மொட்டை மாடி !
முதன் முதலில் நான் பார்த்த ‘மொட்ட மாடி’ எதிர் வீட்டு மணிச் செட்டியார் கட்டிய மாடி வீட்டில்தான்! நாங்கள் இருந்த அந்தத் தெருவில் எல்லாமே ஓட்டு வீடுகள் – முற்றம் உண்டு, மாடி கிடையாது! கிரகப்ரவேசத்துக்குப் போன நான், அருகிலிருந்த இரும்பு ஏணியில் ஏறி, பெரிய தொட்டி போலிருந்த மொட்டை மாடியைப் பார்த்துப் பரவசமானேன் – அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம்! சின்னச் சின்ன சதுரங்களாகப் பதிக்கப் பட்டிருந்த, செங்கல் நிறச் சொருகு ஓடுகள் (இந்தப் பெயரெல்லாம் பின்னாளில் என் டிக்ஷ்னரியில் சேர்ந்தவை!) மனதிற்குள்ளும் பதிந்து போயின! நான்கு அல்லது ஐந்தடி உயரக் கைப் பிடிச் சுவற்றில் சாய்ந்துகொண்டு சுற்றியிருக்கும் ஓட்டு வீடுகளையும், குடிசைகளையும் பார்ப்பது புதியதாக இருந்தது. வானம் அருகில் இருப்பதாய்ப் பட்டது! தெருவில் கூடையில் பானை வைத்து மோர் விற்றுச் செல்லும் அஞ்சலைப் பாட்டியின் நடை வித்தியாசமாகத் தெரிந்தது – பானை மூடியில் சிந்திய மோரில் சூரியன் பளிச்சிட்டது!
கூரைகளில்லாத மாடி வீடுகளின் தலைப் பகுதி, கட்டிடம் இல்லாத வெட்ட வெளி; அதனால் ’மொட்டை’ மாடி என்ற பெயர் வந்ததோ தெரியவில்லை! இப்போதெல்லாம் மாடிகள் மொட்டையாக இருப்பதில்லை – புல்வெளிகள், காய்கறிகள், பூக்கள் எனப் பசுமையாகவும், சின்ன குடில், ஊஞ்சல், மேசை நாற்காலி என உபயோகமான இடமாகவும் மாறியிருக்கின்றன!
மொட்டை மாடியின் ஒரு கோடியில் சின்னக் குடிசையோ – ஃபேன், லைட், படுக்கை வசதிகளுடன் – அல்லது கல் அறையோ (சேர்த்துப் படித்து வரும் அனர்த்தத்துக்கு நான் பொறுப்பல்ல!) கட்டி ஒரு அட்டாச்டு மொட்டை மாடி வசதியை அனுபவிப்பவர்களும் உண்டு!
கோடைக் காலம் வந்தால், நம்ம ஊர்களில் ‘பவர் கட்’ டும் சேர்ந்தே வந்து விடும்! இரவில் வீட்டினுள் புழுக்கம் தாங்காது. அப்போது மொட்டை மாடிக் காற்று இதமானது. சென்னை போன்ற கடற்கரை ஓர நகரங்களில், மதியத்திற்கு மேல் வீசும் கடற்காற்று, இரவில் மொட்டை மாடியை குளிர்வித்து மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியைத் தரக்கூடும். பள்ளிக்கூட நாட்களில், பாண்டிச்சேரி (இன்றைய புதுச்சேரி) மாமா வீட்டில் இரவில் மொட்டை மாடியில்தான் தூக்கம்! தலையருகில் ஒரு டார்ச் லைட், ஒரு சொம்பில் குடிநீர், தலையணை, பாய் அல்லது ஜமக்காளத்துடன் மாடிக்குச் சென்று விடுவோம். சில நாட்களில், நிலா வெளிச்சம் இருந்தால், மொட்டை மாடியிலேயே இரவுச் சாப்பாடும் உண்டு! கோடையில் போர்த்திக்கொண்டு படுத்ததும் உண்டு – கொசுக் கடியிலிருந்து தப்பிக்க!
தி நகர் வீட்டு மொட்டை மாடியில் ஏறி, பக்கவாடில் உள்ள மங்களூர் ஓட்டுக் கூரையில் இறங்கி மாங்காய் பறித்த கோடைகள் சுகமானவை – இரவு டிரான்சிஸ்டரில் பதினோரு மணிவரை ‘விரும்பிக் கேட்டவை’ பாடல்கள் கேட்டுவிட்டு, காலை, சூரியன் கண்ணில் அடிக்கும் வரை தூங்கிய நாட்கள், ஆளுக்கொரு மாம்பழம் தின்றபடியே, குழந்தைகளாய்ப் பேசிச் சிரித்த நாட்கள், மொட்டை மாடி என்னும் திறந்தவெளி சொர்க்கத்துடன் பின்னிப் பிணைந்தவை!
எதிர் வீட்டு மொட்டை மாடியில் – வீட்டு ஓனர் முதலியாரம்மாவின் அனுமதியுடன் தான்! – காலையில் வெளிச்சம் வந்தவுடன், கையில் புத்தகத்துடன் படிக்கப் போன காலங்கள் மறக்க முடியாதவை. வாசித்த ‘நாராய், நாராய் செங்கால் நாராய்’ செய்யுளும், ‘Daffodil’ போயமும், ராபர்ட் ஃப்ராஸ்டும், திரு.வி.க. வும், சரித்திரமும், பூகோளமும், தோலின் குறுக்குவெட்டுத் தோற்றமும் இன்னும் மறக்கவில்லை – மொட்டை மாடிக்கும் இதில் பங்குண்டு என்பது என் மனது அறியும்!
தாம்பரம் தாண்டி, பெருங்களத்தூரில் ஸ்டேஷனில் இறங்கி, வயல்கள், ரோஜாத் தோட்டங்கள் எல்லாம் குறுக்கே கடந்து, பெரிய ஏரிக்கு இரண்டு கிமீ முன்னால் இருந்தது என் சித்தப்பா கட்டிய புது வீடு! (இன்று பெருங்களத்தூரில் தோட்டங்களும் இல்லை, ஏரியும் இல்லை – நிரம்பி வழிகிறது வீடுகளாலும், வீடுகளில் ஜனங்களாலும்!). முதல் நாள் மாலையே கடைசி ரயில் பிடித்து சென்று விட்டோம். மாடிப் படிகள் இன்னும் கட்டப்படாத வீடு – பக்கத்தில் தொங்கிய கயிற்று ஏணியில் ஏறி, மொட்டை மாடியில் இரவு தூங்கினோம். காலை மூன்றரை மணிக்கெல்லாம், தூரத்தில், வயல்களைத் தாண்டி, தெற்கிலிருந்து மதறாஸ் வரும் ரயில் வண்டிகள், மரவட்டை ஊர்ந்து வருவது போல் முழுவதுமாகத் தெரியும் – அந்த காலை, இன்னும் மனதில் ஓவியமாய்த் தங்கிவிட்டது – படியில்லா மொட்டை மாடியுடன்!
கொரோனா லாக்கவுட் வந்த பிறகுதான் என் வீட்டு மொட்டை மாடியை நான் நன்கு பார்க்கிறேன்! எல்லா மாடிகளிலும், கவிழ்த்து வைத்த இட்லிப் பானை மூடி போல ‘டிஷ்’ ஆண்டென்னாக்கள்! வெறும் கிளிப்புகளோ அல்லது காற்றில் பறந்து தப்பிக்க முயலும் ஆடைகளோ தொங்கும் கம்பிக் கயிறுகள்! கைப்பிடிச் சுவர் வீங்கினாற்போல் அங்கங்கே தெரியும், ஸ்ப்ளிட் ஏசி யின் அவுட் டோர் யூனிட்டுகள்!
வெளியில் நடக்கமுடியாது – அதனால் மொட்டை மாடியில் எட்டு வடிவில் நடக்கிறேன். (இன்று கூட ‘எட்டு’ பெயிண்ட் பண்ண வேண்டுமா? விளம்பரம் ஒன்று பார்த்தேன்!). சுற்றிலும் எல்லா மொட்டையிலும், கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும், திசையே தெரியாமலும், குட்டையும் நெட்டையுமாகப் பலர் நடந்து கொண்டிருக்கிறார்கள் – அந்தக் கால அரண்மணைக் காவலர்கள் போல் ‘பாரா’ போடுகிறார்கள்; தலையில் இரும்புத் தொப்பியும், கையில் ஈட்டியும்தான் இல்லை! மாலைத்தென்றல் போல இதில் பெண் காவலர்களும் உண்டு என்பது சுவாரஸ்யமானது!
பூத்தொட்டிகள், சில காய்கறிச் செடிகள், குரோட்டன்ஸ், துளசி என அழகான தோட்டம் போடப் பட்டுள்ள மொட்டை மாடிகளுக்குத் தனி அந்தஸ்து வந்துவிடுகிறது. அழகுடன், உபயோகமும் கூட என்பதால்!
என் நண்பன் வீட்டு மொட்டை மாடி, ஒரு அழகிய பார்க் போலவே இருக்கும் – தரையெங்கும் கொரியன் கிராஸ், சுற்றிலும் வண்ண வண்ணப் பூக்கள்,காற்றில் அசைந்தபடி நிற்கும் செடிகளுடன் பூந்தொட்டிகள், நடுவில் நான்கைந்து பேர் அமர்ந்து கொள்ள வசதியாய் கலையழகுடன் அமைக்கப் பட்ட அறுகோண மண்டபம், நடப்பதற்கு வசதியாய்ப் புல் தரையில் பதிக்கப் பட்ட அழகிய சிமெண்ட் ஸ்லாப்கள், அலங்கார வண்ண விளக்குகள் எனப் பார்ப்பதற்கே மிகவும் ரம்யமாய் இருக்கும்! மொட்டை மாடி பராமரிப்பதே ஒரு கலை எனத் தெரிந்து கொண்ட நேரம் அது!
சம்மர் வந்துவிட்டால், மொட்டை மாடிக்கு டிமாண்ட் அதிகமாகி விடும்! அப்பளம், வடகம் (துணியோடு ஒட்டியடி சின்ன சின்ன ‘சில்’லுகள் போல் காயும் ஜவ்வரிசி வடாம் – மாடியிலேயே துணியோ, பிளாஸ்டிச் ஷீட்டோ விரித்து, அதன் மேலேயே பிழியப் படும் மற்ற வடாம் வகைகள்) ஒரு வருடத்துக்கென செய்யப்படும் சம்மர் ஸ்பெஷல் வேலைகள் – குடையுடன் அல்லது ஒரு குச்சியில் கருப்புத் துணியுடன் காக்கை ஓட்டும் வேலை கொஞ்சம் போர் என்றாலும், வேறு சில நன்மைகளும் உண்டு – தொந்திரவு இல்லாமல் புத்தகம் படிப்பது, கீழ் வீட்டு மாமியுடன் துணி காய வைக்க வரும்போது அரட்டை மற்றும் உதவி (மாமிக்குக் கண்ணுக்கழகாக ஒரு பெண் இருப்பது உ.நெ.க!). சில சமயங்களில், பருத்தி புடவையாய்க் காய்த்தாற்போல், அந்தப் பெண்ணே கடலை போட வரும்போது – ‘மொட்டை மாடியே உனக்கொரு நமஸ்காரம்’ என்பது மைண்ட் வாய்ஸாக ஒலிப்பது எல்லாம் பூர்வ ஜென்ம வரங்கள்!!
மொட்டை மாடிகள் வாயிருந்தால் பல கதைகள் சொல்லும்! காதல், பிரிவு, சோகம், பிறர் அறியாமல் அழுவது, சில இரகசியப் பரிமாற்றங்கள் (காதல் கடிதங்களும் இதில் அடக்கம்!) என மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே மொட்டை மாடியை நான் காண்கிறேன்!
இளையராஜாவின் ‘மொட்டமாடி, மொட்டமாடி’ அஞ்சலி படப் பாடல் மொட்டை மாடிக் காதலை சினிமாத் தனமாகக் காட்டுகிறது!
சுற்றிலும் எத்தனை அடுக்கு மாடிகள் எழுந்தாலும், நடுவில் உயிர்ப்புடன் இருக்கும் ஒற்றை மொட்டை மாடி வீடே எனக்குப் பிடிக்கிறது!!