மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான மைசூர் வெங்கடாசலபதி வெங்கட்ராம் கும்பகோணம் வாசி. பொருளாதாரப் பட்டம் பெற்றவர், பட்டு ஜரிகை வியாபாரம் நடத்திய பிறகு முழுநேர எழுத்தாளர் ஆனவர். இவர் தாய்மொழி சௌராஷ்டிரம். தனது 16 வயதில் ‘மணிக்கொடி’ இதழில் கதைகள் எழுதத் துவங்கினார். கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார்.
இவரது நாவல்களில் மிகவும் பேசப்பட்டவை சாகித்ய அகடமி விருது பெற்றுத் தந்த “காதுகள்” மற்றும் “நித்ய கன்னி”. அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன. “தேனீ” என்கிற பத்திரிகை நடத்தியவர். ஆங்கிலத்தில் இருந்து பல மொழி பெயர்ப்புகள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் என பல நூல்கள் வந்துள்ளன. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ‘பைத்தியக்காரப் பிள்ளை’ தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பலர் கணித்துள்ளார்கள்.
* * * * * * *
தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை என்னும் கதை ….
கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும்.
என்று தொடங்குகிறது..
22 வயது (அதாவது அந்தக்கால திருமணவயதில்) இருக்கும் சந்திரனைப் பற்றி அவன் தந்தை சொல்வதாக கதை அமைகிறது. சட்டம் படித்திருந்தும் வக்கீல் தொழிலில் விருப்பம் இல்லாததால் அப்பாவின் வியாபாரத்திலும் விவசாயத்திலும் துணை புரிந்துவரும் சந்திரன், தனது திருமண விஷயத்தில் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறான்.
கல்லூரி நாட்களில் ‘கதை எழுதும் பைத்தியம்’ பிடித்து பல எழுதத் தொடங்க, ‘சில பல’ கதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகிறது. கல்லூரியை விட்டு வெளிவந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கட்டுமா என்று தந்தையிடம் கேட்டுவிட்டு ‘ராகம்’ என்னும் பத்திரிகையும் நடத்துகிறான். மற்ற பத்திரிகைகள் சந்திரனையும் அவன் பத்திரிகையையும் புகழ்கின்றன.
பத்திரிகை தொடங்க தடை சொல்லாத, மகனை பிறர் புகழ்வதில் மகிழ்ச்சி அடைந்த தந்தை ஆறு மாத ‘இலக்கியத்தின் விலை’ ரூபாய் ஐயாயிரம் என்று அறிந்துகொண்டு திடுக்கிடுகிறார்.
“அது சரி, கணக்குப் பார்த்தாயா?”
“அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல” என்றான் அவன் உணர்ச்சியோடு.
“லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா? அதற்காகச் சொல்ல வரவில்லை. என் தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங்களுக்கு இருக்கும். நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
கூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும் கவனித்தால் மற்ற சத்புத்திரர் களின் லட்சியம் என்ன ஆகும்?”
“பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே? ‘ராகத்’துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே?”
பத்திரிகையை நிறுத்திவிட்டாலும் எழுதுவதும் அவை பிரசுரமாவதும் பத்து இருபது சன்மானம் வருவதும் தொடர்கிறது.
தந்தையின் பார்வையில் அவர் பையன் நல்லவன்- நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறியவன்- புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவன். பெண்களுடன் -சகஜமாகப் பழகுகிறவன்-சீட்டாடத்தின் நான்கு ஜாதிகள் தெரியாதவன்- தந்தையுடன் நண்பன்போலப் பழகுகிறவன். எல்லாம் சரிதான். கல்யாண விஷயத்தில் மனம் விட்டு பேசவில்லையே!
தன் மகன் மகாலட்சுமியை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அப்பா விரும்புகிறார். ‘அடி வயது முதல்’ நண்பனின் மகள் அவள். இரு குடும்பங்களும் நெருங்கிய நட்பில் இருந்தார்கள். சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப் பழகுவதைக் கண்டு இரு நண்பர்களும் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத் திட்டமிட்டிருந்தார்கள். மகாலட்சுமியின் தந்தை இறந்தவுடன் சந்திரனின் அப்பா அந்தக் குடும்பத்திற்கு வழிகாட்டியாக இருக்கிறார்.
மகாலட்சுமியை திருமணம் செய்துகொள்ள சந்திரனுக்கு இஷ்டம் இல்லை. இருவரும் நன்றாகப் பழகும்போது ஏன் அப்படி என்று தந்தைக்குப் புரியவில்லை. ஒருநாள் மகனைக் கண்டித்து கேட்டுவிடுவது என்று தீர்மானிக்கிறார். சந்திரன் வரும்போது இளையமகன் மூன்று வயது குருமூர்த்தியுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.
இருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம்? இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன். ………… கட்டுப்பாடு, டாக்டர், இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை குருமூர்த்தி.
சந்திரனை நேரடியாக கேட்கத் தொடங்குகிறார். திருமணத்திற்கு நாள் பார்கலாமா என்று கேட்டுவிடுகிறார். மகனோ மகாலட்சுமியே வேண்டாம் என்கிறார்.
‘கறுப்பாயிருக்கிறாள்’, ‘ஒண்ணரைக் கண்’, ‘சதா நாட்டியம் ஆடுகிறாள்’, ‘ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள்’என்றெல்லாம் குறைகாண முடியாத பெண்ணை ஏன் வேண்டாம் என்கிறான் எனக் கேட்டுவிடுகிறார். இரண்டு நாட்களில் சொல்வதாக சந்திரன் பதிலளித்து விடுகிறான்.
ரகுராமனும் என்கிற நண்பரும் மகாலட்சுமியும் மறுநாள் மதிய உணவிற்காக வருகிறார்கள் என்பதால் தந்தையை வீட்டிலிருக்க வேண்டும் என சந்திரன் கேட்டுக்கொள்கிறான். காலையிலேயே மகாலட்சுமியின் முகத்தில் கண் விழிக்கிறார் தந்தை. சந்திரனும் இன்னொரு இளைஞனும் வாசலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞன் தான் ரகுராமனாம்.
அன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி, காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க் கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச் சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டே அவளிடம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான் அவளுக்கு ஞானம் இருந்தது.
இருவரும் சென்றதும் ரகுராமன் எப்படி என்று தந்தையிடம் விசாரிக்கிறான் சந்திரன்.
“என்ன கேள்வி இது? உன்னைவிட நல்ல பையன் தான்” என்றேன், அவனுக்கு உறுத்தட்டும் என்பதற்காக.
“அப்படிச் சொல்லுங்க அப்பா!” என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான்.
“இது என்ன அற்ப சந்தோஷம்?”
“ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக விசாரித்து விட்டேன்.”
“நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே” என்றேன் சிரித்துக்கொண்டே.
“இருக்கிறதே!”
“பத்மாவுக்குப் பத்து வயதுதானேடா? அழகுதான் போ! சின்னக்குழந்தையை…”
“பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்!”
தந்தைக்கு அதிர்ச்சி. மகாலட்சுமி படித்தவள் மட்டுமல்ல பிறவி மேதையும் கூட என்கிறான் ரகுராமன் அவள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறான். அவளைச் சந்திக்கப்போவதே ஏதேனும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தானாம்.
அவளுக்கு முன்னால் நான் சின்னக் குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக நினைப்பது எப்படி? அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது! அப்படிச் செய்யலாமா அப்பா? அவளுக்கு எற்ற புருஷன் ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்…
உனக்குக் கல்யாணம் வேண்டாம் எனச் சொல்லப்போகிறாயா என்ற கேள்விக்கு, அப்பா பார்த்துச் சொல்லும் பெண்ணை மனம் புரிந்துகொள்ளத் தயார் என்கிறான் சந்திரன். பிறகென்ன?
குடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான் அவனுக்காகத் தேர்ந்தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல் அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லா விட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள் என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான் தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை.
இருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.
என்று கதை முடிகிறது.
* * * * * * *
எளிய நடை, தந்தை மகன் உறவின் அன்யோன்னியம், கரிசனம், இயல்பான உரையாடல்கள் ஆகியவற்றை கதையினைப் படிக்கும்போது உணர முடிகிறது.
18.05.2020 அன்று இவரது நூற்றாண்டு தினம். சாகித்ய அகடமி விருது ஏற்புரையில் சில வரிகள்
அகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?