-
கொரோனா வைரஸ் !
இருபத்தெட்டு நாட்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் பட்டேன் – கனடாவிலிருந்து சென்னை வந்து, படியேறிய பெருமாளாக நான்கு வார வீட்டு வாசம் – இன்னும் படியிறங்கி உலகைப் பார்க்கவில்லை. கொரோனா வைரஸுக்கு நன்றி சொல்வதா தெரியவில்லை – ஆனால் பலர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை வரவேற்று (மாசு கட்டுப்பாடு ) கொரோனா வைரஸுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். முகநூல், வாட்ஸ் ஆப், டிவிட்டர் என எல்லா இடங்களிலும், ஏராளமான செய்திகள் – சில ஆதாரபூர்வமாகவும், பல ‘சும்மா’ மனதிற்கு பட்டதை எழுதியதாகவும் – குவிந்த வண்ணம் உள்ளன. தொலைக் காட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம் – செய்திகள் என்ற பெயரில் உண்மைகளைக் கூட மக்களை அச்சப்பட வைக்கும் வகையில், அரசியல் கலப்புடன் பேசுகின்றன.
எனக்குத் தெரிந்த வரையில் இந்தக் கொரோனா தொற்று பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதலில், இந்த வைரஸ் ஒரு செல்லை எப்படி அழித்து, அதனுள்ளேயே க்ளோன் போல பலவாக மல்டிப்ளை ஆகிறது என்பதைப் பார்ப்போம்!
கொரோனா வைரஸ் – பல முட்கள் உள்ள கிரீடம் போன்ற (சப்பாத்திக் கள்ளி காய் போல்) வடிவுடையது. RNA வைரஸ், 30 kb அளவுடையது. ஒரு செல்லுக்குள் புகுந்து விட்டால், 4 – 5 முறை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் சக்தியுடையது. முதலில், வைரஸின் முள் அல்லது ஸ்பைக் புரதம், திசுக்களின் செல் சுவற்றில் உள்ள ரிசெப்டாரில் ஒட்டிக்கொள்ளும்! எஸ் புரதம் (S protein) புகுந்த செல்லுக்குள் மாற்றங்களைச் செய்து, செல்லை செயலிழக்கச் செய்யும். இவற்றைத் தவிர E புரதம் (Envelop protein), M புரதம் (Membrane protein – வைரஸின் வடிவை செல்லுக்குள் பாதுகாப்பது) ஆகியவையும் செல்லின் அழிவுக்கும், உள்ளேயே ஒரு வைரஸ் பல வைரஸ்களாக பெருகிடவும் உதவுகின்றன. செல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் Type 1 interferon என்னும் புரதத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுப்பதுவும் இந்த வைரஸ் புரதங்களே! நுரையீரல் செல்களை அழிக்கத் தொடங்கினால், அதுவே மூச்சுமுட்டல், நிலைக்குப் போகும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறது – நல்லவேளையாக, இது அரிதாகவே நடக்கிறது என்பது நல்ல செய்தி!
சுவாசம் சம்பந்தப் பட்ட – மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், ப்ராங்கியோல், நுரையீரல் – உறுப்புகளையே முதன்மையாக இவை தாக்குகின்றன (Respiratory viruses). முதன் முதலில் மனிதர்களில் கொரோனா வைரஸ் 1995 ல் கண்டுபிடிக்கப் பட்டது. (பறவைகள், விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உண்டு!). பீட்டா கொரோனா வைரஸ் வகையில் HCOV NL 36, HCOV – HKU 1, MERS COV ஆகிய மூன்றும் மனிதர்களைத் தொற்றுவதாய்க் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாய் வரக்கூடிய – சீசனல் URI – ஜலதோஷம், தொண்டைவலி, காது வலி ஆகியவையும், வயாதானவர்கள், பிறந்த குழந்தைகள், எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் ஆகியோருக்கு, இவை நுரையீரலைத் தாக்கும் வாய்ப்புகள் – Lower Respiratory tract Infection – அதிகம்.
2002 ல் சீனாவில் SARS COV (Severe Acute Respiratory Syndrome) வைரஸ் தொற்றால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. வெளவாலில் இருந்து மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறப்பட்டது – உலகில் 30 நாடுகளில் (பேண்டமிக்) எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப் பட்டதாகவும், இதில் சுமார் 10% (800) பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப் பட்டது.
(Pandemic – உலகின் பல நாடுகளிலும் ஒரே சமயத்தில் பரவிடும் தொற்று; Epidemic – ஓரிடத்தில் திடீரெனப் பரவிவிடும் தொற்று (ஒரு நாடு, ஒரு மாகாணம் என்பது போல்); Endemic – ஒரு வியாதி ஓரிடத்தில் மிகப் பரவலாக எப்போதும் இருப்பது (மலேரியா – பிரெசில், ஆப்பிரிக்கா, ஆசியா).
2012ல் MERS COV (Middle East Respiratory Syndrome Cov) என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது – வாந்தி, பேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதயம் மற்றும் மூளை சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் இந்தத் தொற்றால் வந்தன.
மேற்சொன்ன இரண்டு வைரஸ்களின் குழுமத்திலிருந்து தற்போதைய கொரோனா வைரஸ் புது அவதாரம் எடுத்து வந்திருக்கலாம் – ஜெனிடிக் கோடிங் வித்தியாசமாக இருப்பதால், வீச்சும், வீரியமும் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதுபோன்றே Rhino virus, Respiratory Syncytial virus (RSV), Measles virus (மணல்வாரி அம்மை), Influenza A,B,C virus, போன்றவையும் சுவாசம் சம்பந்தமான தொற்றுகளே – ஆனால் இவை கொரோனாவைப் போல அவ்வளவு வேகமாகப் பரவுவதோ, உயிருக்கு ஆபத்தான சுவாசப் பிரச்சனைகளை உருவாக்குவதோ இல்லை!
கொரோனா வைரஸ் (COVID-19) அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, சுவாச உறுப்புகளைப் பாதிக்கின்ற, கிரீடம் போன்ற அமைப்புடைய வைரஸ். டிசம்பர் 2019 ல் சீனாவின் ஊஹன் (Wuhan) ல் முதன் முதலில் தொடங்கியது. எதிலிருந்து என்பது தெரியவில்லை – பூனை போன்ற பண்ணை விலங்குகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சில உண்மைகள்:
- இந்தத் தொற்று உள்ளவர்களின் தும்மல், இருமல் மூலம் வைரஸ் பரவுகிறது. காற்றில் பரவாது. வைரஸ் கனமானது, அதனால் காற்றில் பரவாமல், தரையிலோ, சளித் துளிகள் விழுகின்ற இடங்களிலோ விழுந்து விடும். அதனால், இந்தத் தொற்று உள்ளவர்களிடம் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி இருந்தால் நேரடியாக சுவாசம் மூலம் தொற்றுவது தவிர்க்கப் படும். வைரஸுடன் விழுந்துள்ள சளித் துளிகள் – தரை, ஜன்னல், கதவு கிரில்கள், மேஜை, நாற்காலி, கார்க் கதவின் கைப்பிடி – நம் கையில் பட்டு, நாம் முகத்தைத் தொடும்போது, முகம், மூக்கு, கண் என வைரஸ் தொற்றி, சுவாச உறுப்புகளுக்குள் போகும் அபாயம் அதிகம். எனவேதான், எதைத் தொட்டாலும், கைகளை சோப்பு அல்ல்து சானிடைசர் போட்டு கழுவுவது – 20 – 40 நொடிகள் – முக்கியம். கூடுமானவரை, முகத்தைக் கைகளினால் தொடாமல் இருப்பது நல்லது – பிறர் முகத்தையும்!
- கீழே விழுந்த வைரஸ் சில மணிகள் முதல் சில நாட்கள் வரை தொற்றக் கூடும். விழுந்த இடம், தட்ப வெப்ப நிலை பொருத்து, இது மாறுபடும். சந்தேகமாக இருந்தால், கிரிமி நாசினி கொண்டு தரை, மற்ற இடங்களைத் துடைத்துவிடலாம். கைகளைக் கழுவுவதும், முகத்தை கையயால் தொடாமல் இருப்பதுவும் நல்லது.
- மனிதர்களுக்கிடையே பரவும் தொற்று வீட்டு ‘பெட்’ மிருகங்களுக்குப் பரவுமா என்று தெரியவில்லை. அவைகளையும் தனிமைப் படுத்துவது நல்லது.
- கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து, சிம்டம் முதலில் வரும் வரையான கால அவகாசம் 1 -14 நாட்கள். பொதுவாக 5 -6 நாட்களில் தெரிந்துவிடும். ஆனாலும், இந்த இடைவெளி மாறக் கூடியது என்பதால் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை, தனிமைப் படுத்துதல் அவசியமாகிறது. நோய்த் தொற்று அதிகமாக உள்ள இடங்களிலிருந்து வருபவர்கள், கொரோனா தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், இருமல், தும்மல், ஜுரம் இவற்றுடன் தொற்று அதிகம் உள்ள இடத்திலிருந்து வருபவர்கள் ஆகியோர் தனிமைப் படித்தப் படுவர் – 28 நாட்களுக்கு. “தனிமைப் படுத்துவது, ஒருவருக்கு வியாதி இருப்பதாக அர்த்தம் இல்லை. ஒருவேளை இருந்தால், அவருக்கும், பிறருக்கும் நல்லது – வியாதி பரவுவது தவிக்கப் படும் என்பதால் தான்!
- மாஸ்க் – மூக்கு, வாய், தாடை ஆகியவற்றை நன்றாகக் ‘கவர்’ செய்வது அவசியம். மருத்துவ மனை, கொரோனா பாஸிடிவ் ஆன பேஷண்ட்ஸ், பொது இடங்களில் வேலை செய்பவர்கள் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும். சிறு பொத்தல்கள், கிழிசல் இல்லாத மாஸ்குகள் அவசியம். உபயோகித்த பின், மிகவும் கவனமாக, மூடிய குப்பைத் தொட்டியில் போடவும். கையில், முகத்தில் படாமல் கழற்றவும். பின்னர் கையை சோப்பு போட்டு நன்றாகக் கழுவவும்.
- தேவையில்லாமல் மாஸ்க் அணிவதைத் தவிர்க்கவும் – அடிக்கடி கை கழுவுவது, இருமல், தும்மல் வரும்போது, டிஷ்யூ பேப்பர் அல்லது கையினால் (மடக்கிய முழங்கையினால்) வாய், மூக்கை மூடிக்கொள்வது, இருமல், தும்மல் உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளே போதுமானது.
- எல்லா வைரல் காய்ச்சல்களைப் போலத் தான் – இருமல், தும்மல், காய்ச்சல், உடம்பு அசதி, வலி என்று வரும் – பொதுவாகவே மிகவும் குறைவான அளவில்தான் பாதிப்பு இருக்கும். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்குத் தானாகவே சரியாகிவிடும் என்பதுதான் உண்மை. சிலருக்கு வாந்து பேதியும் இருக்கலாம். வயதானவர்கள், கைக் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாயுள்ளவர்கள் (ஸ்டீராய்ட், கேன்சர் மருந்துகள் எடுத்துக் கொள்கிறவர்கள்) போன்றவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியவர்கள் 2% – 3% இருக்கலாம். வயதானவர்கள், டயபெடிஸ், இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், தங்கள் மருந்துகளை ஒழுங்காக எடுத்துக்கொள்வது அவசியம்.
- சிலருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், சிம்டம் ஏதுமின்றி வலம் வருவார்கள் – அவர்களால் மீதி பேருக்குப் பரவும் வாய்ப்பு குறைவு. ஆனாலும், மிகக் குறைவான இருமல், தும்மல் இருப்பவர்களால், பரவும் வாய்ப்பு இருப்பதாலே, பொது அடைப்பு அவசியமாகிறது. எல்லோருக்கும் டெஸ்ட் செய்வது என்பது முடியாது – எனவே அவரவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளுதலே சிறந்த முறையாகும். வருமுன் காப்பதுதானே நல்லது?
- கூடிய வரையில் வெளியில் போவதைத் தவிர்க்கவும். அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும், முழு பாதுகாப்புடன் தனியே சென்று வரவும். கூட்டமான இடங்களை நிச்சயமாகத் தவிர்க்கவும்.
- வைரஸுக்கு இன்று வரை மருந்தில்லை – சில வைரஸ் களுக்கு – எச் ஐ வி, ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் – இருக்கும் மருந்துகளை முயற்சிக்கிறார்கள். சிறிது காலத்தில் வாக்சின் வரலாம் – பொதுவான சப்போர்டிவ் சிகிச்சையும், பாக்டீரியல் தொற்றைச் சமாளிக்க ஆண்டிபயாடிக்குகளும், மூச்சு முட்டலுக்கான சிகிச்சைகளும் ( ஆக்ஸிஜன், சில மருந்துகள், வெண்டிலேட்டர் சப்போர்ட்) மருத்துவ மனைகளில் அளிக்கப் ப்டுகின்றன. அதையும் மீறி உயிரிழப்பு என்பது 2% க்கும் குறைவுதான். மற்றபடி, ஹைட்ராக்ஸி க்ளோரோகுவின்(மலேரியாவுக்கு கொடுக்கப்படுவது), ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், பிசிஜி வாக்சின் போன்றவைகளின் உபயோகங்களுக்கு, ஆதாரபூர்வமான தரவுகள் இல்லை. மற்ற சிகிச்சை முறைகள், மஞ்சள், வேப்பிலை போன்றவற்றின் உபயோகங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கிரிமி நாசினிகளின் (சோப்பும் இதில் அடக்கம்) உபயோகம் மிகவும் முக்கியமானது. ஆல்கஹால் உள்ள சானிடைசர்கள் கொரோனா வைரஸின் கொழுப்பு சுவற்றை (லிபிட் கோடிங்) அழிக்கும் வாய்ப்பிருப்பதால் உபயோகிக்கலாம்.
- கொரோனா வந்து சரியானவர்களின் ‘பிளாஸ்மா’ வை (இரத்தத்தில் இருந்து சிவப்பு, வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகளை பிரித்தெடுத்த பின் மிஞ்சுவது) மிகவும் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்குக் கொடுக்கிறார்கள் – அதில் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ (எதிர்ப்புச் சக்தி கொண்ட புரதம்) இருப்பதால், நோய்த் தொற்று குறைக்கப்படும்.
- இந்த தொற்றினாலும், அது பற்றிய செய்திகளாலும், நீண்ட கால ஊரடங்கு நிலையாலும் ஏற்படும் மன அழுத்தத்திற்கு, கவுன்சலிங் தேவைப் படும். மக்களை பீதி அடையும் வகையில் பரப்பப்படும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்துவது அவசியமே!
மருத்துவ மனைகளில் பின்பற்ற வேண்டியவை பற்றி நான் குறிப்பிட வில்லை – அதற்கென்று சில தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன.
இப்போதைக்கு, தனித்திருத்தலும், கைகளைக் கழுவுவதும், முகத்தில் கை வைக்காமல் இருப்பதுவும், கூட்டங்களைத் தவிர்ப்பதுவும் நம்மை கொரோனாவிலிருந்து காக்கும். நாளடைவில் சமூகத்தின் எதிர்ப்பு சக்தி கூடுவதும், கொரோனா வைரஸின் வீரியம் குறைவதுமே இதிலிருந்து விடுதலை கிடைக்கும் வாய்ப்புகளாகும். இதைவிட மோசமான உலகம் தழுவிய நோய்த் தொற்றுகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம் – இதிலிருந்தும் மீண்டு வருவோம்.