இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பு அதன் ஒத்திசைந்ததும் முரணுமான இயக்கம். இயங்குவது அற்றுப் போனால் எல்லாம் அற்றுப் போகும். அப்படியானால், மறைவதனைத்தும் அற்றுத்தான் போகிறதா? மறைவதை மாறுதல் எனக் கொண்டால் இந்த இயக்க வியப்பு புலப்படுமா? அடிப்படையில் இறவாத்தன்மை உடைய அரைத் துகள்களை(Quasi particles) அறிவியல் இன்று கண்டறிந்திருக்கிறது.(*1.) மின்சார அல்லது காந்த சக்திகள், ஒன்றில் ஏற்படுத்தும் தள்ளாட்டங்களே அரைத்துகள் எனப்படுகிறது. இத்தகைய அரைத்துகள் அழிந்தாலும் தம்மை மீளுருவாக்கம் செய்யும் திறன் பெற்றிருக்கிறது. ம்யூனிச்சில் உள்ள தொழில் பல்கலையைச் சேர்ந்த இயற்பியலாளர் Frank Pollman சொல்கிறார்: இத்தகு துகள்களுக்கிடையே பலம் நிறைந்த உட்செயல்பாடுகள் நடந்தால் அழியும் செயல் கூட நின்று போய்விடும்.
அரைத்துகள்கள் வேகமாக அழிகையில் முரணான விளைவுகள் உண்டாகி தன் சிதற்றிலிருந்தே தன்னைக் குவித்துக் கொண்டு மீண்டு விடுகிறது. முடிவில்லாமல் நிகழும் பிறப்பும் இறப்புமான ஊஞ்சலில் ஆடுகிறது. இது அலையும், துகளுமான இரட்டை நிலை(த்வைதம்). அந்த ஊஞ்சல் அலையென எழுந்து பொருளென நிற்கிறது.உதாரணத்திற்கு ஹீலியம் வாயு ஜீரோ டிகிரியில் தடைகளற்ற மேன்மையான திரவமாக இருக்கும். அதற்கு அதிலுள்ள ‘Rotons’ என்னும்அரைத்துகள் காரணம்.
எனவே, காண்பதற்கு மாறுபட்டு இருந்தாலும் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே.(*2) மாறுபட்டுத் தோன்றுவது என்பது தோற்ற மயக்கத்தினால் தான். ஒவ்வொரு துகளுக்கும் ஓரிடம் இருக்கிறது. அதற்கான சக்தி கிடைக்கப்பெறுகையில் அதன் இருப்பை அறிய முடிகிறது. எனவே வெளியின் வெற்றிடம் என்பது காலியானது இல்லை-அது தூண்டப்படாத துகள்களின் களம்.(*3)
இயங்குவது என்பதற்கு ஒரு உந்து சக்தி வேண்டும்; அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? வந்தது என்றுமே நம் கண் முன் நீடிக்காமல் எங்கே மறைகிறது? அப்படித் தோன்றவும்,மறைவதுமான அந்த அலகிலா விளையாட்டை ஆடுவது யார்? இறைவனா, இயற்கையா,தற்செயல்களா?
பொருளுக்கும், சக்திக்கும் இடையே உள்ள உறவு என்பது நிலையானது என்று இன்று அறிவியல் சொல்வதை நம் உபநிடதங்கள் முன்னரே சொல்லிவிட்டன. பொருளும், சக்தியும் வெவ்வேறு வடிவுகள் கொள்ளலாம்; ஆனால் அவற்றின் உறவே அனைத்திற்கும் அடிப்படை.
‘ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம் மனஸோ மனோ யத்
வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண:
ச்க்ஷுஷச்சக்ஷூரதிமுஸ்ய தீரா:
ப்ரேத்யாஸ்மல்லோகாதம்ருதா பவந்தி ‘
‘காதின் காதாக, மனதின் மனதாக, வாக்கின் வாக்காக உயிரின் உயிராக, கண்ணின் கண்ணாக இருப்பது ஒன்று; அதுவே ஆன்மா எனப்படுகிறது. இந்த உண்மையை உணர்ந்தவன் புலன் உலகிலிருந்து விலகி மரணமற்ற நிலையை அடைகிறான்.’ என்பது மேற்குறிப்பிட்ட வாக்கியத்தின் பொருள்.
ஆன்மாவை நிலைத்த உண்மை எனச் சொல்கிறது வேதாந்தம். அது என்றும் உள்ளது, தோற்றம், மறைவு என்ற இரு கூறுகள் அற்றது. இதுதான் எனக் காட்ட இயலாதது, எந்த சக்தியும் அதை அழிப்பதில்லை, அதை உணர்ந்தவர் சொல்வதற்கு மொழிகள் இல்லை, சொல்ல முயன்றால் அதை உணர்த்துவது இயல்வதில்லை. ஏனெனில் அந்த ஆன்மா அறிந்தவற்றிலிருந்து வேறுபட்டது; அறியாதவற்றை விட மேலானது. இத்தகைய விளக்கம் சொல்லும் உபநிடதம் அதி அற்புதமாக ஒன்றைச் சொல்கிறது. நாம் வழிபடும் உருவங்களோ,குறியீடுகளோ ஆன்மா இல்லை என்கிறது; அவை அனுபவப் பாதைகளாகவோ, வெளிச்சம் தரும் விளக்குகளாகவோ இருக்கலாம்- ஆனால் அவையே அனுபவமாவதில்லை-ஆன்மாவை வெளியில் தேடித் தேடி, தேட இயலாதது அது எனப் புரிந்து கொண்டு தன்னுள்ளே காணும் அறிவாய், இரண்டற்றதாய், முழுமையாய் பார்க்கச் சொல்கிறது; மிக அழகாக ‘அறிந்தும் அறியாத நிலை‘ என்று இதனை விவரிக்கிறது. தெரியும் எனவும் சொல்ல இயலாது- தெரியாது எனவும் சொல்ல முடியாது. ஒரே வகை இனிப்பு, ஒரே கைப் பக்குவத்தில் செய்யப்பட்டது, சுவைப்பவர்களுக்கு இனிப்பு என்ற சுவையைக் காட்டும்; ஆனால், சுவையின் அலகுகள் மாறுபட்டுத்தான் அவரவர்க்குப் புலப்படும்.
‘யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ:
அவிஜ்ஞாதம் விஜானதாம் விஜ்ஞாதம விஜானதாம் ‘
இதன் பொருள் மிக வியப்பானது: ‘யாருக்குத் தெரியாதோ அவனுக்குத் தெரியும். யாருக்குத் தெரியுமோ அவனுக்குத் தெரியாது.’
திருக்குறள் சொல்கிறது:
‘பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணாப் பிறப்பு ‘
அறிபவன், அறிவு, அறிபடு பொருள் இம்மூன்றும் சேரும் போதுதான் நாம், ‘நான்’ என்னும் உணர்வினைக் கொண்டு எதையுமே அறிகிறோம். ஆனால்,இந்த மூன்றும் மறைகின்ற இடத்தில் தான் ஆன்ம தரிசனம் கிடைக்கிறது. உணர்வின் எந்த ஒரு நிலையிலும் ஆன்மா வெளிப்படுவதை உணர்பவனே ஆன்ம அனுபூதி பெறுகிறான். அவ்வாறு அவன் பெறுகின்ற ஆற்றல் எந்த காலத்திலும், எந்த சக்தியாலும் அழிபடுவதில்லை. உடல், மனம் போன்ற அனைத்திற்கும் உணர்வைத் தரும் ஆன்மா, தான் அழிவற்றவன் என உணர்கையில் மரணத்தை வெல்கிறான். இத்தகைய பேறு உடையவன் அனைத்து உயிர்களிலும் ஆன்மாவை உணர்கிறான். ஆன்மா புலன்களிலிருந்து தனது உணர்வை விலக்கிக்கொண்டால் கண்கள் இருந்தும் பார்க்க இயலாது, காதுகள் இருந்தும் கேட்க இயலாது.
ஐதரேய உபநிடதத்தின் விளக்கத்தை எழுதிய ஆதி சங்கரர் சொல்வது ‘ஆன்மா நிலையானது. அது தூய உணர்வாக இருக்கிறது. அதை அறிந்தவன் உலகின் அனைத்துமே ஒரே ஆன்மா எனக் கண்டறிகிறான்; விடுதலைக்கான மார்க்கம் அதுவே.’
இந்த வகையான கூற்றுக்கு சான்றுகள் தர இயலுமா? அது அகனிலை என்ற அறிவுதான் சான்று. அனுபவ உண்மை, வெளிப்படையான உண்மை, இவற்றைத்தாண்டி அது அகனிலையை நோக்கிச் சென்று அறுதி உண்மையை உணர்கிறது. எனவேதான் வேதத்தை சான்றெனக் கொள்கிறது.
அனுபவமே ஆன்மா என்பதால், அதைத் தனி அனுபவமென விளக்க முடியாதல்லவா? கோப்பையிலுள்ள காஃபியின் சுவையை கோப்பை அறியாது என்பதைப் போல்.
அந்த ஆன்மாவை எவ்வாறு தான் அறிவது அல்லது அனுமானம் செய்வது என்பவர்க்கும் ஒரு பதில் சொல்கிறது உபனிடதம்.
‘தத்த த்த்வனம் நாம த்த்வனம் இத்யுபாஸிதவ்யம்; ஸ ய
ஏத தேவம் வேதாபி ஹைனம் ஸர்வாணி பூதானி ஸம்வாஞ்சந்தி’
அனைத்து உயிர்களிலும் ஆன்மா நிறைந்திருப்பதை அறிவதே ஆன்ம அனுபவமாகிறது.
இயற்பியல் தனது பிரிவான துளிம இயற்பியல்(Quantum physics) ,அணுக்கரு இயற்பியல்(Nuclear Physics) மற்றும் துணிக்கை பௌதீகவியல்(Particle Physics) மூலம் பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது. முக்கியமாகக், காணப்படும் தோற்றமும், காணப்படுவதும் ஒன்றா அல்லது வேறா எனக் கேட்கிறது. நம்முடைய பௌதீக உலகில், இயற்கையின் சட்டங்களை, இரு கூறுகளெனக் கொள்ள முடியும் என்கிறது இயற்பியல். பல இயற்பியல் விதிகள் அளவீடுகளை மாற்றும் போது அந்தந்த விதிகளில் மாற்றமின்றியிருந்தாலும்,சிலவகைமைகள் அந்த, அறிந்திருக்கிற விதிகளின்படித்தான் காணக்கிடைக்கும் என்பதில்லை.ஒரு கோப்பையிலிருந்து தண்ணீரை ஊற்றுகையில் மொத்த நீருமே ஊற்றப்படுவதில்லை; அதன் கடைசித் துளிகள் உருட்டுத் துளிகளாகின்றன.
அணுவின் முளைக்கருவில் இருக்கும் ப்ரோடான்ஸ் மற்றும் நுயுட்ரான்ஸ். பொதுவாக நாம் அனைவரும் அறிந்ததே- நேர்மறை சக்தி, சமன் சக்தி; நாம் மற்றொன்றும் அறிவோம். எதிரெதிர் சக்திகள் ஈர்க்கப்படுவதையும், ஒரே விதமான சக்திகள் மறுதலிக்கப்படுவதையும். ஆனால், வியப்பு என்னவென்றால், மிகச் சிறிதான கரு மையத்தில் ஒரே விதமான நேர்மறை சக்தி கொண்ட ப்ரோடான்கள் மறுதலிக்காமல் இணைந்திருப்பதுதான். அதை அவ்விதம் கட்டி வைத்துள்ள அந்த மேம்பட்ட ஆற்றல் எது? இன்னமும் தெளிவில்லாத ஒரு செய்தியும் இருக்கிறது. பல துகள்கள் தங்களுடைய ஆடிப்பதிப்பாக இருப்பதில்லை. இதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நுயுட்ரினோ துகள்கள்.
மரபார்ந்த இயற்பியல்(Classical Physics) பருப்பொருளுக்கு(matter) இணை எதிர் பருப்பொருள் (anti matter) உண்டு என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வானியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்-நம்முடைய பால் வீதியில் ஆன்டி மேட்டர் என்ற பொருளே இல்லை. ஒன்றாக இருந்தது-ஒன்றாகவும் இருக்கிறது. அது பலவாக உருக் கொண்டதற்கு இயற்கையின் ஆற்றல் காரணமாக இருக்கக்கூடும்-அப்படி, அதிலிருந்து பிறந்து ‘மேட்டர், ஆன்டி மேட்டர்’ என நாம் பலதாகப் பார்க்கிறோம் என்கிறார்கள்
நம் வேதாதங்கள் இதைத்தான் சொல்கின்றன. ஒன்றாய் இருந்தது- முக்குண மாறுபாட்டால் பலவாய்க் கிளைத்தது; அது ஒன்றின் ஆடிப் பாவையை பலவெனக் காட்டும் மாயையின் ஆற்றல்.
இயற்பியல் அறிஞர் சொன்னார்: ‘ அணுவினுள் இருக்கும் மின்சாரத் துகள் ‘எக்ஸ்’ என்ற புள்ளியிலோ, ‘வொய்’ என்ற நிலையிலோ அல்லது பாதி ‘எக்ஸி’லும், பாதி ‘வொயி’லுமாகக் காணப்படும். அதாவது, ஒரு எலெக்ட்ரான் ஒரே தருணத்தில் பல இடங்களில் காணப்படும். இது ‘கோபஹேஹன் புரிதல் ‘ என்று சொல்லப்படுகிறது. ஒன்றெனில் ஒன்றேயாகும்; அதுவே பலவுமாகும்.
குவாண்டம் மெக்கானிக்ஸின் அடிப்படையே ‘ நிகழ் தகவு’ (ப்ராபபிலிடி) என்பதுதான். முடிந்த முடிபாக மரபார்ந்த இயற்பியல் போல் இதில் சொல்வது இயலாதது. அந்த முடிந்த முடிவாக மரபு நிறுவுவதை ஒரு விதத்தில் இது கேள்வி கேட்கிறது.
வெளியும், காலமும் தனித்த புள்ளிகளாக இருக்கின்றன என்கிறது துணிக்கை அறிவியல். மேலும் சொல்கிறது- துகள்கள் அந்தப் புள்ளிகளில் இருக்கலாம் ஆனால், இடையிலல்ல. அப்படியெனில், காலமும், வெளியுமான, காலவெளியான இந்த மாபெரும் நெசவைச் செய்தது யார்? அவை இணைந்திருப்பது எவ்வாறு, யாரால்? பொருட்கள் அனைத்திலும் இருக்கக்கூடிய அணுத்திரளும் (மாலிகூல்ஸ்), அணுக்களும் இயங்கிப் பிணைந்து, உருவாக்கி, அழித்து, அதிர்வுகளாக இயங்குகின்றன. இது கல்லிலும் உண்டு, காற்றிலும் உண்டு.
மேலை நாடுகளில் இயற்பியலிலும் மற்றும் தத்துவத்திலும் இரு கோட்பாடு பெரும்பாலும் பேணப்படுகிறது; அது பொருளையும், ஆற்றலையும் இரு வேறாகக் காண்கிறது. மரபு அறிவியலின் அடிப்படை விதி இது; இது உண்மைதான்; அதே நேரம் ஒன்றே பலவாய்ப் பரிணாமித்து வெவ்வேறு பொருளாய், உறைந்து நிற்கும் ஆற்றலாய், அல்லது வெவ்வேறு வகைகளில் ஆற்றலென வெளிப்படுவதை அணு அறிவியல் சொல்கிறது.
எனவேதான் மாற்றம் என்ற நிலை பெற்ற உண்மையை, இயங்கு சக்தியை நம் உபனிடதங்கள் சொல்கின்றன.
‘எவன் அனைத்திலும் இருக்கிறானோ,
அவைகளிலிருந்தும் மாறு பட்டும் இருக்கிறானோ
எவனை அந்தப் பொருட்கள் அறியாதோ
எவனுடைய உருவாக அவை காணக்கிடைகிறதோ
உள்ளிருந்து எதையும் இயக்குபவன் எவனோ
அவன் நிலையானவன்;அழிவற்றவன்.
அவனை ஆன்மா என அழைக்கிறோம்.’
மேலை நாட்டின் தர்க்க ஒழுங்கு வழி முறைகளால் காரணம் என்பதைக் கொண்டு நிலை பெற்ற உண்மையைக் கண்டடைய முடியாது என்கிறது துணிக்கையியல். அதன் அடிப்படையே’இருக்கலாம்’ என்பதில் அமைந்துள்ளது.
‘எது அழியாமல், சப்தமற்று, தொடு உணர்வு இன்றி, வடிவமின்றி, சுவையற்று, வாசமற்று, முதலும் முடிவும் அற்று, நிரந்தரமாக இருக்கிறதோ அதை அறிந்தவன் மரணத்தை வெல்கிறான்.’
ஐன்ஸ்டெனின் புகழ் பெற்ற ஒரு கூற்று “கணித விதிகள் உண்மைத்தன்மையைக் கூறும் போது அவை உறுதியாக இல்லை; அவ்வாறு ஐயமற அவை சொல்லப் புகுந்தால் அவை உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதில்லை.”
சார்பியல் கோட்பாடுகள் காலத்தையும், வெளியையும் தனியே காணவில்லை; அவை இரண்டும் நாற்பரிமாணமுள்ள வெளி காலம் என்றே உணர்த்தப்படுகின்றன.
துணை அணுக்கள் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதில் இணையற்றவை; துகளாகவும்,அலையாகவும் காணப்படும். அலை எனச் சொன்னவுடன் அவை முப்பரிமாணம் உள்ளவை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவை ‘பிராபபலிடி’ அலைகள். தனித்ததாக அவைகள் அறிவிப்பது என ஒன்றுமில்லை; ஆனால், தொடர்புகளால், இயக்கங்களால் அவை அறியப்படுகின்றன. குவாண்டம் தியரி இதன் மூலம் பிரபஞ்சத்தின் ஒற்றைத்தன்மையை நிறுவுகிறது.
மிகச் சமீபத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இயற்பியலாளர் தினேஷ் குமார் ஒரு அளவீட்டை வெளியிட்டார். அதை மரபார்ந்த அறிவியலின் மாதிரி வடிவங்களைக் கொண்டு விளக்க இயலாது என்றும் நிறுவினார். beauty meson என்று அறியப்படும் துகள் அணுக்களின் மறைவைப் பற்றியது அது. இதன் மூலம் இணை எதிர் பருப் பொருட்கள் பிரபஞ்சத்தில் மறைந்து போனதை அவர் ‘முனைவாக்கத்தை’(polaraization) அளப்பதன் மூலம் தெளிவாக விளக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார் (Physical Review –D).
இதன் தொடர்பாக நாம் அறியா பருப் பொருள்’(Dark Matter) மற்றும் அறியா சக்தி(Dark Energy) ஆகியவைற்றைப் பற்றி பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். ஐன்ஸ்டைன் சொன்னார் : ‘நாம் நான்கு சதவீதம் மட்டுமே பிரபஞ்சத்தைப் பற்றி ஓரளவு அறிந்திருக்கிறோம். 24% அறியாப் பொருள்-அதாவது, பால் வீதியிலும் மற்றும் பிற கேலக்ஸிகளிலும் கருந்துளைகள் செலுத்தும் ஈர்ப்பு விசை அந்தந்தக் கருந்துளைகளின் அருகேயுள்ள நட்சத்திரங்களும், தொலைவில் உள்ள நட்சத்திரங்களும் ஒரே வேகத்தில் இயங்கும் வகைமையில் இருக்கிறது. அந்த ஈர்ப்பு விசை எது? அதைப் போலவே விரிந்து கொண்டே வரும் பிரபஞ்சத்தில் எதிர் சக்தி இயங்கி விரிவாக்கத்திற்கு வழி வகுக்கிறது. ஒன்று ஈர்ப்பினால் ஒரே வேகத்தில் இயங்கச் செய்கிறது. மற்றது எதிர்ப்பினால் வேகமடையச் செய்து விரிவாக்குகிறது. இந்த அறியா சக்தியை 72% என அவர் சொல்கிறார். இவற்றை அளவீடு செய்யும் வழிமுறை இன்று நம்மிடம் இல்லை. முழுமையான ஓவியம் கிடைக்கவில்லை. சிவ- சக்தியும், ஆடும் கூத்தனும் நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை.
பகவான் கிருஷ்ணன் சொல்கிறார் “ நான் என் இயல்பால் தோற்றுவிக்கிறேன். அவை காலத்தில் சுழன்று வருகின்றன. அவைகள் தோற்றமயக்கங்கள் என உணராமல் லீலை மறைக்கின்றது. உண்மையில் இரு வேறில்லை என அறிபவன் மரணத்தை வெல்கிறான்.”
துளிம அறிவியல், தனித்த சக்திப் பெட்டகம்(discrete energy packets) எனச் சொல்கிறது. நாம் காணும் ஒவ்வொன்றும் நிலைத்த தோற்றத்தோடு, நிலைத்த தன்மையோடு, நிலைத்த சக்தியோடு, நிலைத்த காலத்தோடு இருப்பதாக உணர்கிறோம்.ஆனால்,துளிம அறிவியல் துகளுக்கு நிகழ் தகவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
கீழச் சிந்தனைமரபு ’ தூய உணர்வினை’ Eugene Wings’ ன் வார்த்தைகளில் சொல்வது இதுவே. ‘தொடர் சரடான உண்மையை துளிம அறிவியல் சொல்லக் கூடுவது அது தூய உணர்வினை ஏற்றுக் கொள்வதாலேயே’
வெளி, காலம், காரணம் என்பதெல்லாம் ஒரு கண்ணாடி வழி முழுமையைப் பார்ப்பது போன்றது. முழுமை என்பதில் காலம், வெளி, காரணம் என்பது இல்லை.
‘அது அசைகின்றது, அது அசைவதும் இல்லை
அது தொலைவில் உள்ளது, அருகிலும் உள்ளது
அனைத்திற்கும் உள்ளே இருப்பதும்
அனைத்திற்கும் வெளியே இருப்பதும் இதுவே.’
மெய் ஞானமும், விஞ்ஞானமும் தேடுவது ஒன்றையே
“அறியாமையிலிருந்து அறிவிற்கு அழைத்துச் செல்லுங்கள்
இருளிலிருந்து ஒளிக்கு கூட்டிச் செல்லுங்கள்
இறப்பிலிருந்து இறவா நிலைக்கு என்னை உய்வியுங்கள்”
பிரஹதாரண்ய உபனிடதம்.
‘அண்டத்தில்’ இருப்பதை மரபார்ந்த அறிவியலும், அதன் குறுகுகளை துளிம அறிவியலும், இரண்டையும் இணைத்து பேச முற்படும் ‘அனைத்தின் தேற்றமும் (Theory of Everything) வேதாந்தங்கள் சொல்லும் ‘பிண்டத்தில்’ உள்ளதும் அறியும் தோறும் அறியாமையின் ஆழத்தைக் காட்டுகிறதோ? புத்தியால் மட்டுமே அறிய முடியாததென்று உபனிடதங்களும் அளவீடுகளின் வழி அறியும் முறையைக் கொண்ட அறிவியலும் சிந்தனையில் ஒன்று, சிந்திக்கும் முறைகள்தான் வெவ் வேறு.
‘ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து’-திருக்குறள்.
பானுமதி.ந
(*1)Published in Nature Physics 2019 https://www.science alert.com/
(*2) https://blogs.scientificamerican.com/beautiful-minds/what-would-happen-if -everyone-truly
(*3)https://www.science alert.com/watch-here-s-why-galaxies-and-planets-might-only-exist-thanks-to-nothingness
Other Ref:General esssays on Upanishads, Kena ,Aithreya, Brahuthaaranyaa, Bhagavath Geeta,Tao of Physics, Physical Review, Science magazines and Thirukural
BANU GREAT WORK. YOUR ANALYSING THINGS ARE VERY GOOD. AND YOUR QUOTES FROM UPANISHADS GEETHA THIRUKURAL AND SCIENCE MAGAZINES ETC ARE EXTRAORDINARY. YOU DID NOTMOVE AWAY FROM WHAT YOU WANTED TO TELL. HATS OFF TO YOU. GREAT JOB.
LikeLike