அம்மா கை உணவு (26) – பொடியின் பெருமை- சதுர்புஜன்

பொடியின் பெருமை
Paruppu Podi for Rice in Tamil | Andhra Pappu Podi | How to make ...
ஒன்றுமில்லாவிட்டாலும் இங்கே பொடி இருக்குது!
ஒவ்வொன்றும் தனிச்சுவையாய்த்தான் இருக்குது!
சுடு சாதம் பிசைந்துவிட்டால் சுவை கூடுமே!
பொடி இருந்தால் போதும்_என்றன் பசி தீருமே!
கபகபன்னு பசியெடுத்தால் தேங்காய்ப் பொடி சாதம்!
அப்பளம் வடகம் கூட இருந்தால் சூப்பர் தானே!
பசியில்லை மந்தமென்றால் கறிவேப்பிலைப்பொடி சாதம்!
நல்லெண்ணெய் நிறைய விட்டு பிசைந்தடிக்கலாம்!
எள்ளுப்பொடி சாதமென்றால் கிளுகிளுப்பேறும்!
புதினாப்பொடி சாதமென்றால் புது ரத்த மூறும்!
பருப்புப் பொடி இருந்துவிட்டால் எதுவும் வேண்டாம்!
பசுநெய்விட்டு பிசைந்துவிட்டால் புகுந்து ஆடலாம்!
அங்காயப்பொடி என்ற ஒரு பொடி இருக்குது!
வயிறு கொஞ்சம் சரியில்லேன்னா அது மருந்தாகுது!
நாக்கு செத்துப்போச்சு தென்றால் நமக்கு பொடிபோலில்லை!
நாலுவிதப் பொடியிருந்தால் போதும் போதும்!
எத்தனையோ பொடி இருக்குது நம் வீட்டிலே!
எத்தனையோ ருசி இருக்குது நம்ம நாட்டிலே!
அம்மா செஞ்ச பொடி என்றால் அதில் அதிசயம் பாரு!
அன்பு அதில் கலந்திருக்கு_ அது அத்தனை ஜோரு!

 

பொழியட்டும் சார்வரி புத்தாண்டு!   – கோவை சங்கர்

தமிழ் புத்தாண்டு (@tamilputhandu) | Twitter

பட்டுவிட்டோம் பட்டுவிட்டோம் விகாரி வருடத்தில்

 உளம்நொந்து உடல்நொந்து கந்தலாய்ப் போய்விட்டோம்

எட்டாத   உயரத்தில்   நிற்கிறது   விலைவாசி

 வரவிற்குள்  செலவுகள்  அடங்காத  நிலைபேசி

திட்டங்கள்  பலகொண்டு  வருகிறது  அரசாங்கம்

 தடைபோட்டு  நிற்கின்றோம்  நம்மிலே  ஒருசாரார்

தொட்டதெற்கெலாம் கொடிபிடித்து அமைதியைக் குலைத்துவிட்டோம்

 வளர்கின்ற நாட்டினது வேகத்தைத் தடுத்துவிட்டோம்!

 

உலகையே ஆட்டிவரும் பொருளாதார மந்தநிலை

 நம்நாட்டைக் கசக்கியே  சக்கையாய்ப்  பிழிகிறது

ஆலைகள் உற்பத்தி படிப்படியாய்க் குறைகிறது

 வேலையில்லாத் திண்டாட்டம் கண்கூடாத் தெரிகிறது

உலகப்பொ ருளாதாரத் தேக்கத்தின் தாக்கம்

 நம்வாழ்க்கைத் தரத்திலே தெளிவாகப் புரிகிறது

சிலிர்ப்போடு வந்துள்ள கொரோனா வைரஸால்

 மக்களது வாழ்க்கையே தடம்புரண்டு நிற்கிறது!

 

இருளதுவும் விலகிடவே விடியலும் புலர்ந்திடவே

 ஜதிபோட்டு வருகின்றாள் சார்வரி  தேவியவள்

நீர்வளமும் நிலவளமும் தொழில்வளமும் செழிப்புற்று

 வாழ்க்கைத் தரமதுவும் படிப்படியா யுயர்ந்திடவே

பாரத   மக்கள்நீர்    ஜாதிமத    பேதமில்லை

 ஒருமித்து  வாழ்கவென  ஆசிகூற  வருகின்றாள்

பாரதனில்  முதலாக  பாரதமும்  வளம்பெறவே

 அன்போடும் மகிழ்வோடும் ஆசிபல கூறுகிறாள்!

 

பயிர்கள்  வளரட்டும்  தொழில்கள்  பெருகட்டும்

 நோயின்றி நொடியின்றி ஆரோக்கியம் மலரட்டும்

ஜாதிமத  பேதங்கள்  அடியோடு  ஒழியட்டும்

 உனக்குநான் எனக்குநீயென ஒற்றுமையும் துளிர்க்கட்டும்

எல்லாத்  துறைகளிலும்   முதலாக   நிற்கட்டும்

 நமக்குநிகர் நாமேயென பாரதமும் முழங்கட்டும்

இன்பமும்  மகிழ்ச்சியும்  கடல்போல்  பெருகிடவே

 பொன்மாரி பொழியட்டும்  சார்வரி  புத்தாண்டு!

மனிதன் நினைப்பதொன்று , இறைவன் நினைப்பதொன்று

வாட்ஸ் அப்பில் சில நல்  முத்துக்களும் இருக்கும் . அதற்கு இது ஓர் உதாரணம். 

 

Sri Math Bhagavad Gita

 

மனிதன் திட்டமிட்டதற்கு

இறைவன் அளித்திருக்கும்
இடைக்கால தீர்ப்பு.
இதோ
*மனிதன்*
ஏப்ரல் ஒன்று முதல் NPR கணக்கெடுப்பு என்று அறிவித்தது.
*கடவுள்*
இப்போதைக்கு NPR கிடையாது என்று அறிவித்தது.
*மனிதன்*
எப்பொழுதும் இல்லாமல் இப்போது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அறிவித்தது.
*கடவுள்*
ஒன்று முதல் ஒன்பது வரை ஆல்பாஸ் இப்போது.
*மனிதன்*
ஊதிய உயர்வு கேட்டு போராடிய மருத்துவர் செவிலியர்க்கு தீர்ப்பு – சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று சொன்னது.
*கடவுள்*
மருத்துவர், செவிலியர் நம்மை காக்கும் மனித தெய்வங்கள் என்று சொன்னது. மேலும் அவர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு ஊதியம் அறிவித்தது.
*மனிதன்*
இவர் அவரை தொட்டால் தீட்டு என்பது அன்று.
*கடவுள்*
இப்போது எவரை தொட்டாலும் உயிருக்கே வேட்டு என்பது இன்று.
*மனிதன்*
ஒழுக்கமே இல்லாமல் கடைகளில் முண்டி அடித்து பொருட்களை வாங்கியது அன்று.
*இறைவன்*
ஒரு மீட்டர் இடைவெளி  விட்டு வட்டத்துக்குள் நிற்க வைத்தது இன்று.
*மனிதன்*
பொது இடங்களில் எச்சிலைத் துப்பிக்கொண்டிருந்தது அன்று.
*கடவுள்*
பொது இடங்களில் வாயையே திறக்காமல் மாஸ்க் போட வைத்தது இன்று.
*கடவுள்*
செல்வாக்கைக் காட்ட ஊரைக்கூட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கல்யாணம் செய்தது அன்று.
*கடவுள்*
20 பேருக்கு மேல் இல்லாமல் எளிமையான வைபவத்தை சொல்லி கொடுத்தது இன்று.
*மனிதன்*
செத்தால் ஆயிரம் பேர் வர வேண்டும் என்று நினைத்தது அன்று.
*கடவுள்*
செத்தால் தூக்கி செல்ல நான்கு பேர் போதும் என்று சொல்லி கொடுத்தது இன்று.
*மனிதன்*
இறைவனை வழிபட கோவிலுக்கு செல்லாதவன் பாவி என்றான் அன்று
*கடவுள்*
இப்போது கோவிலுக்கு செல்பவனுக்கு அடி உதை என்றான் இன்று.
*மனிதன்*
தூய்மை செய்பவர்களை
‘துப்புறவு பணியாளர்கள்’ என்றனர் அன்று.
*கடவுள்*
தூய்மை செய்பவர்கள்
இனி ‘ தூய்மை பணியாளர்கள் ‘என்று அழைக்கப்படுவது இன்று.
*மனிதன்*
வீட்டிற்கே வராமல் இரவும் பகலும் உழைப்பவனை உழைப்பாளி என்றான் அன்று.
*கடவுள்*
21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது மட்டுமே உயிர் வாழ ஒரே வழி என்றான் இன்று.
*மனிதன்*
பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தவறல்ல என்றான் அன்று.
*கடவுள்*
பொதுத்துறை ஊழியர்களின் அயராத உழைப்பை தேசம் காண்கிறது என்றான் இன்று
*மனிதன்*
டாஸ்மார்கை பூட்டவே இயலாது என்றான் அன்று
*கடவுள்*
ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் பூட்டப்படும் என்றான் இன்று
இன்னும் எத்தனை எத்தனையோ பாடங்களை நமக்கு சொல்லி கொடுக்கும் ‘ கொரானா’ ஒரு வகையில் நமக்கு ‘ கடவுள்’ மாதிரி தான்.
இறைவனின்
இடைக்கால தீர்ப்பை
நாம் மதிக்காவிடில்
இறைவனின்
இறுதி தீர்ப்பு
எப்படி இருக்கும்
என்பதை
அவரவர்களே
யூகித்துக் கொள்ளுங்கள்.

தொலைவில் தொலைந்த விழுது – தில்லைவேந்தன்

முடி உதிர்வை தடுத்து, இளமையாக ...முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ...

 • தொலைவில் தொலைந்த விழுது
  தந்தையும் தாயும் தங்களின் துணையாய்த்
       தங்களை எண்ணித் தனிமையில் இருப்பர்.
  வந்திடும் நண்பர் உறவினர் தம்மை
       மகிழ்வுடன் கூடிப் பேசிட  அழைப்பர்.
  அந்தஅப் படத்தில் இருப்பதெம் மகனே
       ஆறிரு வயதில் என்றெலாம் சொல்லி
  முந்தைய  நினைவில் மூழ்கியே எடுக்கும்
       முத்தினைத்  தொடுத்துக் கண்களும் விடுக்கும்.
  மெல்லவே விடியும் ஒவ்வொரு நாளும்
       மெல்லவே நடக்கும், மெல்லவே முடியும்
  நல்லதோர் காப்பி, நாளிதழ் மற்றும்
       நயம்நிறை  இசையால் நகர்ந்திடும் பொழுது.
  கொல்லையில் மணக்கும் முல்லையும் மல்லியும்
       கொள்பவர் இன்றித் தவிக்குமே அழுது.
  தொல்லுயர்  ஆல   மரத்தினை  விட்டுத்
       தொலைவினில் ஊன்றித் தொலைந்தது விழுது.

மன மாற்றம் என்ன செய்கிறது !    – பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Change Of Mind Clipart

மன மாற்றமே

நான் என்னும் இறுமாப்பை

நாம் என்று மாற்றுகிறது!

மன மாற்றமே

சுயநலம் என்னும் சுகத்தை

பொதுநலமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

கோபம் என்னும் தீயை

குணமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

குறுகிய எண்ணங்களை

பரந்த உள்ளமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

வேகமான முடிவுகளை

விவேகமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

ஆணவச் செயல்களை

பணிவாக மாற்றுகிறது !

மன மாற்றமே

பதற்றம் பரிதவிப்புகளை  

நிதானமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

பயம் என்னும் அச்சத்தை     

துணிவாக மாற்றுகிறது!

மன மாற்றமே

ஆர்ப்பரிக்கும் செயல்களை

அமைதியாக மாற்றுகிறது!

மன மாற்றமே

அலைபாயும் மனங்களை

சமநிலைக்கு மாற்றுகிறது!

மன மாற்றமே

வாழ்வின் சிக்கல்களை

எளிமையாக மாற்றுகிறது!

மன மாற்றமே

மன அழுத்தங்களை

பஞ்சுபோல் எளிதாக்குகிறது!

மன மாற்றமே

மாசு படிந்த வாழ்வை

தூய்மையாக மாற்றுகிறது.!

மன மாற்றமே

ஆசைகளுக்கு அணைகட்டி

திருப்தியாக மாற்றுகிறது !

மன மாற்றமே

அன்பை பெறுவதிலிருந்து

அன்பாகவே மாற்றுகிறது!

மன மாற்றமே

மரணத்தைக் கூட

மறந்து ஏற்றுக்கொள்கிறது!

 

 

இம்மாதக் குரல் – வைகோவின் திருவாசக உரை

வை கோவிற்கும் திருவாசகத்திற்கும் எப்படி ஒரு முடிச்சு? 

அந்தக் குரல் – அந்தத் தமிழ் – அந்த விளக்கம் எல்லாம் பிரம்மிப்பை ஊட்டுகின்றன. 

கேட்டு ரசியுங்கள் ! 

 

இப்படிக்குக் கொரோனா – கு. சிந்தாமணி

Earth Planet In Medicine Mask Fight Against Corona Virus. Concept ...

அற்புதக் கவிதை-
(விவியன்- ஸ்பெயின்)
நிலமகள் உன் காதில் கிசுகிசுத்தாள் ; ஆனால்/
நீயோ காதில் போட்டுக் கொள்ளவில்லை.
நிலமகள் உன்னோடு உரையாடினாள்; ஆனால்/
நீயோ செவிசாய்க்கவில்லை.
நிலமகள் உரக்கக் கூச்சலிட்டாள்; ஆனால்/
நீயோ அவள் வாயடைத்தாய்.
அதனால்தான் நான் பிறப்பெடுத்தேன்…
உன்னைத் தண்டிக்க நான் உதிக்கவில்லை…
உன்னைத் துயில் எழுப்பவே நான் உதயங் கொண்டேன்…
பெருவெள்ளம் பெருக்கெடுத்தோட
நிலமகள் உதவிக் கரம் வேண்டிக் கரைந்தழுதாள். ஆனால்
நீயோ செவிடாகிப் போனாய்.
கொழுந்துவிட்டு எரிந்தது ஊழித்தீ. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
சுழன்றடிக்கும் சூறைக்காற்று. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
அச்சுறுத்தும் புயற்காற்று. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
கடல் விலங்குகள் நீர் மாசுக்களால் நித்தம் மரித்தன.
பனிப்பாறைகள் உருகி ஓடின அச்சுறுத்தும் வேகத்தில்,
கொடிய பஞ்சம்,
எனினும் நீ இன்னும் செவிசாய்க்கவில்லை.
நிலமகள் எத்தனை எதிர்மறைத் தாக்குதல்களை எதிர் கொண்டாள்;ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
இடைவிடா போர் ஓலங்கள்
இடைவிடாப் பேராசை
நீயோ தொடர்ந்து உன் வழியில் வாழ்வைத் தொடர்ந்தாய்…
பகைமை பன்மடங்காய்ப் படர்ந்த போதும் உனக்குக் கவலையில்லை,
கொலைகள் பல நித்தம் நிகழ்ந்த போதும் உனக்குக் கவலையில்லை,
அண்மையில் வெளிவந்த ஐ போன் வாங்குவதே உனக்கு அதிமுக்கியம்,
நிலமகள் உன்னிடம் என்ன சொல்ல எண்ணினால் என்ன?
ஆனால் இதோ நான் இங்கு இருக்கின்றேன்.
உலகைத் தன் வழித்தடங்களில் நில் என நிறுத்தி விட்டேன்.
இறுதியாக நீ என் குரலுக்குச் செவிசாய்க்கச் செய்துவிட்டேன்.
உன்னை அடைக்கலம் கொள்ளச் செய்துவிட்டேன்.
நீ உலகப் பொருட்களைப் பற்றிய சிந்தனைகளில் உழன்று கொண்டிருப்பதை நிறுத்தி விட்டேன்..
இப்போது நீயும் நிலமகளைப் போல, உன் ஒரே கவலை
உயிர் பிழைப்பதைப் பற்றி மட்டுமே.
இது எப்படி இருக்கு?
நிலம் தீயில் பற்றி எரிய.. நான் உனக்கு காய்ச்சல் தருகின்றேன்.
காற்றில் மாசுகள் நிறைந்திருக்க.. நான் உனக்கு மூச்சுத் திணறல் நோய்கள் தருகின்றேன்..
நிலம் நாளும் தன் வலிமை இழக்கை இழக்க இழக்க, நான் உன்னை வலிமை குன்றச் செய்கின்றேன்.
உன் சுகபோகங்களை நான் இழக்கச் செய்தேன்…
நீ வெளியில் சுதந்திரமாய் சுற்றித் திரிவதை..
நிலமென்னும் இக்கோளின் துன்பங்களை சற்றும் நினையாது
விஷய போகங்களில் மூழ்கிக் கிடந்தாய்
நான் உலகின் சுழற்சியை நிறுத்தினேன்…
இப்போது…
சீனாவில் காற்றின் தரம் மேம்பட்டிருக்கின்றது…
வானம் நிர்மலமாய் தெளிந்த நீல வண்ணத்தில் திளைக்கின்றது,
ஏனெனில் தொழிற்சாலைகள் காற்றில் மாசுகளைக் காறி உமிழவில்லை.
வெனிசில் நீர் தூய்மையாக உள்ளது,
ஏனெனில் நீரை மாசுபடுத்தும் கொண்டோலா படகுகள் பயனற்றுக் கிடக்கின்றன.
உன் வாழ்வில் எது இன்றியமையாதது என சிந்திக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ள கட்டாயம் நேர்ந்திருக்கின்றது.
மீண்டும் சொல்கின்றேன், உன்னைத் தண்டிக்க நான் இங்கே வரவில்லை,
உன்னைத் துயில் எழுப்பவே வந்திருக்கின்றேன்…
இவையெல்லாம் முடிந்து விட்டால், நான் இல்லாது போய்விடுவேன்…
இக்கணங்களை நினைவில் கொள்…
நிலமகளின் குரலுக்கு காது கொடு.
உன் ஆன்மாவின் குரலுக்கு செவிசாய்.
நிலத்தை மாசுபடுத்துவதை நிறுத்து.
ஒருவரோடு ஒருவர் போரிடுவதை நிறுத்து.
உலகப் பொருட்களில் மனம் உழல்வதை நிறுத்து.
அண்டை வீட்டாரை நேசிக்க ஆரம்பி.
உலகையும், அதன் உயிரினங்களையும் பற்றிக் கருதத் தொடங்கு.
படைப்பவனை நம்பத் தொடங்கு.
ஏனென்றால்,
மறுமுறை இன்னும் உக்கிரமாய் உதயம் கொள்வேன்
இப்படிக்கு,
கொரோனா நோய்த்தொற்று. 

உலகினை அடக்கிய நோய்த்தொற்று – சுரேஷ் ராஜகோபால்

( படம் நன்றி: வாட்ஸ் அப் ) 

மொய்த்திடும் கிருமியால்
மெய்யும் பொய்யாச்சு!
ஆறறிவு வீணாச்சு!
பேரருள் தேடி
அலையும் பேதை மனம்!
சிறைதனில் வாடல்
நமக்குத்தான்!
இயற்கை கொஞ்சமும்
தந்நிலை மாறவில்லை !
நமது கண்டுபிடிப்பால்
விளைந்தது நாசம்!

ஜனன மகிழ்வில்லை
மரண ஓலமில்லை
சிறைதனில் அடைபட்ட
உயிரினம் நாம்!
நமக்கு நாமே
சிறை கண்டோம்!
நெஞ்சமும் சிறையாச்சு
கொஞ்சமும் பாதிப்பு
குறையவில்லை ஏன்?
புலப்படாத புதிர்!

சிறையில் இருக்கும்
மிருகங்கள் கைதட்டி
சிரிக்கும் நேரமிது!
நமைப் பார்த்து
இது உனக்கு தேவையா
எனக்கேட்கும் நேரமிது!
புரிந்துநடந்தால்
உலகம் தப்பும்!
இதே தப்பை
திரும்பச் செய்தால்
உய்வில்லை உனக்கு!

மானங்கெட்ட மனிதா!
மதிக்கக் கற்றுக்கொள் !
இல்லையேல் மிதிபடுவாய்
கண்ணுக்கு தெரியாத இனத்தால்

!

வாழு வாழவிடு!
உன்கையில் உலகம்
தன்னையே கொடுத்தது!
நம்பிக்கைத் துரோகம்
செய்த இனமே
உன்னைப் புனிதனாக்கு!
உன் பாவத்தால்
பாவம் ஒன்றும்
அறியாத அப்பாவிகள்
பாவிகள் ஆகிவிட்டனர்
ஏனிந்த கொலைவெறி?

புரிந்து மாறிவிடு
இல்லையேல் மாண்டிடுவாய்
கொத்து கொத்தாக!
இயற்கை தன்னை
சுத்தம்செய்யும் நேரமிது,
வேடிக்கை பார்!
தன்னைக் காத்திட
இயற்கைக்குத் தெரியும்
உணர்ந்து திருந்திடு !
இல்லையேல்
மறந்திடு உன் உயிரை.

இம்மாத திரைக்கவிதை – மலர்ந்தும் மலாராத

Swami's Indology Blog: கண்ணதாசனின் ...

மலர்ந்தும் மலராத  – இந்த சொற்றொடர் நம்மைப் பாசமலராக்கி கண்களில் கண்ணீரைக் கொட்டும் காவியத்தை நினைவுறுத்தும் .  

இந்தப் பாடல் காலத்தை வென்ற பாடல் !

 

படம்: பாசமலர் 

பாடல்: கண்ணதாசன் 

பாடியவர்கள்: டி எம் சவுந்தரராஜன் சுசீலா 

இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  

 

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த 
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 • கொரோனா வைரஸ் !

  Corona: Caught in corona crossfire: How the current crisis has ...

  இருபத்தெட்டு நாட்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் பட்டேன் – கனடாவிலிருந்து சென்னை வந்து, படியேறிய பெருமாளாக நான்கு வார வீட்டு வாசம் – இன்னும் படியிறங்கி உலகைப் பார்க்கவில்லை. கொரோனா வைரஸுக்கு நன்றி சொல்வதா தெரியவில்லை – ஆனால் பலர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை வரவேற்று (மாசு கட்டுப்பாடு ) கொரோனா வைரஸுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். முகநூல், வாட்ஸ் ஆப், டிவிட்டர் என எல்லா இடங்களிலும், ஏராளமான செய்திகள் – சில ஆதாரபூர்வமாகவும், பல ‘சும்மா’ மனதிற்கு பட்டதை எழுதியதாகவும் – குவிந்த வண்ணம் உள்ளன. தொலைக் காட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம் – செய்திகள் என்ற பெயரில் உண்மைகளைக் கூட மக்களை அச்சப்பட வைக்கும் வகையில், அரசியல் கலப்புடன் பேசுகின்றன. 

  எனக்குத் தெரிந்த வரையில் இந்தக் கொரோனா தொற்று பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதலில், இந்த வைரஸ் ஒரு செல்லை எப்படி அழித்து, அதனுள்ளேயே க்ளோன் போல பலவாக மல்டிப்ளை ஆகிறது என்பதைப் பார்ப்போம்!

  கொரோனா வைரஸ் – பல முட்கள் உள்ள கிரீடம் போன்ற (சப்பாத்திக் கள்ளி காய் போல்) வடிவுடையது. RNA வைரஸ், 30 kb அளவுடையது. ஒரு செல்லுக்குள் புகுந்து விட்டால், 4 – 5 முறை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் சக்தியுடையது. முதலில், வைரஸின் முள் அல்லது ஸ்பைக் புரதம், திசுக்களின் செல் சுவற்றில் உள்ள ரிசெப்டாரில் ஒட்டிக்கொள்ளும்! எஸ் புரதம் (S protein) புகுந்த செல்லுக்குள் மாற்றங்களைச் செய்து, செல்லை செயலிழக்கச் செய்யும். இவற்றைத் தவிர E புரதம் (Envelop protein), M புரதம் (Membrane protein – வைரஸின் வடிவை செல்லுக்குள் பாதுகாப்பது) ஆகியவையும் செல்லின் அழிவுக்கும், உள்ளேயே ஒரு வைரஸ் பல வைரஸ்களாக பெருகிடவும் உதவுகின்றன. செல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் Type 1 interferon என்னும் புரதத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுப்பதுவும் இந்த வைரஸ் புரதங்களே! நுரையீரல் செல்களை அழிக்கத் தொடங்கினால், அதுவே மூச்சுமுட்டல், நிலைக்குப் போகும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறது – நல்லவேளையாக, இது அரிதாகவே நடக்கிறது என்பது நல்ல செய்தி!

  சுவாசம் சம்பந்தப் பட்ட – மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், ப்ராங்கியோல், நுரையீரல் – உறுப்புகளையே முதன்மையாக இவை தாக்குகின்றன (Respiratory viruses).  முதன் முதலில் மனிதர்களில் கொரோனா வைரஸ் 1995 ல் கண்டுபிடிக்கப் பட்டது. (பறவைகள், விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உண்டு!).  பீட்டா கொரோனா வைரஸ் வகையில் HCOV NL 36, HCOV – HKU 1, MERS COV ஆகிய மூன்றும் மனிதர்களைத் தொற்றுவதாய்க் கண்டுபிடித்துள்ளனர்.  சாதாரணமாய் வரக்கூடிய – சீசனல் URI – ஜலதோஷம், தொண்டைவலி, காது வலி ஆகியவையும், வயாதானவர்கள், பிறந்த குழந்தைகள், எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் ஆகியோருக்கு, இவை நுரையீரலைத் தாக்கும் வாய்ப்புகள் – Lower Respiratory tract Infection –  அதிகம். 

  2002 ல் சீனாவில் SARS COV (Severe Acute Respiratory Syndrome) வைரஸ் தொற்றால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. வெளவாலில் இருந்து மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறப்பட்டது – உலகில் 30 நாடுகளில் (பேண்டமிக்) எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப் பட்டதாகவும், இதில் சுமார் 10% (800) பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப் பட்டது. 

  (Pandemic – உலகின் பல நாடுகளிலும் ஒரே சமயத்தில் பரவிடும் தொற்று; Epidemic – ஓரிடத்தில் திடீரெனப் பரவிவிடும் தொற்று (ஒரு நாடு, ஒரு மாகாணம் என்பது போல்); Endemic – ஒரு வியாதி ஓரிடத்தில் மிகப் பரவலாக எப்போதும் இருப்பது (மலேரியா – பிரெசில், ஆப்பிரிக்கா, ஆசியா).

  2012ல் MERS COV (Middle East Respiratory Syndrome Cov) என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது – வாந்தி, பேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதயம் மற்றும் மூளை சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் இந்தத் தொற்றால் வந்தன.

  மேற்சொன்ன இரண்டு வைரஸ்களின் குழுமத்திலிருந்து தற்போதைய கொரோனா வைரஸ் புது அவதாரம் எடுத்து வந்திருக்கலாம் – ஜெனிடிக் கோடிங் வித்தியாசமாக இருப்பதால், வீச்சும், வீரியமும் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

  இதுபோன்றே Rhino virus, Respiratory Syncytial virus (RSV), Measles virus (மணல்வாரி அம்மை), Influenza A,B,C virus,  போன்றவையும் சுவாசம் சம்பந்தமான தொற்றுகளே – ஆனால் இவை கொரோனாவைப் போல அவ்வளவு வேகமாகப் பரவுவதோ, உயிருக்கு ஆபத்தான சுவாசப் பிரச்சனைகளை உருவாக்குவதோ இல்லை!

  கொரோனா வைரஸ் (COVID-19) அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, சுவாச உறுப்புகளைப் பாதிக்கின்ற, கிரீடம் போன்ற அமைப்புடைய வைரஸ். டிசம்பர் 2019 ல் சீனாவின் ஊஹன் (Wuhan) ல் முதன் முதலில் தொடங்கியது. எதிலிருந்து என்பது தெரியவில்லை – பூனை போன்ற பண்ணை விலங்குகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

  சில உண்மைகள்:

  1. இந்தத் தொற்று உள்ளவர்களின் தும்மல், இருமல் மூலம் வைரஸ் பரவுகிறது. காற்றில் பரவாது. வைரஸ் கனமானது, அதனால் காற்றில் பரவாமல், தரையிலோ, சளித் துளிகள் விழுகின்ற இடங்களிலோ விழுந்து விடும். அதனால், இந்தத் தொற்று உள்ளவர்களிடம் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி இருந்தால் நேரடியாக சுவாசம் மூலம் தொற்றுவது தவிர்க்கப் படும். வைரஸுடன் விழுந்துள்ள சளித் துளிகள் – தரை, ஜன்னல், கதவு கிரில்கள், மேஜை, நாற்காலி, கார்க் கதவின் கைப்பிடி – நம் கையில் பட்டு, நாம் முகத்தைத் தொடும்போது, முகம், மூக்கு, கண் என வைரஸ் தொற்றி, சுவாச உறுப்புகளுக்குள் போகும் அபாயம் அதிகம். எனவேதான், எதைத் தொட்டாலும், கைகளை சோப்பு அல்ல்து சானிடைசர் போட்டு கழுவுவது – 20 – 40 நொடிகள் – முக்கியம். கூடுமானவரை, முகத்தைக் கைகளினால் தொடாமல் இருப்பது நல்லது – பிறர் முகத்தையும்!
  2. கீழே விழுந்த வைரஸ் சில மணிகள் முதல் சில நாட்கள் வரை தொற்றக் கூடும். விழுந்த இடம், தட்ப வெப்ப நிலை பொருத்து, இது மாறுபடும். சந்தேகமாக இருந்தால், கிரிமி நாசினி கொண்டு தரை, மற்ற இடங்களைத் துடைத்துவிடலாம். கைகளைக் கழுவுவதும், முகத்தை கையயால் தொடாமல் இருப்பதுவும் நல்லது.
  3. மனிதர்களுக்கிடையே பரவும் தொற்று வீட்டு ‘பெட்’ மிருகங்களுக்குப் பரவுமா என்று தெரியவில்லை. அவைகளையும் தனிமைப் படுத்துவது நல்லது.
  4. கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து, சிம்டம் முதலில் வரும் வரையான கால அவகாசம் 1 -14 நாட்கள். பொதுவாக 5 -6 நாட்களில் தெரிந்துவிடும். ஆனாலும், இந்த இடைவெளி மாறக் கூடியது என்பதால் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை, தனிமைப் படுத்துதல் அவசியமாகிறது. நோய்த் தொற்று அதிகமாக உள்ள இடங்களிலிருந்து வருபவர்கள், கொரோனா தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், இருமல், தும்மல், ஜுரம் இவற்றுடன் தொற்று அதிகம் உள்ள இடத்திலிருந்து வருபவர்கள் ஆகியோர் தனிமைப் படித்தப் படுவர் – 28 நாட்களுக்கு. “தனிமைப் படுத்துவது, ஒருவருக்கு வியாதி இருப்பதாக அர்த்தம் இல்லை. ஒருவேளை இருந்தால், அவருக்கும், பிறருக்கும் நல்லது – வியாதி பரவுவது தவிக்கப் படும் என்பதால் தான்!
  5. மாஸ்க் – மூக்கு, வாய், தாடை ஆகியவற்றை நன்றாகக் ‘கவர்’ செய்வது அவசியம். மருத்துவ மனை, கொரோனா பாஸிடிவ் ஆன பேஷண்ட்ஸ், பொது இடங்களில் வேலை செய்பவர்கள் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும். சிறு பொத்தல்கள், கிழிசல் இல்லாத மாஸ்குகள் அவசியம். உபயோகித்த பின், மிகவும் கவனமாக, மூடிய குப்பைத் தொட்டியில் போடவும். கையில், முகத்தில் படாமல் கழற்றவும். பின்னர் கையை சோப்பு போட்டு நன்றாகக் கழுவவும். 
  6. தேவையில்லாமல் மாஸ்க் அணிவதைத் தவிர்க்கவும் – அடிக்கடி கை கழுவுவது, இருமல், தும்மல் வரும்போது, டிஷ்யூ பேப்பர் அல்லது கையினால் (மடக்கிய முழங்கையினால்) வாய், மூக்கை மூடிக்கொள்வது, இருமல், தும்மல் உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளே போதுமானது. 
  7. எல்லா வைரல் காய்ச்சல்களைப் போலத் தான் – இருமல், தும்மல், காய்ச்சல், உடம்பு அசதி, வலி என்று வரும் – பொதுவாகவே மிகவும் குறைவான அளவில்தான் பாதிப்பு இருக்கும். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்குத் தானாகவே சரியாகிவிடும் என்பதுதான் உண்மை. சிலருக்கு வாந்து பேதியும் இருக்கலாம். வயதானவர்கள், கைக் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாயுள்ளவர்கள் (ஸ்டீராய்ட், கேன்சர் மருந்துகள் எடுத்துக் கொள்கிறவர்கள்) போன்றவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியவர்கள் 2% – 3% இருக்கலாம். வயதானவர்கள், டயபெடிஸ், இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், தங்கள் மருந்துகளை ஒழுங்காக எடுத்துக்கொள்வது அவசியம்.
  8. சிலருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், சிம்டம் ஏதுமின்றி வலம் வருவார்கள் – அவர்களால் மீதி பேருக்குப் பரவும் வாய்ப்பு குறைவு. ஆனாலும், மிகக் குறைவான இருமல், தும்மல் இருப்பவர்களால், பரவும் வாய்ப்பு இருப்பதாலே, பொது அடைப்பு அவசியமாகிறது. எல்லோருக்கும் டெஸ்ட் செய்வது என்பது முடியாது – எனவே அவரவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளுதலே சிறந்த முறையாகும். வருமுன் காப்பதுதானே நல்லது?
  9. கூடிய வரையில் வெளியில் போவதைத் தவிர்க்கவும். அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும், முழு பாதுகாப்புடன் தனியே சென்று வரவும். கூட்டமான இடங்களை நிச்சயமாகத் தவிர்க்கவும்.
  10. வைரஸுக்கு இன்று வரை மருந்தில்லை – சில வைரஸ் களுக்கு – எச் ஐ வி, ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் – இருக்கும் மருந்துகளை முயற்சிக்கிறார்கள். சிறிது காலத்தில் வாக்சின் வரலாம் – பொதுவான சப்போர்டிவ் சிகிச்சையும், பாக்டீரியல் தொற்றைச் சமாளிக்க ஆண்டிபயாடிக்குகளும், மூச்சு முட்டலுக்கான சிகிச்சைகளும் ( ஆக்ஸிஜன், சில மருந்துகள், வெண்டிலேட்டர் சப்போர்ட்) மருத்துவ மனைகளில் அளிக்கப் ப்டுகின்றன. அதையும் மீறி உயிரிழப்பு என்பது 2% க்கும் குறைவுதான். மற்றபடி, ஹைட்ராக்ஸி க்ளோரோகுவின்(மலேரியாவுக்கு கொடுக்கப்படுவது), ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், பிசிஜி வாக்சின் போன்றவைகளின் உபயோகங்களுக்கு, ஆதாரபூர்வமான தரவுகள் இல்லை. மற்ற சிகிச்சை முறைகள்,  மஞ்சள், வேப்பிலை போன்றவற்றின் உபயோகங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கிரிமி நாசினிகளின் (சோப்பும் இதில் அடக்கம்) உபயோகம் மிகவும் முக்கியமானது. ஆல்கஹால் உள்ள சானிடைசர்கள் கொரோனா வைரஸின் கொழுப்பு சுவற்றை (லிபிட் கோடிங்) அழிக்கும் வாய்ப்பிருப்பதால் உபயோகிக்கலாம். 
  11. கொரோனா வந்து சரியானவர்களின் ‘பிளாஸ்மா’ வை  (இரத்தத்தில் இருந்து சிவப்பு, வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகளை பிரித்தெடுத்த பின் மிஞ்சுவது) மிகவும் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்குக் கொடுக்கிறார்கள் – அதில் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ (எதிர்ப்புச் சக்தி கொண்ட புரதம்) இருப்பதால், நோய்த் தொற்று குறைக்கப்படும்.
  12. இந்த தொற்றினாலும், அது பற்றிய செய்திகளாலும், நீண்ட கால ஊரடங்கு நிலையாலும் ஏற்படும் மன அழுத்தத்திற்கு, கவுன்சலிங் தேவைப் படும். மக்களை பீதி அடையும் வகையில் பரப்பப்படும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்துவது அவசியமே!   

  மருத்துவ மனைகளில் பின்பற்ற வேண்டியவை பற்றி  நான் குறிப்பிட வில்லை – அதற்கென்று சில தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன.

  இப்போதைக்கு, தனித்திருத்தலும், கைகளைக் கழுவுவதும், முகத்தில் கை வைக்காமல் இருப்பதுவும், கூட்டங்களைத் தவிர்ப்பதுவும் நம்மை கொரோனாவிலிருந்து காக்கும். நாளடைவில் சமூகத்தின் எதிர்ப்பு சக்தி கூடுவதும், கொரோனா வைரஸின் வீரியம் குறைவதுமே இதிலிருந்து விடுதலை கிடைக்கும் வாய்ப்புகளாகும்.  இதைவிட மோசமான உலகம் தழுவிய நோய்த் தொற்றுகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம் – இதிலிருந்தும் மீண்டு வருவோம்.