பட்டுவிட்டோம் பட்டுவிட்டோம் விகாரி வருடத்தில்
உளம்நொந்து உடல்நொந்து கந்தலாய்ப் போய்விட்டோம்
எட்டாத உயரத்தில் நிற்கிறது விலைவாசி
வரவிற்குள் செலவுகள் அடங்காத நிலைபேசி
திட்டங்கள் பலகொண்டு வருகிறது அரசாங்கம்
தடைபோட்டு நிற்கின்றோம் நம்மிலே ஒருசாரார்
தொட்டதெற்கெலாம் கொடிபிடித்து அமைதியைக் குலைத்துவிட்டோம்
வளர்கின்ற நாட்டினது வேகத்தைத் தடுத்துவிட்டோம்!
உலகையே ஆட்டிவரும் பொருளாதார மந்தநிலை
நம்நாட்டைக் கசக்கியே சக்கையாய்ப் பிழிகிறது
ஆலைகள் உற்பத்தி படிப்படியாய்க் குறைகிறது
வேலையில்லாத் திண்டாட்டம் கண்கூடாத் தெரிகிறது
உலகப்பொ ருளாதாரத் தேக்கத்தின் தாக்கம்
நம்வாழ்க்கைத் தரத்திலே தெளிவாகப் புரிகிறது
சிலிர்ப்போடு வந்துள்ள கொரோனா வைரஸால்
மக்களது வாழ்க்கையே தடம்புரண்டு நிற்கிறது!
இருளதுவும் விலகிடவே விடியலும் புலர்ந்திடவே
ஜதிபோட்டு வருகின்றாள் சார்வரி தேவியவள்
நீர்வளமும் நிலவளமும் தொழில்வளமும் செழிப்புற்று
வாழ்க்கைத் தரமதுவும் படிப்படியா யுயர்ந்திடவே
பாரத மக்கள்நீர் ஜாதிமத பேதமில்லை
ஒருமித்து வாழ்கவென ஆசிகூற வருகின்றாள்
பாரதனில் முதலாக பாரதமும் வளம்பெறவே
அன்போடும் மகிழ்வோடும் ஆசிபல கூறுகிறாள்!
பயிர்கள் வளரட்டும் தொழில்கள் பெருகட்டும்
நோயின்றி நொடியின்றி ஆரோக்கியம் மலரட்டும்
ஜாதிமத பேதங்கள் அடியோடு ஒழியட்டும்
உனக்குநான் எனக்குநீயென ஒற்றுமையும் துளிர்க்கட்டும்
எல்லாத் துறைகளிலும் முதலாக நிற்கட்டும்
நமக்குநிகர் நாமேயென பாரதமும் முழங்கட்டும்
இன்பமும் மகிழ்ச்சியும் கடல்போல் பெருகிடவே
பொன்மாரி பொழியட்டும் சார்வரி புத்தாண்டு!