நீ – எஸ் ஏ பி

குமுத்தில்  எஸ் ஏ பி அவர்கள் எழுதிய தொடர்கதை ‘நீ’ 

அதில் எழுதப்பட்ட ஒரு பக்கத்தைப் படித்தால் இன்றைக்கும் சிறப்பாக இருக்கும்! 

அதைதான் கடுகு அவர்கள் தன்னுடைய வலைப் பதிவில் எழுதியுள்ளார். 

படித்து மகிழ்வோம். 

நன்றி: கடுகு

நன்றி: http://jeeveesblog.blogspot.com/2009/10/blog-post_04.html

 

 

 

பிறகு, “நான் ஒரு விளையாட்டுச் சொல்லுகிறேன், விளையாடலாமா?” என்றாள், சகுந்தலா.

“ஓ,” என்றார்கள் மற்றவர்கள், குதூகலத்துடன்.

“நம் எல்லோருக்கும் தெரிந்த யாராவது ஒருத்தரைப்பற்றி நான் நினைத்துக் கொள்வேன். அது யாரென்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றாள் சகுந்தலா.

“நீ மனத்துக்குள்ளே நினைத்திருக்கிறது எங்களுக்கு எப்படித் தெரியும்!” என்று ஆச்சரியப்பட்டாள் லில்லி.

சகுந்தலா அவளை கையமர்த்தினாள். “கொஞ்சம் பொறேன்?.. நீங்கள் ஒவ்வொன்றாகப் பத்துக் கேள்வி கேட்கலாம். என்கிட்டேயிருந்து வருகிற பதிலிலிருந்து, என் மனத்தில் உள்ளதைக் கண்டு பிடித்துவிடவேண்டும். பத்துக் கேள்வி கேட்டும் உங்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் தோற்றுப்போனதாக அர்த்தம்.”

“அதற்குப் பத்து கேள்வி எதற்கு!” என்று புருவங்களை உயர்த்தினான் கண்ணன். “ஒரு கேள்வி போதுமே? ‘நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டால் போயிற்று!”

“அதுதானே நடக்காது!” என்று மறுத்தாள் சகுந்தலா, அழுத்தம் திருத்தமாக. “நீங்கள் கேட்கிற கேள்விக்கு, ‘ஆமாம், இல்லை’ என்று மட்டும் தான் பதில் சொல்வேன்!”

“அப்படியா? ஆனாலும் பத்துக்கேள்வி ரொம்ப அதிகம் என்று தோன்றுகிறது,” என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான் கண்ணன்.

“அதிகமா குறைவா என்பது விளையாடிப் பார்த்தாலல்லவா தெரியும்? எங்கே, நான் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?” என்று சவால் விட்டாள் சகுந்தலா.

உற்சாக மிகுதியில் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தார்கள். சகுந்தலா காதைப் பொத்திக்கொண்டு விட்டாள். “ஒருவர் தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கலாம். குறுக்கே பேசக்கூடாது!” என்று விதி வகுத்தாள்.

“நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா?” என்றான், கண்ணன்.

சகுந்தலா வாயை இறுக மூடிக்கொண்டு பேசாமல் இருந்தாள்.

கண்ணன் விழித்தான் பிறகு, மற்றவர்களைப்பார்த்து, “என்ன இது! இப்படிப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தால்?” என்று புகார் செய்தான்.

“உண்டு, இல்லை, என்று நான் பதில் சொல்லலாமே தவிர, ஆண், பெண் என்று சொல்லக் கூடாது. ஆணா என்று ஒரு கேள்வி கேளுங்கள். அப்புறம் பெண்ணா என்று இன்னொரு கேள்வி கேளுங்கள்,” என்றாள் சகுந்தலா.

“ஓஹோ என்றானாம்! இப்படிக் கேட்டால் பத்து என்ன, இருபது கேள்வி கேட்டாலும் போதாது. ஆணா என்கிறா கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால், பெண் என்று முடிவு கட்டிக்கொள்ள முடியாதாக்கும்?.. சரி, சொல்லுங்கள், ஆணா?”

“உம்,” என்றாள் சகுந்தலா.
“ஆமா என்று வாயைத்திறந்து சொல்லுங்கள்.”
“ஆமா.”
“சுமாராக என்ன வயதிருக்கும்?”
சகுந்தலா மெளனம் சாதித்தாள்.
“அவள் தான் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளே, உண்டு இல்லையென்று மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று?” என்று ஞாபகப் படுத்தினாள் லில்லி.
“மறந்துவிட்டேன்,” பேருக்கு ஒரு தரம் தலையில் குட்டிக்கொண்டான் கண்ணன்.
“டாக்டரா?”
“இல்லை.”
“வக்கீலா?”
“இல்லை.”
“இஞ்ஜினியரா?”
“இல்லை.”
“எழுத்தாளரா?”
“இல்லை.”
“ஓவியரா?”
“இல்லை.”
“நடிகரா?”
“இல்லை.”
“பின்னே யார், உங்கள் வீட்டுப் பால்காரரா?” என்றான் கண்ணன், ஆத்திரத்துடன்.

“சகுந்தலா, “இல்லை,” என்று விடையிறுத்தது, மற்றவர்களின் சிரிப்பொலியில் மூழ்கிற்று.
அவள் விரலை மடக்குவதைக் கவனித்த கண்ணன் திகைப்புடன், “அதையும் ஒரு கேள்வியாகக் கணக்குப் பண்ணிவிட்டீர்களா என்ன? நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்!” என்று மன்றாடினான்.

“நீங்கள் விளையாட்டுக்காகக் கேட்டிருக்கலாம், நான் வினையாகத்தான் பதில் சொன்னேன்!” என்றாள் சகுந்தலா, நெஞ்சில் ஈரமில்லாமல்.

ஜோதியும் லில்லியும் பஞ்சாயத்துப் பண்ணிய பிறகே சகுந்தலா விட்டுக்கொடுத்தாள்.

“உஸ். அப்பாடா. எத்தனை கேள்வி ஆகியிருக்கிறது, இதுவரைக்கும்? ஐந்தா?” என்று விசாரித்தான் கண்ணன். ஆனவை ஏழு என்று அவன் நன்றாக அறிவான். சகுந்தலாவிடம் சண்டை பிடித்து, கோபத்தில் அவள் முகம் எப்படிச் சிவக்கிறது என்பதைக்கண்டு ரசிக்கவே இந்த தந்திரம்.

ஆனால் சகுந்தலா முகம் சிவக்கவில்லை. “ஒன்பது” என்றாள் சாவதானமாக. கண்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. “ஒருகாலும் இல்லை! ஏழே ஏழுதான் ஆகியிருக்கிறது!” என்று கூச்சலிட்டான்.

“அப்படியானால் சரி. நீங்கள் இரண்டைக் குறைத்துச் சொன்னீர்கள், நான் இரண்டைக் கூட்டிச் சொன்னேன்,” என்று புன்னகை செய்தாள்.

“இன்னும் மூன்று கேள்வி உண்டு, இல்லையா?” என்று தனக்குள்ளேயே சொல்லியபடி, மோவாயைத் தடவிக்கொண்டான் கண்ணன். பிறகு, எப்போதோ கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டான்.”தமிழரா?”

“ஆம்,” என்றாள் சகுந்தலா.

“இரண்டே கேள்வி பாக்கி,” என்று அறிவித்தாள், பிஸ்கட் தகரத்தில் உதிர்ந்து கிடந்த தூளை வாயில் போட்டுக்கொண்ட ஜோதி.

பளிச்சென்று அப்போது ஒரு யோசனை உதித்தது, கண்ணன் மூளையில். அவன் முகம் பிரகாசம் அடைந்தது. ஒருகால்.. அப்படியும் இருக்குமோ? பரபரப்பை அடக்கிக்கொண்டு அவளை மெள்ள நோக்கினான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருகால் அவள் கண்ணனைத்தான் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாளோ? பொங்கியெழும் ஆவலைக் கஷடப்பட்டு உள்ளே அமுக்கி, “பட்டதாரியா?” என்றான்.

“இல்லை,” சந்தேகமே கிடையாது. அவன் ஊகித்தது சரிதான். அவள் சொன்ன ஒவ்வொரு பதிலும் அவனுக்கு அப்படியே பொருந்துகிறதே!

கடைசியாக ஒரு கேள்வி: “பிரம்மசாரியா?”

“ஆம்,” என்றாள் சகுந்தலா.

கண்ணன் புளகிதம் அடைந்தான். ஆனந்தம், பனிபோல் அவன் கண்களைத் திரையிட்டது.

“நான் நினைத்தது யாரை?” என்றாள் சகுந்தலா.

“நீங்களே சொல்லுங்கள், நான் தோற்றுவிட்டேன்,” என்றான் அவன். தன் பெயரை அவளே சொல்லவேண்டும் என்பது அவன் ஆசை.

சகுந்தலா தயங்கினாள். பிறகு, “காமராஜ நாடார்,” என்றாள்.

கண்ணனுக்கு பகீரென்றது. காமராஜ நாடாராவது!

“அடே! என்களாலே ஊகிக்க முடியவே இல்லையே!” என்று ஒருத்தி பாராட்ட, “நல்ல ஆளாகப் பிடித்தாய்!” என்று இன்னொருத்தி உதட்டைப் பிதுக்க, “இவருக்குக் கேள்வி கேட்கவே தெரியவில்லை!” என்று மற்றோருத்தி கண்ணனை இடித்துரைக்க, சகுந்தலாவின் கண்கள் அவனைப் பரிவோடு நோக்கி, அவனிடம் ஏதோ தெரிவிக்க முயன்று கொண்டிருந்தன. சிரிப்பை வரவழைத்துக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த நயன மொழி புரிந்தால்தானே? ‘முதலில்நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். கடைசியில் ஏனோ வெட்கம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. சம்யோசிதமாக பெயரை மாற்றிவிட்டேன்,” என்று அவள் சொல்லாமல் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை.

அப்புறம் ஏதேதோ விளையாடினார்கள். அவற்றிலெல்லாம் கண்ணன் மனம் ஈடுபடவில்லை.

— “நீ” யில் எஸ்.ஏ.பி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.