என் திருமணத்திற்கு நான் போன கதை
07/06/1978 அதி காலை 4 மணி. என் நண்பர் சிந்தாமணி , “மோகன் எழுந்துருங்க, நேரமாச்சு” என எழுப்புகிறார் .
நாங்கள் இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததில் சற்று அயர்ந்து தூங்கி விட்டேன்.
நல்ல இனிப்பான கனவும் காரணமாகும். அதான் sweat dreams ங்க
அப்பொழுதுதான் காலை 5.30 க்கு முகூர்த்தம் ,5 மணிக்கு மண்டபத்தில் இருக்க வேண்டும் என சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.
சும்மா சொல்லக் கூடாது. மாமா நல்ல ரூம் தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போட்டிருந்தார்.
திருச்சி Travelers Bungalow, பெரிய அறை. நல்ல காற்று வசதியுடன். அப்ப ஊரே குளிர்ச்சியாகத்தான் இருக்கும் .A C யெல்லாம் கிடையாது. நல்லா தூங்கிட்டேன்.
ஆனால் வாஸ்துதான் கொஞ்சம் இடித்தது. வலது பக்கம் காவல் நிலையம் இடது பக்கம் நீதி மன்றம்.
பக்கத்திலேயே ஒரு பிள்ளையார் இருந்தார் . எதுக்கும் இருக்கட்டும் என தோப்பு கரணம் முதல் நாளே போட்டு வைத்தேன். அப்படியும் காலையில் இப்படி சோதிப்பார் என எதிர் பார்க்கல .
நாங்க இரண்டு பேரும் அவசர அவசரமாக கிளம்பிட்டோம்.
திருச்சி, தில்லை நகர், மக்கள் மன்றம்தான், பிரசித்தி பெற்ற அந்த மண்டபம்.
எப்படியும் மண்டபம் போவதற்கு 15-20 நிமிடமாவது ஆகும். மணி 4.45
பக்கத்து அறைகளில் இருந்த உறவுகள் எல்லாம் கிளம்பிட்டாங்களான்னு பார்க்க வெளியே வந்தா எல்லா அறைகளும் பூட்டியிருந்தன.
அப்பறம்தான் அவர்கள் மண்டபத்திலேயே தங்கி விட்டது ஞாபகம் வந்தது.
வண்டி ஏதாவது காத்திருக்கும் என வாசலுக்கு விரைந்தோம்.
அங்கு ஒரு ஈ,காக்கை இல்லை. அந்த காலை வேலையில் ஈ, காக்கையை எதிர் பார்த்தது தப்பு.
ஆணால் ஒரு மனுஷன் கண்ல படல.
நல்ல வேலை கண்ணில் பட்ட ஒருத்தரிடம் இங்கே ஆட்டோ கிடைக்குமா என கேட்டோம்.
அவர் இவ்வளவு சீக்கிரமா ஆட்டோ எல்லாம் கிடைக்காது. ஜங்ஷன் போங்க என்றார். ஜங்ஷன் opposite direction.
ஜங்ஷனுக்கு எப்படிங்க போறதுங்க ? பதட்டத்தில் நான்.
குறுக்க நடந்து போனால் இருபது நிமிடத்தில் போயிறலாங்க என்றார் வந்தவர்.
நான் பக்கத்திலிருந்த பிள்ளையாரை பரிதாபமா பார்க்கிறதுக்கும் ஜங்ஷன் போற முதல் டவுன் பஸ் நிக்கறதுக்கும் சரியாய் இருந்தது.
அப்புறம் என்ன. நாங்கள் இருவரும் ஜஙஷனில் இறங்கி ஆட்டோ புடிச்சு மண்டபத்தை அடையும் பொழுது மணி 5.30.
மாமா முகத்தில் சினிமாவில் காட்ற மாதிரியெல்லாம் ஒரு பதட்டத்தை காணோம்.
நாலு பக்கமும் ஆள் விட்டெல்லாம் தேடலை.
ஒரு வேலை தாலி கட்ற சமயத்துக்கு மாப்பிள்ளை கரெக்டா என்ட்ரி கொடுத்திருவார் என்ற நம்பிக்கையோ?
அவர்கள் அனுப்பிய கார் பின்னால் வந்து நின்றது. டிரைவர் யாரிடமோ மாப்பிள்ளையை ரூமில் காணோம் பூட்டி இருக்கு என மெதுவாக பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் .
வேறு மாற்று ஏற்பாடை என் மாமனார் யோசிப்பதற்கு முன் தாவி திருமண மேடைக்கு ஓடி தாலியை என் கையில் எடுத்து வைத்துக் கொண்டேன்.