தமிழ்மகன்.
இயற்பெயர் வெங்கடேசன் மற்ற புனைப் பெயர்கள் வளவன், தேனீ.
டிவிஎஸ்- இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய போட்டியில் முதல்பரிசாக டிவிஎஸ் 50 பெற்றுத்தந்தது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ என்ற புதினம். பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியுள்ளார். சுவாரசியமான நடையில் அறிவியல் சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன. திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார்.
‘வெட்டுப் புலி’, ‘மானுடப் பண்ணை’, ‘ஆபரேஷன் நோவா’ ஆகிய புதினங்கள் மற்றும் ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ என்னும் குறுநாவல் பரவலாகப் பேசப்பட்ட படைப்புகள் செய்தியாளராகவும் இணை ஆசிரியராகவும் பல பத்திரிகைகளில் பணி புரிந்தவர். கிட்டத்தட்ட தமிழில் வெளிவரும் எல்லா தின, வார, மாத இதழ்களிலும் பணி புரிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
***
இவரது ‘ஔவை’ சிறுகதை இப்படித் தொடங்குகிறது.
ஓர் ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் அமுதாவிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை.
அமுதா என் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தாள். ஆரம்பத்தில் அதை நான் அலட்சியம் செய்தேன்.
என்று தொடங்குகிறது.
அலுவலகத்தில் சக ஊழியையான அமுதா கதைசொல்லியுடன் இயல்பாகவும் சகஜமாகவும் பழகுகிறாள். ஹாஸ்டலில் தாங்கியிருப்பவள். மழை நாளொன்றில் கதை சொல்லியின் ஸ்கூட்டரில் இயல்பாகப் பயணிக்கும் அளவிற்கு நல்லதொரு நட்பாக அது மலர்ந்திருக்கிறது.
இருவரும் பல்கலைக் கழகத்தில் பேராசிரியை ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள்.
எதிர்பார்க்காத தருணத்தில் “சொல்லுங்க சார்” என்றாள். எதைப் பற்றியாவது சொல்லிக்கொண்டே வந்து அதைப் பாதியில் நிறுத்திவிட்டேனா என்று அவசரமாக நினைவுபடுத்திப் பார்த்தேன். நான் அப்படி நினைப்பதைப் புரிந்துகொண்டவள் போல “ஏதாவது சொல்லுங்க சார்” என்றாள் கன்னத்தில் கையூன்றி என்னைக் கூர்மையாகக் கவனித்தபடி.
நிகல் கோகாயின் ‘ஓவர்கோட்’ கதையைப் பற்றுச் சொல்கிறார் கதைசொல்லி. பிறகு, அமுதா சந்திக்கவிருந்த பேராசிரியை எடுக்கும் வகுப்பருகில் சென்று நிற்கிறார்கள்
“ஒளவையார் என்ற பெயரில் பல பெண்பால் புலவர்கள் இருந்தார்கள். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவை வேறு. முருகனிடம் சுட்டப் பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட ஒளவை வேறு. ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி‘ பாடிய ஔவை மிகவும் பிற்காலத்தவள். ஏனென்றால் போர்த்துகீசியர்கள் வருகைக்குப்பின் தான் இங்கு வான்கோழி அறிமுகமானது. சங்க காலத்தில் காதலைப் பற்றிப் பாடிய ஔவைகளே அதிகம். ஆக, ஔவைகள் என்றால் பாட்டி என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய இளம் ஔவைகள் இருந்திருக்கிறார்கள் ….”
அமுதா நிஜமா என்று கேட்கிறாள். அப்படித்தான் இருக்கவேண்டும். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஔவையை இளம் பெண்ணாகக் கற்பனை செய்து பாருங்களேன் என்கிறார் கதைசொல்லி.
“நல்லா இருக்குல்ல?” என்று வியந்தாள். “சங்க காலத்தில் இவ்வளவு பெண்பால் புலவர்கள் வேறுமொழிகளில் இருந்தார்களானு தெரியல. இங்க இவ்வளவு பேர் இருந்ததிலே இருந்தே பெண்கள் ரொம்ப சுதந்திரமா இருந்தாங்கன்னு தெரியுது. ஒளவையும் அதியமானும் இன்டலக்சுவல் ஃப்ரண்ட்ஸா இருந்திருக்க வாய்ப்பிருக்குனு தோணுது.”
அமுதாவிற்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஆறுமாதங்கள் நிழலாகத் தொடர்ந்தவள் ஹாஸ்டலை விட்டும் அலுவலகத்தைவிட்டும் விலக நேருகிறது.
இடையில் ஊரில் இருந்து அவள் “எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு சார்” என்று போன் செய்தபோது ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் உள்ள இடைஞ்சலைப் பற்றி விசனப் பட்டேன்.
அவள் வருத்தப்பட்டது எனக்கு மேலும் வருத்தமாகிவிட்டது. “அதனால என்ன சார். நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்” எனக்குக் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. *அமுதா நீ ஏன் ஆம்பளையா பிறக்காமப் போனே? என்ன இருந்தாலும் நாம முன்னமாதிரி பேசிக்க முடியும்னு நினைக்கிறியா?”
கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் நான் உணர்ச்சிவசப்படுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
“முடியும் சார். நாம எப்பவும் போல இருக்கலாம் சார் … கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்.”
திருமண அழைப்பிதழுடன் வருங்காலக் கணவனுடன் கதைசொல்லியை நேரில் அழைக்க வருகிறாள் அமுதா. அவளுடைய ஒரு ஃபிரண்ட் வீட்டிற்கும், அவரது ஒரு ஃபிரண்ட் வீட்டிற்கும் இருவரும் சென்று அழைப்பதாக ஒப்பந்தமாம். இவர்தான் என் ஒரே ஃபிரண்ட் என்று அமுதா சொல்லிவிட்டாளாம். (“ஹாஸ்டல் வெறுப்புக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல்”)
நல்ல தோழிக்கு நல்ல கணவன் கிடைத்ததில் கதைசொல்லிக்கு பெரும் மகிழ்ச்சி.
“சொல்லுங்க சார்” என்றாள்.
நான் எதை எங்கிருந்து தொடங்குவது என்று புரியாமல் “கார்ட்டூன் படங்கள்ல டாம் அண்ட் ஜெர்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும் சி.டி. இருக்கு பாக்றீங்களா?” என்றேன். – “போடுங்களேன்” அதிர்ஷ்டக்காரர்தான் சொன்னார்.
பூனையை எலி தொடர்ந்து வெறுப்பேற்றிக்கொண்டிருந்தது மனம்விட்டுச் சிரித்தாள். “பிரில்லியண்ட் காமெடி..” என வியந்து கொண்டே அமுதா தன் ஹான்ட் பேகிலிருந்து எதையோ எடுத்து என் கையில் திணித்தாள்.
நெல்லிக்காய்.
என்று கதை முடிகிறது.
மென்மையான உணர்வுகளை இதமான வார்த்தைகளில் அழுத்தமாகத் தெரிவிக்கும் நடையில் ஒரு அற்புதமான கதை