இன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்

பிரபஞ்சன்

பிரபஞ்சனின் “காகித மனிதர்கள்”

மானுடம் வெல்லும்”, “வானம் வசப்படும்” என்னும்  நேர்மறை எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தலைப்புகளில் சரித்திர நாவல்கள் எழுதியவர்.

சிறந்த சிறுகதை  பட்டியல் எல்லாவற்றிலும் இவரது  “மரி என்கிற ஆட்டுக்குட்டி”  இடம் பெறுவதைப் பார்த்திருப்பீர்கள்.

சாகித்ய அகதமி விருது உட்பட பல்வேறு விருதுகள்  பெற்றவர். தொலைக்காட்சியில் சிறப்பான புத்தக அறிமுக தொடர்நிகழ்வினை அளித்தவர்.

சிறந்த விமரிசகர்.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கத்  தொடர்ந்து முயற்சிகள் செய்தவர்.

வழக்கமான மன்னர்களின் கதையாக இல்லாமல்,    மக்களின் மற்றும்  ஊரின் கதையாகப் படைக்கப்பட்ட வரலாற்று நூலான ‘வானம் வசப்படும்’ முன்னுரையில்   ‘தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!’ என்று சொல்லியிருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி .

தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்திய விமர்சனக் கூட்டத்தில் அதுபற்றிக் குறிப்பிடும்போது  “அப்போது எழுதிவிட்டேன். இன்றைய மனமுதிர்ச்சி அன்றிருந்திருந்தால்   அப்படி எழுதியிருக்க மாட்டேன்.” என்று குறிப்பிட்டதையும் சேர்த்துத்தான் சொல்லவேண்டும்.

முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த பிரபஞ்சன் புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்த மனிதர்.

2018 டிசம்பர் மாதம் மறைந்த பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செய்யப்பட்டு,  21 குண்டுகள் முழங்க அரசு மரியாதைகளுடன்  தகனம் செய்யப்பட்டது.

* * * *

இவருடைய பாதுகைகள் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது

இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பதுபோல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக் கொள்ளலாம் போன்ற பளபளப்பு. வாசலில் காய்ந்த வெயில் வெளிச்சம் பட்டுக் கறுப்பு மின்னல் மாதிரி அவை ஒளிர்ந்தன.

பொன்னுத்தம்பி  சட்டம் படித்துவிட்டு ஒரு வழக்கறிஞராகப் புதுச்சேரியில்  நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த  இளைஞன்.  அவனது முக்கியமான கனவுகளில் ஒன்று வழக்காடும் பிரஞ்சுக்காரர்கள் போலவே ‘மொடமொட’ வென்ற கால்சராய் மற்றும் சப்பாத்தும் (shoe) அணிந்து கொண்டு  நீதிமன்றம் செல்லவேண்டும் என்பது.

அதற்காகவே  பிரெஞ்சுக்காரர்களுக்கு  சப்பாத்து   செய்துதரும் மாடன் என்கிற ஒரு தொழிலாளியிடம் ஆசை ஆசையாக ஒரு ஜோடி  சப்பாத்து செய்து கொண்டான்.  அதிகமான விலை கொடுக்க வேண்டியிருந்தது.  துரைகளைப் போல அணிய வேண்டும் என்றால் துரைகள் கொடுக்கும்  கூலியையும் கொடுக்க வேண்டியது அவசியம்தானே.

கால்சராய்  மடிப்பு பழுதுபடாமல் அந்தக் காலணிகளை அணிந்துகொண்டான்.

மேலே படிந்திருந்த தூசை, அவற்றுக்கு நோகாமல் தட்டிச் சுத்தம் செய்தான். ஒவ்வொன்றிலும் காலை நுழைத்துக் கயிற்றால் இழுத்துக் கட்டிக் கொண்டான். வளர்ப்பு நாய்க்குட்டி காலைக் கவ்வியது மாதிரி சப்பாத்துகளும் கவ்விக் கொண்டன. நாலடி நடந்தான்.

திண்ணையில் அமர்ந்திருந்த அவருடைய தகப்பனார் மகனைப் பார்த்து எழுந்து நின்றார். அரை நூற்றாண்டுகளாக வெள்ளைக்காரர்களின்  ‘பட்லர்’ ஆக இருந்து  வெள்ளை நிறத்தைக் காணும் தோறும் குனிந்து குனிந்து வணங்கி கூன்போட்ட முதுகு அவருடையது.

பத்ரம்பா, பத்திரம்! துரைகளோடு வாழ்க்கை நடத்தறது பேயோட சம்சாரம் பண்ணற மாதிரி. எப்போ மரம் ஏறும் எப்போது இறங்கும்னே கண்டுபிடிக்க முடியாது. கும்பிட்டு வாழனும். கும்பிட்டவன் கூழ் குடிப்பான். வம்பிட்டவன் வைக்கோல் தின்பான்னு பெரியவங்க சொல்லுவாங்க.“

வழக்கம் போல அந்த உபதேசங்களைப்  புறக்கணித்துவிட்டு இன்று நீதிமன்றத்திற்கு நடந்தே போவது என்று முடிவு செய்தான்.  காலில் அணிந்திருந்த பாதுகைகள் அவனை நட நட என்று ஊக்குவித்ததுபோல அவனுக்குத் தோன்றியது. வினோதமான ஒலி எழுப்பிய சப்பாத்துக்கள் தெருவில் உள்ளோர் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தது

காலணிகள் செய்கிற சத்தம்   திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை எழுந்து  நிற்கச் செய்தது. பலருக்கு  பொன்னுத்தம்பியைத்  தெரிந்திருக்காது.  ஆனால் உத்தியோகஸ்தர்கள் அணியும் காலணிகளை அணிந்து  வருபவன்  பெரிய உத்தியோகஸ்தராகத்தானே இருக்க வேண்டும். நிற்பதன் மூலம் அந்த உத்தியோகஸ்தனுக்கு தங்கள்  மரியாதையைத் தெரியப்படுத்திக் கொண்டார்கள்.

பொன்னுத்தம்பி உள்ளே செல்லும் பொது  கணம் நீதிபதி  ஆசனத்தில் இருந்தார் மற்ற வழக்கறிஞர்களும் அரசு வழக்கறிஞர் வந்து விட்டிருந்தார்கள்.

புதிய  காலணிகள் அணிந்த பொன்னுத்தம்பி “வணக்கம் கணம் நீதிபதி அவர்களே” என்று  பணிவாக  பிரஞ்சு மொழியில் கூறினான்.

நீதிபதியின் பார்வை இவன் அணிந்திருந்த சப்பாத்துகளின்மேல் விழுந்தது. கண்கள் சிவக்க காலில் அணிந்திருப்பது சப்பாத்து தானே என்று கேட்டார் ஆம் என்று   மறுமொழி கொடுத்தான் தம்பி.

மறுப்புக்கு உரிய அடையாளமாக, நீதிபதியின் தலை அசைந்தது. “தங்கள் நடத்தைக்கு நான் வருந்துகிறேன். மிஸ்யோ பொன்னுத்தம்பி பிள்ளை! என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வருவதை நான் ஆட்சேபிக்கிறேன்.“

அங்கிருக்கும் அனைவரின் கால்களை பார்க்கிறான்  பொன்னுத்தம்பி. நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்,  ஐரோப்பியர் அல்லாத வழக்கறிஞர்களைத் தவிர,  சப்பாத்து  தான் அணிந்திருந்தார்.

நீதிபதியும் பல்வேறு வழக்கறிஞர்களும் சப்பாத்து அணிந்திருக்கும்போது தனக்கு அது தடை செய்யப்படுவது விளங்கவில்லை என்று பணிவோடு ஆனால் உறுதியோடு முறையிட்டான் தம்பி.

இந்தியனான  பொன்னுத்தம்பி  இந்தியப் பழக்க வழக்கங்களையே கடைப்பிடிக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுவதாகச்  சொன்னார் நீதிபதி.

வழக்கறிஞர்கள் என்ன உடை உடுத்த வேண்டுமோ அந்த மரபுப்படி நான் உடுத்தியிருக்கிறேன். ஐரோப்பிய வழக்கறிஞர்கள் இன்னவிதமாயும் இந்திய வழக்கறிஞர்கள் இன்னவிதமாயும் உடுத்த வேண்டும் என்ற நியதியை நம் நீதிமன்றம் ஏற்படுத்தவில்லை. ஆகவே நான் எந்த விதமான உரிமையையும் மீறும் பிரச்சினை எழவில்லை. தாங்கள், நான் சப்பாத்து அணிந்து வருவதை மறுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவி்ல்லை.”

என்று வாதிடுகிறான் பொன்னுத்தம்பி.

 “தாங்கள் வரம்புக்கு மீறிப் பேசினீர்கள். எங்கள் காலனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்படிப் பேசியது தவறானது மட்டுமல்ல, மரியாதை குறைவானது. ஐரோப்பிய கனவான்களோடு தங்களை ஒப்பிட்டுப் பேசுவதை நான் அங்கீகரிக்க முடியாது. என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வரக்கூடாது என உத்தரவிடுகிறேன். வருவீராயின், தங்கள் வழக்கறிஞர் உரிமை பறிக்கப்படும் என்பதை அறிவீராக! தாங்கள் வெளியேறலாம்“ என்று கூறிவிட்டு நீதிபதி வேகமாகச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞரும் சென்றார்.

பொன்னுத்தம்பியைத் தவிர  இரண்டு வழக்கறிஞர்கள் மட்டும் அவையில் இருந்தார்கள் அதில் ஒருவர்  பொன்னுத்தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு பெருமைக்குரிய காரியம் பண்ணி விட்டதாகப் பாராட்டுகிறார்.  மற்ற வழக்கறிஞரும்  அவரைத் தழுவிக்கொண்டு சொன்னார்:-

 “மிஸ்யோ பிள்ளை! பிரெஞ்சிந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இன்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நிறத் திமிருக்கு எதிராக இன்று நீங்கள் வைத்த நெருப்பு ஒரு சினனப் பொறி. இந்தப் பொறிதான் வளர்ந்து நாளைக்கு இந்தக் காட்டையே அழிக்கப் போகிறது, பாருங்கள்!“

அன்றிரவு அவனுக்கு தூக்கம் வரவில்லை நடுத்தெருவில் வேஷ்டி உரியப்பட்டது போலவும், கண்ணுக்குத் தெரியாத சக்தி பின்னாலிருந்து அறைந்தது  போலவும்  உணர்கிறான்.  ஜாதி மதம் தேசியம் நாடு இனம் ஐரோப்பியன் இந்தியன் வெள்ளை கருப்பு உசத்தி தாழ்த்தி எத்தனை எத்தனை பள்ளங்கள் என்று வேதனைப்பட்டான்.

மன்றத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும்  கூடுதல் குறைவு இல்லாமல் எழுதி  பாரிஸ்  நகரத்து மன்ற நீதிபதிக்குக் கடிதம் எழுதுகிறான்.

வணக்கத்துக்குரிய நீதிபதி அவர்களே! எனக்குப் பிரியமானதும், நீதிமன்றம் அனுமதித்ததுமான உடைகளையும் சப்பாத்தையும் அணிந்தே நான் நீதிமன்றம் செல்லத் தாங்கள் உத்தரவிடவேண்டும். புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பையே தாங்களும் ஆதரிப்பீர் எனில், இந்த வழக்குரைஞர் வேலையை விடுவேனே அல்லாது, என் வழக்கத்தை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நீதி ஒருபோதும் சாகாது என்பதை நான் அறிவேன். சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் சந்நிதானத்தின் முன் மனிதர் என்ற முறையில், சமத்துவத்தை மட்டுமே நான் கோருகிறேன்‘

என்று கடிதத்தை முடிக்கிறான். நம்பிக்கையோடு உறங்கவும் செய்கிறான். பாரிசில் இருக்கும் முற்போக்கான ஒரு வழக்கறிஞர் நண்பருக்கு அனுப்பி வைக்கிறான்.

ஆண்டொன்று கழிந்தும் பதிலொன்றும் இல்லை. தந்தைக்கு இவன் செய்கையில் உடன்பாடு இல்லை.

“எனக்கு அப்பவே தெரியும். ராஜாவோடு சூதாட முடியுமாடா? முட்டாளே! அவன் நூறு கிராமம், ஆயிரம் பசுன்னு பந்தயம் வைப்பான். தலையிலே இருக்கிறதைக் கொத்தாகப் பிடுங்கி வச்சாக்கூட ஆயிரம் மயிரு தேறுமாடா உன் தலையில்?“ என்றார்.

நாட்கள் கடந்தாலும் நல்ல தீர்ப்பு வருகிறது. பாரீஸ் உயர்நீதி மன்றம், புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, பொன்னுத்தம்பிப் பிள்ளை தன் விருப்பம் போல உடுத்திச் சப்பாத்து அணிந்து நீதிமன்றத்துக்கு வரலாம் என்று அந்தத் தீர்ப்பு சொல்கிறது.

பொன்னுத்தம்பி, ஐரோப்பியர் போலவே உடுப்பும் சப்பாத்தும் அணிந்து நிமிர்ந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்தான். ஊர்பிரமுகர்களும் சக வழக்கறிஞர்களும்  மாலை அணிவித்தார்கள்.

“பிள்ளை, பிரெஞ்சு ஆட்சியோடு போராட்டம் நடத்தி முதல் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். பிரான்சிலும் மக்களாட்சி ஏற்பட்டிருக்கிறது. நாம் விடுதலை பெற ரொம்ப நாள் ஆகாது“ என்று நெஞ்சம் விம்ம, ஊர்பிரமுகர்  ஷண்முக முதலியார் வாழ்த்தினார்.

நீதிபதியின் வளாகத்துக்குள் நுழைந்தான் பொன்னுத்தம்பி. நீதிபதி மாறிவிட்டிருந்தார். முந்தையவரினும் முதிய ஒருவர் நீதிபதி ஆசனத்தில் இருந்தார்.

நீதியரங்கத்தில் நுழைந்த  பொன்னுத்தம்பி, “வணக்கம் கனம் நீதிபதி அவர்களே!“ என்று தலை குனிந்து அவருக்கும் மன்றத்துக்கும் வணக்கம் செலுத்தினான். புதிய நீதிபதி நேசத்தோடு பொன்னுத்தம்பியைப் பார்த்தார்.

 “தோலின் நிறம்தான் நமக்கு வேறே தவிர அடிப்படையில் நாமெல்லாம் மனிதர்கள் தானே? வாருங்கள். எல்லா மனிதர்களையும் நாம் நேசிப்போம். நமக்கு விதித்திருக்கிற நீதியைப் பரிபாலனம் செய்கிற கடமையை முழுச் சித்தத்தோடு நாம் செய்வோம். என் நீதிமன்றம் தங்களை வரவேற்கிறது“ என்றவாறு நீதிபதி எழுந்து தன் கைகளை பொன்னுத்தம்பியிடம் நீட்டினார்.

பொன்னுத்தம்பி அந்த நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

என்று முடிகிறது.

* * *

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தைத்தான் கதையாகச் சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன். இது போன்றே தில்லையாடி வள்ளியம்மை தியாகத்தையும் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார்.

இறுதிநாட்களில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும் மருத்துவர்கள் அனுமதியோடு மறையும்வரை தினமும் சில பக்கங்களாவது   படித்துக்கொண்டே இருந்தாராம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.