முகமூடி!
குடிசை வாசலில் முள் தாடியுடன் அமர்ந்திருந்தான் சிலுவை – எதிரே மடித்த கால்களின் மேல், தலையை வைத்து, அரைக் கண்கள் மூடியபடி படுத்துக் கிடந்தது மணி. ஊரெங்கும் கொரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவு.
குப்பை பொறுக்கும் சாக்கு, உள்ளே ஓரத்தில் கிடந்தது. ஒரு வாரமாக வருமானம் இல்லை. தாடியைச் சொறிந்த படி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் போலீஸைக் கண்டு, தோளிலிருந்த துணியால் மூக்கு, வாயை மூடினான். கிழிசலின் வழியே மூக்கு எட்டிப் பார்தது!
காலையில் நல்ல டீயும், பன்னும் தின்றுவிட்டு, தோளில் சாக்குடன் கிளம்பினால், ஒரு மணிக்குள் முனியன் கடையில் பொறுக்கியதைப் போட்டுக் காசு பார்த்து விடுவான் – மதிய சாப்பாட்டுக்கும், மாலை சாராயத்துக்கும் கவலை இல்லை. இந்த ஊரடங்கில், ஒரு டீ க்கே வழியில்லை!
தெரு முனை வரை வந்த மணியைத் துரத்தினான் – ‘எனக்கே வழியில்லை, இதுலெ நீ வேற’ என்பதைப்போல! ஓரத்தில் கிடந்த துண்டு பீடியை எடுத்து அழுக்குத் துணியில் துடைத்து, நெருப்புக்குத் தேடினான். முகமூடியுடன் வேகமாக சைக்கிளில் போனவன், நின்று, முகமூடியைக் கீழே இழுத்து, ஒரு சிகரெட் பற்ற வைத்தான். அவனருகில் சென்று ‘நெருப்பு’ என்றான். சிகரெட் பிடிப்பவன் இவனை ஏற இறங்கப் பார்த்து, வத்திப்பெட்டியைக் கொடுத்து விட்டு, ‘உன் முகமூடி கிழிந்திருக்கிறது – பாதுகாப்பில்லை’ என்றான். பெட்டியை திருப்பி வாங்கிக்கொண்டு, திறந்த வாயிலிருந்து புகை ஊதியபடி சைக்கிளை மிதித்தான்!
கிழிசல் வழியே பீடியை வலித்தபடி நடந்தான் சிலுவை – பழக்கம் காரணமாக அருகேயிருந்த குப்பைத் தொட்டியை நோண்ட, நீலக் கலரில் ஒரு மாஸ்க், ஒரு பக்க நாடா இல்லாமல் கையில் கிடைத்தது. உதறி, முகத்துக் கிழிசல் துணியைத் தோளில் போட்டுக் கொண்டு, முகமூடியை ஒருவாறு அணிந்து கொண்டான். பீடியைத் தொட்டியில் தேய்த்து, அணைத்து, காதில் சொருகிக் கொண்டான். ஏதாவது டீக்கடை தென்படுகிறதா என்று பார்த்தபடி சென்றான்.
கொரோனா பாஸிடிவ் தாத்தா அந்த வீட்டில் இருப்பதையோ, முதல் நாள் மாஸ்க்கைப் பாட்டி குப்பைத்தொட்டியில் போட்டதையோ, கார்ப்பொரேஷன் ஒட்டியுள்ள பச்சைப் போஸ்டரையோ சிலுவை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை!
ஜெ.பாஸ்கரன்.