தேவ விகடம் – பாரதியார்

பாரதியாரின் கதையில்தான் எத்தனை நையாண்டி எத்தனை சமூகக் குத்தல் ! 

பாரதியார் பாரதியார்தான் ! 

தேவ விகடம்

Ganesha- Our all Time favorite

நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, “நாரதரே, இப்போது சுவாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் சுவாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கலாம்” என்றார்.

அப்படியே நாரதர் வலப் பக்கம் உட்கார்ந்தார். அங்கே பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் நின்ற பூதமொன்றை நோக்கி நந்திகேசுரர் “முப்பது வண்டி கொழுக்கட்டையும், முந்நூறு குடத்தில் பாயசமும் ஒரு வண்டி நிறைய வெற்றிலை பாக்கும் கொண்டுவா” என்று கட்டளையிட்டார்.

இமைத்த கண்ட மூடும் முன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரமபரிகாரம் பண்ணிக் கொண்டார். நாரதரோ ஒரு கொழுக்கட்டையை யெடுத்துத் தின்று அரைக் கிண்ணம் ஜலத்தைக் குடித்தார். நந்திகேசுரர் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த இரண்டு மூட்டை பருத்திக் கொட்டையையும், இரண்டு கொள்ளு மூட்டைகளையும், அப்படியே இரண்டு மூட்டை உளுந்தையும், இரண்டு மூன்று கட்டுப் புல்லையும் ஒரு திரணம் போலே விழுங்கிவிட்டுக் கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டார்.

பிறகு வார்த்தை சொல்லத் தொடங்கினார்கள்.

பிள்ளையார் கேட்டார்; நாரதரே, சமீபத்தில் ஏதேனும் கோள் இழுத்துவிட்டீரா? எங்கேனும் கலகம் விளைவித்தீரா?

நாரதர் சொல்லுகிறார்: கிடையாது சுவாமி. நான் அந்தத் தொழிலையே விட்டு விடப்போகிறேன். இப்போதெல்லாம் தேவாசுரர்களுக்குள்ளே சண்டை மூட்டும் தொழிலை ஏறக்குறைய நிறுத்தியாய் விட்டது. மனுஷ்யர்களுக்குள்ளேதான் நடத்தி வருகிறேன்.

பிள்ளையார்: சமீபத்தில் நடந்ததைச் சொல்லும்.

நாரதர் சொல்லுகிறார்: விழுப்புரத்திலே ஒரு செட்டியார், அவர் பெரிய லோபி; தஞ்சாவூரிலே ஒரு சாஸ்திரி, அவர் பெரிய கர்வி. செட்டியாருக்குச் செலவு மிகுதிப்பட்டுப் பார்ப்பானுக்குக் கர்வம் குறையும்படி செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. ஆறு மாதத்துக்கு முன்பு இந்த யோசனை யெடுத்தேன். நேற்றுதான் முடிவு பெற்றது. முதலாவது, பார்ப்பான் விழுப்புரத்துக்கு வரும்படி செய்தேன்.

பிள்ளையார்: எப்படி?

நாரதர்: செட்டியாரின் சொப்பனத்திலே போய்த் தஞ்சாவூரில் இன்ன தெருவில் இன்ன பெயருள்ள சாஸ்திரியிருக்கிறார். அவரைக் கூப்பிட்டால், உமக்குப் பலவிதமான தோஷ சாந்திகள் செய்வித்து ஆண் பிள்ளை பிறக்கும்படி செய்வார் என்று சொன்னேன். அப்படியே செட்டியாரிடம் போனால் உமக்குப் பணமும் கீர்த்தியும் மிகுதிப்பட வழியுண்டென்று பார்ப்பானுடைய கனவிலே போய்ச் சொன்னேன். செட்டியார் காயிதம் போடு முன்பாகவே பார்ப்பான் விழுப்புரத்திலே செட்டியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். செட்டியாருக்குக் குழந்தை பிறக்கும்படி ஹோமம் பண்ணத் தொடங்கினான். பார்ப்பான் காசை அதிகமாகக் கேட்டான். பாதியிலே செட்டியார் ஹோமத்தை நிறுத்திவிட்டுப் பார்ப்பானை வீட்டுக்குப் போகும்படி சொல்லி விட்டார். பிறகு பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு வருஷ காலமிருந்து பகவத்கீதை பிரசங்கம் செய்யும்படி சாஸ்திரியை அந்த வீட்டு பிரபு வேண்டிக்கொண்டார். மேற்படி பிரபுவுக்கும் அந்தச் செட்டியாருக்கும் ஏற்கெனவே மனஸ்தாபம். செட்டியார் தனக்கு முப்பதினாயிரம் பொன் கொடுக்க வேண்டுமென்று அந்தப் பிரபு நியாயஸ்தலத்தில் வழக்குப் போட்டிருந்தார். செட்டியார் அந்தப் பணத்தைத்தான் கொடுத்துவிட்டதாகவும், நம்பிக்கையினால் கையெழுத்து வாங்கத் தவறினதாகவும், வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை என்றும் சொன்னார். நியாயஸ்தலத்தில் செட்டியார் வாதத்திற்குத் தக்க ஆதாரமில்லை என்றும், பிரபுவுக்குப் பணம் சிலவுட்பட கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயிற்று.

செட்டியாரிடமிருந்த (கழனித் தொழில்) அடிமையொருவன் கள்ளுக்குக் காசு வாங்குவதற்காக இவரிடம் வந்து, செட்டியாருக்கு யாரோ ஒரு அய்யர் சூனியம் வைக்கிறாரென்று மாரியம்மன் ஆவேசம் வந்தபோது, தன்னுடைய பெண்டாட்டி சொன்னதாகச் சொல்லிவிட்டான். செட்டியார், தன்னுடைய எதிரி வீட்டிலே போய் இருந்து தஞ்சாவூர்ப் பார்ப்பானே சூனியம் வைக்கிறானென்னும், அதனாலே தான் எதிரிக்கு வழக்கு ஜயமாகித் தனக்குத் தோற்றுப் போய் விட்டதென்றும் உறுதியாக நினைத்துக் கொண்டார். ஒரு மனுஷ்யனை அனுப்பித் தன் எதிரியின் வீட்டிலே எதிரியும் சாஸ்திரியும் என்ன பேசிக் கொள்ளுகிறார்களென்பதைத் தெரிந்து கொண்டு வரும்படி ஏற்பாடு செய்தார். அந்த ஆளுக்கு மூன்று பொன் கொடுத்தார். இந்த வேவுகாரன் போய்க் கேட்கையிலே அந்த சாஸ்திரியும் வீட்டுக்காரப் பிரபுவும் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரமந்தான் சத்யம் மற்ற தெல்லாம் சூன்யம் என்று சாஸ்திரி சொன்னான். இதைக் கேட்டு வேவுகாரன் செட்டியாரிடம் வந்து எதிரி பக்கத்துக்குச் சூனியம் வைக்க வேண்டுமென்று பேசிக் கொள்ளுகிறார்கள் என்று கதை சொன்னான். செட்டியார் “பிரமாணம் பண்ணுவாயா?” என்று கேட்டார். “நிச்சயமாகப் பிரமாணம் பண்ணுவேன். சாஸ்திரி வாயினால் சூனியம் என்று சொன்னதை என்னுடைய காதினால் கேட்டேன். நான் சொல்வது பொய்யானால் என் பெண்டாட்டி வாங்கியிருக்கும் கடன்களையெல்லாம் மோட்டுத் தெருப் பிள்ளையார் கொடுக்கக் கடவது” என்று வேவுக்காரன் சொன்னான். இப்படி நாரதர் சொல்லி வருகையிலே, பிள்ளையார் புன்சிரிப்புடன், “அடா! துஷ்டப் பயலே! அவன் பெண்டாட்டியினுடைய கடன்களையெல்லாம் நானா தீர்க்க வேண்டும்! இருக்கட்டும்! அவனுக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

அப்பால் நாரதர் சொல்கிறார்: மேற்படி வேவுகாரன் வார்த்தையைக் கொண்டு செட்டியார் தன் எதிரியையும் எதிரிக்குத் துணையான தஞ்சாவூர் சாஸ்திரியையும் பெரிய நஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் இடமாக்கி விடவேண்டுமென்று துணிவு செய்து கொண்டார். ஒரு கள்ளனைக் கூப்பிட்டுத் தன் எதிரி வீட்டில் போய்க் கொள்ளையிடும்படிக்கும் சாஸ்திரியின் குடுமியை நறுக்கிக் கொண்டு வரும்படிக்கும் சொல்லிக் கைக்கூலியாக நூறு பொன் கொடுத்தார். இதுவரை செட்டியாரின் அழுக்குத் துணியையும், முக வளைவையும் கண்டு செட்டியார் ஏழையென்று நினைத்திருந்த கள்ளன், செட்டியார் நூறு பொன்னைக் கொடுத்ததிலிருந்து இவரிடத்திலே பொற்குவை யிருக்கிறதென்று தெரிந்து கொண்டான். மறுநாள் இரவிலே நான்கு திருடரை அனுப்பிச் செட்டியார் வீட்டிலிருந்த பொன்னையெல்லாம் கொள்ளை கொண்டு போய்விட்டான்.

செட்டியாரிடம் கொண்ட பொருளுக்குக் கைம்மாறாக அவரிடம் ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று நினைத்துச் செட்டியாரின் கட்டளைப்படியே சாஸ்திரியின் குடுமியை நறுக்கிச் செட்டியாரிடம் கொண்டு கொடுத்தான். பொன் களவு போன பெட்டியிலே இந்தக் குடுமியை வாங்கிச் செட்டியார் பூட்டி வைத்துக் கொண்டார். பார்ப்பான் கர்வ மடங்கித் தஞ்சாவூருக்குப் போய்ச் சேர்ந்தான். நேற்று மாலையிலே தான் தஞ்சாவூரில் தன் வீட்டிலே போய் உட்கார்ந்து, “தெய்வமே, நான் யாருக்கும் ஒரு தீங்கு நினைத்ததில்லையே! அப்படி யிருந்தும் எனக்கு இந்த அவமானம் வரலாமா?” என்று நினைத்து அழுது கொண்டிருந்தான். அப்போது நான் ஒரு பிச்சைக்காரன் வேஷத்துடன் வீதியிலே பின்வரும் பாட்டைப் பாடிக் கொண்டு போனேன்.

“கடலைப் போலே கற்றோ மென்றே கருவங் கொண்டாயே

கல்லா ரென்றே நல்லார் தம்மைக் கடுமை செய்தாயே”

இவ்வாறு நாரதர் சொல்லியபோது நந்திகேசுரர், “இந்தக் கதை நடந்ததா? கற்பனையா?” என்று கேட்டார்.

நாரதர், “கற்பனைதான்; சந்தேகமென்ன?” என்றார்.

பிள்ளையார் கோபத்துடன், “ஏன் காணும்! நிஜம்போல் சொல்லிக் கொண்டிருந்தீரே! உண்மையென்றல்லவோ நான் இதுவரை செவி கொடுத்துக் கேட்டேன். இதெல்லாம் என்ன, குறும்பா உமக்கு?” என்றார்.

“குறும்பில்லை. வேண்டுமென்றுதான் பொய்க் கதை சொன்னேன்” என்று நாரதர் சொன்னார்.

“ஏன்?” என்றார் பிள்ளையார்.

அதற்கு நாரதர், “நந்திகேசுரருக்குப் பொழுது போக்கும் பொருட்டாகக் கதை சொல்லச் சொன்னார்; சொன்னேன். தாங்கள் கேட்டதையும் அதோடு சேர்த்துக் கொண்டேன்” என்றார்.

“நான் கேட்ட விளையாட்டாக்கி நீர் நந்திக்குத் திருப்தி பண்ணினீரா? என்ன நந்தி இது? எஜமான் பிள்ளை நானா நீயா?” என்று பிள்ளையார் கோபித்தார்.

அப்போது நந்திகேசுரர் முகத்தைச் சுளித்துக் கொண்டு, “பிள்ளையாரே, உமக்கு எவ்வளவு கொழுக்கட்டை கொடுத்தாலும் ஞாபகமிருப்பதில்லை. வாயில் காக்கும் வேலை எனக்கு; உமக்குப் பொழுது போகாமல் போனால் வேலை செய்பவரை வந்து தொல்லைப்படுத்துகிறீரா? முருகக் கடவுள் இப்படியெல்லாம் செய்வது கிடையாது. அவர் மேலே தான் அம்மைக்குப் பட்சம். நீர் இங்கிருந்து போம். இல்லாவிட்டால் அம்மையிடம் போய்ச் சொல்லுவேன்” என்றார்.

அப்போது நாரதர் சிரித்து, “தேவர்களுக்குள்ளே கலகமுண்டாக்கும் தொழிலை நான் முழுதும் நிறுத்தி விடவில்லை ” என்றார்.

பிள்ளையாரும், நந்திகேசுரரும் வெட்கமடைந்து நாரதருடைய தலையில் இலேசான வேடிக்கைக் குட்டு இரண்டு குட்டினார்கள்.

அப்போது நாரதர் சிரித்துக் கொண்டு சொல்லுகிறார்: “நேற்றுக் காலையிலே பிருஹஸ்பதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்; இன்று என்னுடைய ஜன்ம நட்சத்திரத்திற்குள்ளே அவருடைய கிரகம் நுழையப் போகிறதென்றும், அதனால் இன்று என்னுடைய தலையில் நந்திகேசுரரும், பிள்ளையாரும் குட்டுவார்களென்றும் சோதிடத்திலே பார்த்துச் சொன்னார். உம்முடைய கிரகசாரங்களெல்லாம் நம்மிடத்திலே நடக்காதென்று சொன்னேன். பந்தயம் போட்டோம். நீங்கள் இருவரும் என்னைக் குட்டினால் நான் அவரிடத்தில் பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்குவதாக ஒப்புக் கொண்டேன். நீங்கள் குட்டாவிட்டால் நமக்கு தேவலோகத்தில் ஆறு சங்கீதக் கச்சேரி இந்த மாதத்தில் ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். அவர் கட்சி வென்றது. பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்க வேண்டும்.”

அப்போது பிள்ளையார் இரக்கத்துடன் “பதினாயிரம் பஞ்சாங்கத்துக்கு விலையென்ன?” என்று கேட்டார்.

நாரதர், “இருபதினாயிரம் பொன்னாகும்” என்றார். பிள்ளையார் உடனே ஒரு பூதத்தைக் கொண்டு நாரதரிடம் இருபதினாயிரம் பொன் கொடுத்துவிடச் சொன்னார். பூதம் அப்படியே அரண்மனைப் பணப் பெட்டியிலிருந்து இருபதினாயிரம் பொன் நாரதரிடம் கொடுத்து பிள்ளையார் தர்மச் செலவு என்று கணக்கெழுதிவிட்டது. பிறகு பிள்ளையார் நாரதரை நோக்கி, “இந்தப் பந்தயக் கதை மெய்யா? அல்லது இதுவும், பொய்தானா?” என்று கேட்டார்.

“பொய்தான்; சந்தேகமென்ன?” என்று சொல்லிப் பணத்தைக் கீழே போட்டுவிட்டு நாரதர் ஓடியே போய்விட்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.