அற்புதக் கவிதை-
(விவியன்- ஸ்பெயின்)
நிலமகள் உன் காதில் கிசுகிசுத்தாள் ; ஆனால்/
நீயோ காதில் போட்டுக் கொள்ளவில்லை.
நிலமகள் உன்னோடு உரையாடினாள்; ஆனால்/
நீயோ செவிசாய்க்கவில்லை.
நிலமகள் உரக்கக் கூச்சலிட்டாள்; ஆனால்/
நீயோ அவள் வாயடைத்தாய்.
அதனால்தான் நான் பிறப்பெடுத்தேன்…
உன்னைத் தண்டிக்க நான் உதிக்கவில்லை…
உன்னைத் துயில் எழுப்பவே நான் உதயங் கொண்டேன்…
பெருவெள்ளம் பெருக்கெடுத்தோட
நிலமகள் உதவிக் கரம் வேண்டிக் கரைந்தழுதாள். ஆனால்
நீயோ செவிடாகிப் போனாய்.
கொழுந்துவிட்டு எரிந்தது ஊழித்தீ. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
சுழன்றடிக்கும் சூறைக்காற்று. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
அச்சுறுத்தும் புயற்காற்று. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
கடல் விலங்குகள் நீர் மாசுக்களால் நித்தம் மரித்தன.
பனிப்பாறைகள் உருகி ஓடின அச்சுறுத்தும் வேகத்தில்,
கொடிய பஞ்சம்,
எனினும் நீ இன்னும் செவிசாய்க்கவில்லை.
நிலமகள் எத்தனை எதிர்மறைத் தாக்குதல்களை எதிர் கொண்டாள்;ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
இடைவிடா போர் ஓலங்கள்
இடைவிடாப் பேராசை
நீயோ தொடர்ந்து உன் வழியில் வாழ்வைத் தொடர்ந்தாய்…
பகைமை பன்மடங்காய்ப் படர்ந்த போதும் உனக்குக் கவலையில்லை,
கொலைகள் பல நித்தம் நிகழ்ந்த போதும் உனக்குக் கவலையில்லை,
அண்மையில் வெளிவந்த ஐ போன் வாங்குவதே உனக்கு அதிமுக்கியம்,
நிலமகள் உன்னிடம் என்ன சொல்ல எண்ணினால் என்ன?
ஆனால் இதோ நான் இங்கு இருக்கின்றேன்.
உலகைத் தன் வழித்தடங்களில் நில் என நிறுத்தி விட்டேன்.
இறுதியாக நீ என் குரலுக்குச் செவிசாய்க்கச் செய்துவிட்டேன்.
உன்னை அடைக்கலம் கொள்ளச் செய்துவிட்டேன்.
நீ உலகப் பொருட்களைப் பற்றிய சிந்தனைகளில் உழன்று கொண்டிருப்பதை நிறுத்தி விட்டேன்..
இப்போது நீயும் நிலமகளைப் போல, உன் ஒரே கவலை
உயிர் பிழைப்பதைப் பற்றி மட்டுமே.
இது எப்படி இருக்கு?
நிலம் தீயில் பற்றி எரிய.. நான் உனக்கு காய்ச்சல் தருகின்றேன்.
காற்றில் மாசுகள் நிறைந்திருக்க.. நான் உனக்கு மூச்சுத் திணறல் நோய்கள் தருகின்றேன்..
நிலம் நாளும் தன் வலிமை இழக்கை இழக்க இழக்க, நான் உன்னை வலிமை குன்றச் செய்கின்றேன்.
உன் சுகபோகங்களை நான் இழக்கச் செய்தேன்…
நீ வெளியில் சுதந்திரமாய் சுற்றித் திரிவதை..
நிலமென்னும் இக்கோளின் துன்பங்களை சற்றும் நினையாது
விஷய போகங்களில் மூழ்கிக் கிடந்தாய்
நான் உலகின் சுழற்சியை நிறுத்தினேன்…
இப்போது…
சீனாவில் காற்றின் தரம் மேம்பட்டிருக்கின்றது…
வானம் நிர்மலமாய் தெளிந்த நீல வண்ணத்தில் திளைக்கின்றது,
ஏனெனில் தொழிற்சாலைகள் காற்றில் மாசுகளைக் காறி உமிழவில்லை.
வெனிசில் நீர் தூய்மையாக உள்ளது,
ஏனெனில் நீரை மாசுபடுத்தும் கொண்டோலா படகுகள் பயனற்றுக் கிடக்கின்றன.
உன் வாழ்வில் எது இன்றியமையாதது என சிந்திக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ள கட்டாயம் நேர்ந்திருக்கின்றது.
மீண்டும் சொல்கின்றேன், உன்னைத் தண்டிக்க நான் இங்கே வரவில்லை,
உன்னைத் துயில் எழுப்பவே வந்திருக்கின்றேன்…
இவையெல்லாம் முடிந்து விட்டால், நான் இல்லாது போய்விடுவேன்…
இக்கணங்களை நினைவில் கொள்…
நிலமகளின் குரலுக்கு காது கொடு.
உன் ஆன்மாவின் குரலுக்கு செவிசாய்.
நிலத்தை மாசுபடுத்துவதை நிறுத்து.
ஒருவரோடு ஒருவர் போரிடுவதை நிறுத்து.
உலகப் பொருட்களில் மனம் உழல்வதை நிறுத்து.
அண்டை வீட்டாரை நேசிக்க ஆரம்பி.
உலகையும், அதன் உயிரினங்களையும் பற்றிக் கருதத் தொடங்கு.
படைப்பவனை நம்பத் தொடங்கு.
ஏனென்றால்,
மறுமுறை இன்னும் உக்கிரமாய் உதயம் கொள்வேன்
இப்படிக்கு,
கொரோனா நோய்த்தொற்று.