சோழிகள் குலுங்கிச் சிதறின அதனுடன் “பத்து பத்து” என்று ஒரு முதிர்ந்த குரலும் “இல்லை பன்னெண்டு பன்னெண்டு” என்று மற்றொரு சன்னமான குரலும் அந்தச் சோழிகளுடன் குலுங்கிக்கொண்டு ஊடோடின. சோழிகள் இருவரின் பேச்சையும் சட்டைசெய்யாமல் எப்பிடி எட்டு போட்டு நின்னோமுல்ல என்று எட்டு சோழிகள் விரிந்தும் நான்கு சோழிகள் குவிந்தும் ஓடிநின்றன.
சித்ரா நல்லவேளை தப்பிச்ச இன்னும் ஒரு ரெண்டு சேந்து விழுந்திருந்ததுன்னா இந்நேரம் பெரியபாம்பு கொத்தி ஆரம்பிச்ச எடத்துக்கே போயிருப்ப என்றாள் சாரதா. அதென்னக்கா அந்த ரெண்டு சேந்து விழுகாமையே நானு வாழ்க்கைய துவங்குன இடத்துலதான இருக்கேன். பரமபதம் ஆடுரப்பவாச்சும் பாம்பு கடிக்காம இருந்தா ஒரு சந்தோசந்தான்.
ஜோசியர் காலசர்ப்பதோசம் இருக்கறதால ராமேஸ்வரம் போயி பரிகாரம் செய்யணுன்னு சொன்னாரு எனக்கு. ஏற்கனவே வாழ்கையில பாம்பு கடிச்சி வாழ்க்கையே வீங்கிப்போனதால, பரமபதத்தில பாம்புங்க என்ன ஒண்ணும் செய்யறதில்ல போலருக்குக்கா.
சித்ரா தனது காயை நகர்த்திக் கொண்டிருக்க, சாரதா சோழிகளைக் குலுக்கித் தனது குலதெய்வம் படவேட்டு அம்மனை வேண்டிக்கொண்டு ஒரு பன்னிரண்டு கேட்டுவிட்டு தரையில் உருட்டினாள். ஆனால் சாமி பத்தை கழித்து எடுத்துக்கொண்டு இரண்டு மட்டுமே போட்டது. சிறிய பாம்பு கொத்தி ஒருபடி கீழே இறங்கிவந்தது சேர்ந்தது சாரதாவின் காய்.
மனதில் வெறுப்போடு சோழிகளை சித்ராவின் பக்கம் ஒதுக்கிக்கொண்டே, அதென்னடி, ஆம்படையான் ஓடிப்போயிட்டா ஒனக்கு வாழ்கையே அத்தமிச்சிட்டா மாதிரி பேசறே. செகண்ட் மாரேஜ்லாம் இப்ப சர்வசாதாரணம் ஆயிடுச்சி. ஆனா என்ன நீ பிராமணாளா வந்து பொறந்து தொலைச்சிட்டே. ஒனக்குக் கலியாணமே முப்பதுலதான ஆச்சி. ரெண்டே வருசத்துல ஆம்படயான் ஓடிப் போயிட்டான். ஒங்கிட்டே என்ன இல்லைன்னு காணாமப் போயிட்டான், இல்ல அப்பிடி அதிசயமா என்னத்தத் தேடிண்டு போனான்னும் தெரியல. ஒடம்புல ஒரு வியாதி இல்ல, நல்லா சமைக்கத் தெரியு,து பக்தியா இருக்கத் தெரியுது யாருக்கும் எனக்குத் தெரிஞ்சி நீ பெருசா துரோகம் பண்ணதில்லை. தெய்வக் குத்தமோ இல்ல ஒன்னோட பூர்வஜென்ம கர்மாவோ இப்பிடி ஆயிடிச்சி ஒனக்கு, என்று சாரதா அங்கலாய்த்தாள்.
இந்த பேச்சுக்களை இரண்டு வருடமாக கேட்டு கேட்டுப் பழகிவிட்ட சித்ராவுக்கு அக்காவின் பேச்சைவிட அடுத்து ஒரு நாலு போட்டு ஏணியில் ஏறி பரமபதத்தின் அடுத்தபடிக்கு சென்றுவிடவேண்டுமென்று மனம் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது.
சித்ரா கேட்டபடி நாலு விழுந்தது. சித்ரா தனதுகாயை எடுத்து சந்தோசமாக அந்த சிறியஏணியில் ஏற்றி பெரிய பாம்பின் தலைக்கு மேலிருந்த கட்டத்தில் வைத்துவிட்டு சாரதாவை வெற்றிக் களிப்போடு பார்த்தாள்.
இதுல எல்லாம் உனக்கு கைராசிதாண்டீ கேட்ட நம்பர் ஒன்னோட கையில சகுனியாட்டம் அப்பிடியே வந்துவிளையாடுது. ஆனா ஒன்னோட வாழ்க்கையிலதான் எங்கியோ ஒருசுழி மாத்தமுடியாம ஒன்ன கவுத்துட்டு போயிடுச்சி.
சாரதாவுக்கு தான் தோல்வியடையப் போகின்றோம் என்பதைவிட தினமும் பரமபதத்தில் தன்னை செயிக்கும் சித்ரா வாழ்கையில் தோற்றுப் போனதைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்பதே நோக்கமாக இருந்தது. ஒரு முறையாவது ஜெயித்திருந்தால் பரவாயில்லை ஒவ்வொரு முறையும் சித்ராவே ஜெயித்தால் என்ன செய்வது. புண்பட்ட மனது அவளது குறைகளைச் சுட்டிக்காட்டி ஆறுதலைத் தேடிக் கொண்டிருந்தது.
தெருவில் ஆளரவம் கேட்டது.
என்ன மாமி இன்னிக்கு ஏகாதசி ஒருவேள அன்னந்தான் அதான் சோழி உருளறது திண்ணேல போஜனம்லாம் ஆயிடிச்சா? என்று அவர்களது கவனத்தைக் கலைத்தார் சுந்தரம் ஐயர்.
ஆயிடிச்சி மாமா கோவிலுக்கு போற வரைக்கும் கொஞ்சநேரம் பகவான நெனச்சிட்டிருக்கணுன்னு பரமபதம் ஆடிண்டிருக்கோம். என்று கூறிவிட்டு சோழிகளை இணைத்து கையில் குலுக்கிக்கொண்டாள் சாரதா.
ஏண்டி சித்ரா ஒன்னோட ஆம்படையானப்பத்தி சேதி ஏதும் தெரிஞ்சிதா.
இனிமேல் தாயம் போட்டால்தான் பரமபதம் ஏறமுடியும் என்று டென்சனில் இருந்த சித்ரா “ தெரியல அத்திம்பேர் நீங்க வேணா ரெண்டாந்தாரமா கட்டிக்கிறேளா. அதான் பட்டுமாமிக்கு டிபி, ஆஸ்துமான்னு நீங்க படுறபாடு இந்த அக்ரகாரம் பூராத் தெரியுமே.”
ஐயருக்கு சித்ராவின் மேல் ஒரு கண் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடந்துகொள்வார்.
அதான் ஒனக்கும் எனக்கும் பகவான் ஒரு எழுத்து எங்கியோ மாத்தி எழுதிண்டுட்டான். ரெண்டுபேரோட வாழ்க்கையும் காதந்த ஊசியாட்டம் ஆயிடிச்சி எதையும் கோக்கமுடியல. வாரப்ப என்ன வரம் வங்கிண்டு வந்தோம்ன்னு தெரியல இப்பிடி அல்லாடுறோம். என்ன கொடுப்பின இருக்குன்னு பகவான்ட்ட கேப்போம். “ஹூம்” பகவான் மனசு வச்சா நடக்கட்டும் என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே சித்ராவின் கண்களை ஊடுருவி அவளது ஆழ்மனதை தொட்டுச் சுவைத்துப் பார்த்தார். இப்போதைக்கு இவ்வளவுதான் சாத்தியம். ஆத்துலருந்து கெளம்பி இப்ப நம்மபெருமாள் கோவிலுக்குத்தான் போயிண்டு இருக்கேன். ஆட்டத்த முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுங்கோ. இன்னிக்கி ராமசுப்பு ஐயரோட உபன்யாசம் இருக்கு மிஸ்பண்ணிடாதேள். ஐயரின் குரல் தெருவில் இருந்த காற்றில் கலந்து தேய்ந்து மறைந்தது.
சரிங்க அத்திம்பேர்.
சாரதா ஒரு பன்னிரண்டும், ஐந்தும், ரெண்டும் போட்டு இரண்டு பாம்புகளைக் கடந்து ஒருவழியாக ஏணியில் ஏறி பாதி தூரம் வந்திருந்தாள்.
ஒரு தாயம் மூன்று போட்ட சித்ரா பரமபதம் எறிக்கொண்டாள்.
ஒன்னோட கை இங்கே நல்லா விளையாடுதுடீ. ஆனா என்ன எழவோ ஒனக்கு வாழ்க்கைதான் முட்டிகிட்டு நிக்குது.
இனி பாம்பினால் வெட்டுப்பட வாய்ப்பில்லை தாயம் போட்டால் போதும் என்று சந்தோசத்தில் இருந்த சித்ராவுக்கு இப்பொழுதுதான் சாரதா தனது வாழ்க்கையை பற்றி சொல்வது சிறிது உரைக்கத் துவங்கியது முகத்தில் இருந்த சந்தோசக்களை மாறியது.
சாரதாவுக்கு என்னதான் நீ பரமபதத்தில ஜெயிச்சாலும் வாழ்கையில நீ ஒடஞ்ச பானைதான என்று குத்திக் காட்டுவதில் ஒரு ஆனந்தம். சித்ராவுக்கு பரமபதத்தில் வெற்றியென்றால் சாரதாவுக்கு அவளை சீண்டிப் பார்த்து வெற்றியின் களிப்பை சோகமாக்கிப் பார்ப்பதில் ஒரு வெற்றிப்பெருமிதம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
சித்ரா சில தாயங்கள் போட்டு கடைசிக் கட்டத்தை அடைந்திருந்தாள்.
ஓங் கைரசிக்கு அத்தன பாம்புலையும் சிக்காம ஏணியா ஏறிகிட்டு போயி பரமபதத்தைத் தொட்டுட்ட. எனக்குதான் இதுல கொடுத்து வைக்கல. சரிடீ எப்போவும் போல நீதாஞ் ஜெயிச்சே. வா எடுத்துவச்சிட்டு கோவிலுக்கு போகலாம். ஆட்டம் கலைந்து பரமபதம் சுருட்டப்பட்டு சோளிகள் டப்பாவில் கொட்டப்பட்டு பரணில் ஏறியது.
கோவில் களைகட்டியிருந்தது. வண்ண விளக்குகள் சீரியல் பல்புகள் என்று ஏக தடபுடல் இந்தமுறை. பெருமாளின் பெரியவடிவ உருவம் சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் வாசலில் அனைவரையும் வரவேற்றது. இளைஞர்கள் சிலர் அதன் முன்நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.
சித்ராவை அழைத்துக் கொண்டு சாரதா கோவிலுக்குள்ளே நுழைந்தாள். கோவிலின் முன்னால் இருந்த ஆஞ்சநேயருக்கு வணக்கம் போட்டுவிட்டு நேராக உள்ளே சென்று பெருமாளையும் தாயரையும் தரிசித்துவிட்டு வெளியில் வந்தவர்கள் அங்கிருந்த அரசமரத்தின் அடியில் சுகமாக காற்று வாங்கிக்கொண்டு பேசிக்கொண்டிருந்த இரு ஐயர்களின் அருகில் ஒரு இடத்தை சுத்தப்படுத்தித் தாமும் அமர்ந்துகொண்டனர்.
என்ன ஒய் எப்பிடி இருக்கான் ஒங்க புள்ளையாண்டான் கிரீன்கார்டு வாங்கி அமெரிக்காலயே செட்லாயிட்டானாமே. ஒமக்கே மாசமானா அம்பதுரூவா அனுப்பிச்சிடுரான்னு கேள்விப்பட்டேன், எல்லாத்துக்கும் எழுத்து வேணும் ஓய்.
ஆமாம் ஒய் சொன்னாமாதிரி கொஞ்சம் கடனெல்லாம் அடைச்சிட்டு வாழ்க்கை நிம்மதியானா ஓடிண்டிருக்கு இப்ப. செத்த முன்னாடி உபன்யாசம் கேட்டேள்ள ராமசுப்பு சும்மா பிச்சி ஒதரிட்டாரு இன்னிக்கு. பெருமாளே மனசு குளிர்ந்து கேட்டுண்டு இருந்துருப்பாரு. கிருஷ்ணபகவான் பரலோகம் போறதா சொல்றப்ப கண்கலங்கிடுத்து ஓய். பகவானுக்கே இந்த கெதின்னா நாமள்லாம் என்ன ஓய். இவாள்ளாம் மிஸ்பண்ணிண்டுட்டா என்று சாரதாவை சுட்டி “உச்” கொட்டினார் ஐயர்.
கவனிச்சேன் ஓய் அதான் பூமிக்கு வாரப்பவே தனக்குன்னு ஒரு அம்ப செஞ்சி ஏகலைவனோட அம்பராத்தூளில சொறுகி வச்சிட்டுல்ல வந்துருக்காரு பகவான்.
அது சரி இதுலேருந்து அவாள்ளாம் நமக்கு என்ன சொல்லவர்ரா? பகவானா இருந்தாக் கூட ஒருநாள் கெளம்பிட வேண்டியதுதானா என்ன? சொல்லுங்க ஒய்?
அதில்ல ஓய், அவாள்லாம் தேகசித்தி அடஞ்சவுங்க அதனால எதோ ஒருகாரணத்தவச்சி அவாளே லோகவாழ்க்கையை அவங்களே முடிச்சிக்குவாங்க. எமனோட அப்பாய்ண்ட்மெண்ட் எல்லாம் நோக்கும் நேக்குந்தான். பகவான்லாம் அவாளே எல்லாத்தையும் பாத்துண்டுவார். என்று சொல்லிக் கொண்டே உடன் கொண்டுவந்திருந்த பிரசர் மாத்திரையையும் சுகர் மாத்திரையையும் வாயில் போட்டு தண்ணீர் குடித்தார். என்னவோய் பண்ணறது இன்னிக்கி சாப்பாடு இல்லேன்னாலும் இதுகள போடாம இருந்தா ஏதாவது ஆயிடுமோன்னு ஒரு பயம் அதான் நேரத்துக்கு போட்டுக்கறேன்.
எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து தவறாம வைகுண்ட ஏகாதசிக்கு சொர்கவாசல் வந்துடுறேன். இது எனக்கு அம்பதாவது மொற. எப்பிடியும் நம்மளை பகவான் அவரோட வைகுந்தத்தில சேத்துண்டுடுவார்னு நம்பிக்கை இருக்கு ஓய் என்ன சொல்றேள்.
நெசந்தான் ஓய். சொர்க்கவாசல் போறது பாக்கியமில்லையா பின்ன.
அதான் ஒரு நாள்முழுக்க அன்ன ஆகாரமில்லாம கண்முழிச்சு உக்காந்து விரதமிருந்து உபன்யாசம் கேக்கரோமில்ல. இந்த காலந்தான் ஓய் ரொம்ம முக்கியம் இந்த காலத்துல நாம பகவான நெனச்சிண்டே இருந்தாலே சுவர்க்கம் நிச்சயம். அதுனாலதான் பாத்தேளா ராபூரா நம்மள தூங்கவிடாம கோவில்ல ஏதாவது நிகழ்சி செஞ்சிண்டே இருப்பா.
ஒலிபெருக்கியில் எல்லாரும் பிரார்த்தனை பண்ணிக்கோங்கோ ஹோமத்தில இப்போ பூர்ணாகுதி ஆகப்போறது என்று சப்தம் கேட்டது. சாரதா சித்ராவைப் பார்த்தாள். சித்ராவுக்கு அக்கா என்ன சொல்லப் போகின்றாள் என்று புரிந்துவிட்டது. அரசமரத்திலிருந்து எழுந்து யாகம் நடக்கும் இடத்திற்குச் சென்று மனபாரத்தையெல்லாம் பிரார்த்தனை செய்து எரிந்துகொண்டிருந்த வேள்வித் தீயில் கொட்டிவிட்டு திரும்பி வந்து மண்டபத்தில் வந்து அமர்ந்துகொண்டனர்.
காலை மணி ஐந்து ஆகிவிட்டிருந்தது. முழிக்க முழிக்க அனைத்து நிகழ்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மண்டபத்திலேயே அசந்து தூங்கிவிட்டிருந்தனர். சுவர்க்க வாசல் திறப்பதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்து. வாழைமரம் தென்னங்குருத்து மலர் மாலைகள் என்று சொர்கவாசல் அமர்க்களமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.
மக்கள் நடுஇரவே எழுந்து மூடியிருந்த சொற்கவசலுக்கு முன்னால் வரிசையில் நிற்கத் துவங்கியிருந்தனர். சிலர் இரவே வந்து சொர்கவாசலுக்கு முன்னால் இடுப்பிலிருந்த துண்டை எடுத்து விரித்து உறங்கிக் கொண்டிருந்தனர். காலையில் சொர்க்கவாசல் திறந்தவுடன் முதல் ஆளாக அதில் நுழைந்து வெளிவந்து வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென்பதே அவர்களது திட்டம்.
மற்றோருபக்கம் அர்ச்சகர்கள் உற்சவரைத் தாயார்களுடன் ஒரு பல்லகில் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரம்தான் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுவிடும். அடிவானத்தில் சிறிது மெல்லொளி எழுந்து இருட்டோடு கவிழ்ந்திருந்த குளிரையும் விரட்டத் துவங்கியிருந்தது.
சொர்க்கவாசலின் முன்னே ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டு கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. யார் முதலில் சுவர்கவாசல் வழியாகச் செல்வது என்று ஒவ்வொருவர் மனதிலும் ஒரு உந்துதல், எப்படியாவது முதலில் சென்றுவிடவேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஒரு ஏக்கம் இருக்கும். அதனால் வரிசை எல்லாம் இப்பொழுது அமைதியாக இருக்கும் வாசல் திறந்தவுடன் எல்லோரும் மொத்தமாக சென்று முட்டிக்கொள்வார்கள். அந்தக் கூட்டத்தில் நுழைந்து பிதுங்கி வெளிவருவதற்குள் போதுமென்று ஆகிவிடும்.
சித்ராவுக்கு சொர்கவாசல் விழித்திருந்து பார்ப்பது இதுதான் முதல் முறை.
உறங்குபவர்களை எழுப்புவதற்கென்றே ஒருகோவில் பணியாள் இரவு முழுவதுவும் ஒரு லத்தியை கையில் வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டிருப்பான். மூன்றுமணிக்கே அவனது சப்தமும்அடங்கிக் கோவில் வாசலில்உள்ள தூணில் சாய்ந்து அவனும் உறங்கிக் கொண்டிருந்தான். சன்னதி மட்டும் திறந்திருந்து அர்ச்சகர்கள் இரவு முழுவதுவும் ஷிப்ட் போட்டு விழித்திருந்தனர். சாரதா சித்ராவுக்கு பின்னால் உறங்கிக்கொண்டிருந்த ஐயர் ஐந்து மணிக்கு அலாரம் வைத்திருந்தார். அந்த மண்டபம் முழுவதும் அலறியது. உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் எழுந்துவிட்டனர்.
சன்னதியில் உற்சவருக்கு அலங்காரங்கள் முடிந்து ஆரத்தி ஆகிக்கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் வாசல் திறந்துவிடும். இரவே வந்து வாசல்முன் படுத்துக்கிடந்த தடித்த ஆசாமிகள் எழுந்து நின்றிருந்தனர். அவர்கள் புத்திசாலித்தனமாக தமக்குள்ளே கைகளை ஒரு சங்கிலிபோல அமைத்துக் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்துவதுபோல யாரையும் தம்மைத் தாண்டி அனுமதிக்காமல், கூட்டத்தைக் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்வதுபோல தமது நிலையை முன்னிறுத்திக் கொண்டிருந்தனர்.
ஒய் பாத்தேளா கூட்டத்த, சிட்டில இருக்குற பெரிய கோவில்னா இந்நேரம் பத்து போலிஸ்காரங்க வந்திருப்பாங்க. இங்கே இந்த மஸ்கோத்து பசங்கதான் போலீசு. அல்லாரையும் தடுத்துட்டு மொதஆளா அவனுங்கதான் வாசல்ல பூருவானுங்க. ஐயரே கொஞ்சம் நாம மெதுவாத்தான போகலாம். இந்தக் கூட்ட நெரிசல்ல சிக்கி ஒடம்புக்கு எதன்னா ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடப் போகுது.
சித்ராவும் சாரதாவும் அந்த ஐயர்களை கேடயம்போல பயன்படுத்திக்கொண்டு அவர்கள் பின்னால் பாதுகாப்பாக வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தனர்.
சித்ரா வாசலை மறித்துக் கொண்டிருக்கும் அந்த முரட்டுக் கூட்டத்தைப் பார்த்து அதில் யார் முதலில் நுழைந்து வெற்றியடைவார்கள் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள். முதலில் யார் நுழைந்து வெளியில் வந்தார்கள் என்கின்ற பெருமை சல்லிக்கட்டில் காளையை அடக்கினவனின் வீரம்போல அடுத்த வருடம்வரை அந்த ஊரில் பெருமையாகப் பேசப்படும். பின்னே இந்தக் கூட்டத்துல சமாளிச்சி மொத ஆளா வெளியே வர்றது சும்மாவா?
கூடியிருந்த கூட்டம்தான் சொர்கவாசல் வழியே நுழையப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த சித்ராவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, வரிசையில் முதல் ஆளாக அலங்கரித்துக்கொண்டு பெருமாள் துணைவியாருடன் வந்து நின்றுகொண்டார். ஐயர் சொர்கவாசலை சாவிபோட்டு திறந்தவுடன் சுவாமியின் பல்லக்கு கோவிந்தா கோசத்துடன் முதலில் நுழைந்து வெளியேறிப் போனது.
என்ன ஓய் பார்த்தேளா பெருமாள்ன்னா மொதல்ல நொழஞ்சி வெளியே போறாரு.
ஆமா ஓய் நம்மளுக்கு சொர்கத்துக்கு வழி தெரியாமத்தான தவிச்சிட்டுருக்கோம் அவருன்னா வந்து கைட் பண்றாரு.
பொறவு சொர்கத்துக்கு சாவி அவாதான வெச்சிருக்கா அப்ப அவரு இல்லாம கதவ எப்புடித்தொறக்க முடியும்?
அந்த தடிப்பசங்க மூஞ்சிய பாத்தீங்களா நான்தான் மொதல்லன்னு முண்டிக்கிட்டு நின்னானுங்க. பெருமாள் வந்தோடனே அப்பிடியே செவுத்துல பல்லிமாதிரி போயி ஒட்டிக்கிட்டானுங்க. மொதல்ல வெளியபோனா என்ன கெவர்னர் பட்டமா குடுக்கப் போறா? போக்கத்தவனுங்க!
பெருமாள் முன்னின்று வழிகாட்ட கூட்டம் முந்திக் கொண்டு சொர்க்கவாசல் வழியாக செல்லத் துவங்கியது.
சித்ராவுக்கு ஒரே கிளர்ச்சி முதல் முறையாக சொர்கவாசல் நுழைகின்றோம் எப்படி இருக்குமோ? என்று மனம் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தது. வேறு எதற்காகவும் இப்படி இரவு முழுவதும் அவள் கண்விழித்து காத்திருந்ததில்லை இதுவரை. வாழ்கையில் இனிமேலாவது பெருமாள் நமக்கு கண்கொண்டு பார்ப்பார் என்று மனம் குதூகலித்தது.
சித்ராவும் சாரதாவும் கூட்டத்தில் கலைந்து பிரிந்துவிடாமல் இருக்க ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றிக்கொண்டனர்.
இரவு மெலிந்து வானம் சற்று வெளுத்திருந்தது சூரியன் இன்னும் எழவில்லை. கோவிலுக்குள் கோவிந்தா கோசம் விண்ணை முட்டிக் கொண்டிருந்தது.
ஆமைபோல நகர்ந்த வரிசையுடன் தொடர்ந்து நகர்ந்து, சொர்க்கவாசல் வழியாக நசுங்கி வெளியே வந்து விழுந்தனர் சித்ராவும், சாரதாவும். தடுமாறி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிடாமல் சமாளித்து எழுந்து நின்றவர்கள் எதிரே கண்ணுக்கு தெரிந்தது பூட்டிக்கிடந்த ஒரு பாழடைந்த தாசியின்வீடு. அதன் முன்னால் அன்று புதிதாக முளைதிருந்த ஏகாதசி டீக்கடையில் முதலில் நுழைந்து வெளியே வந்திருந்த அந்த முரட்டு சிங்கங்கள் தூக்கக் கலக்கத்துடன் வெளியேறுகின்ற கூட்டத்தின் மீது ஒரு அலட்சியப்பார்வையை வீசிக்கொண்டே வெற்றிப் பெருமிதத்துடன் டீயை உறிஞ்சிக்கொண்டு நின்றிருந்தன. டீக்கடைக்கு கீழே சாக்கடை கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு நாய்கள் ஒரு எலும்புத் துண்டுக்காக அதில் விழுந்து கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன. மற்றொருபக்கம் அந்த சாக்கடையில் பன்றி ஒன்று சுகமாக உறங்கிக்கொண்டிருந்தது. தெருவில் ஆங்காங்கே பெண்கள் மார்கழி மாத கோலம் போட்டுக் கொண்டு அவரவர்கள் வாசலை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
ஏதோ வைகுண்டத்திற்கே டிக்கெட் எடுத்து போவதுபோல கற்பனை செய்து வைத்திருந்த சித்ராவின் மனதில் சொர்கவாசல் பற்றி இருந்த அத்தனைக் கற்பனைகளும் படபடவென்று சரிந்து விழுந்தது. என்ன இது மீண்டும் அதே இடத்திற்கு அதே வாழ்கைக்குத் தானே திரும்ப வருகின்றோம் என்று பொசுக்கென்றிருந்தது. இதுல நொழஞ்சி வந்ததால இனிமேல் ஒருவேளை ஏதும் வாழ்கையில மாற்றம் நடக்குமோ என்று மனம் ஏங்கிக் குழம்பிக் கொண்டிருந்தது. சிந்தனை சுழன்றுகொண்டிருக்க வயிற்றை ஏதோ வலிபோல ஒன்று கவ்வி இழுத்தது ஒருவேளை அன்னம் உண்டது உடலுக்கு போதவில்லை போலிருக்கின்றது. பின்னால் திரும்பிப் பார்க்க முட்டிக்கொண்டும் பிதுங்கிக்கொண்டும் பலர் சொர்கவாசல் வழியாக தொடர்ந்து வெளியேறி வந்து கொண்டிருந்தனர்.
மாமி கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ யாருன்னா சாக்கடையில தள்ளி விட்டுடுவா என்ற சப்தம் கேட்டு சாரதாவின் கையைப் பிடித்துத்தள்ளிக் கொண்டு வெளியேறுபவர்கள் செல்ல வழிவிட்டுநின்றாள் சித்ரா.
தூரத்தில் சுவாமியின் பல்லக்கு கோவிலைச் சுற்றிக்கொண்டு மீண்டும் கோவிலுக்குள்ளே சென்றுகொண்டிருந்தது.