எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது இணைய தளத்தில் பதிவு செய்தது.
மானசீகமாக அவரிடம் அனுமதி கேட்டுக்கொண்டு இதைப் பிரசுக்கிறேன். ( எஸ் எஸ் )
வெண்ணிற இரவுகள் நாவல் சுருக்கம்.
தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும். அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது.
அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பான்மையினரின் பிரச்சனைகளே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் மனஇயல்பு. அதாவது பேசமுடியாத ஆனால் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களே அவரது முக்கிய கதாபாத்திரங்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் புதினங்களில் வரும் ஆண்கள் விசித்திரமானவர்கள். அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி அவர்களை பற்றி நினைத்து கொள்கிறேன். இயேசுநாதரின் சாயல் கொண்ட இளவரசன் மிஷ்கனில் இருந்து கலிகுலாவின் சாயல் கொண்ட கரமசோவ் வரையான எத்தனை வேறுபட்ட ஆண்கள். குறிப்பாக அவரது கடைநிலை பாத்திரங்கள். அவர்களது மனஅழுத்தங்கள் அற்புதமானவை.
அவர்கள் சிக்கலான மனப்பிரச்சனைகள் கொண்டவர்கள். அதாவது தங்கள் மனதை தாங்களாகவே ஆழ்ந்து கவனித்து ஆய்வு செய்பவர்கள். தனக்கு தானே பேசிக் கொள்ளக்கூடியவர்கள். தன் மீது எவருக்கும் நேசமில்லை என்று மௌனமாக அழுபவர்கள். ஆனால் உலகத்தை நேசிப்பவர்கள். தன்னால் மற்றவர்கள் சந்தோஷப்பட முடியும் என்றால் அதற்காக அவமானத்தை ஏற்றுக் கொள்ள தயங்காதவர்கள்.
அவர்களின் தோற்றமும் மனதும் ஒன்றிலிருந்து மாறுபட்டது.புறத்தோற்றத்தை அவர்கள் பெரிதாக கவனம் கொள்வதில்லை. செயல்களே அவர்களது இயல்பை முடிவு செய்கின்றன. பெரும்பான்மையான சூழல்களில் காய்ச்சல் கண்ட மனிதன் தன்னை அறியாமல் சுரவேகத்தில் எதையெதையோ பேசுவதைபோல இவர்கள் விழித்தபடியே தன்னுணர்வுள்ள நிலையில் பேசிக் கொள்கிறார்கள்.
எது அவர்களை இப்படி நடக்க செய்கிறது. ஏன் இந்த பதற்றம். நடுக்கம். குழப்பமான தடுமாற்றம். கடந்த காலத்தின் துயரம் அவர்களை மறுபடி உள்ளே இழுத்துகொண்டுவிடுமோ என்ற பயம் ஒரு காரணம். மற்றொரு காரணம் தன்னை எவருக்கும் பிடிக்காது. தான் தனித்து விடப்பட்டவன். கனவுகளில் மட்டுமே வாழ்ந்து முடியப்போகிறவன் என்ற காரணமற்ற நம்பிக்கை. இந்த இரண்டோடு அடுத்தவர்கள் தன்னை சரியாக புரிந்து கொள்ளாமல் போய்விட்டால், வெறுக்க துவங்கிவிட்டால் என்னாவது என்ற தீராத சந்தேகம். இவை தான் தஸ்தாயெவ்ஸ்கியின் கதாநாயகனை உருவாக்குகிறது.
சிறுவயதில் இருந்து அரவணைக்கபடாத. ஆத்மா தன் வாழ்நாள் முழுவதும் அதே ஏக்கத்துடன் நடுங்கியபடியே தானிருக்கும் என்கிறது தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரு கதாபாத்திரம் . அது தஸ்தாயெவ்ஸ்கியின் குரலே.
ஒரு மனிதன் எப்படி வளர்க்கபடுகிறான். எந்த சூழல் அவனை உருவாக்குகிறது. பதினைந்து வயதிற்குள் அவன் என்ன துயரங்களை , நெருக்கடிகளை சந்திக்கிறான், எதற்காக ஏங்குகிறான் என்பது அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரக்கூடியது. அதை பற்றி சாதனையாளர்கள் பலரும் தங்கள் சுயசரிதையில் மறக்காமல் குறிப்பிடுகிறார்கள். பத்து வயதில் பசித்த நேரத்தில் உணவில்லாமல் போனவன் தன் வாழ்நாளில் எவ்வளவு கோடி பணம் சேர்த்தாலும் அன்று இந்த பணம் தன்னிடம் இல்லையே என்ற ஆதங்கத்திலிருந்து விடுபட முடியாது. வறுமையும் நிரகாரிப்பும் வாழ்நாள் முழுவதும் மனதிலிருந்து அகற்ற முடியாத வடுக்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வும் இப்படியானது தான். அவரது அப்பாவின் கோபக்காரர். பிள்ளைகளை வெறுப்பவர். மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தவர். அவரது நேசம் அவர்களுக்கு கிடைக்கவேயில்லை. அப்பாவை பிடிக்காத எதிரிகள் அவருக்கு நாட்டுசாராயத்தை வாயில் ஊற்றி அவரை கொலை செய்து விட்டார்கள். நோயாளியான அம்மாவின் அன்பை பிள்ளைகள் பகிர்ந்து கொண்டார்கள். அம்மாவும் இறந்து போய்விட்டால் யாரை நம்பி வாழ்வது என்ற பயம் ஆழமாக அவருக்குள் வேர்விடத்துவங்கியது. கடவுள் கருணையற்றவர் என்று பல நாட்கள் தஸ்தாயெவ்ஸ்கி புலம்பி அழுதிருக்கிறார்.
சாவு குறித்த பயமும், கைவிடப்படுவோம் என்ற அச்சமும் அவருக்கு சிறுவயதிலே துவங்கியிருக்கிறது. வளர்ந்து பெரியவனாகி அவர் சந்தித்த சிறைச்சூழல் மற்றும் நெருக்கடியான பொருளாதார நிலை அவரை மேலும் பலவீனமாகவே ஆக்கியது. பெருங்காற்றில் அலைபடும் புற்களின் நிலை கொள்ளாமை போன்றதே அவரது வாழ்க்கை
அவரது கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் இயல்பும் குழப்பங்களும் ஒளிந்து கொண்டுதானிருக்கின்றன. அவரது படைப்பில் வரும் பெண்கள் ஆண்களை விட வலிமையானவர்கள். அவர்களால் தான் ஆண் தன்னை திருத்திக் கொள்கிறான். உருமாற்ற துவங்குகிறான். காதலை உணர்கிறான். காதலை மனது ஒரு நிமிசம் முழுமையாக உணர்ந்து கொண்டால் அதுவே வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று ஒரு வரி தஸ்தாயெவ்ஸ்கியிடம் இடம் பெறுகிறது.
அவரதுபுகழ்பெற்ற காதல்கதை வெண்ணிற இரவுகள். (White Nights, by Fyodor Dostoevsky) தலைப்பே மிகக்கவித்துவமானது. ஆறு முறை வேறுவேறு இயக்குனர்கள் இதை படமாக்கியிருக்கிறார்கள். இதில் Luchino Visconti , மற்றும் Robert Bresson படங்கள் அற்புதமானவை. இதே கதையை தழுவி ஹிந்தியில் Ahista Ahista , Saawariya ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன.
வெண்ணிற இரவுகள் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று உறக்கமில்லாத இரவு. மற்றது இரவிலும் சூரியன் ஒளிரக்கூடிய இரவு. கோடைகாலத்தில் பனிப்பிரதேசங்களில் இது போல நிகழ்வதுண்டு. இரவு பத்து மணி வரை சூரியன் இருக்கும். அது போலவே சூரியன் உதயமாவதும் விடிகாலை மூன்று மணிக்கே துவங்கிவிடும். அது போன்ற நாட்களில் முழுஇரவும் புலர்வெளிச்சம் போன்றதொரு ஒளி இருந்து கொண்டேயிருக்கும் .மிக சிறிய இரவு கொண்ட நாட்கள் அவை.
மிட் சம்மர் என்று சொல்லக்கூடிய ஜீன்மாதத்தில் ரஷ்யாவில் இப்படியான நீண்ட பகல்கள் ஏற்படுவதுண்டு. இதை பீட்டர்ஸ்பெர்க் நகரில் விழாவாக கொண்டாடுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி பீட்டர்ஸ்பெர்க்கில் வசித்தவர். அவரது இளமைபருவத்தில் வெண்ணிற இரவு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நினைவுகளில் இருந்தே இந்த தலைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.
பீட்டர்ஸ்பெர்க் நகரின் சூரியன் ஒளிரும் இரவை பற்றி தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதுகிறார். அந்த சூரியன் நாம் அறிந்த சூரியன் இல்லை. அந்த வெளிச்சமும் வேறானது என்றே குறிப்பிடுகிறார். பகல் வெளிச்சத்தில் இருந்து பதுங்கி கொள்பவர்கள் இரவில் தான் சற்று ஆசுவாசத்துடன் நடமாடுகிறார்கள். நான் அது போன்ற ஒருவன் என்றே கதையின் நாயகன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இந்த நீள்கதையின் உபதலைப்பு கனவுலகவாசியின் குறிப்புகள். அதாவது கனவு காண்பதில் மட்டுமே வாழ்வை அறிந்த ஒருவன் சந்தித்த நிகழ்வுகள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 162 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயதுடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கபட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது.
இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள். இதில் எங்கேயிருக்கிறது காதல் என்ற யோசனை உருவாககூடும். சந்திப்பு என்பதை இயல்பான ஒன்று என்ற தளத்திலிருந்து அபூர்வமானது என்ற தளத்திற்கு உயர்த்தி கொண்டு செல்வதன் வழியே தஸ்தாயெஸ்கி காதல்கதையை துவக்குகிறார்.
ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீதியை கடந்து செல்லும் கதாநாயகன் அங்கே உள்ள ஒரு வீட்டினை கடந்து செல்கிறான் . அவனால் ஒரு போதும் மறக்கமுடியாத பெண் வசித்த வீடது. அந்த வீடு இப்போது உருமாற துவங்கியிருக்கிறது. அதை பற்றிய தனது கடந்தகால நினைவுகளில் முழ்க துவங்குகிறான்.
நீண்ட பகல் தான் கதையின் ஆதார காரணம். அது இரவின் ஊடாக மறைந்திருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் பெரும்பான்மை கதைகள் போல கதை தன்மையில் துவங்குகிறது. கதையை சொல்பவனுக்கு பெயர் கிடையாது. வயது இருபத்தியாறு நடக்கிறது என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறான். அவன் அதுவரை எந்த பெண்ணோடும் பேசிபழகியது கிடையாது. அவன் கனவில் வந்த ஒன்றிரண்டு பெண்களை தவிர வேறு பெண்களை அவனுக்கு தெரியாது. பெண்களை கண்டாலே கூச்சத்தில் ஒதுங்கிவிடுவான். பேச்சு தடுமாற ஆரம்பித்துவிடும்.
அவன் பீட்டர்ஸ்பெர்க்கின் விசித்திரமான சந்து ஒன்றில் குடியிருக்கிறான். அது பகலில் கூட சூரியன் வராத வீதி. அங்கே உண்மையில் வேறு ஒரு சூரியன் ஒளிர்கிறது. அதன் விசித்திரமான வெளிச்சத்தில் அவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். எது அந்த பீட்டர்ஸ்பெர்க்கின் இரண்டாம் சூரியன்.. தோற்று போன, அடையாளமற்று போன, கைவிட்டு போன பலரின் நிறைவேறாத ஆசைகள் தான் அங்கே இன்னொரு சூரியானாக ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. அவை இரவிலும் மறைவதேயில்லை.
அவர்கள் இயலாமையால், வறுமையால் யாரும் தங்களை நேசிக்க மாட்டார்கள் என்ற துயரத்தால் பீடிக்கபட்டவர்கள். அதனால் கனவு காண்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறார்கள். கனவுகள் அவர்களது நெருக்கடியிலிருந்து விடுபட்டு சந்தோஷம் கொள்ள வைக்கின்றன. பெயரில்லாத கனவுலகவாசிகளில் ஒருவன் இக்கதையை விவரிக்கிறான்.
சில வருசங்களுக்கு முன்பாக ஒரு இரவில் தான் சந்தித்த பெண்ணை பற்றி சொல்கிறான். அவள் குழப்பமானவள். செய்வதறியாமல் தடுமாறுகின்றவள். யாரோ ஒருவன் அவளை அழைக்க அவனை விலக்கி கத்துகின்றவள். இதுவரை எந்த பெண்ணிடமும் பேசியிராத அவனை அந்தபெண்ணின் துயரநிலை பேசவைக்கிறது. தன்னை மீறி அவளிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். எதை எதையோ பேசுகிறான். தன்னால் கோர்வையாக பேசமுடியாது என்பதை பற்றி விரிவாக பேசுகிறான். மனம் தடுமாறுகிறான். அவளோ அவனிடம் எந்த வேறுபாடும் காட்டாமல் மிக இயல்பாக பேசுகிறாள். மறுநாள் சந்திக்கலாம் என்று விடைபெற்று போகிறாள். அந்த இரவு முடியும் போது அந்தப் பெண்ணின் பெயர் கூட அவனுக்கு தெரியாது.
இரண்டாம் இரவில் அவளுக்காக காத்திருக்கிறான். தன்னோடும் ஒரு பெண் பேசுகிறாள் என்பதே அவனை சந்தோஷம் கொள்ள வைக்கிறது. அவள் வருகிறாள். தயக்கம் குறைந்து அவளிடமே என்றாவது ஒரு நாள் தன்னோடும் ஒரு பெண் பேசுவாள் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். அது நிஜமாகிவிட்டது என்று பிதற்றுகிறான். அவள் ஏன் இவ்வளவு பதற்றம் கொள்கிறான் என்று வியப்படைகிறாள்.
உண்மையில் பெண்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் , என்ன பிடிக்கிறது எதற்காக அழுகிறார்கள் என்று எளிதாக புரிந்துகொள்ளவே முடியாது. அது ஒரு வேளை அது ஆண்களின் தவறாகவும் இருக்கலாம். அல்லது பெண்களின் இயல்பே அப்படியானதாகவும் இருக்கலாம் என்று அவனது தெளிவற்ற எண்ணங்களையும் அதற்கு அவள் சொல்ல வேண்டிய பதில்களையும் அவனே பேசுகிறான். அது அவளை வசீகரிக்கிறது.
நீ மிகவும் நல்லவன், பெண்ணோடு பேசுவது பெரிய விசயமில்லை என்று ஆறுதல் சொல்கிறாள். அவனோ நான் எதிர்பாராமல் அறைக்கு வரும் நண்பனுடன் பேசுவதற்கே தயங்க கூடியவன். என்னிடம் இப்படியான சூழலில் ஒரு பெண் பேசுகிறாள் என்பது இயல்பானதில்லை என்று துடிக்கிறான். அப்படியில்லை எந்த பெண்ணும் தன்னோடு ஒரு ஆண் சில நிமிசங்கள் பேசுவதை வேண்டாம் என்று பிடிவாதமாக விலக்கி போகிறவள் இல்லை. நீ பேச தயங்கியிருக்கிறாய். உன்னை வெளிப்படுத்திக் கொள்வது தான் உனது பிரச்சனை என்கிறாள்.
சந்தித்த மறுநிமிசம் தனது மனதை படித்துவிட்டவள் போல சொல்கிறாளே என்று வியந்த அவன் ஆச்சரியமாக இருக்கிறது சமார்த்தியமும் அழகும் ஒன்று சேர்வது அபூர்வம். நீ இரண்டும் ஒன்றாக கொண்டிருக்கிறாய் என்கிறான்.
அவள் புன்னகையுடன் நீ பிரமாதமாக பேசுகிறாய். உண்மையில் கூச்சப்படும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்கிறாள். அவன் உடனே என்னிடம் உள்ள ஒரே கவசம் கூச்சம் தான். அதை இழந்துவிட்டு என்னசெய்வது என்று அப்பாவி போல கேட்கிறான். மறுநிமிசமே அய்யோ உன்னிடம் நான் இப்படி பேசியிருக்க கூடாது. என் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லிவிட்டேன் என்று வெட்கத்துடன் புலம்புகிறான்.
இப்படியாக கடிகாரத்தின் பெண்டுலம் செல்வது போல அவனது தடுமாற்றம் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. அவளை பிரிந்து போனால் தன்னால் மறுபடி சந்திக்கவே முடியாமல் போய்விடும் என்று வேதனை கொள்கிறான். அவள் யாருக்கோ காத்திருக்கிறாள். ஏதோ துயரம் அவளை வீட்டிலிருந்து துரத்திவெளியே அனுப்புகிறது என்பதை புரிந்து கொள்கிறான். இவ்வளவு அழகான தூய்மையான பெண்ணை கூட கஷ்டப்படுத்தி வேதனை கொள்ள வைப்பது யார் என்று தெரியாமல் குழம்பி போகிறான்.
கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதை போல அவள் முன்னால் அவனது எண்ணங்கள் ஒவ்வொன்றாக பிரதிபலிப்பாகின்றன. அதுவரை மனதில் ஊறிக்கிடந்ததை அவளது வருகையே வெளிப்படுத்த வைக்கிறது. எது அவனை இப்படி நிலை கொள்ளாமல் தள்ளாடசெய்கிறது.
உண்மையில் தனது தனிமையை கண்டே நடுங்குகிறான். நண்பர்களும் கைவிட்டு போனார்கள் என்ற சூழலில் தனிமையை எதில் கரைத்து கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அவன் மனது வெறுமையால் எதைஎதையோ கற்பனை செய்கிறது. அந்த கற்பனை அவனை மேலும் உலகை நோக்கி ஆசையுடன் உந்தி தள்ளுகிறது. ஆனால் புறஉலகை நேர் கொள்ளும் தைரியம் அவனிடமில்லை.
அவன் பகலில் ஒளிந்து கொள்கிறான். இரவில் மட்டுமே வெளியே வருகிறான். இரவில் உறக்கமற்று நடமாடுபவர்கள் நிம்மதியற்றவர்கள். வீடு அவர்களை சாந்தம் கொள்ள செய்ய முடியவில்லை. என்று கூறுகிறான். இயற்கையின் மாறுபாடு போன்றதே அவன் மனப்போக்கும்.
இரவில் ஒளிரும் சூரியனால் என்ன பயனிருக்கிறது. பகல் ஏன் நீண்டு போகிறது. பகல் அடங்காமல் இரவு வருவதில்லை. ஆனால் கோடைகால இரவு ஏன் சிறியதாக இருக்கிறது. தனது மனதின் நிறைவேறாத காதலை போன்றதே இத்தகைய இரவுகள் என்று நம்புகிறான் அவன்.
அவனது இரண்டாவது இரவில் அவள் பெயர் நாஸ்தென்கா என்று அறிந்துகொள்கிறான். அந்த பெயரை சொல்வதிலே தித்திப்பு கொள்கிறான். திரும்ப திரும்பி சொல்லி களிப்புறுகிறான். திடீரென அவளது பெயர் சுவைக்கபடும் இனிப்பு மிட்டாய் போலாகிறது. அந்த சொல்லை தன் நாவில் கரைந்துபோக செய்கிறான். நாஸ்தென்கா அவனது மிதமிஞ்சிய உணர்ச்சிபீறடலை புரிந்து கொள்கிறாள். தனது கதையை அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள்
நாஸ்தென்காவிற்கு வயது பதினேழாகிறது. அவள் பாட்டியுடன் ஒரு வீட்டில் வசிக்கிறாள். பாட்டிக்கு கண்தெரியாது. அவர்கள் வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அங்கே ஒரு இளைஞன் குடிவருகிறான். பாட்டி அவனோடு பேசக்கூடாது. பழக்கூடாது என்று கண்டிப்பாக இருக்கிறாள். எங்கே தன்னை மீறி பேத்தி போய்விடுவாளோ என்று அவளது பாவாடையை தன்னோடு ஊக்குபோட்டு குத்திக் கொள்கிறாள். அதனால் நாஸ்தென்காவால் எழுந்து போக முடியாது. அப்படியிருந்தும் நாஸ்தென்கா அந்த இளைஞனால் வசீகப்படுகிறாள்.
அவன் அவளுக்காக படிக்க புத்தகங்கள் தருகிறான். அந்த புத்தகங்கள் அவளை மாற்ற துவங்குகின்றன. உலகம் வெளியில் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்பதை புத்தகங்களே உணர்த்துகின்றன. புத்தகங்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிடுகிறாள். அதை பயன்படுத்தியே அவளை காதலிக்க துவங்குகிறான். அவளையும் பாட்டிûயையும் அழைத்து கொண்டு ஒபரா பார்க்க செல்கிறான். அவன் மீது தீராத காதல் கொள்கிறாள் நாஸ்தென்கா. அவன் ஊருக்கு கிளம்பும் நாளில் தானும் கூட வருவதாக பெட்டியோடு கிளம்புகிறாள். அதை எதிர்பாராத அவன் திரும்பி வந்து அவளை அழைத்துபோவதாக வாக்குறுதி தந்து விடைபெறுகிறான். அன்றிலிருந்து அவனுக்காகவே நாஸ்தென்கா காதலுடன் காத்திருக்கிறாள்.
நாஸ்தென்காவின் காதலையும் தனிமையே உந்தி தள்ளுகிறது. அவள் பாட்டியோடு பிணைக்கபட்டு இருப்பதில் இருந்து விடுபட விரும்புகிறாள். அதுவே ஒருவனை காதலிக்கும்படியாக செய்கிறது. அந்த காதலை அவன் உணர்வதேயில்லை. அவள் தீவிரமாக காதலை நம்ப துவங்குகிறாள். காத்திருப்பதன் வழியே தான் காதல் உறுதியாகிறது என்று சொல்கிறாள்
நாஸ்தென்காவின் பாட்டி அற்புதமான கதாபாத்திரம். அவளுக்கு பார்வை மங்கிவிட்டிருக்கிறது. ஆனால் கடந்த காலம் நினைவில் பசுமையாக இருக்கிறது. அவளது இளம்பருவத்தில் அடித்த வெயில் அழகாக இருந்தது. அது போல இப்போது இல்லை என்று அடிக்கடி குறிப்பிடுகிறாள். இயலாமை தான் அவளது குருட்டுதனம். அடுத்த அறையில் உள்ள ஆண் தன் பேத்தியை வசீகரிப்பது அறியாத முட்டாள் இல்லை. மாறாக அது தான் தனக்கிருக்கும் ஒரே சாத்தியம். வேறு வழியில் தன் பேத்திக்கு உரிய மாப்பிள்ளையை தன்னால் தேடி தர இயலாது என்று அவள் அறிந்திருக்கிறாள்.
நாஸ்தென்காவை காதலிப்பவன் The Barber of Seville என்ற ஒபராவை காண அழைக்கும் போது அவளிடம் துளிர்ப்பது அவளது கடந்த கால காதலே. அது சொல்லபடாமல் கடந்து போகிறது. இந்த ஒபராவின் கதாநாயகி காதலுக்காக ஏங்குபவள். Gioachino Rossini ஒபராவும் நாஸ்தென்காவின் வாழ்க்கையும் ஒரு தளத்தில் ஒன்று போலவே உள்ளது. அதை சுட்டிக் காட்டுவதற்காகவே இதை பயன்படுத்தினாரோ என்னவோ.
ருஷ்ய கலாச்சாரத்தின் மீது பிரெஞ்சு கலாச்சாரம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து செகாவ், டால்ஸ்டாய் போன்றவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். இக்கதையிலும் நாஸ்தென்கா பிரெஞ்சு புத்தகங்களை தான் படிக்கிறாள். பிரெஞ்ச் கலாச்சாரம் தங்களை விட உயர்வானது என்று மனப்பாங்கு ரஷ்யாவில் மேலோங்கியிருந்திருக்கிறது.
வெண்ணிற இரவுகளில் வரும் ஆணும் பெண்ணும் காதலின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். காதல் மட்டுமே தங்களுக்கான விடுதலை என்று உணர்கிறார்கள். நாஸ்தென்கா தன்னை காதலித்து கைவிட்டவன் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்றே வருத்தபடுகிறாள். அதே மனநிலை தான் கனவுலகவாசிக்கும் ஏற்படுகிறது.
அவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாகயில்லை. பேசி களைத்து போகிறார்கள். ஆனால் இருவருமே உடலை பெரிதாக எண்ணவில்லை. உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்ளவும் அரவணைக்கும் விரும்புகிறார்கள். தனது உருவத்தை கண்ணாடியில் பார்ப்பது போலவே நாஸ்தென்கா வழியாக தனது ஆசைகளை காண்கிறான். காதல் அவர்களை பித்தேற்றுகிறது.
அந்த பெண்ணிற்கு உதவுவதற்காக அவள் காதலனை தேடி போகிறான். அவளது கடிதத்தை தருகிறான். ஆனால் காதலன் நாஸ்தென்காவை பிடிக்கவில்லை என்று விலக்கவே அவளுக்காக துயரம் கொள்கிறான். முடிவில் நாஸ்தென்கா காதலன் உடன் ஒன்று சேர்ந்துவிடுகிறாள்.
அப்போது திடீரென காதலன் முன்பாகவே நாஸ்தென்கா ஒடிவந்து கனவுலகவாசியை கட்டிக் கொள்கிறாள். அந்த அரவணைப்பு பிரிவின் வலியை அவனுக்குள் நிரப்புகிறது. நிமிச நேரம் அந்த அணைப்பு நீள்கிறது. பின்பு அவள் காதலன் உடன் போய்விடுகிறாள். இந்த ஒரு நிமிசம் போதும் வாழ்வதற்கு என்று பெருமூச்சுவிடுகிறான் கனவுலகவாசி.
வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கபடுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போல தான் காதலும் . அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது. ஆனால் அந்த அலைக்கழிப்பும் வலியும் காதலுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது. வலியில் இருந்தே காதல் வளர்கிறது.பிரிவே காதலை உணர செய்கிறது.
அவ்வகையில் எப்போது வாசிக்கையிலும் வெண்ணிற இரவுகள் நிராசையின் முடிவில்லாத பாடலை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டேயிருக்கின்றன.
*