ஒருவகை அதீத சுயமோகம்
மனக்கோளாறு
மின்னணு நார்சிஸம்
அளவுக்கு மிஞ்சினால்
எதுவும் ஆலகாலம்
இதெல்லாம்
உங்களுக்கு தெரியாததா
புதிதாய் மணமானவர்கள்
சதா அதே நினைப்பாயிருப்பது போலிருந்து ஏன் இப்படி
வெறிஎடுத்துப் பதிகிறீர்கள்
பொதுவெளியில்
பால் பேதமின்றி
எதற்காக ரெஸ்ட் ரூம் வரை நீள்கின்றன
உங்கள் தற்பட ஆசைகள்
தற்கொலைக்கு
முந்தைய கணத்தைப் பதிவிட்டு
அமரத்துவ ஆசையோடு மரிக்கிறான் ஒருவன்
இரு சக்கர வாகனத்தில் நின்றபடி
படமெடுத்து சாகிறான்
ஒரு சாகஸன்
முகம் மறைத்து
உறுப்புகளை மட்டும்
முன் வைக்கிறாள் ஒருத்தி
சினிமா வாய்ப்புக்காய் ஒளிவுமறைவின்றி
டிக்டாக்குவதாய் சொல்கிறாள்
இன்னொருத்தி
எங்கெங்கு காணிணும் கட்செவியடா
அங்கங்கு நிறைவது காணொளிக் கர்மமடா
எல்லோர் முதுகுகளுக்குப்பின்னும்
கேமிராக்களிருப்பது போதாதென்றா
சொந்த செலவில்
இந்தச் சூன்யம்
அந்தரத்தில் தொங்கும்
நாக்குகளுக்காவா
இந்தத் தேன் உற்பத்தி
வெற்று சைபர் (வெளிக்கு) முன்
ஏன் இத்தனை ட்ரில்லியன் இலக்கங்கள்
விருப்பக்குறிகளுக்கும்
பின்னூட்டங்களுக்குமாக
அடிமைகள்
சொறிந்துகொள்ளும் முட்களால்
வலி தோய்ந்த ரத்தமும்
நடுநடுங்கி நனைக்கும் கண்ணீரும்
சர்வதேச ‘மார்க் மாமாக்களின்’ இணைக்கும் வியாபாரத்துக்காவா
பிறப்பெடுத்திருக்கிறோம்
வாசிப்பும் புரிதலும் தெளிதலுமில்லா
விபரீத மூட்டத்தில்
யாரது மாய கரங்களில் நாம்.