இம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே

படம்: பயணங்கள் முடிவதில்லை
பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இதில் வரி அழகா? இசை அழகா?  இரண்டும் சேர்ந்ததால் அழகா? சொல் மனமே !

 

 

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

 

நீ – எஸ் ஏ பி

குமுத்தில்  எஸ் ஏ பி அவர்கள் எழுதிய தொடர்கதை ‘நீ’ 

அதில் எழுதப்பட்ட ஒரு பக்கத்தைப் படித்தால் இன்றைக்கும் சிறப்பாக இருக்கும்! 

அதைதான் கடுகு அவர்கள் தன்னுடைய வலைப் பதிவில் எழுதியுள்ளார். 

படித்து மகிழ்வோம். 

நன்றி: கடுகு

நன்றி: http://jeeveesblog.blogspot.com/2009/10/blog-post_04.html

 

 

 

பிறகு, “நான் ஒரு விளையாட்டுச் சொல்லுகிறேன், விளையாடலாமா?” என்றாள், சகுந்தலா.

“ஓ,” என்றார்கள் மற்றவர்கள், குதூகலத்துடன்.

“நம் எல்லோருக்கும் தெரிந்த யாராவது ஒருத்தரைப்பற்றி நான் நினைத்துக் கொள்வேன். அது யாரென்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றாள் சகுந்தலா.

“நீ மனத்துக்குள்ளே நினைத்திருக்கிறது எங்களுக்கு எப்படித் தெரியும்!” என்று ஆச்சரியப்பட்டாள் லில்லி.

சகுந்தலா அவளை கையமர்த்தினாள். “கொஞ்சம் பொறேன்?.. நீங்கள் ஒவ்வொன்றாகப் பத்துக் கேள்வி கேட்கலாம். என்கிட்டேயிருந்து வருகிற பதிலிலிருந்து, என் மனத்தில் உள்ளதைக் கண்டு பிடித்துவிடவேண்டும். பத்துக் கேள்வி கேட்டும் உங்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் தோற்றுப்போனதாக அர்த்தம்.”

“அதற்குப் பத்து கேள்வி எதற்கு!” என்று புருவங்களை உயர்த்தினான் கண்ணன். “ஒரு கேள்வி போதுமே? ‘நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டால் போயிற்று!”

“அதுதானே நடக்காது!” என்று மறுத்தாள் சகுந்தலா, அழுத்தம் திருத்தமாக. “நீங்கள் கேட்கிற கேள்விக்கு, ‘ஆமாம், இல்லை’ என்று மட்டும் தான் பதில் சொல்வேன்!”

“அப்படியா? ஆனாலும் பத்துக்கேள்வி ரொம்ப அதிகம் என்று தோன்றுகிறது,” என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான் கண்ணன்.

“அதிகமா குறைவா என்பது விளையாடிப் பார்த்தாலல்லவா தெரியும்? எங்கே, நான் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?” என்று சவால் விட்டாள் சகுந்தலா.

உற்சாக மிகுதியில் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தார்கள். சகுந்தலா காதைப் பொத்திக்கொண்டு விட்டாள். “ஒருவர் தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கலாம். குறுக்கே பேசக்கூடாது!” என்று விதி வகுத்தாள்.

“நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா?” என்றான், கண்ணன்.

சகுந்தலா வாயை இறுக மூடிக்கொண்டு பேசாமல் இருந்தாள்.

கண்ணன் விழித்தான் பிறகு, மற்றவர்களைப்பார்த்து, “என்ன இது! இப்படிப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தால்?” என்று புகார் செய்தான்.

“உண்டு, இல்லை, என்று நான் பதில் சொல்லலாமே தவிர, ஆண், பெண் என்று சொல்லக் கூடாது. ஆணா என்று ஒரு கேள்வி கேளுங்கள். அப்புறம் பெண்ணா என்று இன்னொரு கேள்வி கேளுங்கள்,” என்றாள் சகுந்தலா.

“ஓஹோ என்றானாம்! இப்படிக் கேட்டால் பத்து என்ன, இருபது கேள்வி கேட்டாலும் போதாது. ஆணா என்கிறா கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால், பெண் என்று முடிவு கட்டிக்கொள்ள முடியாதாக்கும்?.. சரி, சொல்லுங்கள், ஆணா?”

“உம்,” என்றாள் சகுந்தலா.
“ஆமா என்று வாயைத்திறந்து சொல்லுங்கள்.”
“ஆமா.”
“சுமாராக என்ன வயதிருக்கும்?”
சகுந்தலா மெளனம் சாதித்தாள்.
“அவள் தான் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளே, உண்டு இல்லையென்று மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று?” என்று ஞாபகப் படுத்தினாள் லில்லி.
“மறந்துவிட்டேன்,” பேருக்கு ஒரு தரம் தலையில் குட்டிக்கொண்டான் கண்ணன்.
“டாக்டரா?”
“இல்லை.”
“வக்கீலா?”
“இல்லை.”
“இஞ்ஜினியரா?”
“இல்லை.”
“எழுத்தாளரா?”
“இல்லை.”
“ஓவியரா?”
“இல்லை.”
“நடிகரா?”
“இல்லை.”
“பின்னே யார், உங்கள் வீட்டுப் பால்காரரா?” என்றான் கண்ணன், ஆத்திரத்துடன்.

“சகுந்தலா, “இல்லை,” என்று விடையிறுத்தது, மற்றவர்களின் சிரிப்பொலியில் மூழ்கிற்று.
அவள் விரலை மடக்குவதைக் கவனித்த கண்ணன் திகைப்புடன், “அதையும் ஒரு கேள்வியாகக் கணக்குப் பண்ணிவிட்டீர்களா என்ன? நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்!” என்று மன்றாடினான்.

“நீங்கள் விளையாட்டுக்காகக் கேட்டிருக்கலாம், நான் வினையாகத்தான் பதில் சொன்னேன்!” என்றாள் சகுந்தலா, நெஞ்சில் ஈரமில்லாமல்.

ஜோதியும் லில்லியும் பஞ்சாயத்துப் பண்ணிய பிறகே சகுந்தலா விட்டுக்கொடுத்தாள்.

“உஸ். அப்பாடா. எத்தனை கேள்வி ஆகியிருக்கிறது, இதுவரைக்கும்? ஐந்தா?” என்று விசாரித்தான் கண்ணன். ஆனவை ஏழு என்று அவன் நன்றாக அறிவான். சகுந்தலாவிடம் சண்டை பிடித்து, கோபத்தில் அவள் முகம் எப்படிச் சிவக்கிறது என்பதைக்கண்டு ரசிக்கவே இந்த தந்திரம்.

ஆனால் சகுந்தலா முகம் சிவக்கவில்லை. “ஒன்பது” என்றாள் சாவதானமாக. கண்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. “ஒருகாலும் இல்லை! ஏழே ஏழுதான் ஆகியிருக்கிறது!” என்று கூச்சலிட்டான்.

“அப்படியானால் சரி. நீங்கள் இரண்டைக் குறைத்துச் சொன்னீர்கள், நான் இரண்டைக் கூட்டிச் சொன்னேன்,” என்று புன்னகை செய்தாள்.

“இன்னும் மூன்று கேள்வி உண்டு, இல்லையா?” என்று தனக்குள்ளேயே சொல்லியபடி, மோவாயைத் தடவிக்கொண்டான் கண்ணன். பிறகு, எப்போதோ கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டான்.”தமிழரா?”

“ஆம்,” என்றாள் சகுந்தலா.

“இரண்டே கேள்வி பாக்கி,” என்று அறிவித்தாள், பிஸ்கட் தகரத்தில் உதிர்ந்து கிடந்த தூளை வாயில் போட்டுக்கொண்ட ஜோதி.

பளிச்சென்று அப்போது ஒரு யோசனை உதித்தது, கண்ணன் மூளையில். அவன் முகம் பிரகாசம் அடைந்தது. ஒருகால்.. அப்படியும் இருக்குமோ? பரபரப்பை அடக்கிக்கொண்டு அவளை மெள்ள நோக்கினான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருகால் அவள் கண்ணனைத்தான் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாளோ? பொங்கியெழும் ஆவலைக் கஷடப்பட்டு உள்ளே அமுக்கி, “பட்டதாரியா?” என்றான்.

“இல்லை,” சந்தேகமே கிடையாது. அவன் ஊகித்தது சரிதான். அவள் சொன்ன ஒவ்வொரு பதிலும் அவனுக்கு அப்படியே பொருந்துகிறதே!

கடைசியாக ஒரு கேள்வி: “பிரம்மசாரியா?”

“ஆம்,” என்றாள் சகுந்தலா.

கண்ணன் புளகிதம் அடைந்தான். ஆனந்தம், பனிபோல் அவன் கண்களைத் திரையிட்டது.

“நான் நினைத்தது யாரை?” என்றாள் சகுந்தலா.

“நீங்களே சொல்லுங்கள், நான் தோற்றுவிட்டேன்,” என்றான் அவன். தன் பெயரை அவளே சொல்லவேண்டும் என்பது அவன் ஆசை.

சகுந்தலா தயங்கினாள். பிறகு, “காமராஜ நாடார்,” என்றாள்.

கண்ணனுக்கு பகீரென்றது. காமராஜ நாடாராவது!

“அடே! என்களாலே ஊகிக்க முடியவே இல்லையே!” என்று ஒருத்தி பாராட்ட, “நல்ல ஆளாகப் பிடித்தாய்!” என்று இன்னொருத்தி உதட்டைப் பிதுக்க, “இவருக்குக் கேள்வி கேட்கவே தெரியவில்லை!” என்று மற்றோருத்தி கண்ணனை இடித்துரைக்க, சகுந்தலாவின் கண்கள் அவனைப் பரிவோடு நோக்கி, அவனிடம் ஏதோ தெரிவிக்க முயன்று கொண்டிருந்தன. சிரிப்பை வரவழைத்துக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த நயன மொழி புரிந்தால்தானே? ‘முதலில்நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். கடைசியில் ஏனோ வெட்கம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. சம்யோசிதமாக பெயரை மாற்றிவிட்டேன்,” என்று அவள் சொல்லாமல் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை.

அப்புறம் ஏதேதோ விளையாடினார்கள். அவற்றிலெல்லாம் கண்ணன் மனம் ஈடுபடவில்லை.

— “நீ” யில் எஸ்.ஏ.பி.

கோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்

தனிமையிலே இனிமை காண முடியுமா? 

அதுவும் கொரானா கதவடைப்புக் காலத்தில் தனிமையை சமாளிக்க முடியுமா? 

முடியுமே! 

இந்த மாதிரி குறும் நாடகங்களைப் பார்த்தால்  தனிமையை ரசிக்க முடியும் ! 

பார்த்து ரசியுங்கள்!

 

 

 

 

 

 

கோடை – செவல்குளம் செல்வராசு

குளுகுளு ஊட்டியான தக தக சென்னை ...

 

கோடைச் சூரியன் உமிழ்ந்த

ஒட்டுமொத்த வெயிலையும்

வெக்கையாய்க் கீழிறக்கிக் கொண்டிருக்கிறது

ஓட்டு வீடு.

தூங்க முடியாமல்

முதுகு நனைந்து படுத்துக்கிடக்கையில்

எப்படியோ வந்து தொலைத்தது ஆசை.

 

“கடைசியா பங்குனி உத்திரத்து அன்னைக்கு…

பத்து நாள் ஆச்சு”

மெதுவாகத் தொட்டுத் திருப்பிய விரல்களுக்கு

கிளர்ச்சி வயப்பட்டு

மெதுவாக மேலேறிப் படர்ந்தபோது

‘சொத்தென’ முதுகில் விழுந்தது ஏதோவொன்று.

 

பதறியபடி உதறி எழுந்து பார்த்தபோது

‘சின்னவ’ தலைமாட்டில் கிடந்தது

செந்தேள்க் குஞ்சொன்று. 

 

‘பெரியவ’ எழுந்து “அம்மா தண்ணீ” ன்னா

தேள் எடுத்துப் போட்டு

நீர் எடுத்துக் கொடுத்து

பாய் திரும்பி

விட்டம் பார்த்துக்கிடந்தோம்

ரகசியமாய்ப் புன்னகைத்தாள் !

வெக்கையும், வேட்கையும்,

விரக்தியும் ஏமாற்றமும் கசிய.

மொத்தமாய்க் கலைந்துவிட்டது

 

இனி மேகங் கூட எத்தனை நாளாகுமோ?

இந்தக் கொடுங் கோடையில்.

 

அம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் !

அம்மா கை உணவு (27)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
5. ரசமாயம் – ஜூலை 2018
6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
21. அவியல் அகவல் நவம்பர் 2019
22. சாம்பார் சக்தி டிசம்பர் 2019
23. உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
24. சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
25. துவையல் பெருமை மார்ச் 2020
26. பொடியின் பெருமை ஏப்ரல் 2020

27. கீரை மகத்துவம் !

முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்.

எளிமையின் இலக்கணமே !
ஏழைக்கேற்ற காய்கறியே !
எவருக்கும் எட்டிவிடும் உணவுகளில் உத்தமனே !
ஊருக்கு உபயோகம் உனைப்போலே யாரும் இல்லை !

காய்கறிகள் அனைத்துமே உடலுக்கு ஏற்றவைதான் –
அளவு கூடிடிலோ அமிர்தமும் நஞ்சாகும் !
எத்துனைதான் உண்டாலும் ஏதுகுறை எனும் விதமாய்
இருப்பது ஒன்றேதான் – அதுவே எம் கீரை என்போம் !

ஒன்றா இரண்டா கீரையிலே வகை தொகைகள் !
வரிசையாய் வந்துவிடும் கீரை பெயர் சொல்லிடிலோ !
இன்றுரைப்பேன் உலகத்தீர் எம் கீரை பெருமையினை –
ஏற்றிடுவீர் என்றே நான் இப்போதே பகர்கின்றேன் !

முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, முடக்கத்தான் –
பாலக் பசலை பொன்னாங்கண்ணி அவள் !
மணத்தக்காளி மற்றும் முருங்கையும் ஒரு கீரை !
எதைச் சொல்வேன் இப்படி எத்தனையோ பல கீரை !

கடைந்திடலாம் அள்ளி அள்ளி ருசித்திடலாம் !
துவையல் செய்திடலாம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம் !
மோர்க்கீரை செய்து விட்டால் பாத்தி கட்டி அடித்திடலாம் !
யார் கீரை வெறுத்திடுவார் ? அதன் சுவையை மறுத்திடுவார் ?

உயர்ந்த குணம் , உயர்ந்த மனம், உயிர் சக்தி உயர்த்திடுமே !
சத்தைக் கொடுக்கும், நமக்கு சத்தியமாய் கை கொடுக்கும் !
பார்த்தால் புரியாது, பகட்டு எதுவும் கிடையாது !
என் அன்னை அன்பினைப் போல் விலை மதிக்க முடியாது !

***********************************************
ஜி.பி. சதுர்புஜன்
E Mail: kvprgirija@gmail.com Ph: 98400 96329

பழைய கடன்!- தில்லைவேந்தன்

நீ போ அம்மா வந்திடுவா என்ற ...

பழைய கடன்!

நேற்றுக் குறித்த  பேச்செல்லாம்
     நினைவு நிழலின் வீச்சாகும்.
ஆற்றில் சென்ற வெள்ளத்தில்
     அடுத்த நாளும் குளிப்பதுண்டோ?
போற்றி அழைத்த போதினிலும்
     போன காலம் வந்திடுமோ?
காற்றில் கரைந்து போயிற்றோ?
     கண்முன் மறைந்து போயிற்றோ?

கடந்த காலக் கிழிசலினைக்
     கண்டு தைத்துச் சரிசெய்ய
உடைந்து   போன      ஊசியேனும்
      உலகில்  இன்று  கிடைத்திடுமோ?
நடந்து முடிந்த அத்தனையும்
     நன்றோ, தீதோ, எதுவெனினும்
கிடந்து துடித்துப் புலம்புவதால்
     கிடைக்கும் பயன்தான் ஒன்றுண்டோ

மணிகள், நாட்கள், மாதங்கள்
     மறைந்த காலச் சேதங்கள்.
துணியும் இற்றுக் கிழிவதைப்போல்
     தொலைந்த காலம் அழிந்திடுமே.
அணியும் உடையும் நைந்துவிடும்
       அழியும் உடலும் மறைந்துவிடும்.
பணிகள் ,கடமை  முடித்திடுவோம்
      பழைய கடனைக் கழித்திடுவோம்!

                                     

வீரப்பெண்மணி! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

 

உலகின் முதல் தற்கொலைப் போராளி ...

பெண்ணே இன்று 

வீட்டிலே நீ
அடைந்து கிடக்கும்
கூண்டுக் கிளியல்ல
நாட்டையே ஆளும்
வீரப்பெண்மணி!

நீ நிற்கும்
நெடுமரம் அல்ல
நீரில் மிதக்கும் மரக்கலம்!
அனைவருக்கும்
அடைக்கலம் தரும்
வீரப்பெண்மணி!

நீ
அலங்காரப் பதுமையல்ல
அணி வகுத்து
நாட்டைக் காக்கும்
வீரப்பெண்மணி!

நீ
பயனில்லாக்
காட்டுப் பூ அல்ல
மக்கள் விரும்பும்
மணமிக்க மலர் !

நீ
பாலியல் தொந்தரவு
கண்டும் கேட்டும்
பதுங்கும் பூனையல்ல
பாயும் பெண் புலி !

நீ
நுகர்ந்து எறியும்
மலரல்ல
அனைவரும் விரும்பும்
சந்தன மலர்கள் !

நீ
இன்று வன்கொடுமை
கண்டும் கேட்டும்
வளைந்து செல்லும்
நதியல்ல
ஆர்பரிக்கும் கடல்!

நீ
பெண் உரிமைக்காக
மண்டியிடாமல்
வீரத்துடன் போராடி
உயிர் விடும்
கவரி மான்!

நீ
வெள்ளத்தில்
அடித்துச் செல்லும்
காட்டு விலங்கல்ல
இல்லத்தில்
தீப ஒளி வீசும்
குத்து விளக்கு !

நீ
நீரோட்டம் அல்ல
மனித உள்ளங்களை
உணர்ந்து செல்லும்
உயிரோட்டமுள்ள

வீரப்பெண்மணி!

 

சிரி சிரி சிரி – ஹேமாத்ரி

அந்த கோட்டைத் தாண்டி வாங்க – சிரி ...Laughing with tears and pointing emoticon Vector Image

சிரி,
*கஷ்டம்  குறையும்…*
சத்தமாய் சிரி,
*சந்தோஷம் கூடும்…*
நண்பர்களுடன் சிரி,
*தனிமை விலகும்…*
சொந்தங்களுடன் சிரி,
*நேரம் இனிக்கும்….*
பாசத்துடன் சிரி,
*தாய்மை மலரும்…*
உதவிசெய்து சிரி,
*போற்றும் உலகம்…*
உழைத்துவிட்டு சிரி,
*வாழ்க்கை அர்த்தமாகும்..*
சிரிக்கவைத்து சிரி,
*ஜீவன் சக்திபெறும்…*
உண்மையாய் சிரி,
*கடவுள் கண்முன் தோன்றும்…*
உனக்குள் மட்டும் சிரி,
*கடந்து போகும் இதுவும்…*

கடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

எனது இந்த மொட்டைமாடி – The blue jay <3

 

மொட்டை மாடி !

முதன் முதலில் நான் பார்த்த ‘மொட்ட மாடி’ எதிர் வீட்டு மணிச் செட்டியார் கட்டிய மாடி வீட்டில்தான்! நாங்கள் இருந்த அந்தத் தெருவில் எல்லாமே ஓட்டு வீடுகள் – முற்றம் உண்டு, மாடி கிடையாது! கிரகப்ரவேசத்துக்குப் போன நான், அருகிலிருந்த இரும்பு ஏணியில் ஏறி, பெரிய தொட்டி போலிருந்த மொட்டை மாடியைப் பார்த்துப் பரவசமானேன் – அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம்! சின்னச் சின்ன சதுரங்களாகப் பதிக்கப் பட்டிருந்த, செங்கல் நிறச் சொருகு ஓடுகள் (இந்தப் பெயரெல்லாம் பின்னாளில் என் டிக்‌ஷ்னரியில் சேர்ந்தவை!) மனதிற்குள்ளும் பதிந்து போயின! நான்கு அல்லது ஐந்தடி உயரக் கைப் பிடிச் சுவற்றில் சாய்ந்துகொண்டு சுற்றியிருக்கும் ஓட்டு வீடுகளையும், குடிசைகளையும் பார்ப்பது புதியதாக இருந்தது. வானம் அருகில் இருப்பதாய்ப் பட்டது! தெருவில் கூடையில் பானை வைத்து மோர் விற்றுச் செல்லும் அஞ்சலைப் பாட்டியின் நடை வித்தியாசமாகத் தெரிந்தது – பானை மூடியில் சிந்திய மோரில் சூரியன் பளிச்சிட்டது!

கூரைகளில்லாத மாடி வீடுகளின் தலைப் பகுதி, கட்டிடம் இல்லாத வெட்ட வெளி; அதனால் ’மொட்டை’ மாடி என்ற பெயர் வந்ததோ தெரியவில்லை! இப்போதெல்லாம் மாடிகள் மொட்டையாக இருப்பதில்லை – புல்வெளிகள், காய்கறிகள், பூக்கள் எனப் பசுமையாகவும், சின்ன குடில், ஊஞ்சல், மேசை நாற்காலி என உபயோகமான இடமாகவும் மாறியிருக்கின்றன!

மொட்டை மாடியின் ஒரு கோடியில் சின்னக் குடிசையோ – ஃபேன், லைட், படுக்கை வசதிகளுடன் – அல்லது கல் அறையோ (சேர்த்துப் படித்து வரும் அனர்த்தத்துக்கு நான் பொறுப்பல்ல!) கட்டி ஒரு அட்டாச்டு மொட்டை மாடி வசதியை அனுபவிப்பவர்களும் உண்டு!

கோடைக் காலம் வந்தால், நம்ம ஊர்களில் ‘பவர் கட்’ டும் சேர்ந்தே வந்து விடும்! இரவில் வீட்டினுள் புழுக்கம் தாங்காது. அப்போது மொட்டை மாடிக் காற்று இதமானது. சென்னை போன்ற கடற்கரை ஓர நகரங்களில், மதியத்திற்கு மேல் வீசும் கடற்காற்று, இரவில் மொட்டை மாடியை குளிர்வித்து மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியைத் தரக்கூடும். பள்ளிக்கூட நாட்களில், பாண்டிச்சேரி (இன்றைய புதுச்சேரி) மாமா வீட்டில் இரவில் மொட்டை மாடியில்தான் தூக்கம்! தலையருகில் ஒரு டார்ச் லைட், ஒரு சொம்பில் குடிநீர், தலையணை, பாய் அல்லது ஜமக்காளத்துடன் மாடிக்குச் சென்று விடுவோம். சில நாட்களில், நிலா வெளிச்சம் இருந்தால், மொட்டை மாடியிலேயே இரவுச் சாப்பாடும் உண்டு! கோடையில் போர்த்திக்கொண்டு படுத்ததும் உண்டு – கொசுக் கடியிலிருந்து தப்பிக்க!

தி நகர் வீட்டு மொட்டை மாடியில் ஏறி, பக்கவாடில் உள்ள மங்களூர் ஓட்டுக் கூரையில் இறங்கி மாங்காய் பறித்த கோடைகள் சுகமானவை – இரவு டிரான்சிஸ்டரில் பதினோரு மணிவரை ‘விரும்பிக் கேட்டவை’ பாடல்கள் கேட்டுவிட்டு, காலை, சூரியன் கண்ணில் அடிக்கும் வரை தூங்கிய நாட்கள், ஆளுக்கொரு மாம்பழம் தின்றபடியே, குழந்தைகளாய்ப் பேசிச் சிரித்த நாட்கள், மொட்டை மாடி என்னும் திறந்தவெளி சொர்க்கத்துடன் பின்னிப் பிணைந்தவை!

எதிர் வீட்டு மொட்டை மாடியில் – வீட்டு ஓனர் முதலியாரம்மாவின் அனுமதியுடன் தான்! – காலையில் வெளிச்சம் வந்தவுடன், கையில் புத்தகத்துடன் படிக்கப் போன காலங்கள் மறக்க முடியாதவை. வாசித்த ‘நாராய், நாராய் செங்கால் நாராய்’ செய்யுளும், ‘Daffodil’ போயமும், ராபர்ட் ஃப்ராஸ்டும், திரு.வி.க. வும், சரித்திரமும், பூகோளமும், தோலின் குறுக்குவெட்டுத் தோற்றமும் இன்னும் மறக்கவில்லை – மொட்டை மாடிக்கும் இதில் பங்குண்டு என்பது என் மனது அறியும்!

தாம்பரம் தாண்டி, பெருங்களத்தூரில் ஸ்டேஷனில் இறங்கி, வயல்கள், ரோஜாத் தோட்டங்கள் எல்லாம் குறுக்கே கடந்து, பெரிய ஏரிக்கு இரண்டு கிமீ முன்னால் இருந்தது என் சித்தப்பா கட்டிய புது வீடு! (இன்று பெருங்களத்தூரில் தோட்டங்களும் இல்லை, ஏரியும் இல்லை – நிரம்பி வழிகிறது வீடுகளாலும், வீடுகளில் ஜனங்களாலும்!). முதல் நாள் மாலையே கடைசி ரயில் பிடித்து சென்று விட்டோம். மாடிப் படிகள் இன்னும் கட்டப்படாத வீடு – பக்கத்தில் தொங்கிய கயிற்று ஏணியில் ஏறி, மொட்டை மாடியில் இரவு தூங்கினோம். காலை மூன்றரை மணிக்கெல்லாம், தூரத்தில், வயல்களைத் தாண்டி, தெற்கிலிருந்து மதறாஸ் வரும் ரயில் வண்டிகள், மரவட்டை ஊர்ந்து வருவது போல் முழுவதுமாகத் தெரியும் – அந்த காலை, இன்னும் மனதில் ஓவியமாய்த் தங்கிவிட்டது – படியில்லா மொட்டை மாடியுடன்!

கொரோனா லாக்கவுட் வந்த பிறகுதான் என் வீட்டு மொட்டை மாடியை நான் நன்கு பார்க்கிறேன்! எல்லா மாடிகளிலும், கவிழ்த்து வைத்த இட்லிப் பானை மூடி போல ‘டிஷ்’ ஆண்டென்னாக்கள்! வெறும் கிளிப்புகளோ அல்லது காற்றில் பறந்து தப்பிக்க முயலும் ஆடைகளோ தொங்கும் கம்பிக் கயிறுகள்! கைப்பிடிச் சுவர் வீங்கினாற்போல் அங்கங்கே தெரியும், ஸ்ப்ளிட் ஏசி யின் அவுட் டோர் யூனிட்டுகள்!

வெளியில் நடக்கமுடியாது – அதனால் மொட்டை மாடியில் எட்டு வடிவில் நடக்கிறேன். (இன்று கூட ‘எட்டு’ பெயிண்ட் பண்ண வேண்டுமா? விளம்பரம் ஒன்று பார்த்தேன்!). சுற்றிலும் எல்லா மொட்டையிலும், கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும், திசையே தெரியாமலும், குட்டையும் நெட்டையுமாகப் பலர் நடந்து கொண்டிருக்கிறார்கள் – அந்தக் கால அரண்மணைக் காவலர்கள் போல் ‘பாரா’ போடுகிறார்கள்; தலையில் இரும்புத் தொப்பியும், கையில் ஈட்டியும்தான் இல்லை! மாலைத்தென்றல் போல இதில் பெண் காவலர்களும் உண்டு என்பது சுவாரஸ்யமானது!

பூத்தொட்டிகள், சில காய்கறிச் செடிகள், குரோட்டன்ஸ், துளசி என அழகான தோட்டம் போடப் பட்டுள்ள மொட்டை மாடிகளுக்குத் தனி அந்தஸ்து வந்துவிடுகிறது. அழகுடன், உபயோகமும் கூட என்பதால்!
என் நண்பன் வீட்டு மொட்டை மாடி, ஒரு அழகிய பார்க் போலவே இருக்கும் – தரையெங்கும் கொரியன் கிராஸ், சுற்றிலும் வண்ண வண்ணப் பூக்கள்,காற்றில் அசைந்தபடி நிற்கும் செடிகளுடன் பூந்தொட்டிகள், நடுவில் நான்கைந்து பேர் அமர்ந்து கொள்ள வசதியாய் கலையழகுடன் அமைக்கப் பட்ட அறுகோண மண்டபம், நடப்பதற்கு வசதியாய்ப் புல் தரையில் பதிக்கப் பட்ட அழகிய சிமெண்ட் ஸ்லாப்கள், அலங்கார வண்ண விளக்குகள் எனப் பார்ப்பதற்கே மிகவும் ரம்யமாய் இருக்கும்! மொட்டை மாடி பராமரிப்பதே ஒரு கலை எனத் தெரிந்து கொண்ட நேரம் அது!

சம்மர் வந்துவிட்டால், மொட்டை மாடிக்கு டிமாண்ட் அதிகமாகி விடும்! அப்பளம், வடகம் (துணியோடு ஒட்டியடி சின்ன சின்ன ‘சில்’லுகள் போல் காயும் ஜவ்வரிசி வடாம் – மாடியிலேயே துணியோ, பிளாஸ்டிச் ஷீட்டோ விரித்து, அதன் மேலேயே பிழியப் படும் மற்ற வடாம் வகைகள்) ஒரு வருடத்துக்கென செய்யப்படும் சம்மர் ஸ்பெஷல் வேலைகள் – குடையுடன் அல்லது ஒரு குச்சியில் கருப்புத் துணியுடன் காக்கை ஓட்டும் வேலை கொஞ்சம் போர் என்றாலும், வேறு சில நன்மைகளும் உண்டு – தொந்திரவு இல்லாமல் புத்தகம் படிப்பது, கீழ் வீட்டு மாமியுடன் துணி காய வைக்க வரும்போது அரட்டை மற்றும் உதவி (மாமிக்குக் கண்ணுக்கழகாக ஒரு பெண் இருப்பது உ.நெ.க!). சில சமயங்களில், பருத்தி புடவையாய்க் காய்த்தாற்போல், அந்தப் பெண்ணே கடலை போட வரும்போது – ‘மொட்டை மாடியே உனக்கொரு நமஸ்காரம்’ என்பது மைண்ட் வாய்ஸாக ஒலிப்பது எல்லாம் பூர்வ ஜென்ம வரங்கள்!!

மொட்டை மாடிகள் வாயிருந்தால் பல கதைகள் சொல்லும்! காதல், பிரிவு, சோகம், பிறர் அறியாமல் அழுவது, சில இரகசியப் பரிமாற்றங்கள் (காதல் கடிதங்களும் இதில் அடக்கம்!) என மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே மொட்டை மாடியை நான் காண்கிறேன்!

இளையராஜாவின் ‘மொட்டமாடி, மொட்டமாடி’ அஞ்சலி படப் பாடல் மொட்டை மாடிக் காதலை சினிமாத் தனமாகக் காட்டுகிறது!

சுற்றிலும் எத்தனை அடுக்கு மாடிகள் எழுந்தாலும், நடுவில் உயிர்ப்புடன் இருக்கும் ஒற்றை மொட்டை மாடி வீடே எனக்குப் பிடிக்கிறது!!

 

ஒளிந்து விளையாடும் சூரியன், பூமி ...