வைரஸ் – நித்யா சங்கர்

How India's behemoth railways are joining the fight against Covid ...

‘ஏம்பா.. உன் பெயர் என்ன?’ என்றார் பெரியவர் தன்ராஜ் தன் எதிரே உட்கார்ந்திருந்த வாலிபனிடம்.

‘ரமேஷ்’ என்றான் வாலிபன். உக்கிரமான ஜலதோஷத்தினால் மூக்கெல்லாம் சிவந்திருந்தது. தும்மலும், இருமலும் அடுத்தடுத்து வர கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.

டிரெயின் நல்ல வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ரிஸர்வேஷன் கம்பார்ட்மென்டில் ஒர் ஸீட் கூட காலி இல்லாமல் ·புல் ஆக இருந்தது.

‘ஏன் தம்பி.. பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கே.. இப்போபேப்பரைப் பார்த்தாலும், டி.வி.யை ஆன் செய்தாலும் ஒரே நியூஸ்.. கொரோனா வைரஸ்..நீயானா விடாம தும்மிட்டும், இருமிட்டும் இருக்கே… உன் கண்ணைப் பார்த்தா உனக்கு ஜுரம் கூட இருக்கும் போல இருக்கு…’ என்றார் பெரியவர்.

‘அய்யய்யோ.. நீங்க சொல்றதைப் பார்த்தா இது கொரோனா வைரஸின் ஸிம்டம்ஸ் மாதிரி இல்லே இருக்கு… இப்போ என்ன செய்யறது..?’ என்று அலறினாள் ஒரு மாமி.

நல்ல விஷயங்கள் வேகமாகப் பரவி மக்களைச் சேருமோ இல்லையோ.. இதுமாதிரி விஷயங்கள் உடனே எல்லோருக்கும் நொடியில் பரவி பீதியைக் கிளப்பி விடும்.

‘என்னது..? கொரோனாவா..? எங்கே..எங்கே..?’ என்று ஜன்னலோர ஸீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு வாலிபன் பதறிக் கொண்டு எழுந்தான்.

‘அது என்ன நயன்தாராவா…? சுட்டிக் காட்டறதுக்கு..? ஒருவர் தும்மலும், இருமலுமா இருக்கார்.. அது கொரோனாவா இருக்குமோன்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க..’ என்றான் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன்.

‘ஓ.. அப்படியா..’ என்று அசடு வழிய மறுபடியும் தூங்கிப்போனான்.

‘சுத்தம்.. பரப்பிரம்மம்..’ என்று அவனை மேலும் கீழுமாகப் பார்த்து அங்கலாய்த்துக் கொண்டான் பக்கத்தில் இருந்தவன்.

‘ஏண்டி.. புவனா.. யாருக்கோ கொரோனா வைரஸ் வந்துடுத்தாமே… உன் கோடோன்லே பார்… டிஷ்யூ பேப்பர் இருக்கான்னு… வாயையும், மூக்கையுமாவது மூடிக்கலாம்..’ என்றார் ராமசேஷன்.

அவர் கோடோன் என்று சொன்னது மாமியின் ஹான்ட்பேகை. பிரயாணத்தின்போது அவ்வளவு பெரிய பேகைத் தூக்கிக் கொண்டு வருவாள். பேகை முற்றிலுமாகப் பார்த்து விட்டு, ‘சே.. டிஷ்யூ பேப்பரை எடுத்து கண்ணுக்குத் தெரியற மாதிரி டேபிள்லேயே வெச்சிருந்தேன்… பட்.. வரும்போது அதை எடுத்து பையில் போட்டுக்க மறந்துட்டேன்…’ என்று அலுத்துக் கொண்டாள்.

‘ஆமா.. நீ எதை ஒழுங்காச் செய்தே இதைச் செய்யறதுக்கு.. இப்போ என்ன பண்ணறது..? ஏதாவது துணியை எடு.. மூஞ்சியை மூடிக்கலாம்..’ என்று கடிந்து கொண்டார் ராமசேஷன்.

‘ஐயா.. கொஞ்ச நேரம்தான்… நான் அடுத்த ஸ்டேஷனில் இறங்கிடுவேன்..’ என்ற ரமேஷ் பெரிதாக ஒரு தும்மல் போட்டான்.

அந்த கம்பார்ட்மென்டில் உள்ள எல்லோர் உடல்களும் நடுங்கின. அவர்களையும் அந்த வைரஸ் பிடிச்ச மாதிரி ஒரு அச்சம்… ஒரு பீதி…

அந்த இளைஞன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒர் முதியவர் அவனிடமிருந்து விலகி உட்கார நினைத்து இருக்கை யில் சிறிது நகர்ந்து தடுமாறி விழப் போனார். சக பிரயாணிகள் இரண்டு மூன்று பேர் அவரைப் பிடித்து சரியாக உட்கார வைத்தனர்.

‘ஏன்னா.. நாம நம்ம பொண்ணைப் பார்க்கப் போய்ட்டு இருக்கோம்… அவளைப் போய்ப் பார்க்கறதுக்குளே இந்தப் பாழாப் போன வைரஸ் நம்மளையும் தாக்கிக் கொன்னுடாதே? என்று பாதி தேமலுடன் கேட்டாள் இன்னொரு மாமி.

‘அப்படி ஒண்ணும் சீக்கிரம் தொத்திக்காது..’ என்றார் அவள் கணவர்.

‘மாமி.. நீங்க போய் உங்க மகளுக்கும், மருமகனுக்கும், குழந்தைகளுக்கும் இந்த வைரஸை டிஸ்ட்ரிப்யூட் பண்ணி, அவங்களுக்கும் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிற வரைக்கும் டைம் இருக்கு…’ என்றான் ஒருவன் நக்கலாக.

‘ஏய்… யாரும் பயப்படண்டா.. இந்த வைரஸ் காற்று மூலமா பரவாது.. யாருக்காவது அந்தப் ப்ராப்ளம் வந்தா அவரை விட்டுத் தள்ளி உட்கார்ந்திருந்தா போதும். நான் இப்பத்தான் வாட்ஸப்பில் படித்தேன்’

‘அட,, நீங்க ஒண்ணு.. இந்த வாட்ஸ் அப் மெஸேஜையெல்லாம் நம்ப முடியாது.. நாளைக்கே இந்த மெஸேஜ் தவறானது என்று வந்தாலும் வரும்..’

‘அதுவும் சரிதான்.. நாளைக்கே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவங்க வேறே யாரையாவது உற்று நோக்கினாலே அது பரவி விடும் என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..”

‘மகேஷ்.. உன்கிட்டே ·பேஸ் மாஸ்க் இருந்தா ரமேஷ¤க்குக் கொடு..’ என்றார் பெரியவர்.

மகேஷ் தன் கைப் பையிலிருந்து ஒரு மாஸ்க்கை எடுத்துக்கொடுத்தான். ரமேஷ் மாட்டிக் கொண்டான்.

‘ஆமாம்.. அவர் போட்டுண்டுட்டார்.. ஓ கே.. நமக்கும் ஒரு எக்ஸ்ட்ரா ஸே·ப்டி வேண்டாமா.. ? அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்.. அதற்குள்ளே இந்த வைரஸ் இந்த கம்பார்ட்மென்ட்லே உள்ள எல்லோருக்கும் தொத்தி விடுமே.. என்டே.. குருவாயூரப்பா.. இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சேனோ.. இப்படி ஆயிடுத்தே..’ என்றார் மற்றொருவர்.

வைரஸ் நமக்கு பரவி விட்டால் என்ன செய்வது என்ற பீதி அந்தப் பெட்டியிலுள்ள எல்லோர் முகத்திலும் ஒட்டி இருந்தது.

லக்கேஜ் வைக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், ‘மகேஷ்.. அந்தப் பார்ஸல் உன்னுடையதுதானே? அதில் மாஸ்க் தானே இருக்கு..’ என்று கேட்டார்.

‘ஆமா.. ஹோம் மேட் மாஸ்க்.. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி அந்த ஊரில் உள்ள ஒர் ·பார்மஸிக்கு டெலிவர் பண்ண கொண்டு போய்ட்டு இருக்கேன்’

‘ஒரு வேலை செய்யலாம்.. இப்போ இந்தப் பெட்டியில் உள்ள எல்லோருக்கும் மாஸ்க் அவசியம். அந்த பார்ஸலில் உள்ள மாஸ்க்கை எல்லோருக்கும் கொடுக்கலாம். நீ அந்த ·பார்மஸிக்கு நாளைக்கு ·பிரஷ்ஷா மாஸ்க் செய்துடெலிவரி பண்ணிடு’ என்றார்.

‘குட் ஐடியா..’ என்றார்கள் சக பிரயாணிகள் கோரஸாக.’அங்க உங்களுக்கு கிடைக்கிறதை நாங்க கொடுத்துடறோம். உங்களுக்கு பிஸினஸ¤க்கு பிஸினஸ¤ம் ஆச்சு.. எங்களுக்கும்நிம்மதியா பிரயாணம் செய்யலாம்..’ என்ற ஒருவர் மகேஷின் அனுமதியைக் கூட எதிர்பாராமல் அந்த பார்ஸலை எடுத்து பிரிக்க ஆரம்பித்தார்.

மகேஷ் திகைத்து நின்றான்.

‘எல்லோரும் இங்கே கூட்டம் போடாதீங்க.. அவங்கங்க ஸீட்டிலேயே உட்கார்ந்திருங்க.. மகேஷ் ஒவ்வொருததரிடமாக வந்து மாஸ்கை டிஸ்டிரிபூட் பண்ணுவார்..,’ என்றார் பெரியவர்.

‘மாஸ்க் எவ்வளவுங்க..?’

‘நாற்பது ரூபாய்..’ என்றான் மகேஷ்.

மகேஷ¤ம் பெரியவரும் ஒவ்வொருவரிடமாகச் சென்று மாஸ்கைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

‘கலிகாலம் ஐயா.. கலிகாலம்.. கலிகாலம் கடைசியிலே கல்கி பகவான் அவதரிப்பார்னோ… அவர் இந்த கொரோனா வைரஸ் ரூபத்துலே அவதரிச்சிருக்கார். அதுதான் இந்த உலகத்தையே ஆட்டிப் படைச்சிட்டிருக்கு..’ என்று கூறி சுற்றுமுற்றும் பார்த்தார் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு புரோகிதர்.

சாதாரண நேரமாக இருந்தால் அவர் கருத்தை ஆதரித்தும். எதிர்த்தும் வாதங்கள் எழுந்து அந்தப் பெட்டியே ஒரு களைகட்டி இருக்கும். ஆனால் அவர்கள் அப்போது இருந்த மூடில் அவர் சொன்னதையே யாரும் கவனிக்கவில்லை.

‘ஆனா கல்கி அவதாரத்தின்போது பிரளயம் வரும்னு சாஸ்த்திரத்தில் சொல்லி இருக்கே… இப்போ பிரளயம் ஒன்றும் வரலையே.. அதனாலே இது அவதாரமா இருக்காது’ என்று அவருக்கு அவரே எதிர் சமாதானம் சொல்லிக்
கொண்டார்.

‘ஐ ஆம் நாட் கோயிங் டு லீவ் திஸ்.. இர்ரெஸ்பான்ஸிபிள் ரயில்வே டிபார்ட்மென்ட்… டிரெயினில் ஏறறவங்களை கரெக்டா வைரஸ் இருக்கான்னு செக் பண்ணி அனுப்ப வேண்டாமா.. நான் பிரதமருக்கு ஒர் ட்வீட் அனுப்பப்போறேன்..’ என்று கத்திக் கொண்டிருந்தார் ஒரு கோட்ஸ¥ட் ஆசாமி.

‘தம்பி… முதல்லே ஒர் மாஸ்க் வாங்கி மாட்டிக்க.. அப்போதான் இந்த வைரஸ் உன்னைத் தொத்திக்காது.. ட்வீட் பண்ண நீ உயிரோடு இருக்கணும்லே..’ என்றார் ஒரு முண்டாசு கட்டிய பெரியவர்.

‘என்ன. இந்த மாஸ்க் பாக்கெட்டில் பெயரே இல்லையே. என்ன ப்ரான்ட் இது’ என்றாள் ஒரு ஸல்வார் கம்மீஸ்.

‘ ஏ.. நம்ம கிராமத்துக் காவல் தெய்வம் கருப்பண்ணசாமியே அனுப்பி வெச்ச மாதிரி இந்த தம்பி நம்மள காத்துக்கறதுக்காக இந்த முக மூடியைக் கொடுத்துட்டிருக்கு. நீ என்னடான்னா பிரான்ட் கிரான்ட்னு அதுலே நூறு குத்தம் கண்டு பிடிச்சுட்டு.. ஆத்திர அவசரத்துக்கு கிடைச்சதேன்னு சந்தோஷமா வாங்கி மாட்டிக்குவியா..’ என்று கண்டித்தாள் ஒரு கிராமத்துப் பாட்டி.

பெட்டியில் உள்ள எல்லோரும் அவசர அவசரமாக முகமூடியை மாட்டிக் கொண்டார்கள்.

டிரெயின் அடுத்த ஸ்டேஷனில் ஒரு பெருமூச்சோடு நின்றது.

சில பிரயாணிகள் அங்கே இறங்கினர். அந்தப் பெரியவரும், ரமேஷ¤ம், மகேஷ¤ம் இறங்கிக் கொண்டனர்.

‘ரமேஷ்.. உடனே போய் டாக்டர் கிட்டே செக் பண்ணிக்க.. ஆபத்பாந்தவன் மாதிரி வந்தே மகேஷ்.. ரொம்ப தாங்க்ஸ்..’ என்றார்கள் பயணிகள் ஒவ்வொருவரும்.
ரமேஷ் டிரெயினை விட்டு இறங்கியதும் அப்பெட்டியில் இருந்த பிரயாணிகளும் பெருமூச்சு விட்டனர் நிம்மதியாக. அவன் இறங்கியதும் வைரஸ் இந்த உலகத்தை விட்டே ஒழிந்து விட்டது போல அவர்களுக்குள் ஒரு உணர்வு

பெரியவரும், ரமேஷ¤ம், மகேஷ¤ம் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தனர்.

கடகடவென்று சிரித்தான் ரமேஷ். ‘மாமா.. நல்ல வேலை பண்ணினீங்க.. எனக்கு வந்த சாதாரண ஜலதோஷம், இருமலை வெச்சுட்டு.. கொரோனா வைரஸா இருக்குமோ என்று ஒரு சந்தேகத்தையும், பயத்தையும் கிளப்பி விட்டு மகேஷ¤க்கு நல்ல பிஸினஸ் வாங்கிக் கொடுத்துட்டீங்க…’

‘ஆமாம்.. மாமா.. இன்னிக்கு பூரா பார்மஸி பார்மஸியா ஏறி இறங்கினாலும் நான் எடுத்துட்டு வந்த ஸ்டாக் எல்லாம் தீர்ந்திருக்குமான்னு சந்தேகம்தான்..நீங்க ஒரேயடியா எல்லாத்தையும் வித்துக் கொடுத்துட்டீங்க.. ஆனா பாவம் அவங்களை ஏமாத்திட்டோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சிஎனக்குள் இருக்கு..’ என்றான் மகேஷ்.

‘இல்லை மகேஷ்.. இப்போ கொரோனா வைரஸ் எல்லா இடத்திலேயும் வேகமாப் பரவிட்டிருக்கு.. ரமேஷ¤க்கு இல்லாம இருக்கலாம்.. ஆனா அந்தப் பெட்டியில் உள்ள வேறே யாருக்காவது தொற்று இருந்திருக்கலாம். அப்போ எல்லோரும் தற்காப்பா முகமூடியோடு இருக்கிறது நல்லதுதானே.. நாம் அதைத் தானே செய்தோம். உணமையா இந்த வைரஸ் வேகமாக பரவிட்டிருக்கிற இந்த நிலையிலே அரசாங்கம் டிரெயின், பஸ் எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணனும். அதேமாதிரி ஜனங்கள் அதிகம் கூடுகிற மால்கள், தியேட்டர்கள், கோயில்கள் எல்லாவற்றையும் மூடிடணும் ‘ என்றார்.

மகேஷின் கைபேசி ‘க்ளிக்’ என்றது. ஏதோ மெஸேஜ்.. எடுத்துப் பார்த்தான்.

‘மாமா.. நீங்க சொன்னீங்க.. அரசாங்கம் செஞ்சுட்டாங்க நாளையிலிருந்து டிரெயின்கள், பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிச்சிருக்காங்க.. அதே மாதிரி மால்கள், கடைகள், திரை அரங்குகள், கோயில்கள் எல்லாவற்றையும் மூடி வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.’ என்றான்.

மூவரும் அவர்கள் ஊருக்குப் போவதற்காக பஸ்ஸைப் பிடிக்க பஸ் ஸ்டான்டை நோக்கி ஓடினார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.