பட்டாடக்கல் கோவில்
விக்ரமாதித்யன் 2
கி பி 696 முதல் தொடங்கியது சாளுக்கிய நாட்டில் விஜயாதித்யன் ஆட்சி.
நாடு அமைதியாக இருந்தது. செல்வம் கொழித்தது. கோவில்கள் கட்டப்பட்டன. நாற்பது வருடங்கள் அமைதி.
அமைதிக்கும் நமக்கும் தான் விரோதமாயிற்றே! அமைதியில் சுவாரஸ்யம் என்ன இருக்கிறது?
சரி.. காலத்தை கொஞ்சம் ஃபாஸ்ட் பார்வர்ட் செய்யலாம்! ஒரு சரித்திர எழுத்தாளருக்கே இது சாத்தியமாகும்!
கி பி 728 : சாளுக்கிய மன்னன் விஜயாதித்யன் வயதாகி நோய்வாய்ப்பட்டிருந்தான். அவன் மகன் யுவராஜா இரண்டாம் விக்ரமாதித்யன் – வல்லவனாக வளர்ந்திருந்தான்.
தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததால் ஆட்சி பெரும்பாலும் விக்ரமாதித்யனிடமே இருந்தது.
கி பி 733
அன்றைய சாளுக்கிய செய்தித்தாட்களில் தலைப்புச் செய்தி:
மன்னன் விஜயாதித்தன் மரணம்!
இரண்டாம் விக்ரமாதித்யன் சாளுக்கிய மன்னனானான்.
அந்நேரம் அரபு நாட்டினர் சிந்து மாநிலத்தில் சில இடங்களைப் பிடித்துக் கொண்டனர். தக்ஷிணத்தைத் தாக்க முற்பட்டனர்.
சாளுக்கிய நாட்டின் வடக்கே விக்ரமாதித்யனின் ஒன்று விட்ட சகோதரன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பெயரும் புலிகேசி!
அவன் அந்த அரபுத் தாக்குதலை முறியடித்துத் துரத்தினான். இந்த சகோதரன் புலிகேசியின் வெற்றியைக் கண்டு விக்ரமாதித்யன் மகிழ்ந்தான். அவனுக்கு ‘அவனிஜனாஸ்ரயா’ – அதாவது ‘அகிலத்தின் மக்களின் காவலன்’ – என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தான்.
இராஷ்ட்ரகூடம் என்ற நாடு சாளுக்கிய மன்னனின் கீழ் அன்று ஒரு குறுநில ராஜ்யமாக உதயமாகி இருந்தது. அதன் மன்னன் தந்திவர்மனும் அரபுத் தாக்குதலில் புலிகேசிக்கு உதவி செய்து விக்ரமாதியாதித்யனிடம் பாராட்டு பெற்றான்.
சரி.. இந்த இரண்டாம் விக்ரமாதித்யன் என்ன செய்தான்? உங்கள் ஊகம் சரி தான்! பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். ஒரு முறையல்ல. இரு முறையல்ல. மூன்று முறை.
அந்தக்கதை சொல்லுமுன்…
அதே நேரம் பல்லவ நாட்டில் – செய்தித்தாட்களில் தலைப்பு செய்தி:
மன்னன் ராஜசிம்மன் மரணம்! பல ஆண்டுகள் ஆண்டு கைலாசநாதர் கோவிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் காலமானான். அவன் மகன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் அரசனானான். முதல் சில வருடங்கள் பொதுவாக அமைதி நிலவியது. பரமேஸ்வரன் திருவடியில் சிவன் கோவில் கட்டினான்.
ஆட்சிக்கு வந்து மூன்றே ஆண்டில் பல்லவ நாட்டுக்கு கஷ்ட காலம் வந்தது. அது இரண்டாம் விக்கிரமாதித்யனால் வந்தது. அப்பொழுது அவன் சாளுக்கிய யுவராஜாவாகத்தான் இருந்தான். அவனுக்கு உதவியாக கங்க நாட்டு யுவராஜன் ஏரயப்பா.
இந்தச் சண்டை பல்லவனுக்குப் பெரும் அனர்த்தமாக முடிந்தது. உடன்படிக்கைக்குப் பெரும் விலை கொடுக்கப்பட்டது. வெகு விரைவில் இரண்டாம் பரமேஸ்வரன் கங்கநாட்டுக்குப் படையெடுத்தான்.
கங்க மன்னன் ஸ்ரீபுருஷாவுடன் போர். அது பல்லவருக்குப் பேரழிவைக் கொண்டு வந்தது. ஸ்ரீபுருஷன் இரண்டாம் பரமேஸ்வரனைக் கொன்று அவனது அரசுக் குடையையும் கொற்றத்தையும் கைப்பற்றினான்.
இப்பொழுது கதையை சற்று நிதானமாகப் படியுங்கள்.
பல்லவ நாடு பெரும் பாதிப்பில் ஆழ்ந்தது.
இரண்டாம் பரமேஸ்வரனுடன் சிம்மவிஷ்ணு மரபு முடிந்துவிடுகிறது. சிம்மவிஷ்ணு – மகேந்திரன், நரசிம்மன் என்று அசத்திய பல்லவ வாரிசு வம்சம் முடிந்தது.
அட பல்லவர்கள் அவ்வளவு தானா என்று கவலைப்படவேண்டாம்!
சிம்மவிஷ்ணுவின் தந்தை யார்? சிம்மவர்மன்!
சரி அந்தப் பழைய கதை இப்ப எதுக்கு என்று தானே கேட்கிறீர்கள்? பொறுமை! சிம்மவர்மனுக்கு இன்னொரு மகன் இருந்தான். அவன் சிம்மவிஷ்ணுவின் தம்பி. பெயர் பீமவர்மன்.
சிம்மவிஷ்ணு ராஜாவான பிறகு பீமவர்மனுக்கு என்ன எதிர்காலம் இருக்கும்?
அவனது பேரனுடைய பேரன் நந்திவர்மன் ஒரு நாள் பல்லவ மன்னனாவான் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.. விசித்திரமான உலகம்…
உண்மையில் இரண்டாம் பரமேஸ்வரனுக்கு சித்திரமாயன் என்ற மகன் இருந்தான். அவன் சிறுவனாக மட்டும் இல்லை. உதவாக்கறையாகவும் இருந்தான். மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்தான்.
பரமேஸ்வரன் மரணத்திற்குப் பின் சித்திரமாயன் தனக்கு ஆதரவு தேடி பாண்டிய மன்னன் உதவியை நாடி மதுரை சென்றான்.
பீமவர்மன் வரிசையில் வந்த இரண்யவர்மனை (நந்திவர்மனின் தந்தை) காஞ்சிப் பெரியவர்கள் மற்றும் அமைச்சர்கள் அணுகினர்.
அங்கு ஒரு சிறுகதை பிறக்கிறது:
மந்திரிமார்கள் இரணியவர்மனிடம் : “அரசே! நமது பல்லவ மன்னன் இரண்டாம் பரமேஸ்வரன் தோற்று இறந்தான். சாளுக்கியர், கங்கர், பாண்டியர் அனைவரும் காஞ்சியைக் கொத்திவிடத் துடிக்கின்ற சமயம் இது. சித்திரமாயன் ஒரு உதவாக்கரை. பாண்டியனிடம் அடிமையாகக் கிடக்கிறான். காஞ்சியைக் காக்க உங்களை விட்டால் யாரும் கிடையாது. சிம்மவிஷ்ணு தொடங்கிய பல்லவ வாரிசு இன்று செல்லரித்து விட்டது. சிம்மவிஷ்ணுவின் தம்பி பீமவர்மனின் வழித்தோன்றல் தாங்கள். பல்லவ மன்னனாக முடிசூடி காஞ்சியைக் காக்க வேண்டும்.” – என்றனர்.
இரண்யவர்மன் அன்று எண்பது வயதைத் தாண்டியிருந்தான்.
இந்நாளில் அந்த வயதில் பிரதம மந்திரி – ஜனாதிபதி வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்நாட்களில் மன்னன் என்பவன் நாட்டைக் எதிரிகளிடமிருந்து காப்பது மட்டுமல்லாமல் போரிடவும் வேண்டும். தள்ளாத வயதில் மன்னனாக வந்து என்ன செய்வது?
இரண்யவர்மன்: “மந்திரிகளே! என் மீது நீங்கள் அபிமானம் வைத்து கேட்கிறீர்கள். என் வயது என்னைத் தடுக்கிறது. எனக்கு நான்கு மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் அரசானவது உசிதமாக இருக்கும்” என்றார்.
“நல்ல யோசனை. உங்கள் மூத்த மகனை மன்னனாக்கலாம்” – என்றனர். மூத்தவன் அழைக்கப்பட்டான்.
மன்னனாவது எல்லா மனிதருக்கும் என்றுமே ஒரு பெருங்கனவு. மன்னனாவதற்காக உடன் பிறந்தவர்களைக் கொல்வது என்பது எவ்வளவு முறை விலாவாரியாக சரித்திரத்தில் பேசப்பட்டிருக்கிறது?
ஆனால் அன்று பல்லவ நாட்டின் நிலைமையே வேறு! அது காஞ்சி என்ற அழகு சுந்தரியை மோகங்கொண்ட எதிரிகள் கழுகு போல் கொத்தித் தின்னக் காத்திருக்கும் நாட்கள். மன்னன் என்று சொல்வதை விட மண்ணோடு மண்ணாக அழிவது என்ற சொல் சாலச்சிறந்தது. அந்த நிலை அன்று. இரணியவர்மனின் மூத்த மகன் மட்டுமல்ல – மற்ற இரண்டு தம்பிகளும் பல்லவ மணிமுடியைப் புறக்கணித்தனர்.
நான்காவது மகன் இளையவன். பன்னிரண்டு வயது நிரம்பிய சிறுவன் – நந்திவர்மன். அவன் “நான் மன்னன் ஆகத் தயார்” என்றான்.
மந்திரிகள் இப்போது சங்கடத்துக்கு உள்ளானர். ‘இன்னொரு சிறுவனா’? இரணியவர்மன் சொன்னான்: “கவலை வேண்டாம். நந்திவர்மன் மன்னனாகட்டும். நான் அவன் பின்னிருந்து அவனையும் – இந்நாட்டையும் வழி நடத்துவேன்” – என்றான். பன்னிரண்டு வயதே இருந்தாலும் நந்திவர்மானது அறிவும், துணிச்சலும், வீரமும் நாடு முழுதும் பரவியிருந்தது. மக்கள் அவனை பெரிதும் விரும்பினர். மந்திரிகள் நினைத்தனர்: ‘சித்திரமாயனும் – நந்திவர்மனும் ஒரே வயதினர். இருப்பினும் அவர்கள் இருவரிடமும் தான் எத்தனை வித்தியாசங்கள்”. மந்திரிகள் மகிழ்ந்தனர்.
நந்திவர்மன் காஞ்சி நகர் நோக்கிப் பயணித்தான்.
அவனுடன் பல்லவ தளபதி ‘உதயசந்திரன்” கூட வந்தான்.
காஞ்சி அருகில் பல்லவாடி அரையர் என்ற குறுநில மன்னன் நந்திவர்மனை யானை மீது அமர்த்திக் கூட்டி வந்தான். நந்திவர்மன் காஞ்சி நுழைந்தான். அவனுக்கு காஞ்சி மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். காடக முத்தரையர் என்ற குறுநில மன்னன் அவனை வரவேற்றான்.
அடுத்த நாளே நல்ல நாள். அன்றே முடிசூட்டினர். ‘பல்லவ மல்லன்’ என்ற பட்டப்பெயர் அளித்தனர்.
சித்திரமாயன் மதுரையில் இருந்தான் – நந்திவர்மன் காஞ்சி மன்னனானதை உடனே அறியவில்லை. சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்யனுக்கும் இந்த பட்டாபிஷேகம் ரசிக்கவில்லை. சித்திரமாயனும் விக்ரமாதித்தியனுக்கு ஓலை அனுப்பி உதவி கேட்டான்.
கி பி 741
விக்ரமாதித்யன் விரைவில் படைகளைத் திரட்டிக்கொண்டு கங்க மன்னன் ஸ்ரீபுருஷன் துணையுடன் காஞ்சி படையெடுத்தான். இது அவனுக்கு இரண்டாம் முறை. பல்லவன் நந்திவர்மன் தோல்வியடைந்தான். அவனது குடையும் கொற்றமும் பறிபோனது.
நந்திவர்மன் காஞ்சியை விட்டு வெளியேறி அருகிருந்த நட்பு நாட்டில் இருந்தான். விக்ரமாதித்யன் காஞ்சியில் நுழைந்தான். நரசிம்மன் வாதாபியை கொளுத்தி அழித்தது அவன் மனதில் வண்ணப்படமாக ஓடியது. ராஜசிம்மன் கட்டிய ‘கைலாசநாதர் கோவிலுக்குப் போனான். புதிதாகக் கட்டப்பட்டிருந்த அந்த கோவிலின் அழகு அவன் மனதை பெரிதும் கவர்ந்தது. கோவிலில் பொன்னும் பொருளும் ஏராளமாக இருந்தது. சாளுக்கிய தளபதி அந்த செல்வங்களைக் கொண்டு வந்து மன்னனின் காலடியில் வைத்தான்.
விக்ரமாதித்யன்: “தளபதி.. இந்த செல்வங்களையெல்லாம் இந்த கோவிலுக்கே கொடுத்துவிடு. அப்புறம் இந்நாட்டிலிருந்து எந்தச் செல்வத்தையும் நாம் எடுத்துச் செல்லலாகாது.” -என்று கண்டிப்பாக ஆணையிட்டான். காஞ்சியின் அழகு அவன் மனதை மயக்கியிருந்தது.
“தளபதி! இந்த காஞ்சி தெய்வத்தின் உறைவிடமாக திவ்யமாக இருக்கிறது. இதிலிருந்து ஒரு குண்டுமணியையும் நாம் எடுத்துச் செல்லக்கூடாது. மேலும் காஞ்சி மக்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது.”
தளபதி “மன்னா? வாதாபி அழிந்ததை மறந்துவிட்டர்களா?..” என்று சொல்லி முடிப்பதற்குள் : விக்ரமாதித்யன்: “நான் நரசிம்மன் இல்லை. நான் ‘மனிதன்’” –என்று ரஜினி ஸ்டைலில் சொன்னான்.
தளபதி விக்ரமாதித்யனின் நல்ல மனதை கைலாசநாதர் கோவிலிலேயே கல்வெட்டில் பொறித்தான்.
விக்ரமாதித்யன் சித்திரமாயனை அரியணையில் அமர்த்தி விட்டு பாதாமி சென்றான்.
ஆனால் காஞ்சி மக்கள் பல்லவ மல்லன் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார்கள். நந்திவர்மன் மெல்லப் படைகளைத் திரட்டினான். சித்திரமாயனைத் துரத்தி விட்டு காஞ்சியில் அரியணையேறினான்.
விக்ரமாதித்யன் கோபம் கொண்டான். இரண்டு வருடம் கழித்து, விக்ரமாதித்யன் தன் மகன் – யுவராஜா கீர்த்திவர்மனை – படையுடன் அனுப்பினான். இராஷ்ட்ரகூட தந்திவர்மனும் கீர்த்திவர்மனுக்குத் துணையாக படையுடன் வந்தான். இது விக்ரமாதித்யனுடைய மூன்றாவது காஞ்சிப்போர். நந்திவர்மன் மீண்டும் தோற்றான். மீண்டும் ஓடினான் காஞ்சியை விட்டு.
பாதாமியை அடைந்த விக்ரமாதித்யன் தளபதியை அழைத்துச் சொன்னான்: “தளபதி! நமது சாளுக்கிய வம்சம் இன்னும் எத்தனை தலைமுறை வரும்?” என்றான். “அதற்கென்ன குறை மன்னா? வாழையடி வாழையாக என்றும் இருக்கும்” – என்றான் தளபதி. வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த விக்ரமாதித்யன் சிரித்தான்:
“தளபதி! பல்லவ – பாண்டியர்கள் நம்மைப் பழி வாங்க வருவர். கங்க மன்னன் – பாணநாட்டு மன்னன் இவர்களும் குறுநில மன்னர்கள். இராஷ்ட்ரகூட தந்திவர்மனுக்கும் பேரரசு நிறுவ வேண்டும் என்ற பேராசை உள்ளது. சாளுக்கிய மன்னன் ஒரு கணம் கண் இமைத்தாலும் அழிக்க அனைவரும் காத்திருக்கின்றனர்.” -என்றான்.
தளபதி: “தங்களைப் போல மாவீரர் தென்னிந்தியாவில் இன்று யாருண்டு மன்னா? ஏன் இந்தக் கலக்கம்?”.
“தளபதி! மாபெரும் சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாக மடிந்தன. மௌரியர்கள் – குப்தர்கள் எனன் ஆனார்கள்? சாளுக்கிய வம்சமும் ஒரு நாள் போய்விடும்” என்றான். அவன் எண்ணம் விரைவில் பலிக்கும் என்று அன்று யாரும் எண்ணவில்லை.
சாளுக்கிய செய்தித்தாட்களில் கண்ணீர் அஞ்சலி: “விக்ரமாதித்யன் மரணம்”!
சாளுக்கிய உலகம் அழுதது. கீர்த்திவர்மன் சாளுக்கிய மன்னனானான். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை. விக்ரமாதித்யன் மரணம் தந்திவர்மனுக்கு ஆசையை வளர்த்தது. சாளுக்கிய அரசு பல போர்களைக் கண்டு துவண்டு கிடந்தது.
தந்திவர்மனுக்கு இராஷ்ட்ரகூடத்தை பெரும் ராஜ்யமாக்க வேண்டும் என்று ஆசை. கீர்த்திவர்மனைக் கைவிட்டு நந்திவர்மனின் நட்புப் பாராட்டினான். தன் மகள் ‘ரேவா’வை நந்திவர்மனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். பல்லவப்படைக்கு தளபதி ‘உதயசந்திரன்’ தலைமை தாங்கியிருந்தான்.
ராஷ்ட்ரகூட-பல்லவ சேனை சாளுக்கிய கீர்த்திவர்மனைத் தோற்கடித்தது. கீர்த்திவர்மன் கொல்லப்பட்டான்.
விக்கிரமாதித்யனின் சந்தேகம் உறுதியானது. அத்துடன் சாளுக்கிய வம்சம் முடிந்தது. புலிகேசி கோலோச்சி பல்லவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அந்த ஒரு கணத்தில் சரித்திரத்தை விட்டு மறைந்தது.
ஒரு அரசின் முடிவில் இன்னொரு அரசு பிறந்தது. இராஷ்ட்ரகூடம் பிறந்தது. பல்லவம் – இராஷ்ட்ரகூடம் – கங்கர் -பாண்டியர் -இந்த ராஜ்யங்கள் இனிவரும் நாட்களில் தென்னிந்தியாவை எப்படியெல்லாம் கலக்கப் போகின்றன ?
அதைக் காணலாம். சற்றே பொறுத்திருங்கள்!