இந்த மாதம் நான் பகிர்வது என் க்ளையண்ட் ஒருவரின் பயணம், அவர் பார்வையிலிருந்து. எங்களது ஸோஷியல் வர்க் விதிமுறைகளின் படி, எங்களை ஆலோசிப்பவர்களைப் பற்றி பகிரங்கமாக எந்த விவரமும் தரக் கூடாது. பெயரை, விவரங்களைச் சற்று மாற்றி, பொருளை மட்டும் விளங்கச் செய்வோம், கற்கும், கற்றுத்தரும் நோக்கத்துடன். இம்முறை, அதே நோக்கத்துடன், க்ளைன்ட் தன் அனுபவத்தைப் பகிர வேண்டுகோள் வைக்க, ஏற்றுக் கொண்டேன்.
இவர்களின் க்ளையன்டான நான், என்னுடைய மனநோய் கட்டத்தில் மன நலன் தடுமாறத் தொடங்கிய, பின்பு முழுமையான நலனை அடைந்த பயணத்தைப் பற்றி விவரங்களைப் பகிர விரும்புகிறேன். இந்த நலன் அடையும் பயணம் பல மாதங்களுக்கு நீடித்தது. இங்கே பகிருவது மேலோட்டமாகத் தான்.
இருபத்தி ஆறாவது வயதில் எனது தடுமாற்றங்கள் ஆரம்பித்தது. வேலைகளை முடிக்க வேண்டும் என்று நன்றாகத் தெரியும். அதற்காக நான் தொலைப்பேசி பக்கத்தில் அமர்ந்து கொள்வேன். இல்லை தாளைக் கையில் எடுத்துப் பார்த்திருப்பேன். அழைக்கவா? எழுதவா? என்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். தொலைப்பேசியில் அழைத்தால், பிறகு என்ன சொல்ல? வார்த்தை தான் வருமா? பயம் சூழ்ந்து கொள்ளும், வேலை எதுவுமே ஓடாது. வாழ்வின் மேல் கோபம் கூடியது. இருட்டான நாழிகைகள்.
எனக்கோ இந்த சங்கடங்களைப் பற்றி எங்கே எப்படிப் பகிர, யாரிடம் பேசுவது என்றதும் தெரியவில்லை. செய்து முடிக்க வேண்டிய வேலைகளோ அப்படியே நின்றபடி இருந்தது. வாழ்வில் ஒரு வெறுப்பு. வெளிச்சத்திற்கு இடமில்லை போல் இருந்தது.
செயலற்ற நிலையிலிருந்தேன். இதுவே மேலும் உள்ளத்தில் தடை ஏற்படுத்தும் வகையில் இயங்கியது. வாழ்வே நின்று விட்ட நிலையில் இருப்பது போலத் தோன்றியது. இந்த குழம்பிய நிலையில் நான் முதல் முதலில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரை சந்தித்தேன்.
ஆரம்பமாகியது ஸெஷன்கள். என்னுடைய நிலைமைகள் எவ்வாறு, செயல்பட முயற்சிக்கும் போது நேர்ந்த அனுபவங்கள், ஏன் அவ்வாறு செய்தேன் என்றதைப் பற்றிப் பல வாரங்களுக்கு விரிவாக ஆராய்ந்தோம். மிக மெதுவாக, போகப் போக அவற்றின் பிணைப்புகளை அறிந்து கொண்டேன். திகைத்தேன்.
அதன் பிறகே, எதெல்லாம் இப்படி செயலற்ற நிலைமை நேரச் செய்கிறது என்பதை அடையாளம் காண ஆரம்பித்தேன். ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் எப்போதுமே என்னுள்ளே எதிர்மறை எண்ணங்கள் உடனடியாக உண்டாவதைக் கண்டுகொள்ள முடிந்தது. இதனால் தான் மனச் சஞ்சலம் ஏற்பட்டு, ஸ்தம்பித்துப் போய் விடும் நிலைமை, என்பது ஒப்பிட்டுப் பார்த்ததில் தெரிந்தது.
முதலில் இதை ஏற்றுக்கொள்ள மனம் போராடியது. எண்ணங்களைப் பதிவு செய்து, ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கருடன் உரையாடிய பின் அவற்றை அடையாளம் கண்டேன், ஏற்றுக் கொண்டேன்.
வாரங்கள் போக, என்னில் உள்ள பல பரிமாணங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.
ஓரிரு அனுபவங்களை விவரிக்க விரும்புகிறேன். புது இடங்களில், அல்லது மனிதர்களிடம் பேச வேண்டுமென்றால் தயக்கம் கவ்விக் கொள்ளும். ஒரு வேளை இந்தத் தடையைத் தாண்டி பேசி விட்டால், மேற்கொண்டு என்ன சொல்ல என்பதற்கு விழிப்பேன். இந்தத் தருணங்களில் அச்சம் சூழ்ந்து, மனம் படபடவென்று அடிக்கும். அங்கிருந்த சென்று விடலாம் என்றால், அதுவும் மரியாதை இல்லை என்று தெரியும்.
சமூகத் திறன் நொறுங்கி இருக்கும். ஏதேதோ எண்ணங்கள் ஓடும். மனமோ “ஓடிவிடு, போ போ” என்றே சொல்லும். மன்னிப்பு கேட்டுச் சென்று விடலாம் என்றால் அதற்கும் என்ன சொல்ல என விழித்துக் கொண்டு, உறைந்து நிற்பேன். பார்ப்பவர்கள் என்னை முட்டாள், கோழை என்றே நினைத்து இருப்பார்கள் என்ற சிந்தனை வேறு ஓடும். பூமியில் தன்னைப் புதைத்துக் கொள்ளலாம் போலத் தோன்றும். படிக்கும் உங்களுக்கு இது சில்லியாக இருக்கலாம். என் நாட்களோ இதுபோலத்தான் ஓடிக்கொண்டு இருந்தது!
இது போல நிகழும் போதெல்லாம் மற்றவர்கள் என்னை எடை போடுவது போலவே தோன்றும். என்னுடன் இருக்க, பழக, தோழமை கொள்ள யாருக்கும் பிடிக்கவில்லை என்று தோன்றியது. அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது என்று, இந்த சிந்தனைகளை நினைவிலிருந்து தள்ளிவிட முயற்சி செய்து, தோல்வி அடைந்தது தான் மிச்சம். இவ்வாறு நினைவுகளைத் தள்ளி விடுவது தீர்வுக்கு வழி இல்லை என்பது ஸெஷன்களில் புரிந்தது.
எனக்கு நடப்பவற்றை, சூழலால் ஏற்படும் அதிர்வுகளை, உணர்வுகளின் பரிமாணங்களை, உறவுகளைப் பற்றி மேலும் புரிந்து கொள்வதற்கு, அந்த நினைவலைகளைக் குறித்துக் கொள்ள முடிவு செய்தோம். ஏன்? ஒவ்வொன்றையும் நினைவு படுத்திக் கொள்வது, உணர்வைத் தூண்டும். நடந்த போது எப்படி இருந்ததோ அச்சு அசலாக இப்போதும் இருக்கும். இப்படிச் செய்ததில் அப்போது நான் என்ன நினைத்தேன், அதன் விளைவுகள் என்ன என்று தெரிந்து கொள்ள முடிந்தது. ஆமாம் நீங்கள் நினைப்பது போல் இது அவ்வளவு எளிதான செயல் இல்லை. நினைவு அலைகள் சங்கடத்தைத் தர, அப்போது தான் உடல்-மனம் மொழியை அடையாளம் காண முடிந்தது.
இந்த நினைவுகளில் பலவற்றை ஸெஷன்களில் எடுத்து ரோல் ப்ளே செய்தோம். அதாவது அப்போது நடந்ததைத் திரும்ப உருவாக்கி நடத்திக் கொள்வது. இதிலிருந்து என்னுடைய செயல்பாடுகள், அணுகுமுறைகள், எதிர்மறை எண்ணங்கள் அடையாளம் காண்பது முதல் கட்டமானது. அதற்குப் பிறகு அதன் விளைவு, பிணைப்பு சரிசெய்யும் விதங்களை வரிசைப் படுத்த முடிந்தது. என்னைப் பொறுத்தவரை இது என்னுடைய முதல் மிகச் சிறிய வெற்றி.
என்னுடைய அச்சத்தை, சங்கடத்தைப் பார்த்த அனைவருமே பரிந்துரைத்தது, “எல்லாம் உன் கற்பனை”, “கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள், சரியாகிவிடும்”, “உனக்கு மன உளைச்சல்” என்று பலவற்றைச் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்கக் கேட்க நான் எதற்கும் உபயோகம் இல்லை என்றதே உறுதியாகிவிடுமோ எனப் பயந்தேன். இந்த கேள்விகளை முறியடிக்கவே பொய் சொல்வேன் “மருந்து எடுத்துக் கொள்கிறேன்” என்று. என்னைப் புரிந்து கொள்ளாமல், எடை போடுகிறார்களே என வருத்தப் பட்டேன்.
ஸெஷன்கள் போய்க்கொண்டு இருந்தது. அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்தது. மனப்பான்மை மாற்றங்களில், பலங்கள், சமாளித்தல் திறன்களை அடையாளம் கண்டு, உபயோகித்து, வளங்களின் நன்மதிப்பு என்ற பல.
இவற்றை அறிந்து, பாராட்டத் தொடங்க, அது என்னை ஊக்குவித்தது. அப்போதுதான் என்னுடைய நலனுக்கு நான் எவ்வளவு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேனோ, அந்த அளவிற்கு முன்னேற்றம் என்று புரிந்தது. அதற்கு மனம் திறந்து, முயற்சி பல மடங்கு தேவை.
என்னுள் மாற்றம் வர வாழ்க்கை இனித்தது! ஆமாம் சரியாக நினைத்தீர்கள், நான் ஸெஷன்களுக்கு விடாமல் வந்ததால் தான் என்று சொல்வேன்.
இதைச் சொல்வதற்குக் காரணம் உண்டு. நான் படும் கஷ்டத்தை நண்பர்கள், பெற்றோர்கள் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒருவர் இந்த ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் பற்றிக் கூறினார். என்னிடம் சொல்லும் போது, நானும் எல்லோரைப் போலவே, “நான் என்ன பைத்தியமா?”, “அவ்வளவு தானா நான்?” என்று கோபித்துக் கொண்டேன். அப்போது எனக்குத் தெரியவில்லை, பிரச்சினை ஆரம்பித்த உடனேயே மனநல ஆலோசகரைப் பார்த்தால் நம் நலனை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று. முதலில் என்னவோ போல் இருந்தது.
முதல் ஸெஷனிலேயே புரிய வந்தது என்னுடைய அனுபவங்களைப் பற்றி. அதாவது உணர்வுகள் உடல் மனதோடும் பேசுவதைப் பற்றி. கேள்விகளைக் கேட்க, சிந்திக்கச் செய்தது. நேர்ந்ததைப் பல கோணங்களில் விவரித்தேன். எனக்கு தெளிவு பிறந்தது. ஆர்வம் தூண்டியது. இவர்கள் என் மேலே வைத்திருந்த நம்பிக்கையை நான் தன் மேல் வைக்கவில்லை என்பது வியக்க வைத்தது.
அவர்கள் கேள்வி கேட்ட விதமும், காட்டின பரிவும் மேலும் செஷன்களுக்கு வரச் செய்தது. எனக்கு என்னைப் பற்றிப் புரியப் புரிய, மேம்பாட்டு வர ஆரம்பித்தது. ஆழமான தெளிவு பிறந்தது. அதே சமயத்தில் நிலமை என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளதை அறிந்தேன். என்னுடைய பிடிப்பில் இருப்பதை மாற்ற முடியும் என்று உணர்வதே மாற்றத்தின் முதல் பாதை. வாழ்க்கையில் பிடிப்பு வலுவானது!
இந்த அறிதலால் என்னுடைய மனநலம் மேலும் வலுவுடன் இருக்க முயன்றேன். நலன் பெற ஆர்வத்திற்கு பெரிய பங்கு.
ஸெஷன்களில் இதுவரை யாரிடமும் பகிராத பலவற்றைப் பேசினேன். என்னைப் பூதக்கண்ணாடியில் பார்ப்பது போல் ஒரு போதும் தோன்றவில்லை. என்ன நினைப்பார்கள் என்று உள்ளுக்குள் முதலில் நினைத்தது உண்மை தான். ஸெஷன்கள் போக, அந்த மாதிரி எந்த வகையிலும் இல்லாததை உணர்ந்தேன்.
மாறாக என்னுடைய பலம், பலவீனத்தை அடையாளம் கண்டேன். அப்போது முடிவு செய்தேன், நானும் சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் திருப்பித் தர வேண்டும் என்று. ஆடம்பரமாக இல்லாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று. தேர்ந்தெடுத்தது, கூட வேலை செய்வோர்களை உதவுவது என்ற “பியர் ஸப்போர்டாக” இருக்க. குடும்ப, நண்பர்கள் துணை இல்லாமல் இவை எதுவும் சாத்தியம் இல்லை.
நாளாக நாளாக நான் மாறி வந்தேன். தயக்கம், சந்தேகங்களிலிருந்து விடுபட்டு, சமாளிக்கும் திறன்களை உபயோகிக்க ஆரம்பித்தேன். சின்ன சின்ன மாற்றங்கள் வருவதற்குப் பாட்டுக் கேட்பது, புத்தகம் படிப்பது, நல்ல சுடு தண்ணீரில் குளிப்பது, பல மைல்கள் நடப்பது- நானாகவும், மற்றவர்களுடனும் – டிவி பார்ப்பது எனப் பல உதவியது.
இவை எல்லாம் பழக்கம் ஆக, அதன் விளைவு? முக்கியமாக வேலையை ஒத்திவைப்பது (பொதுவாக procrastination என்று குறிப்பது) மறைந்து விட்டது. வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
தினந்தோறும் செய்த உடற்பயிற்சியால் தூக்கம் நன்றானது. இதனால் பசி எடுத்து சாப்பிட்டேன். அது சகிப்புத்தன்மையை மேம்படுத்தியது. வாழ்வில் புத்துணர்ச்சி நிரம்பியது. ஆகையால் செய்வதை ரசித்துச் செய்தேன். அலட்சியமாக நிறைய செய்தேன். தலை கனமோ, கர்வமோ கொஞ்சமும் இல்லாமல். இந்தத் தெளிவும் ஸெஷன்களில் கற்றதே.
ஸெஷன்களில் புரிந்தது இவ்வளவு வருடமாக என்னை முன்னேற உதவியுள்ளது. இப்போதெல்லாம் யாராவது தத்தளித்து இருப்பதைப் பார்த்தால், இப்படி நான் என் மனநலனை மேம்படுத்தியதைப் பற்றிப் பொறுமையாகப் பகிர்ந்து கொள்வது என் பழக்கம். அதைத் தான் இங்கேயும் செய்ய விரும்பினேன்.