சேரமான் பெருமாள்-2
முன் கதை:
சேரமான் பெருமாள் என்ற சேர மன்னன்..
தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் என்ன செய்தார் என்பதில்..
இரண்டு கதைகள் – இரண்டு கருத்துக்கள்.
முதல் கதையில் அவர் இஸ்லாமைத் தழுவி மெக்கா சென்றார்.
அவரது நண்பர்கள் இந்தியாவில் முதல் மசூதியைக் கட்டி இந்தியாவில் இஸ்லாமிய வித்துக்களை விதைத்தனர்.
இது முன்கதை.
இனி வருவது..
முற்றிலும் மாறுபட்ட – மறு கதை!
சில காலம் முன்பு எழுத்தாளர் சுஜாதா ஒரு கதை எழுதினார்.
அதன் பெயர்: ‘கம்ப்யூட்டரே.. ஒரு கதை சொல்லு’.
அதில் கதாநாயகன் ஒரு கம்ப்யூட்டர் வைத்திருப்பான்.
அது கதை சொல்லும்
அதில் கொடுத்த சாராம்சய விகிதத்துக்குத் தகுந்தாற்போல கதைகள் கிடைக்கும்.
கதாநாயகன் கொடுக்கும் ஒரு விகிதம் : சரித்திரம் : 50% ; செக்ஸ்: 50%
கிடைக்கும் கதை:
‘இராஜராஜ சோழன் விதவைக்கு முத்தம் தந்து’ – என்று கதை தொடங்கும்.
பொதுவாக நமது ‘சரித்திரம் பேசுகிறது’ கதைகளில்: சரித்திரம் : 80% கற்பனை : 20 % இருக்கும்.
இக்கதையில் மட்டும் நமது விகிதம் பின்வருமாறு :
சரித்திரம்: 20%; புராணம்: 60%: கற்பனை (சொந்த சரக்கு): 20%
இனி கதை தொடரட்டும்.
இரண்டாம் கதை: கைலாசம்
இடம் : மாகோதை (மகோதயபுரம்).
ஒரு துறைமுக நகரம்.
இந்நாளில் இது கொடுங்களூர்.
சங்களா நதி (இன்றைய பெரியார் நதியின் துணை நதி) அரபிக்கடலுடன் சங்கமிக்கும் நகரம்.
சேர மன்னன் சேரமான் பெருமாளின் அரண்மனை நதியின் சங்கமத்துக்கு அருகிலிருந்தது.
மன்னன் அரண்மனையில் உறங்கியிருந்தான்…
கனவில் ஒரு காட்சி .. வானத்தில் பிறைச் சந்திரன்.. அதன் அருகில் ஒரு ரிஷபம். ஒரு பாம்பு। சிலம்பொலி கேட்கிறது.
கனவிலிருந்து விழிக்கிறான்.
சிவபெருமான் அணிந்திருக்கும் பிறை, பாம்பு, அவர் ஆரோகணிக்கும் விடை.
அவர் நர்த்தனமாடும் போது எழும்பும் சிலம்பு ஓலி. .
இந்த இடத்தில் ஒரு ஃபிளாஷ்பேக் வைத்தால் நன்றாக இருக்கும்.
மாகோதையார் சேர மன்னர் பரம்பரையில் பிறந்தவர்.
எனினும்..மன்னருக்குரிய படைக்கலப் பயிற்சி ஒன்றும் அவர் கற்கவில்லை.
பரமசிவன் பணிக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டார்.
திருவஞ்சைக்களம் சிவன் கோவில் அருகே வீடு அமைத்து இறைப்பணி செய்தார்.
சேரமன்னன் செங்கோற் பொறையன் – துறவு பூண்டு பதவி துறந்து காடு சென்றான்.
(அவனுக்கு என்ன பிரச்சனையோ?)
அமைச்சர்கள் கூடினர்.
மாகோதையாரை மன்னராக்க விரும்பினர்.
மாகோதையார் சஞ்சலமடைந்தார்.
இறைவனிடம் விண்ணப்பித்தார்.
தமிழில் அசரீரி என்று வார்த்தை உண்டு.
பொதுவாக புராணக் கதைகளில் அது வெகுவாக வரும்.
கடவுள் மனிதனுக்கு ஏதேனும் சொல்ல விரும்பினால்..
ஓன்று கனவில் வருவார்..
அல்லது..
அசரீரி வழியாக சொல்வார்.
அது வானத்திலிருந்து ஒலிபரப்பாகும்.
சிவபெருமான் அசரீரி வாயிலாக மாகோதையாரை அரசனாகப் பணித்தார்.
மேலும் “உனது தினசரி பூஜை முடியும் போது எனது சிலம்பொலி உனக்குக் கேட்கும்” – என்றும் அருளினார்.
மாகோதையார் ‘சேரமான் பெருமாள்’ என்ற பெயரில் சேர மன்னனானார்.
அச்சமயம்..
மதுரையில் பாணபத்திரர் என்று ஒரு புலவன்..
பரம ஏழை!
பெரும் சிவபக்தன்.
சிவபெருமான் பக்தனுக்கு இறங்கினார்.
‘சேரமன்னன் உமக்கு பொருளுதவி செய்து காப்பான்’ – என்று ஓலை எழுதி பாணபத்திரரிடம் சேர்த்தார்.
தருமிக்கு ஓலை தந்து பிரச்சினை உருவானது நினைந்தோ என்னமோ..
சிவபெருமான் இம்முறை சேரமான் பெருமாள் கனவிலும் இதைப்பற்றி சொல்லி வைத்தார்.
நக்கீரன் போல் யாரோ ஒருவர் முளைத்துக் காரியத்தைக் குழப்பினால்?
பாணபத்திரர் அந்த ஓலையை சேரமன்னனிடம் கொண்டு சென்றார்.
சேரமான் பெருமாள் பாணபத்திரரை வரவேற்றார்.
நிதி அமைச்சரை அழைத்தார்.
கஜானாவில் இருப்பது அனைத்தையும் கொண்டு வரப் பணித்தார்.
அனைத்தையும் பாணபத்திரருக்கு அளித்து அவரைப் ‘பண’பத்திரராக்கினார்!!
இது மட்டுமல்லாது.. ‘எனது அரசாட்சியையும் ஏற்றுக்கொள்ளுங்கள்” -என்றார்.
சிவபக்திக்கும் சிவனடியார் பக்திக்கும் ஒரு லிமிட் இல்லை போலும்.
பாணபத்திரர் நெகிழ்ந்தார்.
தனக்கு வேண்டுவது மட்டும் எடுத்துக் கொண்டு விடை பெற்றார்.
ஃபிளாஷ்பேக் முடிந்தது.
கனவிலிருந்து விழித்த சேரமான் பெருமாள் – குளித்து – சிவவழிபாடு செய்தார்.
சிவவழிபாடு முடியும் தறுவாயில் தினமும் சிலம்பொலி கேட்கும்.
ஆனால் அன்று… சிலம்பொலி கேட்கவில்லை.
வருந்திய சேரமான்: ”இறைவா! யான் செய்த அபராதம் யாது?” என்று அழுது தொழுதார்.
சிவபக்தி முத்தினால் விபரீதமாக சிந்திப்பர் போலும்..
‘இறையருள் இல்லாத வாழ்வு எதற்கு? ‘ என்று உடைவாளை மார்பில் நாட்டி உயிர்துறக்க சித்தமானார்.
சினிமாவில் கிளைமாக்ஸ் சமயத்தில் வரும் போலீஸ் போல..
சிவன் காட்சி அளித்து தனது சிலம்பொலியை ‘பத்து டெசிபல்’ அதிகப்படுத்தி சத்தமாகக் கேட்க வைத்தார்.
பிறகு விளக்கமும் அளித்தார்.
‘எனது அருமைத் தோழன் சுந்தரன் தில்லையில் வண்ணப்பதிகங்களால் என்னைத்தாலாட்டினான்.
அதில் சற்றே மயங்கிக்கிடந்தோம்.
அது காரணம் சிலம்பொலி சற்று தாமதித்தது’ – என்று சொல்லி மறைந்தார்.
‘இறைவன் இவ்வாறு பாராட்டிய சுந்தரர் யார்! அவரைப் பார்க்காத இந்த வாழ்வு பயனுள்ளதல்லவே!’ -என்று நினைத்தார் சேர மன்னன்.
இந்த எண்ணம் வந்ததும் ‘சேரமான் பெருமாள்’ அரச போகத்தைத் துறந்தார்.
ஆட்சியை அமைச்சர்களிடம் ஒப்புவித்து தில்லை சென்றார்.
அங்கு ஆலயங்களில் தொழுது – பண் பாடி – திருவாரூர் சென்றார்.
சுந்தரரை சந்தித்து இருவரும் அன்பு பூண்டு நின்றனர்.
இருவரும் ஆலயங்கள் தொழுது .. பதிகம் பாடி .. பேரின்புற்று இருந்தனர்.
அங்கு சேரமான் பெருமாள் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை இயற்றினார்.
கதையின் கிளைமாக்ஸ்க்கு வந்து விட்டோம்.
ஒருநாள் சேரமான் பெருமாள் நதியில் இறங்கிக் குளிக்கும் போது ..
சுந்தரர் கரையில் இருந்தார்.
அந்நேரம் .. சிவபெருமான் திருக்கைலாசத்திலிருந்து வெள்ளையானை ஒன்று அனுப்பினார்.
பூத கணங்கள் – சுந்தரரிடம் சிவன் அவரை கைலாயத்துக்கு வருமாறு பணித்ததைக் கூறினர்.
சுந்தரர் ,யானையில் ஏறி, தம்முடைய தோழராகிய சேரமான் பெருமாளை நினைத்துக்கொண்டு சென்றார்.
சேரமான் பெருமாள் சுந்தரருடைய செயலை அறிந்து, அருகிலே நின்ற குதிரையில் ஏறிக்கொண்டு ..
குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார்.
உடனே அந்தக் குதிரை ஆகாயத்திலே பாய்ந்து சுந்தரர் பயணித்த வெள்ளையானையை அடைந்தது..
அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது.
சேரமான் பெருமாள், சுந்தரர், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலை அடைந்தனர்.
குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கினர்.
வாயிலில் சேரமான் பெருமாள் தடுக்கப்பட்டார்.
சுந்தரர் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்து தொழுது :
“சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான் பெருமாள் புறத்திலே வந்து நிற்கின்றார்”
என்றார்.
பரமசிவன் சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து:
‘சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனது ஏன்” – என்று வினவினார்.
சேரமான் பெருமாள்: “சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன்
தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்” என்று விண்ணப்பஞ்செய்தார்.
அப்பொழுது சிவபெருமான் “சேரனே! அவ்வுலாவைச் சொல்லு” என்று திருவாய்மலர்ந்தருளினார்.
சேரமான் பெருமாள் பாடினார்.
சிவபெருமான் அதற்கு அருள்செய்து, “நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு” என்று திருவாய்மலர்ந்தருளினார்.
(இந்த வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது)
வாசசகர்களே!
இரண்டு கதைகளையும் படித்தீர்கள்..
சேரமான் பெருமாள் எங்கே சென்றார்?
மெக்காவுக்கா, கைலாசத்துக்கா?
எங்கு சென்றால் என்ன?
நமக்கு இரு கதைகள் கிடைத்தது.
கொசுறு:
( நன்றி :அகத்தியர் சன்மார்க்க சங்கம் பதிவு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். ‘அயிராவணம்’ என்னும் யானையை ஈசன் அனுப்ப, அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதை அறிந்த அவரது தோழரான சேரமான் பெருமானும், தனது குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, சுந்தரரின் அயிராவண யானையைச் சுற்றி வந்து தானும் கயிலாயம் புறப்பட்டார். இருவரும் வானில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கீழே பார்க்கையில், திருக்கோவிலூர் சிவ தலத்தில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை, அவ்வையார் வழிபட்டு பூஜை செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?’ எனக் கேட்டனர்.
திருக்கயிலாய ஈசனை தரிசிக்கும் வாய்ப்புக்காக பலரும் தவமாய் தவமிருக்கும் நிலையில், வாய்ப்பை தவற விட யாருக்குத்தான் மனம் வரும்? ஆனாலும் உடனடியாக யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை என்பதும் ஒரு மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
அவ்வை பாட்டி, ‘நானும் வருகிறேன்’ என்று கூறிவிட்டு விநாயகர் பூஜையை பதற்றத்துடன் விரைவாக பண்ணி முடிக்கத் திட்டமிட்டு விரைவாக பூஜைகளை செய்தாள்.
அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. அது வேறு யாருடையதும் அல்ல.. பெரிய யானை கணபதியே அசரீரியாக தன் பக்தையான அவ்வையிடம் பேசினார்.
‘அவ்வையே! நீ எனது பூஜையை சற்று மெதுவாகச் செய். கவலை வேண்டாம். பூஜை முடிந்ததும் சுந்தரரும், சேரமானும் திருக்கயிலை மலை சென்றடைவதற்குள்ளாகவே, உன்னை அவ்விடம் கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்’ என்று கூறினார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வையார், ‘சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட…’ எனத் தொடங்கும் ‘விநாயகர் அகவல்’ பாடி திருக்கோவிலூர் பெரிய யானை கணபதியை நிதானமாக பூஜித்தார்.
என்ன ஆச்சரியம்! அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ பாடி முடித்ததும், அவன் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வை பாட்டியை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிற்பாடுதான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.
அடுத்து வருவது? சற்றே காத்திருங்கள்…