“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Adoption

நான் ஸோஷியல் வர்க் லெக்சரராக இருந்தபோது நடந்தது இது. எங்களது ஸோஷியல் வர்க், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் பாடத் திட்டத்தின் படி வகுப்பில் நடத்தும் பாடம் வாரத்தில் மூன்று நாட்கள். மற்ற மூன்று நாட்களில் ஃபீல்ட் வர்க்: படித்ததைப் பயன்படுத்த வெவ்வேறு நிறுவனங்கள், என். ஜு. ஓகளில் பணி புரிந்து படித்ததைச் செயல் படுத்த வேண்டும்.

அன்று மாணவர்களுடன் கலந்து ஆலோசிக்கும் ஃபீல்ட் வர்க் நாள் இல்லை. இருந்தும் என்னுடைய மாணவி நிஷா என்னை அவசரமாகச் சந்திக்க வந்தாள்.

நிஷா, ஸோஷியல் வர்க் முதுகலை இரண்டாவது வருடம், மெடிக்கல் அண்ட் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் சிறப்புப் படிப்பு. மனநல ஆஸ்பத்திரியில், நிஷா மதிப்பீடு செய்ய ருத்ர என்ற எட்டு வயதான குழந்தையைத் திரும்ப அனாதை விடுதியில் சேர்த்ததாகவும், அவன் நிலை குனிந்து இருப்பதை அங்குள்ள மேற்பார்வையாளர் அழைத்து வந்தவள் சொன்னதாகக் கூறினாள், நிஷா. குழந்தை விசும்புவதைத் தாங்க முடியவில்லை என்று சொல்லி நிஷா அழுதாள்.

ருத்ரவின் கதை கேட்டதில் மனம் துடித்தது என்றும், அவனுக்கு எற்பட்ட விளைவுகள் தன்னைக் கஷ்டப்படுத்துவதாகச் சொன்னாள். சமாதானம் ஆன பிறகு விவரிக்கச் சொல்லிப் புரிந்து கொண்டேன்.

ருத்ர இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போது, அவனைப் பெற்றவர்கள் இந்த அனாதை இல்லத்தின் தொட்டிலில் விட்டுச் சென்று விட்டனர். இவ்வாறு வந்த பல குழந்தைகளுடன் அவனை வளர்த்து வந்தார்கள். முறைப்படி இவனையும் தத்து கொடுக்கப் பதிவு செய்தார்கள்.

வெட்கத்தினால் ருத்ர கீழேயே பார்த்துக் கொண்டு இருப்பானாம். இதுவோ அல்ல கருமை நிறத்தினாலோ, வெகு நாட்களுக்கு யாரும் தத்தெடுக்க வில்லை. அவனை ப்ரேம் குடும்பத்தினர் தத்தெடுக்கும் போது ருத்ரவின் வயது, நான்கு.

ப்ரேம் அரசு நிறுவனத்தில் கணக்கு பார்க்கின்ற குமாஸ்தா. மனைவி, சுப்பிரபாவிற்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. ஒரே ஒரு பெண், தியா, எட்டு வயது. சுப்பிரபாவின் உயிர். ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ப்ரேமின் பெற்றோரும் கூடவே இருந்தார்கள்.

பரீட்சை விடுமுறைகளில் ஊருக்குப் போய் இருந்த போதெல்லாம், தியா அங்குக் குழந்தைகள் அனைவரும் தம்பி, தங்கைகளுடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க, தனக்கும் தம்பி வேண்டும் என்ற ஆசையைப் பெற்றோரிடம் சொன்னாள். அவர்கள் குடியிருந்த பகுதியில் மேல் மாடி பெண்மணி, கீழே இவளுடைய தோழி வீட்டில், அக்கம்பக்கத்தினர் பலபேருக்குக் குழந்தை பிறந்தது. குழந்தைகளைப் பார்த்துப் பூரித்துப் போனாள் தியா.

தியாவிற்கு ஒரு தம்பியோ தங்கையோ இருப்பதை ப்ரேமும் அவனுடைய பெற்றோரும் விரும்பினார்கள். தியா எதைக் கேட்டாலும் அதைச் செய்து,  வாங்கித் தரும் பழக்கம் சுப்பிரபாவிற்கு உண்டு. தியா அடம் பிடிப்பதைக் குறைக்கத் தம்பி-தங்கை இருப்பது உதவும் எனத் தாத்தா-பாட்டி நம்பினார்கள். இந்த அபிப்பிராயம் சுப்பிரபாவிற்கு இல்லை. இன்னொரு குழந்தை இருந்தால் தியாவை இப்போது போலப் பார்த்துக் கொள்ள முடியாது என்று எண்ணினாள். அதற்கு ஏற்றவாறு, இன்னொரு குழந்தை பிரசவிப்பது நல்லது அல்ல என்று மருத்துவர் பரிந்துரைத்தார்.

ப்ரேம் சிந்தித்தான். பெற்றோரிடம் இதைப் பற்றிப் பல விதங்களான யோசனைகள். சுப்பிரபா இவர்களுக்கு எதிர் யோசனை சொல்லப் பயந்தாள். ப்ரேம் விடை தேடுவதிலிருந்தான்.

இந்த நிலையில் தான் சுப்பிரபாவின் மருத்துவர் குழந்தை ஒன்றைத் தத்து எடுக்கலாம் என்று பரிந்துரை செய்தாள். அதுவரை இவர்கள் அப்படி யோசிக்க வில்லை. இப்போது கலந்து பேச ஆரம்பித்தார்கள். பேசப் பேச ஒரு பயம் கலந்த ஆர்வம் எல்லோருக்கும் ஒட்டிக் கொண்டது. இந்த நிலையில் தியாவிற்கு எப்படி எடுத்துச் சொல்ல என்று தடுமாறியதால் அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை.

சுப்பிரபா தியாவிடம் இதை எடுத்துச் சொல்ல மறுத்தாள். தாத்தா-பாட்டியும் அப்படித்தான். ப்ரேம் தீவிரமாகச் சிந்தித்தான். தான் எங்கேயோ படித்த தகவல் ஒன்று ஞாபத்திற்கு வந்தது. வரப்போகிற பாப்பா குடும்பத்தினர் பாசத்தில் தேர்ந்தெடுத்த பாப்பா என்பது தான். பூசி முழுகாமல் தியாவிற்கு விளக்கம் தர அது உதவியது.

இவ்வாறு முறைப்படி தத்தெடுக்க முடிவு செய்தார்கள். பலரிடம் கேட்டு, தீர விசாரித்த பிறகே அந்த இல்லத்தில் பதிவு செய்துகொண்டார்கள். இல்லத்தினரும் விதிமுறைகளின் படி, நேரம் குறித்து தகவல்களைப் பதிவு செய்யச் சொன்னார்கள். ப்ரேம் ஆவலோடு சுப்பிரபாவுடன் சென்றான். தத்தெடுக்கத் தயாராக இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள (பரிசோதிக்க) இல்லத்தினர் பல கோணங்களிலிருந்து இருவரையும் தனியாகப் பல கேள்விகள் கேட்டார்கள். சுப்பிரபா திரும்பத் திரும்ப ப்ரேம் தான் பரிந்துரை செய்துள்ளதைப் பெருமையாகச் சொன்னாள். அவர் எடுத்த முடிவிற்கு முழுமனதோடு அவருடன் தான் ஒத்துழைப்பு தருவதாகச் சொன்னாள். அவர் இருக்கிறார், நாம் குழந்தையை நன்றாக வளர்ப்போம் என்று உறுதி மொழி தந்தாள்.

இதைத் தொடர்ந்து, சூழலை எடைபோட்டு, தத்து எடுப்பதில் எந்த அளவிற்கு ஆசையும், ஆர்வம், வசதி இருக்கிறது என்பதைக் கணிக்க, ஸோஷியல் வர்கர் வீட்டுக்கு வந்தார்கள். அத்துடன் தத்தெடுக்கப் படும் குழந்தையுடன் யார் யார் இருக்கப் போகிறார்கள் என்பதை அறியவும், அவர்களைப் பற்றிய விவரங்கள், அவர்களின் விருப்பங்கள் கேட்டறிந்தார்கள். இவ்வளவு அலசி ஆராய்வது குழந்தை குடி போகும் இடம் சுகமாக அமையவே.

ஸோஷியல் வர்கர் வரப் போவதாகக் கூறியதும், ப்ரேம் தியாவிற்கு விளக்கம் செய்ய ஆரம்பித்தான். பல படங்களைச் சேகரித்து, நான்கு-ஐந்து வரிகள் கதை போல் தொகுத்து விளக்க ஆரம்பித்தான். வருவது பாசத்தால் தேர்ந்தெடுத்த குழந்தை, மற்றும் விடுதியில் விட்ட குழந்தைகள் நாட்டின் பொறுப்பு என்றான். அங்குள்ள ஒரு குழந்தை இவர்களின் பாசத்தில் பங்கு கொள்வதாக எடுத்துக் கூறினான். மேலும் வரப்போகிற பாப்பா நம் மனதைத் தொட்ட குழந்தை, அதனால் “ஸ்பெஷல்” என்றான்.

இதைக் கேட்ட நாளிலிருந்து தியாவின் ஆர்வம் நாளுக்கு நாள் கூடியது. வீட்டினருக்கும் அப்படித்தான். சுப்பிரபாவிற்கொ மனதில் சந்தேகம் வருடியது, பிரேமை போல் நாமும் பாசமாக இருப்போமா? தியாவிடம் பாசம் குறையுமா? தியா தம்பி தான் வேண்டும் என்றதால் ஆண் குழந்தை என்று முடிவு எடுத்தார்கள், சுப்பிரபாவும் அதான் விரும்பினாள்.

எந்த குழந்தையைப் பல பேரால் வேண்டாம் என்று நிராகரிக்கப் பட்டதோ, அப்படி ஒரு பாப்பாவைத் தேர்வு செய்வதென்று ப்ரேம் குடும்பத்தினர் உறுதியாக இருந்தார்கள். அப்படி ஒரு குழந்தை தான் ருத்ர. அவனுடைய பெரிய கண்கள் அவர்களைக் கவர்ந்தது. குழந்தை நலத்தை முழுதாக பரிசோதனை செய்த பின், நீதிமன்றத்தின் அனுமதி முறைகளை முடித்த பின் வீட்டிற்க்கு அழைத்து வந்தார்கள். ருத்ர தத்தெடுக்கப் பட்டது பதிவானது. நிறுவனத்தினர் சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தனர்.

ருத்ர வெட்கத்தில் மூழ்கிப் போனான். ப்ரேம் அவனை அணைத்து, தலையை வருடி பாசத்துடன் தைரியத்தையும் ஊட்ட ஆரம்பித்தார். தியா சாக்லேட் தந்து, விளையாட வைத்தாள். தாத்தா தன்னுடன் அவனைக் கடைக்குக் கூட்டிச் செல்வது, பாட்டி பூஜைக்கு உதவி செய்வது என மெதுவாக மற்றவரிடமும் பரிச்சயம் ஆனான். சுப்பிரபா தயங்கித் தயங்கிப் பழகினாள்.

விடுதியிலிருந்து அவன் போய்க்கொண்டிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றி, வீட்டின் அருகே உள்ள, தியா செல்லும் அதே பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். படிப்பு, வீட்டுப் பாடங்களை ப்ரேம் பார்த்துக் கொண்டான். இருவரின் நெருக்கம் நன்றாகத் தென்பட்டது. தியா அவனை கை பிடித்து பாசமாக அழைத்துச் செல்வாள். தன்னுடைய நண்பர்கள் அவனுக்கும் நண்பர்கள் ஆனார்கள். ஒற்றுமை நிலவியது. தியா-ருத்ர அரவணைப்பைப் பார்த்து எல்லோரும் சந்தோஷப் பட்டார்கள்.
தத்து-சொந்த குழந்தை வித்தியாசம் தெரியாத அளவிற்கு வளர்த்து வந்தார்கள்.

ஒரு விதத்தில் இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது என்று சொல்லலாம். ஐந்து வயதில் குழந்தையை வீட்டிற்கு அழைத்த வந்ததுமே அவனிடம் தத்தெடுத்ததைப் பகிர்ந்து கொண்டார்கள். இவ்வாறு விளக்கினார்: “அவர்களின் பாசத்தில் வந்தவன் என்றும், அவர்கள் அவனைத் தேடி வரச் சற்று தாமதமாகியதாக. இதயத்தில் பிறந்தவன்.” ஆனால் இவ்வளவு நாட்களாக விடுதியில் பார்த்துக் கொண்டதால் அவர்கள் சூட்டிய பெயரே இருக்கட்டும் என்றார்கள்.

விடுதியினரும் குழந்தை தத்து எடுக்கப் பட்ட நிஜத்தைப் பெற்றோரே விளக்குவது நன்று என்று ஊக்குவித்தார்கள். அப்போது தான் குழந்தை பெற்றோரிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்க இதுவே முதல் படி என்றார்கள். ருத்ர பெற்றோரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டதைப் பல முறை கேட்டு மகிழ்ந்தார்கள் – யார் கேட்டாலும் ருத்ர, தான் பாசத்தால் இருதயத்தில் பிறந்தவன் எனக் கம்பீரமாக விளக்கினான். ப்ரேம் இது பெரிய வெற்றி என்றே எண்ணினான்.

பெருமையுடன் ப்ரேம் இந்த தத்து எடுப்பது ஏன், அது மனதின் பிறப்பு என்றதை ஒரு ஐந்து பக்கம் உள்ள சிறிய புத்தகமாக வடிவு செய்து, விளக்கங்களுக்குப் பல படங்கள் வரைந்து, படமும் இவற்றைச் சொல்லும் பாணியில் தயாரித்து, விடுதிக்குத் தந்தான். பலருக்கு மிக உபயோகமாக ஆனதால் அவர்களே வெளியிட்டார்கள். சித்திரங்களுடன் இந்த புத்தகம் தத்தெடுத்த பெற்றோருக்குத் தரப்பட்டன. விளக்குவது மிக அவசியம். வேறு யாரிடமிருந்தோ கேட்டு, தேவையற்ற குழப்பங்கள் உருவாகும் சூழ்நிலையைத் தவிர்க்கலாம். புத்தகம் எடுத்துச் சொல்ல உதவுகிறது எனத் தத்து எடுக்கும் பெற்றோர் சொல்லுவதைக் கேட்க, ப்ரேம் ஆத்மத் திருப்திப் பட்டான்.

ருத்ர பிறந்த நாளென்று அவன் இருந்த விடுதிக்குப் போய் அங்குள்ள அவனுடைய நண்பர்கள், வளர்த்த ஆயா எல்லோருக்கும் இனிப்பு தருவதைப் பழக்கம் ஆக்கினார்கள்.

ருத்ர குடும்பத்துடன் ஒட்டிப் போனான். வீட்டினரும் தங்கள் குழந்தை என்றே இருந்தது. சுப்பிரபா வேலை ராஜினாமா செய்து வீட்டில் இருக்க விரும்பினாள், இருந்தாள். ப்ரேம் கண்டிப்புடன் செல்லமும் செய்தான் ருத்ராவை. ப்ரேம் மனதில் தத்து எடுத்து குழந்தையை வளர்ப்பதில் ஒரு நிம்மதி நிலவியது. ருத்ர சந்தோஷமாக வாழ்ந்தான். இவை யாவையும் சுப்பிரபா புதுமையாகப் பார்த்தாள்.

நேரம் ஓடியது. ஒரு நாள் ப்ரேம் வீடு திரும்பி வரவில்லை. தொலைப்பேசியில் காவல்துறையினர் அழைத்து, வீட்டுக்கு அருகில் சாலை விபத்தில் இறந்து விட்டான்  என்ற செய்தி தந்தார்கள். இடிந்து போனாள் சுப்பிரபா. தாத்தா பாட்டி ஆடிப்போனார்கள், தியா, ருத்ர அழுதார்கள். உலகம் தலைகீழாக மாறியது.

எல்லாம் மாறியது. தாத்தா பாட்டிக்குத் தாங்க முடியவில்லை, ஊருக்குப் போய் விட்டார்கள். வீட்டில் சப்தம் இன்றி, ஏதோ என்று இருந்தார்கள். மூன்று மாதத்திற்குள் ப்ரேம் அலுவலகத்தில் ஒரு வேலை சுப்பிரபாவுக்கு தரப்பட்டது. மனம் இல்லாமல் ஏற்றுக் கொண்டாள். விதவை கோலம் வாட்டியது. இதனாலோ, பொறுப்பினாலோ இப்போது எல்லாமே சலிப்பு தட்டியது அவளுக்கு.

மாதங்கள் கசப்பாகக் கடந்தன. தியாவிற்குக் குவிந்தது பாசம், ஆனால் ருத்ர எதைச் செய்தாலும் சுப்பிரபாவிற்கு அவன் மேல் கோபம் வந்தது. பிறந்த நாள் அன்று விடுதிக்கு அவசரமாக அழைத்து வந்தாள். சுப்பிரபா தான் செய்வதைத் தடுக்க முடியவில்லை.

ஒரு வருடம் முடிந்தது. ருத்ர பிறந்த நாள் அன்று ருத்ரவை இல்லத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கேயே விட்டு விட்டாள். ஆமாம், விடுதியினர் அவ்வளவு தீவரமாக அலசி பரிசோதனை செய்து தான் குழந்தையை அனுப்பி வைத்திருந்தார்கள். இப்போதோ, சுப்பிரபா முறைப்படி அவனை மறுபடி விட்டு விட விண்ணப்பம் செய்தாள்.

அவர்கள் வியப்புடன், ஏன் இவ்வாறு சுப்பிரபா செய்கிறாள் என்ற கேள்விக்கு, இமைக்கா நொடியில் “அவர் இருக்கும் வரை பார்த்துக் கொள்வேன் என்று தானே சொன்னேன்” என்றாள். ஆமாம் அப்படித் தானே சொன்னாள். இப்போது அந்த ஸோஷியல் வர்கர் மிக வருந்தினாள், தான் ஏன் இதை ஆராயவில்லை என்று. எல்லா விதிமுறைகள் முடித்து ருத்ரவை விட்டுச் சென்றாள்.

அடுத்த பல சனிக்கிழமை காலை வேளையில் அம்மா, தியா வருவார்கள் என நம்பி காத்து இருந்தான், ருத்ர. யாரும் வரவில்லை. ஏமாற்றம், துக்கம், திரும்பவும் நிராகரிப்பு. திரும்ப அதே பள்ளிக்கூடம். வகுப்பு மாணவரின் ஏதேதோ கேள்விகள், கேலியும். துவண்டு போனான். தான் என்ன தவறு செய்தோம்? ஏன் இப்படி விட்டு விட்டார்கள்? ஒன்றும் புரியவில்லை. இந்த நிலைக் கலைந்த நிலையில் குழந்தையை நிஷா சந்தித்தாள்.

இந்த நிலை இப்போதெல்லாம் பல இடங்களில் நடக்கிறது. தத்து எடுத்துத் திருப்பி விடுதிகளில் சேர்த்து விடுவது பல குழந்தைகளின் நிலைமை. குறிப்பாக, ஆறு வயதிற்கு அதிகமாக உள்ள குழந்தைகள். வருத்தப்பட வேண்டிய விஷயம். அட்ஜஸ்ட் ஆகவில்லை என்கிறார்கள்.

இந்தக் கசப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில், ருத்ர ஏற்றுக்கொள்ளக் கஷ்டப்பட்டான். இதனால் அடிக்கடி உடல்நிலை தடுமாறியதால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். தான் விடுதியில் இருப்பதை அவன் ஏற்றுக்கொள்ள உதவ, அவர்களின் ஸோஷியல் வர்கருடன் என்னுடைய மாணவி நிஷாவும் சேர்ந்து கொண்டாள்.

நிஷா மேற்பார்வையாளராக நான் இருந்ததால் கூட்டாகச் செய்தோம். குழந்தைக்கு மூன்று நிலையில் அணுகினோம். அவனுடைய உளவியல் உபாதைகளுக்கு ப்ளே தெரப்பி மூலம் முற்பட்டோம், உறவை வளர்க்க பல்வேறு பாதைகளை வகித்தோம். விடுதியில் வரும் குழந்தைகள், ஓர் வயதிருக்குள் இருப்போரின் பராமரிப்பில் ருத்ர ஒத்துழைப்பு தந்தான். மாலையில் கால்பந்து விளையாட்டு, விடுதியில் இருக்கும் ஆலயத்தில் பூப்பறித்துத் தருவது, குழந்தைகளை வரிசைப் படுத்துவது. தோட்டத்தில் அரைமணி நேரம், என்று. இதை தவிர்த்து பக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தின் தாத்தா பாட்டிமார்களுக்குக் கடிதம் எழுதுவது (இது 1990 காலகட்டம்), பேசுவது என்று. மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் ப்ளு க்ராஸில் உதவுவது, வாய்ப்பேச்சா பிராணி அன்பு செலுத்தும் விதமே மனதிற்கு ஆறுதல் தரும். தந்தது.

ஆரம்பத்தில் நிஷா எதற்காக இந்த கலவை? இத்தனை தேவையா? என்று கேள்வி எழுப்பினாள். ஒரு முறை அல்ல, இருமுறை நிராகரிக்கப் பட்ட ருத்ரவின் மனது உறவுகளை நம்ப இடம் தராது. அதுவும் பாசமே பொழியும் குழந்தை அவன். மற்றவர்கள் பாசத்திற்கு காத்துக்கொண்டு இருக்கலாம். எப்போது வரும், தெரியாது. அவனின் அழகே பாசம் காட்டுவதில். தன்னைச் சுற்றி உள்ள அனைத்து தரப்பினருக்கும் வாரி வழங்குவதில் வரும் சுகம் அவனுக்கு திருப்தி தரும். தானாக வளரும் பாசம்.

ருத்ர படிப்பிலும் கவனத்தை செலுத்தினான், ப்ரேம் சொன்னதை செய்வதற்கு. போகப் போக, பல மாதங்களுக்கு பிறகு, அவனுக்கு சுப்பிரபா தன்னை திரும்ப ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்ற உண்மை புரிந்தது. இந்த புரிதல் ஒரு பக்கம், நேரத்தை பலருடன் பங்குகொண்டதில் அவன் புத்துணர்ச்சி மேலோங்கியது. .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.