சாது மிரண்டால்! – அறுபதுகளின் தமிழ் த்ரில்லர்!!
55 வருடங்களுக்கு முன் வந்த ஒரு தமிழ்த்திரைப்படம் – அன்றைய ‘த்ரில்லர்’ வகைப் படம் – சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்ற பெரிய நட்சத்திரங்கள் இல்லாத, படம்! நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம்!
குவிகம் இலக்கிய வாசல் சமீபத்தில் நடத்திய ‘ஜூம்’ மீட்டிங் வித்தியாசமானது – “தனக்குப் பிடித்த ஒரு படம் பற்றி, ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும்”, ஏழு படங்கள் பேசப்பட்டன! நான் பேசிய படத்தின் சிறு ஆரம்பக் குறிப்புதான் மேலே உள்ளது!
1958ல் அன்றைய மெட்ராஸில், ஓடும் காரில் வங்கி ஊழியர் ஒருவர் பணத்துக்காகக் கொல்லப் பட்டார் – கொன்றது அவரது நண்பர்களே! சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருப்பவர்கள்அவர்கள். வங்கி ஊழியர், பெரிய தொகையை தி நகர் கிளைக்கு. எடுத்து வரும்போது காரிலேயே கொலை செய்யப்படுகிறார். ‘சூரியநாராயணன் கொலை வழக்கு’ என மிகவும் பேசப்பட்ட முக்கியமான வழக்கு அது!
அன்றைய பிரபல இயக்குனர் பீம்சிங், இந்தக் கொலையை மையமாக வைத்து, பல எதிர்பாராத திருப்பங்களுடன், அருமையான ‘கிரைம் த்ரில்லர்’ ஒன்றை உருவாக்கித் தனது உதவி இயக்குனர்கள், திருமலை – மகாலிங்கம் இயக்கத்தில், மெல்லிசை இரட்டையரில் ஒருவரான டி.கே. ராமமூர்த்தியின் இசையில் தயாரித்த படம்தான் ” சாது மிரண்டால்“.
வினாயகா சொஸைடி பேங்க் காஷியர் சாதுவான பசுபதி. நேர்மைக்கும், அன்புக்கும், கருணைக்கும் உதாரணமானவர்! அவரது குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுக்கும் டீச்சர் கல்பனா. குடும்ப நண்பரும், டாக்ஸி டிரைவரும் ஆன கபாலி, அவரது காதலி கற்பகம் மற்றும் பேங்க் ஏஜெண்ட் (மானேஜர்) இவர்கள் பரஸ்பரம் அறிமுகமான நல்லவர்கள்!
கொலை, கொள்ளை, திருட்டு, குழந்தைகள் கடத்தல் செய்யும் நரசிம்மன் போலீசால் தேடப்பட்டு வருபவன். பசுபதியின் பால்ய சிநேகிதன். நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்கும் நரசிம்மனை நம்புகிறார் பசுபதி – பசுபதியிடம் வலிப்பு வருவதைப் போல் நடித்து, மெழுகில் பேங்க் சாவியைப் பிரதி எடுத்து, இரவோடிரவாக பணத்தைக் கொள்ளையடிக்கிறான் – அமெரிக்காவில் இது போன்ற கொள்ளையைப் பற்றி மானேஜர் சொல்லியிருப்பதும், டாக்சி டிரைவர் நரசிம்மனைப் பற்றி எச்சரித்ததும் மனதைக் குழப்ப, இரவில் பேங்க் வந்து பார்க்கும் பசுபதி, செக்யூரிடி கொலை செய்யப்பட்டிருப்பதையும், பணம் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதையும் கண்டு, பதறுகிறார். பணப் பெட்டியுடன் நரசிம்மனைப் பார்த்து, கெஞ்சுகிறார் – பேச்சு முற்றி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் நரசிம்மனை எதிர்பாராமல் சுட்டுவிடுகிறார். இது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கபாலியின் காரில் நடக்கிறது – பின் சீட்டில் கீழே நரசிம்மன் பிணம் – பிணமிருப்பது தெரியாமல் கபாலி வண்டி ஓட்டுவதும், வண்டியில் ஏறும் சவாரி ஒவ்வொன்றும் பயந்து அலறி ஓட, ஒரு பாதிரியார் மட்டும், போலீஸுக்குத் தகவல் தருகிறார்! போலீஸ், விபரம் அறிந்து நரசிம்மனின் கூட்டாளிகளைப் பிடித்தார்களா? பணம் என்னவாயிற்று? பசுபதி மீது விழுகின்ற திருட்டு மற்றும் கொலைக் குற்றம் என்னவாயிற்று? என்பது மீதித் திரைப்படத்தில் வருகிறது!
ஒரு கிரைம் நடப்பது, பார்வையாளர்களுக்குத் தெரியும். படத்தில் வரும் பாத்திரங்கள் எப்படித் தெரிந்து கொள்கிறார்கள் என்பதைச் சொல்லுவதில் தான் டைரக்டரின் திறமை இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு வந்த இந்தப் படம் இன்றும் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதற்கு, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாவற்றிலும் இருக்கும் ‘அர்ப்பணிப்பு’ தான் காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது!
பசுபதியாக டி ஆர் ராமச்சந்திரன் (அருமையான நடிப்பு), பேங்க் ஏஜண்டாக சகஸ்ரநாமம் (பண்பட்ட நடிப்பு), நரசிம்மனாக ஓ ஏ கே தேவர் (வில்லனாக சிறப்பு), கபாலியாக நாகேஷ், காதலியாக மனோரமா (என்ன ஒரு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர், டைமிங் – செம ஜோடி!),குழந்தைகளாக குட்டி பத்மினி, மாஸ்டர் பிரபாகர், டாக்சி பயணிகளாக, பாலையா, டைபிஸ்ட் கோபு, ஏ கருணாநிதி, ஏ.வீரப்பன், ராமாராவ், உசிலை மணி, வி நாகைய்யா என நட்சத்திரக் கூட்டம்! ஒரு மிகையான நடிப்போ, அநாவசியமான வசனமோ கிடையாது!
நான் முதன் முதலாகத் தனியாகச் சென்று தியேட்டரில் பார்த்த படம் சாது மிரண்டால்! சிதம்பரம் நடராஜா டாக்கீஸில், சூடான கோடைக் கால மாட்னி ஷோ! முன் பென்ச் (35 பைசா டிக்கட்!) – வியர்வை, பீடி, சிகரெட் நாற்றம், ப்ரொஜெக்டர் ரூம் சதுர ஓட்டையிலிருந்து திரைக்கு வரும் ஒளிக் கற்றையில், சுருளாகச் செல்லும் பீடிப் புகை, இடையே விற்கப் படும் சோடேலர், வர்க்கி, கமர்கட் – இத்தனைக்கும் நடுவில், நாகேஷ் என்னும் அந்த மகா கலைஞனின் பரம இரசிகனாக ஆனேன் நான்! மீண்டும் 55 வருடங்களுக்குப் பிறகு, இன்றும் யூ ட்யூபில் பார்க்கும் போது, அன்று சிறுவனாக இரசித்த அதே மனநிலை, மகிழ்ச்சி, வியப்பு – அதே மலர்ச்சியுடன் சிரித்தேன் நான்!
ஏ வீரப்பன் தன் பெயரைப் போட்டுக்கொள்ளவில்லையெனினும், வசனம் எழுதியது அவர்தான் என்று வாமனன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். (‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்துக்கும் இவர்தான் வசனம் – சமீபத்திய கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ ஜோக்கும் இவர் எழுதியதே என்பது உபரிச் செய்தி!).
நரசிம்மனிடமிருந்து பணப் பெட்டியைப் பிடுங்க, பசுபதி போராட, அப்போது நரசிம்மன் சொல்வது: “ என்ன சாது மிரளுதா பசுபதி? நீ வெறும் பசுதான், நான் சிம்மம் – நரசிம்மன்” என்றபடி கைத்துப்பாகியை எடுப்பது சிச்சுவேஷனுக்கேற்ற வசனம்!
கதையோட்டத்தில், போகிற போக்கில் வந்து விழும் நகைச்சுவை வசனங்களுக்கு அளவேயில்லை! புது மணத் தம்பதியாக வீரப்பனும் அவர் மனைவியும் காரில் பேசிக்கொள்வதும், வழியில் ஒரு பேட்டை ரவுடியிடம் நாகேஷ் படும் பாடும், பிணத்தைப் பார்த்து புது மணத் தம்பதிகள் அலறியடித்து ஓடுவதும் இன்றும் இரசிக்கத் தக்கதாய் இருக்கிறது!
பாகவதர் பாலையா ‘யாரோ, இவர் யாரோ’ பாடியபடி பயப்படுவதும், மேக் அப் மேன் ஏ கருணாநிதி, கையில் பொம்மைத் தலையுடன் மிரளுவதும், ஃபாதர் நாகையா வழியில் இறக்கி விடச் சொல்ல, “என்ன ஃபாதர், மேரி மாதா கோவில்ல இறக்கி விடச் சொன்னீங்க, இந்துக் கோவில் முன்னால இறங்கறீங்க (அன்றைய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)” என்று நாகேஷ் கேட்க, “எந்த மதமா இருந்தால் என்னப்பா, தெய்வம் ஒண்ணுதானே” என்கிறார் ஃபாதர்.
டாக்சியில் பிணத்தைப் பார்த்து, நாகேஷ் எகிறி குதிக்க, மனோரமாவும் அவரும் பேசும் பேச்சு நகைச்சுவையின் உச்சம். “பேசாம, போலீஸ் ஸ்டேஷன்லெ போய் சொல்லிடலாம்யா” – மனோரமா. உடனே நாகேஷ் “ பின்ன இதுங்கூட பேசிக்கிட்டேவா போக முடியும்?”
“நீதான் டாக்சிலே மறந்த சாமானெல்லாம் போலீஸ் ஸ்டேஷன்லெ கொண்டு குடுப்பியேய்யா” – மனோரமா.
“அதெல்லாம் மறந்த சாமான். இது இறந்த சாமான் இல்லே” என்பார் நாகேஷ்.
அன்றைய மெட்ராஸின், மவுண்ட் ரோட், மன்ரோ சிலை, நேப்பியர் பாலம், கடற்கரை ரோட், பீச்சில் அறுகோண ரேடியோ ஒலிபரப்பும் இடம், சென்ட்ரல் ஸ்டேஷன், பெசண்ட் நகர் பீச் – அருமையான நாஸ்டாஜியா!
1947 வருட மாடல் ‘Chevy fleetmaster’ – நீளமான மூக்குடன், கோழி முடை வடிவ கார் (MSW 7593) – மேலே மஞ்சள், கீழே கறுப்புக் கலர் டாக்சி – இடது பக்கம் மீட்டர் – ‘ஃபார் ஹயர்’ சைன் டிஸ்கை, ‘டிங்’ சத்தத்துடன் திருப்பி, மீட்டர் போடுவது – படத்தில் ஒரு முக்கியமான பாத்திரமாகவே வரும் டாக்சி, மெட்ராஸ் வீதிகளில் வலம் வந்த நாட்களை நினைவூட்டுவது சுகம்!
பாலமுரளி கிருஷ்ணா, ஏ எல் ராகவன், எல் ஆர் ஈஸ்வரி, எஸ் வி பொன்னுசாமி ஆகியோர் பாடியுள்ள பாடல்களை எழுதியுள்ளவர்கள் ஆலங்குடி சோமுவும், தஞ்சை வாணனும் – அளவான, த்ரில்லர் படத்திற்கேற்ற இசை டி.கே.ராமமூர்த்தி!
ஒரு பழைய படம், ஏராளமான சிந்தனைகளை, மனத்திரையில் ஓடவிடுகிறது என்றால், அந்தப் படத்தின் வார்ப்பு அவ்வளவு சிறப்பானது என்று பொருள்!
அப்போது வாழ்க்கை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும், அதிக குழப்பங்கள் இல்லாமலும் இருந்தது – அதர்மம் இருந்தாலும், தர்மமே வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது! நம்பாதவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்!