இந்தியாவில் செல்வம் கொழிக்கும் நகர்களில் அகமதாபாத்திற்குத் தனி இடம் உண்டு.
லக்ஷ்மி வாசம் செய்யும் ஊர் என்று சொல்வார்கள் !
அதற்குப் பின்னால் ஒரு கர்ண பரம்பரை கதை உள்ளது.
அகமதாபாத்தின் பத்ரா கோட்டை காளி கோவிலில் ஒரு முஸ்லீம் குடும்பம் கடந்த 600 வருடங்களாக ஒரு அணையா விளக்கை – அகண்ட ஜோதியைத் தொடர்ந்து எரியச் செய்து வருகிறார்கள்.
இந்த இரண்டிற்கும் ஒரே காரணம்.
அதுதான் இது.
1415 இல் அகமதாபாத்தை ஆண்டு வந்தவர் அகமத் ஷா !
அவரது காவல் தலைவன் கொத்தவால் கிவாஜா சித்திக்கி என்பவன். அரபு நாட்டிலிருந்து இந்திய நாட்டுக்கு அடிமையாக வந்து தன் திறமையால் காவல் தலைவன் பதவியை அடைந்தவன்.
ஒருநாள் இரவில் சித்திக்கி அகமதாபாத் பத்ரா கோட்டையில் காவல் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தான்.
அப்போது அந்த நள்ளிரவில் சர்வ அலங்கார பூஷிதையாக ஓர் அழகுத் தேவதை கோட்டையைவிட்டு வெளியேறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
“யார் அவள், அனுமதியில்லாமல் கோட்டையைவிட்டு வெளியேறுவது ?” என்று அருகில் சென்று பார்த்தான்.
பார்த்ததும் புரிந்துகொண்டான்.
அந்த அழகுத் தெய்வம் வேறு யாருமல்ல !
ஸ்ரீதேவி , மகாலக்ஷ்மி என்றெல்லாம் துதிக்கப்படும் லக்ஷ்மிதேவி !
” அடடா! நாட்டிற்கு ஏன் இந்த சோதனை! செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால் நாட்டின் செழுமையும் வளமையும் என்னாவது? லக்ஷ்மி தேவி செல்வதை எப்படியாவது தடுக்கவேண்டும்.” என்றெல்லாம் நாட்டுப் பற்று கொண்ட சித்திக்கி யோசிக்க ஆரம்பித்தான்.
” லக்ஷ்மி தேவி போவது என்று தீர்மானித்துவிட்டாள் என்றால் அந்தத் தெய்வத்தைத் தன்னால் என்ன மன்னனாலும் தடுத்து நிறுத்த முடியாதே” என்று கலங்கினான் அந்த காவல் தலைவன்.
வேறு வழியில்லை. தேவியிடமே சரண் அடைவதுதான் வழி என்று உணர்ந்துகொண்டு லக்ஷ்மி தேவியிடம் மன்றாடிப் பார்த்தான்.
தேவி அவன் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. அந்த நாடு செல்வத்திமிரில் இருக்கிறது. அதை ஒழிக்கத் தான் அங்கிருந்து செல்லவேண்டியது அவசியம் என்று உறுதியாகக் கூறினாள்.
கடைசியில்,” தாயே ! ஒரே ஒரு வேண்டுகோள். நான் சாதாரண பணியாள்தான். லக்ஷ்மி தேவி போவதை அனுமதித்த காவல் வீரனின் தலையை மன்னன் துண்டித்துவிடுவார். ஆகையால் தான் மன்னனிடம் சென்று விஷயத்தைக்கூறி அவர் அனுமதி பெற்றுத் தான் திரும்பும் வரை தேவி இந்த இடத்திலேயே இருக்கவேண்டும். கோட்டையைத் தாண்டிச் செல்லக்கூடாது ” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான் சித்திக்கி.
லக்ஷ்மி தேவி காவலனின் கடமை உணர்ச்சியைப் பாராட்டி அவன் திரும்பிவரும் வரை அங்கேயே இருப்பதாக வாக்களித்தாள்.
சித்திக்கி மன்னனிடம் விரைந்து சென்று விஷயத்தைக் கூறினான். மன்னன் மிக மனக்கவலை அடைந்தான்.
சித்திக்கி மேலும் சொன்னான். ” மன்னரே! லக்ஷ்மி தேவி நம் நாட்டை விட்டுப் போகாதபடி ஏற்பாடு செய்துவிட்டேன்” என்று கூறினான்.
“அது எப்படி சாத்தியமாகும் ? ” என்று மன்னன் வினவினான்.
” நான் திரும்பிச் சென்றால் தானே லக்ஷ்மிதேவி இந்த நகரை விட்டுச் செல்வார்கள் ?” என்று கூறி தன் வாளால் தன் தலையை மன்னன் முன் அறுத்து எறிந்தான்.
மன்னனும் மற்றோரும் துடிதுடித்துப் போய்விட்டனர்.
மன்னன் பத்ரா கோட்டைக்குச் சென்று லக்ஷ்மி தேவியிடம் காலில் விழுந்து விஷயத்தைக் கூறினான்.
சொன்ன வாக்கைக் காப்பாற்றவும் சித்திக்கியின் தியாகம் வீணாகப் போகக்கூடாது என்பதற்காகவும் லக்ஷ்மி தேவி அகமதாபாத்திலேயே இருப்பதாக உறுதி கூறினாள்.
அதனால்தான் இன்னும் அகமதாபாத்தில் செல்வம் கொழிக்கிறதோ என்னவோ?
அந்த பத்ரா கோட்டையில்தான் லக்ஷ்மி தேவி பத்ரகாளி என்ற பெயரில் இன்றும் வாசம் செய்கிறாள்.
சித்திக்கியின் நினைவாக அவனுடைய சமாதியும் கோவில் அருகேயே இருக்கிறது. அவன் நினைவாக அந்தக் கோவிலில் அந்த அகண்ட ஜோதியைத் தொடர்ந்து எரியவைத்து 600 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்து வருகிறார்கள்.
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு இதைப்போல் நிறைய நம்பிக்கைகள் நம்நாட்டில் உண்டு.