மகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி

இந்த நாடகம் முதன்முதலாக 1949 இல் ஜெர்மனியில் ரேடியோ நாடகமாக ஒலிபரப்பப்பட்டது.
பின்னர் 1994இல் சென்னை அகில இந்திய வானொலி இதன் தமிழ் வடிவை ஒலி பரப்பியது.
அதே வருடம் கூத்துப்பட்டறை இதை மேடைநாடகமாக அரங்கேற்றி வெற்றி கண்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இந்தப்புத்தகம் 300 க்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனை ஆயிற்று.
இதன் கதைச் சுருக்கம்:
மகாத்மா காந்தி சுடப்பட்ட பிறகு அவரைச் சுட்ட தோட்டா, அவர் விழுந்த பூமி, அவரைச் சுற்றியிருக்கும் காற்று, அருகில் இருக்கும் யமுனா நதி ஆகியவை காந்தியுடன் பேசுகின்றன. எல்லாவற்றையும் விட காந்தியின் குரலே தனி வடிவம் பெற்று காந்தியுடன் பேசுகிறது.
இந்த உரையாடல்களின் மூலம் காந்தியின் தத்துவத்தை அவரது பெருமையை அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.
சற்று ஆழமான கருத்துக்கள் கொண்ட நாடகம்.
அதன் தாக்கம் உங்களைவிட்டு மறைய பல நாட்கள் ஆகலாம்.
குவிகம் அளவலாவலில்   மே 24 , 2020 அன்று நாடகமாகப் படிக்கப்பட்டு அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. 
அதன் முதல் பகுதி : 

மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்

அறிவிப்பாளர் : 1948-ஆம் ஆண்டு, ஜனவரி 30-ஆம் தேதி அன்று காலை எட்டு மணிக்கு காந்தி தன் குடிலை விட்டுக் கிளம்பி அவர் வழக்கமாகப் பிரார்த்தனை செய்யும் இடத்திற்குச் சென்றார். மலைப்பிரதேசத்திலிருந்து வந்து வீசிய காற்று புத்துணர்ச்சியை கொடுத்துக் கொண்டிருந்தது. வானத்தில் சின்னஞ்சிறிய மேகம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனுடைய தெளிவற்ற விளிம்புகள் நீலநிற வானத்தினுள் புகுந்தன. பிரார்த்தனை இடத்திற்குச் சற்று தள்ளி நதி ஒன்று சோம்பலாக, ஓட மனமின்றி ஓடிக் கொண்டு காலை இளஞ் சூரியனின் வெயிலில் பனிப்படலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.

மகாத்மா காந்தியுடன் அவருடைய நண்பர்களும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் முதலாவதாக, ஆனால் காந்திக்குச் சற்று பின்னால் பண்டிட் நேரு வந்து கொண்டிருந்தார்.

பெரும் திரளாக மக்கள் கூட்டம் காந்தியின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாகத் காத்திருந்தனர். பழைய வறண்டு போன நதிப்படுகையில் இருக்கும் குன்றுகளில் மிக அடக்கத்துடன் தீண்டத் தகாதவர்கள் உட்கார்ந்திருந்தனர். மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் தன்னுள் கொண்ட கொடிகளை ஆட்டி அசைத்து மக்கள் மிக ஆரவாரத்துடன் காந்தியை வரவேற்றனர்.
(மக்கள் குரல் “காந்தி, காந்தி” முதலில் உரக்க, பின்பு அறிவிப்பாளர் தன் வருணனையைத் தொடரும் போது மெள்ள மெள்ள பின் நகர்ந்து செல்வது போல்)

காந்தி பிரார்த்தனை செய்வதற்காக நிர்மாணிக்கப் பட்டிருக்கும் தாழ்வான மேடையின் பக்கத்தில் மாணவர் பிரார்த்தனை பாடல் குழு இசைக் கருவிகளுடன் நின்று கொண்டு இனிய பாடல்களை வேகமாக இசைத்துக் கொண்டிருந்தது.
(மேலும் வேகமாக மகிழ்ச்சியூட்டும் இசை, ஆரம்பத்தில் தனியாக பின்பு மெள்ள மெள்ள பின் நகர்ந்து மக்கள் குரல்களுடன் கலந்து மெல்லிய கீதமாக ஆனந்தமான சூழலை உருவாக்கிக் கொண்டு இருந்தது . – – )

மகாத்மா மேடையை நோக்கிச் சென்றார். அவர் முகத்தில் ஒரு புன்னகை மலர்கிறது. பின்பு அடக்கத்துடன் மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காகத் தன் தலையைத் தாழ்த்தினார். காந்திக்கு இருபுறமும் வழிந்து கொண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு இடையே உள்ள இடைவெளி சந்தில் காந்தியைப் போல் ஒல்லியாக இருந்த ஒரு இளைஞன், காலடி எடுத்து வைத்தான். அவர் முன் மண்டியிட்டு சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டுபவன் ஒருவன் வணங்குவது போல், தலையைத் தாழ்த்தினான். மகாத்மா கைகளை நீட்டி அவனை ஆசிர்வதித்தார். ஆனால் அந்த இளைஞனோ அவன் மண்டியிட்டு இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் அப்படியே இருந்தான். காந்தியைப் பின்தொடர்ந்து வந்த பெண் ஒருத்தி அவனைப் பக்கவாட்டில் தள்ளி நகர்த்த முயன்றாள்.

திடீரென்று குதித்து எழுந்து நிற்கிறான் அவன். அவன் முகம் மிகவும் இறுகி உயிரற்று இருந்தது. அதுவரை தன் சட்டையினுள் மறைத்து வைத்திருந்த தன் வலக்கையை ‘விருட்டென்று எடுத்து வீசி காந்திக்கு நேராகத் துப்பாக்கி ஒன்றை நீட்டுகிறான்.

(மக்கள் வெள்ளத்தின் குரல் அலைகள் மேலும் மேலும் எழுகின்றன. பிரார்த்தனை இசை அடிக்கடி அதன் இடையில், ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக ஆனால் குறைந்த இடைவெளிகளில். துப்பாக்கி வெடிக்கும் சத்தம். பின்பு அமைதி, நீண்ட சப்தநாடிகளையும் செயலி ழக்கச் செய்யும் அமைதி)

ஒரு குரல் (நேரு) : டாக்டர் யாரும் இங்கு இல்லையா?

குரல்கள் : காந்திக்கு என்ன ஆயிற்று?

மற்ற குரல்கள் : அமைதி! நேரு பேசுகிறார்.

நேரு : டாக்டர் யாரும் இல்லையா?

குரல்கள் : பாக்டர் யாராவது இருக்கிறார்களா இங்கே ?

மற்ற குரல்கள் : டாக்டர்!

பல குரல்கள் : காந்திக்கு ஒரு டாக்டர் தேவை! (இனம் புரியாத சத்தங்கள்)

ஒரு குரல் : இதோ வருகிறார், டாக்டர்!

நேரு : குழந்தைகளே, டாக்டருக்கு வழிவிடுங்கள்!

பல குரல்கள் : டாக்டருக்கு வழிவிடு!

(மக்கள் கூட்டத்தில் சலசலப்பு! டாக்டருக்கு வழிவிட கூட்டம் இரண்டாகப் பிரிகிறது. பின் வேகமாக வரும் டாக்டரின் காலடிகளின் ஒலி! அவரின் காலடி ஒலி கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை இழந்து, தொனியில் குறைந்து கொண்டே வந்து, பின்பு ஏதோ பெருந்துயரத்தில் கேட்பது போல் கேட்டு இறுதியாக ஓய்ந்து விடுகிறது.

இனி நடக்கப்போவதெல்லாம்-காலம், காட்சிகள் போன்றவை வேறு ஒரு உலகத்தில் நடக்கப் போகின்றவை என்பதை உணர்த்துவதற்காக!

காந்தி : (பேசுகிறார்) என்ன விந்தை இது! இப்போது நான் ஒரு பச்சிளங் குழந்தையைப் போல் புவி மீது படுத்துக் கொண்டிருக்கிறேன். கைகளில் பலமில்லை. கால்களிலும் பலமில்லை! கைகால்களை என்னால் அசைக்க முடியவில்லை. என்னால் பேசவும் இயலவில்லை . என் தலையையும் திருப்ப இயலவில்லை . ஆகாயத்தையும் அதில் மிதக்கும் சிறிய மேகத்தையும் தவிர வேறு எதையுமே என்னால் பார்க்க முடியவில்லை. நான் குழந்தையாய் இருந்த அந்தக் காலத்தில் எல்லாம் எப்படி இருந்தனவோ அவ்வாறே இன்றும்! இதயத்தின் அடியில் என் மார்பு வெதுவெதுப்பாகவும் ஈரத்தினால் நனைந்தும் இருக்கிறது. மனதிற்கினிய வாசனையைப் போன்ற ஒரு வாசனையை ரத்தம் பரப்புவதை உணர்கிறேன். மகரந்தத்துகள்கள் மலர் இதழ்களில் ஊர்ந்து கீழாக நழுவுவது போல் ஏதோ அந்நிய பொருள் ஒன்று என் மார்பினில் மிருதுவாக நுழைகிறது.

பெண்குரல் ஒன்று : என்னை மன்னித்து விடு, மகாத்மா!

காந்தி : யார் நீ?

பெண் குரல் : உன் மார்பின் வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் (துப்பாக்கித்) தோட்டா நான். என்னை மன்னித்துவிடு!

காந்தி : எதை மன்னிக்க வேண்டும் நான்?

தோட்டா : அதைப் பற்றி நான் ஒன்றும் அறியேன். டம் டம் நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப் பட்டவள் நான், புலிகளையும் காட்டுயானைகளையும் சுடுவதற்காக, உன்னைச் சுடவேண்டும் என்று நான் விரும்பிய தில்லை. ஒரு துப்பாக்கியில் சுழல் என்னை உங்கள் மீது பாய வைத்துவிட்டது.

காந்தி : உன் மீது எந்தக் குற்றமும் இல்லை , துப்பாக்கியின் மீதும் குற்றமில்லை. என் மீது துப்பாக்கியை நீட்டிய அந்த இளைஞனும் குற்றமற்றவன். இரைந்து கூவ முடியும் என்றால் எல்லோர் காதிலும் விழும்படி நான் கத்திக் கூவுவேன், அவன் நிரபராதி என்று.
நான் அவன் நெற்றியைத் தொட்டு ஆசிர்வதித்திருக்கிறேன். என்னுடைய உறுதியான பழைய விரல்களில் இன்னும் கொஞ்சமாவது சக்தி இருந்திருக்கிறது என்றால் அவன் நெற்றியில் நான் இட்ட அந்த அடையாளத்தை இறைவன் கண்டு கொள்வான்.

தோட்டா : என்னையும் ஆசீர்வதித்துவிடு!

காந்தி : உன்னை ஆசீர்வதிக்கிறேன், என் தோட்டாவே!

தோட்டா : உனக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ துப்பாக்கியில் பயன்படுத்தும் உயிரற்ற திடப்பொருளாக தோட்டாவை போல் அல்லாமல் மிருதுவாக இளையகன்னி ஒருத்தியின் ஸ்பரிசம் போல் நான் உன்னுள் புகுவேன்.

காந்தி : நீ என்னுள் நுழைகிறாய் என்ற உணர்வே எனக்கில்லை என் அன்பிற்குரிய தோட்டாவே!

தோட்டா : ஆனால் நான் நுழைந்து கொண்டுதான் இருக்கிறேன். உன் மேல் சரீரத்தின் வழியாக தசைகளின் ஊடே, உடலின் உள்ளேயுள்ள நாளங்களின் வழியாக இன்னும் ஐந்து விநாடியில் உன் இதயத்தின் நுனியில் தொட்டுவிடுவேன்.

காந்தி : பிறகு?

தோட்டா : அதன் பின்பு நீ இறந்து விடுவாய்!

காந்தி : அதுதான் மரணம் என்று யாருக்குத் தெரியும்? எங்கும் ஒரே அமைதி குடி கொண்டிருக்கிறது. சிவப்பு, மஞ்சள் நிறகொடிகளை ஆட்டிக் கொண்டு அங்கு மக்கள் இருந்தார்களே! இப்போது நான் காண்பதெல்லாம் உயரே என்மீது இருக்கும் வானத்தையும் ஒரு சிறு வெள்ளை வெளேரென்று இருக்கும் மேகத்தையும் தான். பக்திப் பாடல்கள் கேட்டனவே! மக்களின் ஒருமித்த குரல்களை கேட்டேனே! இப்போது என் காதில் விழுவதெல்லாம் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கும் நதியின் ஓட்டத்தையும் மலைப் பிரதேசத்திலிருந்து வந்து வீசிக் கொண்டிருக்கும் காற்றையும் மட்டும்தான். அதுதான் மரணம் என்று யாருக்குத் தெரியும்?

பெண் குரல் : (ஆழமாக) அதுதான் மரணம்.

காந்தி : யார் நீ?

பெண் குரல் : நீ படுத்து இருக்கும் பூமி! மரணம் என்பது என்ன என்பதை நான் முற்றிலும் அறிவேன், காந்தி! கிறித்துவர்கள், மரணமடைந் தவர்களை என்னுள் தான் புதைப்பார்கள். புழுக்கள் எப்படி மரணமடைந்தவர்களை சாப்பிட்டுத் தீர்த்து விடுகின்றன என்பதை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

ஆண் குரல் : (ஆழமான குரல் ஒலியில்) நான் தான் யமுனை நதி, மகாத்மா காந்தி. உன் இடது காது ஓரமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். உன் இந்து மதத்தினர் மரணமடைந்தவர்களின் அஸ்தியை என்மீது தூவுவார்கள். மேலும் மிதந்து செய்ய முடியாமல் கனத்து என்னுள் ஆழ்ந்து போக ஆரம்பிக்கும் வரை அதை நான் சுமந்து செல்கிறேன்.
அதன்பின் நாராசமான நெடியுடன் கருநிற சேறாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.

ஆண் குரல் (உயர்ந்த குரலில்) உன் உடலை வருடிக் கொண்டிருக்கும் காற்று நான். மரணமடைந்து விட்ட பார்ஸி இனமக்களின் எலும்புகளைப் பற்றியிருக்கும் சதைகளை பருந்துகள் கிழித்து – இரையாக்கிக் கொண்டபின் எஞ்சி இருக்கும் எலும்புகளுடன் விளையாடிக் கொண்டு இருப்பேன்.
மேல்கூரை இல்லாத கோபுரங் களிலிருந்து பாலைவனத்திற்கு எலும்புகளை அடித்துக் சென்று அவைகளுடன் கண்ணாம்பூச்சி விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பேன், ஆண்களுடனும் பெண்களுடனும்.

பூமி : மரணம் என்ன என்பதை நாங்கள் நன்கு அறிவோம், மகாத்மா காந்தி.

காந்தி : நான் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் என்னை பொறுமையாக இருக்க விடுங்கள், மரணத்தை எதிர்த்துப் போராடாமல் இருக்கவிடுங்கள்.

பூமி : காந்தி, இனிமேலும் பொறுமையாக இருப்பதற்கு நேரம் இல்லை உனக்கு.

நதி : ஐந்து வினாடி நேரங்கள் தான் உனக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

பூமி : காந்தி. ஐந்து வினாடி நேரம் என்பது என்ன என்று தெரியுமா உனக்கு? நீ கீழே சாய்ந்து விழுந்தபோது உன் தலைபோய் மோதிய மண்ணாங்கட்டி தூள்தூளாக உடைந்து போவதற்கு ஆகும் நேரம் ஐந்து வினாடிகள்.
நதி உன் காதோரமாக வரும் – அலை, உன்னிடமிருந்து 20 அடிகள் தள்ளியுள்ள நதியின் மீது உள்ள பாலத்தின் கம்பத்தை எட்டும்போது ஐந்து வினாடிகள் முடிவடைந்துவிடும்.

காற்று : தோட்டாவை போல் மின்னல் வேகத்தில் பறக்கும் சக்தி கொண்ட, மேலே பறந்து கொண்டிருக்கும் அந்தச் சிட்டுக்குருவி, பறந்து மேகத்தின் விளிம்பை உரசும் போது ஐந்து வினாடிகள் முடிந்து விடும். அதன் பின்பு நீ மரணமடைந்து விடுவாய்.

பூமி : இந்த ஐந்து வினாடிகளைப் பயன்படுத்திக் கொள், காந்தி!

நதி : நிறுத்தி விடு காலஓட்டத்தை!

காற்று : கெட்டியாக பிடித்துக் கொள்!

காந்தி : நண்பர்களே, நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்றால், அந்தச் சிட்டுக்குருவி மேகவிளிம்பை உரசுவதற்கான காலம் அந்த அலை பாலத்தின் கம்பத்தை அடைவதற்கான காலம் போன்ற ஐந்து வினாடிகளுக்கு மேல் நான் உயிருடன் இருக்க முடியாது என்றால் ஏன் நான் வீணாக உணர்ச்சி வசப்படவேண்டும்? ஏன் நான் பொறுமையாக காத்துக் கொண்டிருக்கக் கூடாது? என்கிறீர்கள்?

பூமி : ஐந்து வினாடிகள் என்பது எங்களைப் பொறுத்தவரையில் ஒன்றும் இல்லைதான். சின்னஞ்சிறு சிரிப்பு போல ஒன்றும் இல்லைதான்.
உன் தலையின் அடியில் எப்படி அந்த மண்ணாங்கட்டி தூள் தூளாகிக் கொண்டு இருக்கிறதோ அதைப்போல மலைகள் தூள் தூளாவதை நான் கண்டிருக்கிறேன். அதன் பின் புதிய மலைகள் தோன்றின. அவையும் பின்பு தூள்தூளாகின. ஆனால் உன் மூச்சு நின்று போவதற்கு முன் உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐந்து வினாடிகள் உன்னைப் பொருத்த வல ரயில் நீண்டநேரம் தான்.

காற்று : ஒரு ஆயுள்கால நேரம். காந்தி.

நதி : நித்யமானது.

காற்று “ தோட்டாவைப் போல் வேகமாகச் செல்லும் சக்தியுடைய அந்த சிட்டுக்குருவியைப் பார்! அது ஆடாமல் அசையாமல் நின்று விட்டது. குத்தூசி ஒன்றினால் ஆகாயத்தில் குத்தி நிறுத்தப்பட்ட உயிரில்லாத பட்டாம்பூச்சியைப் போல அது தொங்குகிறது. மேகத்தை நோக்கிச் சென்ற மேகத்தின் விளிம்பை எப்போது அது தொடும் என்று எவராலும் சொல்ல முடியாது. ஆயுள் காலமும் அப்படித்தான் நீண்டு இருக்கிறது.

நதி : அதோ அந்த சிற்றலையை பார்! இளங்காலை சூரிய வெளிச்சத்தின் பளபளத்துக் கொண்டிருந்தது. அது கனமாகி விட்டது. ஏதோ கனமான உலோகப்பொருள் போல. தங்கநிறப் பனிக்கட்டிபோல உறைந்து நிற்கிறது. அது முன்பு பாடிய மெல்லிசை, ஆனந்தத்தை அளிக்கவல்ல பாடல், இப்போது பெரும் ஆழத்திலிருந்து வருவதால் எவர் காதையும் அது எட்டாது.பாலத்தை சென்றடைவதற்கு முடிவில்லாத கால ஓட்டம் தேவை, அதற்கு.

காற்று : நித்யம் என்ற காலமின்மையை பயன்படுத்திக் கொள்!நதி : நீ உயிருடன் வாழவேண்டும்.

காற்று : நீ உயிருடன் வாழவேண்டும் காந்தி!

காந்தி : ஆம்! குறுகிய காலமின்மை , புவியில் புகுந்து இருப்பது ஆடாமல் அசையாமல் குழந்தை போல என் மேல் இருக்கும் நீலநிற வானத்தையும் நீலவானத்தில் சிட்டுக்குருவியையும் பார்த்துக் கொண்டிருப்பது, நிதானமாக உயர்ந்தும் தாழ்ந்தும் மாறி மாறி வரும் அலைகளைப் பார்ப்பது போலாகும். நீங்களே பாருங்கள், நீரிலி ருந்து எழும் தீவில் எப்படிப்பட்ட தனிமையில் நான், தீவைச் சுற்றியிருக்கும் நீர்ப்பரப்பு பின்னுக்கு நகர்வதால், நான் நீர்மட்டத்திற்கு மேலே உயரத்தில் இருக்கிறேன்.

இனி எழுந்திருக்க வேண்டியதில்லை. இனி உணவு உண்ணவும், ரயில் வண்டிகளில் பிரயாணம் செய்யவும் வேண்டாம். இனி பேசத் தேவையில்லை, புன்னகை புரியத் தேவையில்லை. அதற்கெல்லாம் மாறாக மிக்க அமைதியாக இருப்பது, எல்லாவற்றையும் பற்றி எண்ணிப் பார்ப்பது மட்டும்தான் என் வேலை.

(லேசான பாடல் கீதத்தை உள்புகுத்தவும்)

இனிமேல் வெறுப்பினால் மனக்காயம் அடையப் போவதில்லை. மடத்தனத்தால் சித்திரவதை படப் போவதில்லை. தேவைக்கு மீறிய நல்ல உள்ளத்தால் களைப்படையப் போவதில்லை, நண்பர்களே! மனித சஞ்சாரமற்ற பாலைவனத்தில் ஒரு யோகியைப் போல தவத்தில் என்னால் ஈடுபட முடியும் நண்பர்களே!

தெய்வாம்சம் என்பது என்ன என்பதைப் பற்றியும் மனிதர்களை பற்றியும் என்னுடைய சிறிய எளிய ஆன்மாவைப் பற்றியும் சிந்திக்கப் போகிறேன். சிந்தனையில் மூழ்குவது சிந்தனையின் வாயிலாக பிரார்த்திப்பது, பிரார்த்தனையில் ஈடுபடுவது, சில சமயங்களில் மட்டும் கேட்கும் என்னுடைய, நான் நேசிக்கும் சிறிய அமைதியான குரலை மீண்டும் கேட்கக் கூடிய அளவிற்கு பிரார்த்தனை புரிவது இந்த குரல்தான் பாதையை, சரியான பாதையை எனக்குக் காட்ட முடியும். நண்பர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள், தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருங்கள்.

(மணி அடிக்கும் ஓசை)

காந்தி : என்ன அது?

தோட்டா : முதல் வினாடி அது காந்தி! உனக்கு அளிக்கப்பட்ட ஐந்து வினாடிகளில் முதல் வினாடி முற்றுப் பெற்று விட்டது. உன்னுடைய மார்புக்கூட்டு எலும்புகளில் ஊடுறுவி இருக்கிறேன். இதயத்தின் மேல் இருக்கும் ஐந்தாவது, ஆறாவது எலும்புகளுக்கு இடையே மிகவும் ஜாக்கிரதையாக தேடிக் கொண்டிருக்கிறேன். மார்புக்கூட்டை போர்த்தியிருக்கும் தோலில் வலி ஏற்படுத்தாமல், மிருதுவாக நுழையக் கூடிய ஒரு மெல்லிய இடம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் வரைதேடிக் கொண்டிருப்பேன். நான் இதமாகத்தானே நுழைகிறேன் காந்தி?

(அடுத்த வினாடி அடுத்த மாதம்) 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.