மே 3 – சுஜாதாவின் பிறந்தநாள் . இதுசமயம் அவரது நினைவு நாளை நாம் கொண்டாடியது நினைவிற்கு வருகிறது.
பிப்ரவரி 28 சுஜாதா அவர்களின் நினைவு நாள். அதைக் குவிகம் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.
பிரபல நாடக இயக்குனர் தாரிணி அவர்கள் குவிகத்திற்காகச் செய்த சிறப்பு நிகழ்வு அது !
சுஜாதா அவர்களைப் பற்றிய ஒரு சிறந்த காணொளி ! பார்த்து மகிழுங்கள்!
அனுமதி’ என்ற சுஜாதாவின் நாடகம் குவிகம் மேடையில் நடைபெற்றது.
( இந்த நிகழ்வு பற்றி மார்ச் குவிகத்தில் ஏன் எழுதவில்லை என்று தாரிணி கோபித்துக் கொண்டார். அவர் கோபம் நியாயமானது. அதுவும் நாடகக் கலைஞர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி குவிகத்திற்காகச் செய்த சிறப்பு நிகழ்வு அது! அவர்களைக் குவிகத்தில் கொண்டாடியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியது என தவறு. அதற்காக அனைவரிடமும் மன்னிப்பை வேண்டுகிறேன்)
சுஜாதாவின் ‘அனுமதி’ கதைச் சுருக்கம் இதோ:
நேர்மையான தந்தை. படித்து முடித்த மகனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்று தவிக்கும் தாய். சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞன் மகன். தந்தையின் நேர்மைக்கு அலுவலகத்தில் ஒரு சோதனை . சட்டத்தை மீறி ஒரு திட்டத்துக்கு அனுமதி கோரும் ஒரு பணமுதலையின் கையாள் . அதற்கு விலையாக அவன் தருவது வேலைக்காக அவர் மகன் எழுதப்போகும் நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள் ! அப்பா சபலத்தில் ஊசலாடி சரி என்கிறார். மாதிரிவினா என்று அவனிடம் உண்மையான தேர்வின் வினாத்தாள் கொடுக்கப்படுகிறது. பையன் தேர்வுக்கு செல்கிறான். விஷயத்தைப் புரிந்து கொள்கிறான். வெறும் பேப்பரைக் கொடுத்துவிட்டு வீடு திரும்புகிறான். ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டானே என்று தாய் துடிக்கிறாள். தன் காரணமாக தந்தையின் நேர்மை சரியக்கூடாது என்று மகன் சொன்னதைக் கேட்ட தந்தை பெருமிதத்துடன் அவனை அணைத்துக் கொள்கிறார்.
தந்தையாக ஸ்ரீராமனும் தாயாக அனுராதாவும் மகனாக ஆதித்யாவும் அனுமதி கேட்பவராக பரமேஸ்வரனும் நடிக்கவில்லை; மேடையில் வாழ்ந்து காட்டினார்கள்.
சுஜாதாவின் உயிருள்ள கதைக்கு மெருகூட்டியவர் தாரிணி.
ஒரு நிறைவான நாடகத்தைப் பார்த்த பெருமித்துடன் விடைபெற்றோம்.