல வியாபாரம் இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்தால் வியாபாரத்தைப் பெருக்கிவிடலாம் என்று வாப்பா சொல்வதும் தவ்லத்திற்குத் தெரியும்.

ஒரு சிறிய இஸ்லாமியக் குடும்பத்தின்  மூத்த பெண் தவ்லத்  பார்வையில்  கதை போகிறது. தவ்லத் திருமண வயதில் இருக்கிறாள். அதுவரை தவ்லத்தின் நிக்காஹ் குறித்து வாப்பா வெளிப்படையாகப் பேசியது இல்லை என்றாலும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தவ்லத்தைத் தள்ளிவிடவேண்டும் என்கிற கவலை அவருக்கு உண்டு.  அது முடிந்து  சில வருடங்கள் கழித்து,  பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கும்  இளையவளையும் தள்ளிவிட்டக வேண்டுமே?     ஒரே மகனான   புகாரி பற்றி வாப்பாவிற்கு எப்போதும் புகார் தான்.  மனம்கொண்டால் தான் தந்தையின் கடையைக் கவனித்துக் கொள்வான். பெரும்பாலும் ஊர்  போக்கிரிகளுடன் ஊர் சுற்றுவது அவன் வாடிக்கை.

இதுவரையில் கைக்கும் வாய்க்கும் மட்டுமே சரியாக இருக்கின்ற வருமானம்.  எப்போதும் நல்ல சாப்பாடு போட்டு இருக்கின்றார் வேறு எந்த விதமான வசதிகளும் பெருகி விடவில்லை. டெலிபோன். டெலிவிசன் எல்லாம்  இன்றியமையதாகிவிட்டப்  பிறகுதான் அவை வீட்டிற்கு வந்தன.

தந்தையின் மலர்ச்சிக்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று தவ்லத் யோசிக்கிறாள். வியாபாரம் பெருக ஏதேனும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம். அல்லது ஏதேனும் வரனைப் பற்றிய தகவல்களுடன் வாப்பா வீட்டிற்கு  வந்து இருக்கலாம். என்னவென்று அவர் தான் சொல்ல வேண்டும். அதுவும் உம்மா மூலமாகத்தான்  தெரியப்படுத்துவார்.

வாப்பா  ருசித்துச் சாப்பிட்டார்.  வேறு எங்கெல்லாமோ பார்வைகளில் பார்வைகளைத் திருப்பி, திரும்பிய இடமெல்லாம் பார்வையை அப்படியே வைத்துவிட்டு வாய்க்குள் போன உணவை மென்று கொண்டிருக்கிறார் இது புது வாப்பா அவர் இன்று சாப்பிடுவது ரொம்ப அழகாக இருந்தது தவ்லத்துக்கு.

 

 

வாப்பா கொண்டுவந்திருக்கும் நல்ல செய்தி எதுவாக இருக்கும் என்று மிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருந்தால் இருந்தாள் தவ்லத்.  இந்த வருடம் ஹஜ் யாத்திரை போக இருப்பதாகத் தெரிவிக்கிறார் வாப்பா.  அவருடைய உற்சாகம் சரியே. அவரது தூரப் பார்வையில் ஹஜ் யாத்திரை மட்டுமே இருந்தது.

அதை புரிந்து கொண்ட அடுத்த கணம்தான் தவுலத் உணர்ந்தாள் தனக்கான மணவாளன் அந்தப் பார்வையில் இல்லை என்பதை!  இப்போது அவள் மட்டுமே ஒரு குதிரையில் மெதுவாக செல்கிறாள் மறுபடியும் மரங்கள் நிறைந்த ஒரு பொட்டல் வெளி. பரவாயில்லைமுதலில் அப்பாவின் ஆசை நிறைவேறட்டும்.

எப்படியோ மார்க்கக்   கடமையை நிறைவேற்ற நினைக்கிறார். வாப்பா. பல கஷ்டங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு துணிச்சலாக ஹஜ்  போவதே பக்தியின் அடையாளம் என்பது வாப்பாவின் முடிவு . இதுபோல வாப்பாவின் ஹஜ் பயணம் பற்றி மற்றவர்கள் சொல்லக் கூடும்.   சிலர் ஹஜ் அடிக்கடி போய் வருகிறார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாமியரின் மற்றொரு கடமையான  ‘ஜகாத்’   கொடுப்பதில்  ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டும் உண்டு.

வாப்பாவின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி இருபது நாட்களே ஆகியிருந்தன ஹஜ் போவதற்கான பணம் கட்டாயம் சேர்ந்து இருக்காது.   உம்மா  வந்ததும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்து விட்டாள்.  நபிஸஸ் அம்மா ‘யா அல்லாஹ் இது என்ன சோதனை. இரண்டு குமருகள்  வீட்டிலே இருக்கும் போது  எப்படி சாத்தியம்?’ என்கிறாள். 

ஆனால் யாத்திரை செய்ய வாப்பா மிகவும் உறுதியாக இருக்கிறார். ஊரில் எங்கே திரும்பினாலும் ஹாஜிமார்களாக இருக்கிறார்கள். தானும் அதுபோல் ஆகவேண்டாமா என்பது வாப்பாவின் கேள்வி.

நீண்ட ஜிப்பா, வெள்ளைக் கைலி,  நீங்காத தொப்பி மற்றும் நீண்ட வெண்தாடி  .. இவைகளுடன் தோன்றும் ஹாஜிமார்களுக்கு இடையில் தொப்பியில்லாமல் பான்ட் ஷர்ட் போட்டு தாடி மட்டும் கொண்ட ஹாஜிமார்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஹாஜிமார்களுக்கும் வாய்தா, வழக்கு என்று வந்துவிட்டது. எந்தச் சொத்துத் தகறாரிலும் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு ஹாஜிமார்களோ மும்மூன்று ஹாஹிமார்காகளோ இருக்கிறார்கள். ஒரு ஹாஜியார் வீட்டுப் பெண் இன்னொரு ஹாஜியாரால் தலாக் செய்யப்பட்டு திரும்புகிறாள். பஸ் ஏறும்போது அடிதடி என்று  ரத்தக் காயத்துடன் திரும்பும் ஹாஜிமார்களும் இருக்கிறார்கள்.    இதையெல்லாம் அண்ணன் புகாரி சொல்லும்போது, தவுலத் ‘ஹாஜியார் மேல் அண்ணனுக்குப்  பொறாமை’ என்று நினைத்துக்கொள்வாள். மார்க்கத்திற்கு எதிராகப் பேசுகிறானே என்ற எரிர்ச்சலும் குடும்பத்தினருக்கு உண்டு.

புகாரி வீட்டிற்கு வருவதற்கு என்று எந்த குறிப்பிட்ட நேரமும் கிடையாது.  அவனால் குடும்பத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அவன் பேசுவது எல்லாமே ஏறுக்கு மாறானது என்பது தவ்லத் உட்பட எல்லோரின் எண்ணம்.  

 

 

 

‘ஹஜ் பணத்திற்கு என்ன செய்யப்போறீங்க?’ என்று கேட்கிறார் ம்மா நபீஸ்.  

இதைக் கேட்டதும் அவர் தாடியைத் தடவினார். ‘ கடனா பணம் கேட்டுப் பார்த்தேன். ஒண்ணும் நடக்கல.  கடைய எம்பேர்ல எழுதித் தந்தீங்கன்னா பணம் தாரேன்னு சொல்றான் எலெக்ட்ரிக் கடை மூசா. வேறு எங்கேயும் கடன் கெடைக்கலேன்னா அப்படித்தான் செய்யணும்!’ 

 “யா ரஹ்மானே! நீங்க சொல்றது ஆண்டவனுக்கே பொறுக்காதே” என்று பதறிவிடுகிறார் நபீசம்மா. கடையையும் கொடுத்துவிட்டால் அப்புறம்  வருமானமே இல்லாமல்  என்ன செய்வது என்று பயம் வந்துவிடுகிறது. மேலும் இரண்டு பெண்களின் நிக்காஹ் எப்படி நடக்கும்?

அண்ணன் புஹாரி சொல்வதிலும் உள்ள நியாயம் இப்போது தவ்லத்திற்குப் புரிகிறது .

தவ்லத்திற்கு மூச்சு முட்டிவிட்டது.  அவள் சட்டென்று விலகிப்போய் அழ ஆரம்பித்துவிட்டாள்.  புகாரி காக்கா  உடனே இங்கு வந்து குதிக்க வேண்டும் என்று அங்குமிங்குமாக அழுத கண்ணீரோடு பரபரத்துப் பார்த்தாள்.

நபீசம்மாவும் அழ ஆரம்பிக்கிறாள்.

 “என் புள்ளைங்களை நான் காப்பாத்துவேன். எப்படியாவது காப்பாத்துவேன். இந்தப் பார்- இந்தப் பார்… தெருவில நின்னு பிச்சையெடுத்தாவது – இப்படி பிச்சையெடுப்பேன்” என்று தன் தோளில் கிடந்த துண்டை யாசகம் செய்பவனைப் போல நடித்து நீட்டிக் காட்டினார்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நேரத்தில் யாசிக்கும் குரல்களோடு தன் வாப்பாவின்  குரலும் ஒலிப்பதுபோல் தவ்லத்திற்கு  தோன்றுகிறது  

தொழுகை முடிந்து கூட்டம் கூட்டமாக பள்ளிவாசல்களிருந்து  கரைந்து வழியும் தொழுகையாளர்களிடமிருந்து ஏதோ ஒரு சில கைகள் அவ்வப்போது அபூர்வாமாய் நீண்டு சின்னச் சின்ன  கரன்ஸிநோட்டுகளைக்  கைமடக்காக போட்டபோதும், விரித்துப் பிடித்த துணியில் இன்னும் எவ்வளவோ வெற்றிடம்.  வாப்பா.. ம்மாவின் குரல்களும் சளைக்காமல்  கேட்டபடியே இருக்கின்றான் நீண்ட காலத்துக்குமாக.

என்று முடிகிறது .

# # #

இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் இல்லாத இவர்கதைகளும் நிறைய உண்டு.  தவிர, இஸ்லாமியக்  குடும்ப மற்றும்  சமுதாயப் பின்னணி பல   கதைகளில் இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகள் அனைத்து மதத்தினருக்கும் பொதுப்படையாகப்  பொருந்தும் என்று தோன்றுகிறது. இந்தக் கதையும் அப்படித்தான்.

வில்லன்

Image result for மகாபாரதத்தில் அர்ஜுனன் வில் சுயம்வரம்

 

வில்லன் என்பது அழகிய தமிழ் வார்த்தை

கலித்தொகை 37, கபிலர்

 

கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்

வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட

கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,

“உறவுகளால் மலர்ந்தாள் ” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Image result for டிப்ரெஷன்

 

சுமதியை, அவள் தத்தெடுத்திருந்த பெண் சுபா எங்களிடம் அழைத்து வந்தாள். சுபாவின் கையை இறுக்கிப் பற்றியபடியே சுமதி வந்தாள். மகன் முருகனும் கூட வந்தான்.

இரண்டு வருடமாகச் சுமதிக்கு அடிக்கடி தலைவலி. அத்துடன், படபடப்பு, தூக்கம் சரியாக வருவதில்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை என்பாளாம். தனிமையில் அதிகரிக்கும், கூட யாராவது இருந்து விட்டால் எந்த விதமான தொந்தரவும் இருக்கவே இருக்காதாம். அப்பாவின் மரணத்திற்குப் பிறகே

இப்படி நடப்பதாகச் சொன்னார்கள்.

மனோதத்துவ பரிசோதனையில் இந்த குணாதிசயங்கள் “ந்யூராட்டிக் டிப்ரெஷன்” (Neurotic Depression)இன் அறிகுறி என்பது ஊர்ஜிதமானது. இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டது என்பதை இங்குப் பகிரப் போகிறேன்.

சுமதி வறுமைக் கோட்டிற்குச் சற்று மேலே இருப்பவள். ஒரு காலத்தில் செழித்து வாழ்ந்த விவசாய குடும்பம். இப்போது அவள் பட்டணத்தில் வாழ்வைத் தேடி வந்ததின் விளைவு!

இன்றைய தேதியிலும் அவள் உடன் பிறந்தவர்கள் விவசாயிகள். எண்பது வயதிலும் அப்பா தன்னால் முடிந்ததைச்செய்து வருகிறார். எழுவது வயதான அம்மா, கணவருக்கு ஈடு கொடுப்பவள்.  கடுமையாகப் பேசி விமர்சிப்பதால், பலர் இவளுடன் உறவை முறித்துக்கொண்டார்கள்.

சுமதியின் இரண்டு அண்ணன்மார்களும் கல்யாணத்திற்குப் பிறகு தங்களுடைய குடும்பத்துடன் தனியே வசிக்கிறார்கள். அம்மாவின் புண்படுத்தும் வார்த்தைகளே இந்த முடிவிற்குக் காரணம் என்று கூறினார்கள். மூன்றாவது அண்ணன் விவசாய பொருட்கள் வியாபாரியாக இருந்தார்.

தங்கை பிரசவத்தில் இறந்துவிட்டாள். அம்மாவின் கண்டிப்பினால் அண்ணன்கள் சுமதியிடம் அதிக பாசத்தைக் காட்டினார்கள், அவளுக்குக் கல்யாணம் ஆகும் வரையில்.

அண்ணன்கள் விவசாயத்தில் கை கொடுக்க, சுமதி சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது என்ற பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வாள். சுமதியை இரண்டாம் வகுப்புடனும் அண்ணன்களை ஐந்தாம் வகுப்புடனும் படிப்பை நிறுத்தி விட்டார்கள். சுமதிக்குத் தோழிகளுடன் பேச, விளையாட அனுமதி கிடையாது.

நான்கு வருடங்களுக்கு விளைச்சல் குறைந்து விட்டதில் குடும்பம் சற்று கஷ்டப்பட்டது. விவசாயத்தின் வருமானத்தில் தான் சுமதி கல்யாணத்திற்குச் சேமித்து வந்தார்கள். அந்த சேமிப்பிலிருந்து கஷ்டத்தைப் போக்க எடுக்க வேண்டியதாயிற்று. அந்தச் சமயம் பார்த்து, சுமதியின் கல்யாணத்திற்கு வரன்கள் வந்தன. அவர்களில் ஒருவர், இருபது வயதான சுந்தரம். அவன் எந்த செலவும் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள முன் வந்தான். சுமதியைப் பற்றி கேள்விப் பட்டதால் தங்களது குடும்பத்திற்குப் பொருத்தமாக இருப்பாள் என்பதால் தான்.

கல்யாணம் ஆனது. அப்போது சுமதியின் வயது பதினாறு. சுந்தரம் குடும்பத்தினரும் விவசாயிகள். அவன் மூத்த மகன் என்பதால் தன் பெற்றோருடன் இருந்தான். கூட சுந்தரத்தின் இரு தம்பிகளுக்கும். தங்கைகளுக்கும்  கல்யாணம் ஆகிவிட்டன.

சுந்தரத்தின் பெற்றோர் வயோதிக நிலையிலிருந்ததால் வேலைகளைப் பிள்ளைகள் பங்கு போட்டிருந்தார்கள். சுமதியின் கைப்பக்குவம் எல்லோருக்கும் பிடித்திருந்ததால், அவளுக்குச் சமையல் கட்டு என்று முடிவானது. சுந்தரம் ஆதரவாக இருந்ததால் எல்லாவற்றையும் அழகாக எடுத்துச் சென்றாள். எல்லோரும் அவளைப் புகழ்ந்து பேசினார்கள்.

வாழ்க்கை இவ்வாறு நல்லபடி போய்க் கொண்டிருந்தது. திருமணம் ஆகி ஏழு எட்டு வருடங்கள் ஓடின. குழந்தை பிறக்கவில்லை.  சுந்தரம் அதை ஒரு விஷயமாகக் கருதவில்லை. ஆனால் சுமதியின் சுந்தரத்தின் சகோதரி உஷா இதைப் பற்றி தன் கருத்தைப் பேச ஆரம்பித்தாள். தன் பெண்ணை இரண்டாவது தாரமாகக் கட்டித் தருவதாகக் கூறினாள். சுந்தரம் சரியென்று சொல்லவில்லை. சுமதி மிகவும் பயந்து விட்டாள்.

உஷா மிகப் பிடிவாதமாக வற்புறுத்தினாள். திருமணத்திற்கு சம்மதித்த சுந்தரம், சுமதியை விவாகரத்துச் செய்ய மறுத்தான். மறு கல்யாணத்திற்குப் பின்னும் அங்கேயே அவள் தங்கும்  படி செய்தான்.. சுமதி இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. ஏனென்றால் அவளுடைய அம்மா வீட்டைப் பொறுத்தவரை, அவரவர் தன் குடும்பத்தில் வருகிற பிரச்சனைகளை தானே சமாளிக்க வேண்டும் என்று. தீர்மானமாக இருந்தார்கள் .

சுந்தரத்திற்கு மறு திருமணம் நடந்த அடுத்த வருடமே இரண்டாவது மனைவி    ஆண்மகவை ஈன்றாள். முருகன் என்ற பெயர் சூட்டினார்கள். சுந்தரமும் அவனுடைய இரண்டாவது மனைவியும் சேர்ந்து வேலைக்குப் போவதால் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சுபாவுடையதானது. இவளிடமே இருப்பதால் முருகன் அவளை “அம்மா” என்றே அழைத்தான். சுமதி பூரித்துப் போனாள். 

சுந்தரத்தின் மற்றொரு தங்கை தனக்குப் பிறந்த பெண் கருநிறம் என்றதால் அடியோடு அந்தக் குழந்தையை வெறுத்தாள். இதை சுமதி கேள்விப் பட்டதும் அந்தக் குழந்தையை தானே தத்தெடுத்துக் கொண்டாள்.  இவள் தான் சுபா. என்றுமே சுமதி பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டாள்.

இப்படி மூவரானது சுமதியின் உறவுகள். அந்த இன்னொரு தங்கை வசதியானவளாக இருந்ததில் எப்போதாவது பணம் கொடுப்பாள். சுந்தரம் வீட்டின் ஒரு அறையை இவர்களுக்கு என்று வைத்தார்கள். குழந்தைகளை வளர்க்க சுமதியும் , தையல், பூத் தொடுப்பது  போன்ற  கைத் தொழில்கள் செய்ய ஆரம்பித்தாள்.

இவ்வாறு போய்க்கொண்டு இருக்கையில் சுந்தரத்திற்கு வலது பக்கத்தில் பக்கவாதம் வந்தது. சிகிச்சை செய்து ஒர் அளவு குணமாகிக் கொண்டிருந்தான். ஆனால் வேலைக்குப் போக முடியவில்லை. சுந்தரத்தினால் இனி சம்பாதிக்க முடியாது என கருதினாள் அவனுடைய இரண்டாவது மனைவி. விவாகரத்து பெற்று அல்லது  சுந்தரத்தைத் துறந்து அவர்கள் பக்கத்தில் குடியிருந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டாள். 

சுமதி தன்னால் முடிந்தவரை உழைத்து, சுந்தரத்தைப் பார்த்துக் கொண்டு, சுபா-முருகன் இருவரையும் படிக்க வைத்தாள். சுபாவிற்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்தாள். சுந்தரத்தின் இரண்டாவது தம்பி சுபாவைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தான். அவன் நடத்தை சுமதிக்குப் பிடிக்காதலால், அதைத் தட்டிக் கழித்து விட்டாள். அவன் சுமதியிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.

சுபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து முடிக்கையில் முருகன் ஸ்கூல் முடித்திருந்தான். மேற்கொண்டு டிப்ளோமா படிக்க விரும்பினான். பணப் பற்றாக்குறை. ஆனால் அவனைப் படிக்க வைக்க வேண்டும் என்று சுமதிக்கு இருந்தது. சுமதி இவ்வாறு பொறுப்புகளை தனி ஒருத்தியாக ஏற்பதைப் பார்த்து, மனம் சோர்ந்து சுந்தரம் மரணம் அடைந்தான். அன்றிலிருந்து பகிர யாரும் இல்லை என்பதை சுமதி உணர்ந்தாள். மனம் வருந்தியது.

முருகனை மேற்கொண்டு படிக்க வைக்க ஆசைப் பட்டாள். வழி தெரியவில்லை. எங்கே தன்னுடைய இயலாமையினால் படிப்பு நின்று விடுமோ என்று நினைத்து வாடிப் போனதில் சுமதிக்கு மன உளைச்சல் நேர்ந்தது. இந்த நேரத்தில் தான் சுபா அவளை எங்களிடம் அழைத்து வந்தாள்.

முருகனுக்கு தன்னால் இப்படி நேர்ந்தது என்ற குற்றப் மனப்பான்மை வாட்டியது. அவனையும் சுமதியுடன் கூடவே பார்க்கத் தொடங்கினேன். முருகன் படிக்க விரும்புவதை ஊக்கப்படுத்தும் வகையில் சுமதியை யோசிக்கச் செய்தேன். அவளுக்கு உறுதுணையாக முருகன் இருக்கும் படியான பாதைகளைப் பற்றி அவர்களை யோசிக்கச் செய்தேன். 

சுமதி அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் வங்கியில் விசாரிக்க முடிவெடுத்தாள். முருகன் தன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் பேச முடிவெடுத்தான். மேற்கொண்டு முன்னேற பாதை இருக்கிறது என்று தெரிய வந்ததே சுமதியை அசுவாசப் படுத்தியது. இரண்டு நாட்களில் திரும்பி வந்தார்கள். வங்கிக்குத் தேவையான ஆதரவை சுமதியின் பூ வாங்கும் வாடிக்கையாளார்  ஒருவர் செய்வதாகச் சொன்னாள்.

முருகன் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததை காலேஜ் தலைமை ஆசிரியர் கவனித்து படிப்பிற்குப் பண உதவி (scholarship) இருப்பதைப் பற்றி கூறினார். இதுபோன்ற சலுகைகளைப் பற்றிய பல தகவல்களைத் தந்தார். இந்த தகவல்கள்   புரிய வர, சுமதி அமைதி அடைந்தாள்.

அம்மாவும் மகனும் (வளர்ப்பு மகன் என்ற சாயல் எதிலும் தென் படவே இல்லை) மிக சந்தோஷப் பட்டார்கள். முருகனின் கவலை, தான் படிக்க வெளியூர் போனால் யார் தன் அம்மாவைப் பார்த்து கொள்வார்கள் என்று. இருவருக்கும் தெரியாமல் சுபா என்னைச் சந்தித்தாள்.

சுபா தன் கணவனுடன் வந்தாள். இருவரும் அந்த இரண்டு வருடம் சுமதி தங்களுடன் இருப்பதை விரும்பவதாக தெரிவித்தார்கள். சுமதி இதை ஒப்புக் கொள்ள மறுப்பதாகச் சொல்லி சுபா வருந்தினாள். இவர்களை சுமதி முருகனுடன் சேர்ந்து வரச்சொல்லி அனுப்பி வைத்தேன்.

அதற்கு முன்பு சுமதி ஸெஷனுக்காக என்னிடம் வந்தாள். தனக்கு மனத் தோழனாக சுந்தரம் இருந்ததைப் பற்றி விளக்கினாள். சமீப காலமாக தனக்குப் பேசி, பகிர யாரும் இல்லாதது போல இருப்பதாகக் கூறினாள். இதை விலாவாரியாகப் பேச தன்னுடைய கூடப் பிறந்தவர்களைப் பற்றி பகிரச் செய்தேன்.

கல்யாணம் ஆகும் வரையில் கூடப் பிறந்தவர்களுடன் பாசமாக, மன ஒற்றுமையுடன் இருந்ததை ஞாபகம் செய்யச் செய்ய அவர்களுடன் உறவை மீண்டும் புதுப்பிக்க நினைத்தாள். செய்தாள். இதுவும் மனதிடத்தை அதிகரித்தது.

கூடப் பிறந்தவர்களை சந்திக்கையில் சுமதி பலவற்றை கவனித்தாள். குறிப்பாக, ஒவ்வொருவரும் தன்னுடைய பிள்ளைகளுடன் இருப்பதை. சுமதியை தங்களுடன் சுபாவும் கணவரும் அழைத்து வந்தார்கள். அவர்களுடன் இந்த இரண்டு வருடம் சுமதி இருந்தால் அது எப்படி தனக்கும் உதவும் என்பதை வர்ணித்தார்கள். சுபாவும் கணவரும் உற்சாகத்துடன் சொன்னதே சுமதியை உருக்கியது.

முருகனின் மேல் படிப்பு பக்கத்து டவுனில் அமைந்தது. அங்கேயே ஹாஸ்டலில் இருக்கச் சொன்னார்கள். இருப்பதற்கு முருகன் முடிவு செய்தான். அடுத்த மூன்று செஷங்களில் சுபாவுடனும் கலந்து ஆலோசித்து அம்மாவின் இருப்பிடம், நிம்மதி பற்றி முடிவெடுக்கப் பட்டது. சுபாவுடன் இருக்க சும்டஹியிடம் பரிந்துரைத்தான். சுமதி சுபாவுடன் இருக்க ஒப்புக் கொண்டாள். மனம் நிம்மதி அடைந்தாள்.

 சுந்தரம் இல்லாததற்கு ஈடுகட்ட முடியாது எனத் தோன்றியது. சுபா வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எட்டு பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு விட்டு அழைத்து வருவதென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டாள். இனி மீதி வாழ்க்கை இப்படி பல பிள்ளைகளுக்காக என்ற எண்ணத்தை ஏற்றுக் கொண்டு மனத்தெளிவுடன் வாழ்ந்தாள் சுமதி.

 

கொரானா உயிர்க்கொல்லி

சீனாவில் ஆரம்பித்து  இன்று உலகத்தையே  அச்சுறுத்தும் கொடிய விஷக் கிருமி கோவிட் 19 என்கிற கொரானா நோய். !

இதை மூன்றாம் உலக யுத்தம்  எனலாம்!

உலகளாவிய தொற்று நோய் ( PANDEMIC) என்று சொல்லப்படுகிறது.

இதைப்பற்றி விவரிக்கிறது இந்த அறிவு பூர்வமான காணொளி !

 

 

 

 

 

சுஜாதா குவிஸ் – ( பதில் அடுத்த பக்கம்)

சுஜாதா குவிஸ்

Image result for சுஜாதா

 

 1. சுஜாதாவை வளர்த்த அவரின் அப்பாவழிப்பாட்டியின் முழுப்பெயர் என்ன? (பல இடங்களில் சுஜாதா இவரைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்) 

 

 1. சுஜாதாவின் அப்பா இவரிடம் கேட்கவேண்டும் என்று எழுதிவைத்துக்கேட்கமுடியாமலேயே இ|றந்துவிட்டசப்ஜெக்ட் என்ன? –

 

    3.அந்தக் கேள்வியெல்லாம் நாங்க கேக்கறதிலை” என்னும் அதிர்ச்சி வரிகளுடன் முடியும் சுஜாதாவின் சிறுகதை எது? –

 

 1. லாயர்கணேஷ் தோன்றிய முதல் கதை எது? அடுத்த சில கதைகளில் வரும் அவரின் அஸிஸ்டெண்ட் பெயர் என்ன? –

 

 1. மகாவிஷ்ணுதான் தரிசனம் தர விரும்புகிறாரோ என்று பார்த்தால்” என்னும் சுவாரஸ்ய வரிகளில் தொடங்கி சுஜாதா எழுதினது என்னசப்ஜெக்ட்?

 

 1. சுஜாதா பல இடங்களில் மேற்கோள் காட்டிய பெண் கவிஞர் யார்? –

 

 1. நிம்ஜோஇண்டியன்டிஃபன்ஸ் ஆடுவியா” என்று கேட்கும் கதாபாத்திரம் ஆணா பெண்ணா?

 

 1. Dying is an art like everything else I do it exceptionally well –சுஜாதா மேற்கோள் காட்டிய இந்தக்கவிஞர் யார்?  இதை மேற்கோள் காட்ட வேண்டிய உந்துதல் என்னவாக இருக்கும்?

 

 1. சுஜாதாவின்லாண்டரிக்கணக்கில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன? –

 

 1. வட்டநிலாப்பின்னணியில்,வண்ண ஜரிகை நிலத்தில் அந்தத்தோணி அசைந்து அசைந்து வந்தது. எங்கும் இருட்டு. காட்டைப்போல இருட்டு. மசியைப்போல இருட்டு. சாவைப்போல இருட்டு.” – இந்த அபார வரிகள் எந்தக்கதையில் வருகின்றன?

 

 1. சுஜாதா எழுத்தாளர் ஆனபிறகு எழுதிய முதல் நாடகத்தின் பெயர் என்ன?

 

 1. சுஜாதா – பூர்ணம்விஸ்வனாதன் கூட்டணியில் வந்த முதல் நாடகம்  எது?

 

 1. திராவிடன் பண்டுதானே?அது பிராவிடண்ட பண்ட் , இங்க்லீஷ் பேப்பரை மாவு சலிக்கிறதுக்கு உபயோகப் படுத்தினா அவ்வளவுதான் வரும். இது எந்த நாடகத்தில் வரும் வசனம்?

 

 1. கடவுள் வந்திருந்தார் நாடகத்தில் வரும் எதிர்கால மனிதனின் பெயர் என்ன?அவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன் ?

 

 1. இந்த நாடகத்தைசெட்டுக்கள் ஏதும்  இன்றியே ஒளியால் பிரித்து நடிக்க முன்வந்தாலும் எனக்குச் சம்மதமே ! – சுஜாதா எந்த தன் நாடகத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்?

 

 1. அலன்பெக்கர் எழுதிய டோலரஸ் என்ற நாடகத்தின் பாதிப்பில் சுஜாதா எழுதிய நாடகம் எது?

 

 1. ஜே பிமில்லரின் பிரபல டெலிவிஷன்  நாடகத்தை ஒட்டி எழுதிய நாடகம் எது?

 

 1. சுஜாதா என்கிற ரங்கராஜன்எங்கு பிறந்தார்?

 

 1. முதல் கதை எந்தப் பத்திரிக்கையில் வந்தது?

 

 1. சுஜாதாவுடன் திருப்பூர் கிருஷ்ணன் பணியாற்றியது எந்தப் பத்திரிகையில்?

 

21 . கணையாழியில் சுஜாதா கடைசிப்பக்கத்தை எவ்வளவு காலம் எழுதினார்?

 

22 .   அடிக்கடி எழுதுங்கள்” என்று ஒரு வரியில் சுஜாதாவை ஊக்குவித்த பத்திரிகை ஆசிரியர் யார்?

 

 1. ஒரு நாணயம் (coin) பற்றி சுஜாதா ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். எந்த நாணயம் அது?

 

 1. .”என்னே இந்த சமூகத்தின் கொடுமை?”என்று சுஜாதா ஒரு கதையில் எழுதாமல்இருந்ததற்காக தன்னைப் பாராட்டிக் கொள்ளும் கதை எது?

 

 1. . “கணவனின் சட்டை என்பதே ஒருகிறக்கத்தைஏற்படுத்த அன்புடன் அதை முகர்ந்து பார்த்தாள். முதுகுப் பக்கத்தில் லேசான பர்பியூம் வாசனை. நம் வீட்டில் இந்த வாசனை கிடையாதே? ”  இது எந்தக் கதையில் வருகிறது?

 

 1. சுஜாதா எழுதியதிமலா என்ற சயின்ஸ் பிக்‌ஷனில் திமலா எதை உருவகப் படுத்தியிருக்கிறது?

 

 1. .சுஜாதாவின் எந்தக் கதை குமுதத்திலும் பின்னர் குங்குமத்திலும் பிரசுரிக்கப்பட்டது? அதற்கு இலக்கியச் சிந்தனையின் விருது கூட கிடைத்திருக்கிறது. 

 

 1. .விகடனில்வந்த ஒரு கதை டி வியில் நாடகமாக வந்துள்ளது?

 

 1. இந்த கதையைப் படித்து விட்டு,உங்க வீட்டிற்கு (கொல்ல) வரட்டுமா என ஒருவர் சுஜாதாவிற்கு விகடன் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினாராம். எந்தக் கதை ?

 

 1. இலட்சம் புத்தகங்கள் என்கிற சிறுகதை எந்த ஊரில் நடந்த நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது?

 

 1. தலைமைச் செயலகம் என்று எதைப்பற்றி எழுதினார்?

 

 1. சுஜாதாவின் கருப்பு வெளுப்பு சிவப்பு கதையின் speciality என்ன?
 2. எமர்ஜென்ஸிபற்றி சுஜாதா பாடிய நேரிசை வெண்பாவின் முதல் சொல் எது ? 

 

 1. . சிறுவர் இலக்கிய வரிசையில் சுஜாதா எழுதிய நாவல் எது ?

 

 1. எல்லோருக்கும் தெரிந்த ஆனால் தெரியாதது மாதிரி நடிக்கும் சுஜாதாவின் பிரபலமானஜோக்கில்வரும் நாடு எது? 

 

 1. சுஜாதாவின் கோணல் பார்வை என்று அவரை விமர்சித்து புத்தகம் போட்ட எழுத்தாளர் யார் ? 

 

 1. ஓலைப்படாசுஎன்ற கதையின் மெயின் தீம் என்ன ? 

 

 1. சுஜாதாவின் முதல் நாவல் எது?

 

 1. . சுஜாதா தயாரித்த தமிழ்ப் படம் எது?

 

 1. சுஜாதாவின் எந்தத் தொடர் கதைக்காக அவருக்குகட்-அவுட்வைத்தார்கள்? 

 

 1. பத்துசெகண்ட்முத்தம் எதைப்பற்றி? 

 

 1. 14 நாட்கள் எதைப் பற்றி?

 

 1. சுஜாதா எழுதியஒரெழுத்துநாவலின் பெயர் என்ன? 

 

 1. சுஜாதாவுக்குத்தமிழில் பிடித்த 6 வார்த்தைக் கதை? 

 

 1. சுஜாதா ஒரு நடிகர்-நடிகைதிருமணத்திற்குசென்று எடுத்த போட்டோ கற்றதும் பெற்றதுமில் வந்திருக்கிறது. யார் அவர்கள்?                                 
 2. காகித சங்கிலிகள் என்ற நாவல் எந்த வியாதியை அடிப்படையாக வைத்து எழுதியது?

 

 1. கொலையுதிர்காலத்தில் சுஜாதா பயன்படுத்திய விஞ்ஞானக் கோட்பாடு எது? 

 

 1. கணையாழியில் சுஜாதா எழுதிய

 “பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்

 முத்திலே சின்னதாய் மூக்குத்தி-மத்தபடி

 பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர

 வேண்டாம் வரதட் சணை.”

என்ற வெண்பாவிற்கு  ஈற்றடி கொடுத்தவர் யார்? 

 

 1. கதை கட்டுரை தவிர முவரதராசனார்– சுஜாதா இருவருக்கும் உள்ள ஒருஒற்றுமை என்ன? 

 

50 நைலான் கயிறு கதையில் டெலிபோன் எண்ணின்  முடிச்சை அவிழ்ப்பது எது? 

 

 

 

 

 

 

சுஜாதா குவிஸ் -விடை

Image result for சுஜாதா

 

சுஜாதா குவிஸ் ( விடை)

 

 1. லட்சுமி அம்மாள்
 2. பையானிக்ஸ்
 3. மஹாபலி
 4. பாதி ராஜ்யம்,நீரஜா
 5. ரெடீனாடிடாச்மெண்ட்
 6. எரிக்காஜாங்
 7. ரோபோ- யம் என்று பெயர். ஆகாயம் என்னும் நாடகம்
 8. சில்வியா பிளாத், அவர் தற்கொலை செய்துகொண்டார்
 9. கர்ச்சீஃப்1 (ரத்தக்கறையுடன்)
 10. கரையெல்லாம் செண்பகப்பூ
 11. முதல் நாடகம்
 12. ஒரு நாடகம் அல்ல;இரு நாடகங்கள் : ஒரு கொலை – ஒரு பிரயாணம்
 13. கடவுள் வந்திருந்தார்.
 14. ஜோ,22ம் நூற்றாண்டு
 15. டாக்டர்நரேந்திரனின் வினோத வழக்கு
 16. சரளா
 17. முயல்
 18. திருவல்லிக்கேணியில்
 19. 1953இல் சிவாஜி என்ற பத்திரிகையில் வந்தது.
 20. அம்பலம் என்கிற இணையதளப் பத்திரிகையில்
 21. 35வருடங்கள்
 22. எஸ் ஏ பி அண்ணாமலை (குமுதம்)
 23. இரண்டனா
 24. அரிசி
 25. வாஷிங் மெஷின்
 26. திருமலாதிருப்பதி
 27. நிஜத்தைத் தேடி
 28. முதல் மனைவி
 29. பாலம்
 30. யாழ்ப்பாணம்
 31. மூளை
 32. பாதியில் நிறுத்தப்பட்டது .
 33. மீசா
 34. பூக்குட்டி
 35. மெக்ஸிகோ
 36. வெற்றியழகன்
 37. சிறுவனின்பிளாக்மெயில் 
 38. நைலான்கயிறு 
 39. லிட்டில்ஜான் / நிலாகாலம் / பாரதி
 40. கனவுத் தொழிற்சாலை
 41. ஒலிம்பிக்ஸ்100 மீட்டர் ஓட்டம் 
 42. இந்தியா பாகிஸ்தான் போரைப்பற்றி
 43.  ஆ 
 44. ஒருஊர்லஒரு நரியாம். அதோட சரியாம்  
 45. சூர்யாஜோதிகா
 46. கிட்னிசெயல் இழப்பு, nephrology 
 47. ஹோலோகிராம்
 48. நா பார்த்தசாரதி
 49. இருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்
 50. ஜாக்பாட்

எல்லிஸ் டங்கனின் தமிழ்நாடு 1930 களில்

எல்லிஸ் டங்கன் ( யார் தெரியுமா?    எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவர் . சீமந்தனி, இரு சகோதரர்கள்,அம்பிகாபதி,சூர்ய புத்திரி,சகுந்தலா,காளமேகம்,தாசிப்பெண்,வால்மீகி,மீரா, பொன்முடி  மந்திரி குமாரி   உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர். அமெரிக்கர் ) 

தென்னிந்திய  வாழ்க்கை என்ற அவர் குறும்படத்தை பாருங்கள் ! 

அவர் படத்திலிருந்து சுட்ட காட்சிகள் மாதிரி இருக்கிறது. 

அவரே  பின்குரல் !

 

எமபுரிப்பட்டணம் – அறிவுப்பு

 

எமபுரிப்பட்டணம் இரு வடிவங்களில் வந்துகொண்டிருப்பது குவிகம் வாசகர்களுக்குத் தெரியும். 

முதல் பகுதி சூரிய புத்திரனாக  எப்படி எமன் பிறக்கிறான் என்பதைப் பற்றி புராண ஆதாரங்களுகள் கூடிய கற்பனைச் சித்திரம். 

இரண்டாம் பகுதி இன்றைய கால கட்டத்தில் எமபுரிப்பட்டணத்தில் நடைபெறும் கலாட்டாக்கள் ! 

இந்த இரண்டையும் வெவ்வேறு வடிவில் கொண்டு செல்லப் புதிய திட்டம் உருவாகி வருகிறது. 

அதற்கு சற்று காலம் தேவை ! 

புது வடிவம் என்ன – எப்படி வரப்போகிறது  என்பதைப் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வரும் 

அது வரைக்கும் சற்று பொறுக்கலாமே! 

Image result for fingers crossed

 

 

Related image

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

 

ஒட்டாவா வில் ஒருநாள்!
ஒரு வெள்ளிக்கிழமை மாலை, யூ எஸ் ஸிலிருந்து கனடாவின் ரொரன்டோ வந்து சேர்ந்தேன். ஏர் கனடா அலுங்காமல் வானில் ஏற்றி இறக்கியது – வெஜிடேரியன் என்று, மஞ்சள் கலரில் உப்பு சப்பில்லாத ஒரு சாதமும், பன்னீர், காலிஃப்ளவர் போட்ட சப்ஜியும், பல்லை உடைக்கும் பிரட்டும், பழத்துண்டுகளும் கொடுத்தார்கள். ரோஸ்டட் பாதாம், முந்திரி பரவாயில்லை – அருந்திய பழரஸ பானங்கள் குறித்து நான் எழுதுவதாயில்லை!
ஒரு நாள் லோகல் டவுன் டவுன் (Downtown) சுற்றிவிட்டு, மறுநாள் ஞாயிறு அதிகாலை 8 மணிக்கு (!) தரைவழி கிளம்பினோம். கிட்டத்தட்ட 450 கி.மீ தொலைவில் உள்ள ஒட்டாவா (அட்டாவா என்கிறார்கள் இங்குள்ளவர்கள் – Ottawa ) சென்று, மறுநாள் திரும்புவதாகத் திட்டம்.
சாலைகள், கார்கள், ரூல்கள் எல்லாம் அமெரிக்கா போல்தான். சாலையின் இரு புறமும், அடர்ந்த பனி – ஸ்னோ – வெள்ளைப் பஞ்சு மெத்தை விரித்தாற்போல்! இலைகள் ஏதுமின்றி, வானை நோக்கிய கிளைகளுடன் மரங்கள், கிருத்துமஸ் மரங்கள் – கோன் வடிவில், அடர்ந்த பச்சை நிறத்தில், ஊசி முனைகளுடன் தட்டையான இலைகளுடன் – ஸ்காட்ஸ் பைன் மரங்கள் – பனித்தரையைத் துளைத்து வெளியே வந்தது போல் பனி போர்த்தி நின்று கொண்டிருந்தன. ஓக், லிண்டேன், வால்நட், ஏழெட்டு வகை ‘ஃபர்’ மரங்கள் இந்தப் பனிப் பிரதேசத்தில் காணப்படுகின்றன! போட்டோக்களிலும், ஆங்கிலப் படங்களிலும் பார்த்தது – நேரில் அதிசயமாயும், மனதுக்கு குளிர்ச்சியாயும் இருந்தது! கார் செல்லும் வேகத்தில், எதிரே வழுக்கிச்செல்லும் பனிபடர்ந்த இடங்களும், மரங்களும் மிகவும் ரம்யமான காட்சிதான்!
இங்கு ‘ஸெமி காண்டினெண்டல்’ சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை குளிரும், பனிப் பொழிவும் – ஏப்ரல் முதல் ஈரப்பதம் நிறைந்த கோடை! ஜனவரியில் குளிரும், பனியும், காற்றும் அதிகமாக இருக்குமாம் – (-5.4 ‘F to -21.6’F)!
ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் ஒட்டாவாதான் கனடாவின் தலை நகரம்! கலை, கலாச்சாரம், கிரியேட்டிவிடி நிறைந்த அழகிய நகரம். இங்குள்ள மியூசியம், காலரிகள் தேசீய அளவில் புகழ் பெற்றவை.
ஒண்டாரியோ வின் தென்கிழக்கில், ஒட்டாவா நதியின் தென் கரையில், காடின்யூ விலிருந்து க்யூபெக் வரை அமைந்துள்ளது ஒட்டாவா நகரம் (2790 sq km பரப்பளவுள்ளது). இது ‘ரிடெயு’ நதியும், ‘ஒட்டாவா’ நதியும் சேருகின்ற இடம்! இந்த நதிகள் போக்குவரத்துக்கும், நீர் மின்சக்தி எடுக்கவும் பயன்படுகின்றன!
பிரிட்டிஷ் எஞ்சினீயர் லெப்.கலோனல் ஜான்பை என்பவர், ரிடெயு நதியையும், ஒட்டாவா நதியையும் ஒரு கெனால் (203 கி மீ ) மூலம் இணைத்தார் – போக்குவரத்துக்காக. ஒட்டாவா நதியின் தென்கரையில், தனக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்கும் என ஒரு கிராமத்தை அமைத்தார். அது அவர் பெயரிலேயே ‘பைடவுன்’ என்றழைக்கப்பட்டது. 1855 ல் ஒட்டாவா நகரமாக சேர்க்கப்பட்டது!
‘அல்கான்குவின்’ என்னும் நேடிவ் அமெரிக்கர்கள் வியாபார நிமித்தம் ஒட்டாவா நதிக்கரையில் குடியேறியதும், 1613 ல் சாமுவேல் டி சாம்ப்ளயின் இந்த இடத்தை ‘நியூ ஃப்ரான்ஸ்’ எனப் பெயரிட்டதும் வரலாறு. 1857 ல் ஒருங்கிணைந்த கனடா, பிரிட்டிஷ் காமன்வெல்த்தின் டொமினியன் (அரசுரிமை) ஆயிற்று. விக்டோரியா மகாராணியால் ‘ஒட்டாவா’தலை நகரமாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஆங்கிலம், ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
ஒழுங்காக பராமரிக்கப்பட்ட சாலைகள், வான் முட்டும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள், கடைகள், ரெஸ்டாரெண்டுகள், வண்ண மயமான நியான் விளக்கு போர்டுகள், தலை முதல் கால் வரை மூடிய விண்டர் ஆடைகளில் மனிதர்கள் ( குளிருக்கு அஞ்சாத பெண்கள், அரை டிராயரில் அலைந்ததையும் பார்க்க முடிந்தது – நேடிவ் கனடா மக்களைக் குளிர் கண்டு கொள்வதில்லையாம்!). கையில் ஒரு காபி அல்லது பீர் டின் சகிதம், வாய் வழி குளிர்ப் புகை வர, எதையும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்த மக்கள்! பஸ்களும், தரையில் வழுக்கிச் செல்லும் மாடர்ன் டிராம் களும் அழகு! அண்டர்கிரவுண்ட் ரயில் அதற்கான ஸ்டேஷன் மேலே மெயின் சாலையில் – தேவைக்கேற்ப பயணிக்கலாம்!
போகிற வழியில் 70 – 80 மைல்களுக்கு ஒன்று வீதம், EnRoute என்னும் – (சொவனீர் ஷாப், காபி ஷாப் – Tim Hortons ல் கிட்டத்தட்ட நம்ம ஊர் காபி கிடைக்கிறது! – ரெஸ்ட் ரூம்கள்) – பயணிகள் சிறிது இளைப்பாறும் இடம் உள்ளது. விலை கூட என்றாலும், நன்கு பராமரிக்கப்பட்ட இடங்கள்!

ஒட்டாவா வில் மதியம்  லஞ்ச் எதிர்பாராதது  நம்ம  ஊர்  மலையாள  சேச்சி  உணவகம் 

Thali – coconut lagoon –

சோறு , பூர இரண்டு ,  சப்ஜி , பப்படம் , சாம்பார் , தயிறு

என  அமர்க்களம்!

சிரித்த  முகத்துடன் (சந்தனம் மிஸ்ஸிங் )

உபசாரம் செய்த சேச்சிக்கு வயது இருபத்தைந்துக்குள்தான்!

பொடி நடையாக அருகே இருந்த பார்லிமெண்ட் கட்டிடம் சென்றோம். சுற்றிலும் பனி. மிகப் பழைய கட்டிடங்கள். மணிக் கூண்டு. வாசலில் ஏதோ ஒரு கட்சியினர் கொடிகளுடன் அரசுக்கு எதிரான கோஷங்கள் போட்டபடி நின்றிருந்தார்கள். போலீஸ் பந்தோபஸ்த்து, பந்தல், வாழ்க ஒழிக கூச்சல்கள், தலைமுறை சொல்லும் பேனர்கள் எதுவும் கிடையாது – ‘இதெல்லாம் ஒரு போராட்டம்’ என்றது மைண்ட் வாய்ஸ்!

The centennial flame – பார்லிமெண்ட் முன்பு ஒரு ஜோதி எரிந்துகொண்டிருக்கிறது – 1966 டிசம்பர் 31 ல் பிரதம மந்திரி லெஸ்டர் பி பியர்சன் முதன்முதலாக ஏற்றியது – முதல் 100 வருட கூட்டாட்சி நிறைவுக்கு! 2017 டிசம்பர் 13 ல் ஜஸ்டின் ட்ருடீன், 150 ஆண்டு நிறைவுக்கு, மீண்டும் ஜோதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜோதியைச் சுற்றி மாகாணங்கள் கூட்டமைப்பில் சேர்ந்த தேதிகள் பூவின் இதழ்கள் போன்ற வடிவில் குறிக்கப்பட்டுள்ளன.
கருநீல யூனிஃபார்மில், இடுப்பில் வாக்கி டாக்கியுடன் நின்றுகொண்டிருந்த செக்யுரிடி முக மலர்ச்சியுடன் பார்லிமெண்ட் டூருக்கு அனுப்பி வைத்தார். மினி ஏர்போர்ட் போல் ஒரு செக்யூரிடி செக் – பிறகு உள்ளே கைடுடன் சென்றோம் – கிரே கலர் யூனிஃபார்மில், வட்டமான முகத்தில் சிறு வட்ட ஷெல் ஃப்ரேம் கண்ணாடியுடன், ரெடிமேட் புன்னகை வீசியபடி வந்த கைட் மூன்று இடங்களில் நின்று பார்லிமெண்ட், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கூட்டம் நடக்கும் விதம், கமிட்டி மீட்டிங் நடக்கும் இடம் எல்லாம் காண்பித்தபடி, விவரித்தார். கேள்விகளுக்கு பதில் அளித்தார். பார்லிமெண்டின் மசோதாக்கள் கமிட்டியில் விவாதிக்கப்பட்டு, இறுதியில் பிரிட்டிஷ் ராணியின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாவதை விளக்கினார்! அங்கும் அன்பார்லிமெண்டரி வார்த்தைகள் பேசப்படுவதையும், அவை எவ்வாறு சபாநாயகரால் தடுக்கப் படுகின்றன என்பதையும் விவரித்தார். எங்கும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரிதான் என்று நினைத்தேன் – சபாநாயகரின் வானளாவிய அதிகாரம் பற்றிப் பேசவில்லை! உள்ளே, தலையில் குல்லாய் எதுவும் போடக் கூடாது என்றாள் – அங்கே பார்லிமெண்டிற்கு அளிக்கப்படும் மரியாதை வியக்க வைத்தது. மறக்க முடியாத அனுபவம்.
அருகருகே உள்ள இரண்டு, மூன்று கட்டிடங்கள் – குறுக்கே செல்லும் நீரோடைகள் பனியில் உறைந்து கிடந்தன. பார்லிமெண்ட் உறுப்பினர்கள் ‘ஸ்கேடிங்’ செய்தவாறு வருவார்களாம்! பழைய கட்டிடங்களின் அழகும், அமைப்பும் மாறாமல், புதிய வசதிகளைச் செய்து கொள்கிறார்கள்! நமது ஊரில் இடிக்கப் பட்ட புராதன கட்டிடங்கள் நினைவில் நிழலாடின!
கனடாவின் அத்லெட் டெர்ரி ஃபாக்ஸ், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக மேற்கொண்ட ‘ஓட்டப் பயணம்’ – அவர் புற்றுநோயால் ஒரு காலை இழந்தவர் – அவரது மனித நேயம், அவர் பெயரால் உலகம் முழுதும் நடத்தப்படும் ஓட்டங்களும், கிடைக்கும் நிதி உதவியும் வியக்க வைக்கின்றன. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் (23 வயதில் இறந்து விடுகிறார்) அவரது சிலை ஒன்று பார்லிமெண்டுக்கு எதிரில் வைத்துள்ளார்கள். மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய சிலை!
Major’s Hill Park – ‘நேஷனல் காபிடல் கமிஷன்’ஆல் பராமரிக்கப் படுகிறது. இதில் பார்லிமெண்ட்டும் சுற்றுப்புற இடங்களும் அடங்கும்.
இரவில் கை கால்கள் விறைத்துவிடும் குளிர் – காற்று வேறு ஊதி, ஊதிக் குளிரை அதிகரிக்கும். இரண்டு மூன்று லேயர் உடைகள் அவசியம்! மரங்களில் சீரியல் விளக்குத் தோரணங்களும், கடைகளின் நியான் விளக்கு போர்டுகளும், தூரத்தில் தெரியும் கட்டிடங்களும், உறைந்த பனிப் பொழிவுகளும், பனிகட்டி ஆறுகளும் – கண்களுக்கு விருந்துதான்!
நிறம் மாறும், ஆளுயர எழுத்துக்களில் OTTAWA – முன் நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்! 170 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் ‘பார்’, புகையிலைக்கான தனிக் கடை ‘Mr Smoke’ எனப் புருவம் உயர்த்தும் இடங்கள்.
குளிரில் பிச்சை எடுத்துக் காலம் தள்ளும் ‘ஹோம்லெஸ்’ மனிதர்கள் இங்கும் உண்டு.
மறுநாள் காலை சிறிது தாமதமாகக் கிளம்பினோம் – வந்தவழியே திரும்பினோம். காலை என்பதால் வீடுகளும் பனித் தொப்பிகளைக் கழற்றாமல் எங்களைப் பார்த்துச் சிரித்தன!
வழியில் ‘கோரா’ என்ற இடத்தில் ‘ப்ரஞ்ச்’ (காலை, மதிய உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்து உணவு!) சாப்பிட்டோம். காலை 5 முதல் மதியம் 3 வரை மட்டும் இயங்கும் இந்த உணவகங்கள் பிரசித்திபெற்றவை! பிரட், பன், கேக்குகள், வெஜ் சாலட்ஸ், பழங்கள், ஜூஸ் போன்றவை மட்டும். ஒரு முறை சாப்பிட்டால், அடுத்து இரண்டு வேளைக்குப் பசிக்காது – அவ்வளவு சுவை மற்றும் அளவு!!
பார்க்க வேண்டிய இடம் ஒட்டாவா!
ஜெ.பாஸ்கரன்.