சமீபத்தில் சிக்மகளூர் சென்றிருந்தேன்.
மலை வாசஸ்தலமாகவும் இல்லாமல் அழகிய இயற்கைக் காட்சிகள் பெரிதாக இல்லாமல் பொழுது போனது.
இருந்தும் அங்கே ஒரு ராமர் கோவில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.
வழக்கம் போலக் கோவில் தரிசனங்கள் தான் என நினைத்துக்கொண்டு விசாரிக்க ஒரு அழகான சிறிய கோவில் மட்டும்தான் இங்கு ராமர் கோவில் என்று வழிகாட்டினர்.
அழகான சன்னதிதான் இருந்தும் சற்றே சமீபகாலத்தியது. ஆனால் எனக்கு விவரம்தந்தவர்கள் அது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் எனச் சொல்லி இருந்தனர்.
இதுதான் அந்த கோவிலாக இருக்க வேண்டும் என நினைத்து யாருமே இல்லாத அந்த சன்னதியில் வலம் வந்தோம்.
மணியோ இரவு 7 அந்த நேரம் பார்த்து இளம் தம்பதிகள் இருவர் உள்ளே வந்து ராமனைத் தரிசித்தனர்.
பின்னர் அந்த இளைஞன் என்னிடம் இந்த ஊர் ராமன் கோவில் இதுதானா ஆனால் 1200 வருட. பழமையான கோவில் ஒன்று இருக்கிறதாமே உங்களுக்குத் தெரியுமா எனக்கேட்டு என் ஆவலைத் தூண்டினான்
நாங்களும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் எனச் சொல்ல அவர்கள் சென்று விட்டனர்.
ஹோட்டலுக்குச் செல்ல வேண்டியவர்கள் மீண்டும் ராமனைத்தேடினோம் ஆட்டோ காரர்களை விசாரித்ததில் இதே ராமரையே காட்டினர்.
ஒரே ஒருவர் மட்டும் நாங்கள் பேசிய ஹந்தி தமிழ் ஆங்கிலம் எல்லாவற்றையும் என்ன புரிந்து கொண்டாரோ ஒரு பழமையான கோவில் இருக்கிறது என கை காட்டினார்.
மணியோ 7 30. அங்கு விரைந்தோம்.
நள்ளிரவு போலக் கும்மிருட்டு தோட்டங்களுக்கு நடுவே பழமையான கோவில்!
ஓ இதுதான் அந்த ராமன் சன்னதி என வேகமாக உள்ளே நுழைந்தோம் வைணவ தலங்களுக்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை
அர்ச்சகர் வரவேற்றார் ‘ ராமர் கோவில் இதுதானா ?’எனக்கேட்பதற்கு வாய் திறக்குமுன் ஈஸ்வரன் அருள் பாலித்தார்
அது ஒரு அழகான சிவன் கோவில் ஸ்வாமியின் பெயர் போலா ராம ஈஸ்வரன்!
இங்கும் ராமனா சரி !
இதுதான் போலும் எனத் தீர்மானித்துத் திரும்ப இருந்தவர்களிடம் இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நீங்கள் தேடும் ராமர் கோவில் இருக்கிறது ஆனால் வேகமாகப் போகவேண்டும் 8 30 க்கு கோவில் சாத்தி விடுவார்கள் என ஹிந்தியில் சொல்ல மீண்டும் துரத்தினோம் வழி கண்டு பிடிப்பது சிரமமாகத்தான் இருந்தது.
மூன்றாவது கிலோமீட்டருக்கு அருகே அழகிய தென்னாட்டுக் கோபுரம் வடகலை நாமம் தாங்கி நின்றது.
கண்டேன் என் ராமனை என என் மனைவி கூவவில்லை அவ்வளவுதான் சன்னதிக்குள் விரைந்தோம்.
அழகிய ராமர் சீதா லக்ஷ்மண ஹனுமன் சமேதராக வீற்றிருந்தார் அர்சனை செய்தோம் தீர்த்தம் பெற்றுக்கொண்டு தல புராணம் கேட்க நினைத்து இந்த கோவில் 1200 வருடங்கள் பழமையானதாமே அதைப்பற்றிச் சொல்லுங்கள் எனக்கேட்க பட்டர் ‘இது அவ்வளவு பழமை இல்லையே ‘என்று ஒரு ராம பாணத்தை வீசினார்.
அப்ப அந்த ராமர்…..
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முயன்று பாருங்கள் கோவில் மூடியிருப்பார்கள் என்றார்.
இது என்ன தொடரும் சோதனைகள். இன்று போய் நாளை வரவும் முடியாது. பெங்களூர் திரும்ப வேண்டும்.
எல்லோரும் சோதித்தால் ராமனை வேண்டலாம் ராமனே சோதித்தால்…. என்ற தவளை போல விரைந்தோம்.
கோவில் மூடி இருந்தார்கள் இளைஞர் ஒருவர் வாசலில் நின்றிருந்தார்.
தரிசனம் பண்ண வந்தேளா அதான் காத்திண்டு இருக்கேன் என்றார் .
நாங்க வரோம்னு எப்படித் தெரியும் எனக் கேட்க என்னமோ உத்தரவு வந்தது என்றார்.
அவர்தான் அந்த கோவில் பட்டராம் மூடப்பட்ட கோவில் திறக்கப்பட்டது பூட்டி இருந்த சன்னதி கதவுகள் விலகின ராமரும் சீதையும் லட்சுமணனும் பிரகாசமாகத் தரிசனம் தந்தனர் அதன் கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர் கோவில் தல புராணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
இது பரசுராமனுக்கு ராமன் திருமணம் முடிந்தவுடன் தரிசனம் தந்த இடமாம் சத்திரியர்களைக் கொல்லும் விரதம் பூண்டிருந்த பரசுராமர் ராமனும் சத்திரியன் எனப் போர் செய்து தோற்றுப் போகிறார்.
நானே விஷ்ணுவின் அவதாரம் என்னை ஜெயிப்பவன் விஷ்ணுவைத்தவிர வேறு யார் எனக் கேட்க ராமன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தாராம் எப்போதும் ராமனுடன் காட்சி தரும் அனுமன் இங்கில்லை காரணம் இந்த கால கட்டத்தில் ராமன் அனுமன் சந்திப்பு நிகழ வில்லை
நேரம் 9 30. ஒரு பெண் எங்கள் பின்னாடி நின்று கொண்டிருந்தாள்.
விடை பெறும் நேரம்.
பட்டர் பெயர் கேட்டேன் விஷ்ணு என்றார் கண்ணன் என்றேன்.
கோவில் பிரதான பட்டர் பெயர் கண்ணன் என்றார்.
புறப்படும் நேரம் அந்த இளம் பெண் ராம நாமம் 108 முறை எழுதிவிட்டு போங்கள் என பேப்பர் பேனா கொடுத்தார் அந்த பெண் திருமணமாகிக் குடியிருப்பது திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் அருகேயாம்.
எதை எண்ணி வியப்பது ?
பழமையான கோவிலைத்தேடிவந்து எங்களையும் தேட வைத்த அந்த இளம் தம்பதியை நினைத்தா?
ஒரு ராமனுக்கு மூன்று ராமனும் ஒரு ராமேஸ்வரனும் தரிசனம் தந்ததையா!
விஷ்ணு வெளியே காத்திருந்து தரிசனம் செய்வித்ததையா!!
கோவில் மூடிய பின் ஒரு பெண் வந்து ராம நாமம் எழுதச் சொன்னதையா!
நிறைவுடன் திரும்பினோம்.