காளிதாசனின் கைவண்ணத்தில் உருவான மாபெரும் காவியம் குமார சம்பவம்.
தட்சன் மகள் தாட்சாயினி என்னும் சக்தியைத் தேவியாகக் கொண்ட சிவன், தந்தைப் பாசத்தால் தன்னை எதிர்த்துப் பேசிய தேவியைத் தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்குகிறார்.
கோபம் தணிந்தபின் சக்தியின் நினைவோடு அவள் பிரிவை மறக்க கடுந்தவம் புரியச் செல்கிறார்.
தாட்சாயினி இமவான் மகள் பார்வதியாகப் பிறந்து சிவனை அடையக் காத்துக் கொண்டிருக்கிறாள்.
அதேசமயம் தாரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் தேவ உலகத்தை ஆட்டிப் படைக்கிறான்.
இந்திரன் சூரியன் வருணன் அக்னி வாயு சந்திரன் மற்றும் அனைத்துத் தேவர்களும் தாரகாசுரனுக்கு அடிமையாகப் பணிபுரியும் அவலம் வந்துள்ளது.
சிவனின் குமாரனால்தான் தாரகாசுரனைக் கொல்ல முடியும்.
சிவனோ கோபத் தவத்தில் ஆழ்ந்து இருக்கிறார்.
பார்வதி சிவன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்.
சிவ பார்வதி காதல் எப்படி உருவாகும்?
காதல் கனிந்து சிவகுமாரன் உற்பத்தி எப்போது நடக்கும்?
மன்மதன் துணையோடு சிவ பார்வதி காதலைக் கனிய வைக்கத் தேவர்கள் திட்டமிடுகின்றனர்.
சிவனின் கோபத்தில் மன்மதனும் அவரது நெற்றிக்கண்ணுக்கு இரையாகி சாம்பலாகிறான்.
பின் குமாரசம்பவம் எப்படி நிகழ்கிறது?
கார்த்திகேயன் என்னும் முருகப் பெருமான் எப்படி உதிக்கிறார்?
அதைத்தான் காளிதாசன் குமார சம்பவம் என்ற காவியமாக்கியிருக்கிறார்.
அமரத்துவம் பெற்று இலக்கிய வானில் சிரஞ்சீவியாகச் சுடர்விடுவது காளிதாசனின் குமார சம்பவம் .
வர்ணனை எழிலும் உவமை அணியும் காதல் உணர்வும் பின்னிப் பிணைந்து வருவது குமார சம்பவம் !
ரவீந்திரநாத் தாகூர், கவி காளிதாசனின் குமாரசம்பவத்தை இப்படிக் குறிப்பிடுகிறார்:
– ‘எல்லையில்லாத திரையில் வரைந்த ஓவியம் இது.
காதலின் நிரந்தரத் தன்மையை வர்ணிக்கிறது.
காதல் கொண்ட இதயத்தின் தூண்டுதல்களையும் வேண்டுகோளையும் தியாகத்தையும் இது விளக்குகிறது.
காவியத்தின் முடிவில் காதல் ஜெயிக்கிறது”
இந்தக் காவியத்தின் சாரத்தை சுலப தமிழில் உங்களுக்காகத் தருவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
குமார சம்பவம் என்ற கவிதைத் தொடர் தொடர்ந்து வரும்
– எஸ் எஸ்
முதல் சர்க்கம்
இமயம்
பரத கண்டத்தின் வடதிசையில் மலைகளுக்குக் கெல்லாம் அரசன்
தேவ வடிவில் அவன் இமவான் மலை வடிவில் இமயம்
பூமிப் பசுவின் பாலை மக்கள்பெற கன்றாய் மிளிர்வது இமயம்
சந்திரனின் களங்கம்போல் சிரசில் உறைபனி கொண்டது இமயம்
மேகத்தின் மேலிருந்து குளிரையும் வெப்பத்தையும் இதமாய்த் தரும் இமயம்
மரத்தில் பதித்த காதல் எழுத்தென யானைகள் நிறைந்த இமயம்
யானைகள் உராய மரப்பட்டை உதிர வாசனை கமழ்ந்திடும் இமயம்
யானைகளைத் தாக்கும் சிங்கத்தைப் பிடிக்க வேடர் அலையும் இமயம்
வேடர் களைப்பு தீர குளிர்ந்த மணக்காற்று மெதுவாக வீசும் இமயம்
மகளிர் முகத்தில் பூசிய செங்காவிபோல் முகப்பில் சிவந்த இமயம்
முலைபெருத்து இடைசிறுத்த கின்னரப் பெண்கள் நடனம் பயிலும் இமயம்
மோகத்தில் சிணுங்கும் கின்னரப் பெண்களுக்கு மேகத் திரையிடும் இமயம்
குகைவழியே காற்றுவர மூங்கில்கள் குழலாகி நாதம் பிறக்கும் இமயம்
குகையெல்லாம் ஒளிந்திருக்கும் காரிருளைக் கொண்டாடிக் காத்து வரும் இமயம்
குகைக்குள்ளே இருளகற்ற ஒளிமலராம் ஔஷதிகள் தந்திட்ட இமயம்
கவரிமான் வாலசைத்து சாமரம் வீசிடும் எழில்கொண்ட இமயம்
மலைச்சிகர உச்சியிலும் தாமரை மொக்குகள் கூம்பி நிற்கும் இமயம்
மலையரசன்தனக்கு இமவான் எனப் பிரும்மரே பேர்வைத்த இமயம்
(தொடரும்)
குமார சம்பவம் தொடக்கம் அருமை.
தங்கள் எழுத்து எளிமை,
LikeLike