ஒரு மாலை நேரம் . உயர்ந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடி. அகன்ற அறையில் அந்த அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் வயது ஐம்பதுக்குள் இருக்கும்.
பெரிய மேஜையும் அவரைச்சுற்றி இருந்த தொலைபேசிகளும் அவர் பதவியைப் பறை சாற்றின.
சமீப காலத்திய பழக்கம் என்றாலும் எங்கள் இருவருக்குள் தொழிலையும் மீறிய ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தது.
அன்று எனது வேலை முடிந்தவுடன் பேச்சு சமீபத்திய என் மனைவியின் மரணம் பற்றித் திரும்பியது .
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் முகத்தில் ஒரு இனம் புரியாத சோகத்தினையும் கண்களில் சில துளிகள் நீரையும் பார்க்க முடிந்தது.
ஏற்கனவே சில முறை இதைப்பற்றிப் பேசி இருக்கிறோமே ஏன் திடீரென உணர்ச்சி வசப்படுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சார் ?என்ன ஆச்சு? ” என்றேன்.
“மரணத்தின் வலியை நான் ரொம்பவும் அனுபவிச்சிருக்கேன் சார் ” என்றவர் தொடர்ந்தார்.
” எனக்குச் சிவகங்கையிலிருந்து சில மைல் தொலைவில் ஒரு சிறிய கிராமம் தான் சொந்த ஊர்.
என் சிறு வயதிலேயே என் தந்தையை இழந்தேன். அதன்பின் எல்லாமே என் தாய்தான்.வறுமையான குடும்பம்.
என் அம்மா என்னை மிகவும் சிரமப்பட்டு பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார்.
எனக்கு எப்படி என் தாய்தான் உலகமோ அதுபோல அவருக்கும் நானே உலகம்.
பள்ளி விட்டவுடன் என் வயதினர் விளையாட ஓடும் பொழுது நான் அம்மாவைப் பார்க்க ஓடுவேன்.
அம்மாவின் அன்பிலும் ஸ்பரிசத்திலும் நான் வறுமையை உணரவில்லை.
உறவுகளின் துணையோடு தொழில் கல்வி முடித்தேன். அத்தருணத்தில்தான் உழைத்து ஓய்ந்த என் அம்மாவின் தள்ளாமையைக் கண்டேன்.
அம்மாவை உட்கார வைத்து இளைப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்.
என் போன்று வளர்ந்த அனைவருக்கும் தோன்றும் மனதின் வெறியே.
ஊரிலோ அருகிலோ என் தொழில் கல்விக்கு ஏற்ற வேலையில்லை.
நண்பர்கள் அறிவுறுத்தலோடு சென்னை செல்ல முடிவெடுத்தேன்.
‘கவலைப்படாதீர்கள் அம்மா ! நம் துயரம் இன்னும் சில காலம் தான் . வேலையோடு சேர்ந்து ஒரு வீட்டையும் பார்த்து வருகிறேன்’ என்றேன் அம்மாவிடம்.
அம்மா என்றும் மாறாத புன்னகையுடன் என் உச்சியில் முத்தமிட்டு,நெத்தியில் விபூதியிட்டார். பின் புடவையில் முடிந்திருந்த நூறு ரூபாவை என் பையில் திணிக்கும் பொழுது அவர் கண் கலங்கியது. என் கண்களும்தான்.
கையில் பையுடனும் ஒரு நண்பரின் முகவரியுடனும் சென்னை வந்திறங்கினேன்.
நண்பரின் முகவரி சரிதான் . ஆனால் நண்பர்தான் அங்கில்லை. எங்கெங்கோ தங்கி சில நாட்களில் என் கனவுக்கேற்ற வேலையும் அழகிய சிறு வீடும் வாடகைக்குக் கிடைத்தது.
பையில் முதல் மாத சம்பளம், அம்மாவிற்கு நான் ஆசையுடன் வாங்கிய புடவை. மனதில் சந்தோஷத்தோடு பயணித்தாலும் பத்துமணி நேரப் பயணம் பல நாட்களாக பயணிப்பது போலிருந்தது அம்மாவைக் காண ஆவலில்.
அதிகாலை பஸ்ஸிருந்து இறங்கி தெருவில் நடக்கிறேன். மூன்றாவது வீடே என் மாமாவின் வீடுதான் . மாமா திண்ணையில் அமர்ந்து தினத்தந்தி பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். என்னைப்பார்த்தவுடன் இறங்கி வீதிக்கு வந்து என் கையைப்பிடித்துக்கொள்கிறார்.
‘என்ன ராஜா, ஒரு கடுதாசியாவது போடக்கூடாதா? எவ்வளவு தவிச்சுப்போயிட்டோம்’ என்றார்.
நான் ‘என்ன ஆச்சு மாமா ?’ என்றேன்.
‘ஒன்றுமில்லை ,வா வீட்டுக்குப் போகலாம் . இரு சாவியை எடுத்து வருகிறேன்’ என்று உள்ளே சென்று சாவியை எடுத்து வந்தார்.
சற்று குழப்பத்துடன் அவர் பின்னே சென்று வீட்டினில் நுழைகிறேன்.
அங்கு அம்மா போட்டோவில் மாலையுடன்.
மாமாவின் குரல் கிணற்றிலிருந்து கேட்டது
’ தங்கச்சி, திடீரென மயங்கி விழுந்ததுப்பா. ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ளே முடிஞ்சிருச்சு. உன்னைப் பட்டினத்தில கண்டு பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். நீ இருக்கிற இடத்த கண்டு பிடிக்க முடியல. நாங்களே எல்லாத்தையும் முடிச்சிட்டோம்பா’ என்றார்.
இப்ப சொல்லுங்கள் சார்! மரணத்தின் வலியை என்னை விட யாராவது அனுபவிச்சிருக்க முடியுமா ? ” என அவர் கேட்ட போது என் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது…