(சென்ற மாதம் திரு என் செல்வராஜ் வல்லிக்கண்ணன் சுயசரிதையிலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகளைத் தந்ததைப் பார்த்தோம்.
அதை இன்னொரு கோணத்தில் பார்க்கிறார் எஸ் கே என் )
- இப்போது இணையவழிக் கூட்டங்கள் நிறைய நடக்கின்றன. அதில் ஒரு கருத்து வெளியிடப்பட்டது:
நாம் பல செய்திகளை ஆவணப்படுத்துவது இல்லை. எல்லோரும் தங்கள் முன்னோர்கள் மற்றும் குடும்ப வரலாற்றை எழுதிவைக்கவேண்டும். யாரோ ஒருவருக்கு தேவைப்படும் செய்தி அதில் கிடைக்கக்கூடும்.
- சில மாதங்களுக்கு முன் பேச்சுவாக்கில் ஒரு பிரபல எழுத்தாளர் ஒரு கருத்தினைச் சொன்னார்:-
“இதற்கு விதிவிலக்குகள் கட்டாயம் உண்டு. என்றாலும் நடைமுறையில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. உண்மையான நடப்புகளை கற்பனைப் பெயர்கள் வைத்து எழுதினால் அது புனைவு. உண்மையான பெயர்களை வைத்து நடப்புகளைத் திரித்து எழுதினால் அது வாழ்க்கை வரலாறு.”
- ஒரு வாழ்க்கை வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது என்று ‘அம்பலம்’ மின்னிதழில் இருபது வருடங்களுக்கு முன்பு ‘மோளம்’ என்னும் புனைப்பெயரில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்.
உண்மையில் நடந்தது | வரலாற்றில் எழுதப்படுவது | |
தணிகாசலத்துக்கு ஆறு வயதாக இருக்கும்போது வழக்கம்போல மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிப் போனான். மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு குட்டிநாய் அவனைக் குறிபார்த்துத் துரத்தி வரவும், பயந்து அலறி ”ஐயோ, செத்தேன்’ என்று கத்திக் கொண்டே ஓடிப்போய் அருகிலிருந்த தென்னை மரத்தில் ஏறிக் கொண்டான் தணிகாசலம். | ஆறாம் வயதிலிருந்தே இவருடைய பொதுத் தொண்டு ஆரம்பமாகி விட்டது என்று கூறலாம். ஒருநாள் இவர் தனிமையை நாடி (அப்போது முதலே சிந்திப்பதற்கு தனிமையை நாடிச் செல்வது இவர் வழக்கமாயிற்று) ஊரின் புறத்தே உள்ள ஓரிடத்திற்குச் சென்று இருந்தார். அப்போது சிந்தனை வயப்பட்டிருந்த இவர் மீது ஒரு ஓநாய் பாய்ந்தது. அஞ்சா நெஞ்சனாகிய நம் தலைவர், கையிலிருந்த குறுந்தடியால் அதன் மண்டையைப் பிளந்தார். அதுவும் ஒரே அடியில்! ஊர் மக்கள் அனைவரும் இவர் வீரத்தைப் பாராட்டி ‘ஓநாயின் தொல்லை ஒழிந்தது’ என்று நிம்மதியாக வாழத் தொடங்கினர்.
|
|
அவனுக்கு அப்போது வயது பன்னிரண்டு. ஒருநாள் மாலை பள்ளியிலிருந்து திரும்பும்போது அந்த ஊர் மசூதி வழியாக வந்து கொண்டிருந்தான். மாடப்புறா ஒன்று மசூதி சுவரில் உட்கார்ந்து தானியத்தைக் கொறித்துக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் ‘லபக்’ கென்று அதைப் பிடித்து வேட்டிக்குள் மறைத்து வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டான் தணிகாசலம். மசூதியைச் சேர்ந்த அல்லாபிச்சை எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவன் புறாவை தர மறுத்து விட்டதோடு, அவன் அதை ஐந்து ரூபாய்க்கு அசலூரில் வாங்கியதாகவும் சாதித்தான் | தலைவர் தணிகாசலம் அப்போது பனிரெண்டே பிராயத்தினர். அந்த வயதிலும் அவர் மனதில் கருணை உணர்ச்சி காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. ஒரு சமயம் பள்ளிவாசலைச் சேர்ந்த மாடப்புறா ஒன்றை கழுகு ஒன்று குறிபார்த்துப் பாய்ந்தபோது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சுவரின் மீது அவர் ஏறி, புறாவை மீட்டு, வீடு கொணர்ந்து சேர்த்தார். ஏமாற்றமடைந்த கழுகு அதற்குப்பிறகு அவரை எங்கு கண்டாலும், தன் கூரிய அலகினால் கொத்தித் துன்புறுத்தத் தொடங்கியது. ஆனாலும் ஊர்மக்கள் அவரை ‘புறா காத்த புண்ணியர்’ என்று போற்றத் தலைப்பட்டார்கள்.
|
|
அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் தணிகாசலம். படிப்போ ஏறவில்லை. அவனுடைய நாட்டமெல்லாம் எதிலோ இருந்தது. ஒரு நாடகம், நாட்டியம், சினிமா விடமாட்டான். நடிகர்கள் யாராவது அந்த ஊருக்கு வருகிறார்கள் என்றால், அவர்கள் புறப்பட்டுப்போகும் வரையில் அவர்கள் தங்கியிருக்கும் விடுதி வாசலிலேயே பழிகிடப்பான். இறுதி தேர்வின்போது இப்படித் தவம் கிடந்து விட்டு, அரைமணி நேரம் கழித்துப் போனான். அவனிடம் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அதை அப்படியே விடைத்தாளில் எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறினான்.
|
ஏட்டுப் படிப்பில் என்றுமே இவர் மனம் சென்றதில்லை. உலக அறிவு பெற வேண்டுமென இவருடைய உள்ளம் துடித்தது. அதைத் தேடி அலைந்தார். கலை ஆர்வம் மிகுந்தவராய், ரசிகராய் விளங்கினார். இறுதிப் பரீட்சையும் வந்தது. எல்லோரையும் கலங்க வைக்கும் கணிதத் தேர்வுக்கு காலம் கழித்துச் சென்றாலும் அடுத்த கால் மணி நேரத்துக்குள்ளேயே ஆசிரியர்கள் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும்படி விடைத் தாளில் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினார் நம் அரும்பெரும் தலைவர் தணிகாசலம் அவர்கள். | |
சிவகாமி என்றொரு பெண். எடையைக் குறைத்துப் போட்டு ஏமாற்றுவதில் கைதேர்ந்த ஏகாம்பரம் என்கிற மளிகைக் கடைக்காரர் மகள் அவள். அரும்பு மீசை இளைஞனான தணிகாசலத்துக்கு அவள் மீது காதல் ஏற்பட்டது. பல விதங்களில் முயன்று பார்த்தான். முதலில் அவளுக்குக் கடிதம் எழுதினான். அதை அவன் முகத்திலேயே விட்டெறிந்தாள் சிவகாமி! தெருவிலே சந்தித்து, பேச்சு கொடுத்தான். அவள் செருப்பைக் கழற்றி ‘ஜாக்கிரதை!’ என்று எச்சரித்தாள். பிறகு நண்பனை தூது விட்டான். ஏகாம்பரம் கொடுத்த உதையில் தூதுபோனவன், கைக்கு கட்டுப்போட புத்தூருக்குப் போனான். கடைசியில் வேறு வழியின்றி, ஏகாம்பரத்தின் மளிகைக் கடையிலேயே இலவசமாகப் பொட்டலம் கட்டிக் கொடுக்க முன் வந்தான் தணிகாசலம். தன்னைவிட தணிகாசலம் ஏமாற்று வித்தைகளில் தேர்ச்சி பெற்றிருந்ததைக் கண்டு, இப்படிப்பட்ட ஆளை நாம் கட்டாயம் கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, ஏகாம்பரம் தன் மகளை அவனுக்கே மணம் செய்து கொடுத்தார். | குமரப் பருவத்தில் அடியெடுத்து வைத்ததுமே இவரது வாழ்க்கையிலும் காதல் அரும்பியது. நேர்மையையும், நாணயத்தையும் தராசின் இரு தட்டுகள் போல பாவித்து வந்த வணிகப் பெருமகனார் ஒருவரின் மகள்பால் இவரது மனம் சென்று லயித்தது. ஆனால் சிவகாமி என்ற பெயர் கொண்ட அவ்வம்மையாரோ இவரை உடனே ஏற்றுக் கொள்ளாமல் பல சோதனைகளை நடத்திப் பார்த்தார்கள். அவற்றிலெல்லாம் வெற்றி கண்டு அன்னாரின் தந்தையின் ஆசியும் பாராட்டும் பெற்று அம்மையாரின் கரம் பற்றினார் நம் தலைவர் பெருந்தகை அவர்கள். |