தொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி

கவிதை - அம்மா
*தொடரும் ஜென்மங்களெல்லாம்,*
*தொடரட்டும் நம் பந்தம்,,,,,*
உயிரால் என்னை தைத்து,
*உனக்குள் வைத்தவளே…*   வரிகளில் உன்னை வைத்து,
 *வார்த்தையால் வணங்குகிறேன்….*
பூமி என்னை சுமப்பதில்லை,
*உன் பாசம் அது சுமக்கும்,,,*
சாமி நான் பார்த்ததில்லை,
 *உன் தியாகம் அது கோவிலாகும்,,,*
ஆணோ, பெண்ணோ,.,,,,, *கருப்போ, சிவப்போ,*
குறையோ நிறையோ,
*நிலைப்பேனோ மாட்டேனோ,*
பிறந்து இறப்பேனோ,
*இறந்து பிறப்பேனோ,*
குள்ளமோ உயரமோ,
நல்லவனோ கெட்டவனோ,,,
*போற்றுவேனோ தூற்றுவேனோ,,,*
எதுவும் தெரியாமல், என் மேல் பாசம் வைத்த  உயிரே….
*உன் பெயர் தான் அம்மா…..*
 ஊஞ்சலாய் தாலாட்டி ,
*ஆசையாய் பாலூட்டி.*
தலையை வருடியபடி,
*முதுகைத் தட்டியபடி,*
*தூங்கவைப்பாய் கொஞ்சியபடி..*
*அசைபோடுகிறேன்  ஏங்கியபடி….*
அம்மா, அம்மா என்றபடி,
*கண்கள் இரண்டும் நனைந்தபடி,,*
தேடுகிறேன் தாய்மடி,
*வணங்குகிறேன் உன் காலடி….*
*தொடரும் ஜென்மங்களெல்லாம்,,*
*தொடரட்டும் நம் பந்தம்,,,,*

இது என்ன விளையாட்டு..! – கோவை சங்கர்

Murugan and Woody Woodpeacock by art-rinay on DeviantArt (With ...

 

இது என்ன விளையாட்டு – சரவணா
இது என்ன விளையாட்டு

அடுத்தவன் பொருளை ஆசைப்படாதே
என்கிறது என்தங்க மனசு
அவன்பொருள் கவர்ந்து வாழ்ந்துபாரேன்
என்கிறது என்கள்ள மனசு!

பிறர்பெண்ணை பார்ப்பதுவே பெரும்பாவம்
என்கிறது என்தங்க மனசு
அவளழகை ரகசியமாய் ரசிக்கலாமா
என்கிறது என்கபட மனசு!

நல்ல எண்ணத்தை கொடுப்பவனும் நீ
கபட உணர்வை விதைப்பவனும் நீ
தர்மத்தை நெஞ்சினிலே பதிப்பவனும் நீ
ஆசைகளை மனதினிலே திணிப்பவனும் நீ!

என்னவதி உனக்கேன்ன விளையாட்டா
என்தவிப்பு உனக்கது தாலாட்டா
எனக்குத் தருகின்ற சோதனையா
எவ்வழி செல்கிறேனென பார்க்கிறயா!

 

அம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்

 கொழுக்கட்டையில்  ஆரம்பித்து தயிர் சாதத்துடன்  அம்மாவின் கை உணவு  முடிவடைகிறது. 

அடுத்த மாதத்திலிருந்து  சதுர்புஜன் அவர்களின் புதிய கவிதைத்தொடர் வர இருக்கிறது.

என்ன அது? 

கொஞ்சம் பொறுத்திருப்போம் 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018   
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
 14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
 15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
 16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019  
 17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
 18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
 19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
 20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
 21. அவியல் அகவல் நவம்பர் 2019
 22. சாம்பார் சக்தி டிசம்பர் 2019
 23. உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
 24. சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
 25. துவையல் பெருமை மார்ச் 2020
 26. பொடியின் பெருமை ஏப்ரல் 2020
 27. கீரை மகத்துவம் மே 2020

 

 1. தயிர் சாதப் பெருமை !

பிரசாத தயிர் சாதம் | ருசி | Rusi | tamil ... 

எந்த ஊர் சென்றாலும் வீடே சொர்க்கம் !

எங்கே போனாலும் உடன் திரும்பத் தோணும் !

வித விதமாய் பல ருசியாய் சாப்பிட்டாலும்

ஈடில்லா உணவென்றால் தயிர் சாதம் தான் !

 

பகட்டெல்லாம் பல நாள் நான் பாராட்டினேன் !

பலபேரும் சொன்னதற்கு தலையாட்டினேன் !

உலகத்து உணவெல்லாம் ஒப்பு நோக்கினும்

ஈடில்லா உணவென்றால் தயிர் சாதம் தான் !

 

எந்த விதம் தொடங்கினாலும் முடிவு ஒன்றுதான் !

ஆடி அடங்கும்போது தேவை அமைதி தான் !

நாளுக்கொரு புதிய சுவை அனுபவித்த பின்

இறுதியில் சேரும் இடம் தயிர் சாதம் தான் !

 

தயிரும் பாலும் விட்டு நன்றாய் பிசைய வேணுமே !

விரை விரையாய் இல்லாமல் மசிய வேணுமே !

சுவைக்கு சற்று கல்லுப்பை அனுமதிக்கலாம் !

ஊறுகாயை தொட்டு தொட்டு அனுபவிக்கலாம் !

 

மாவடு தொட்டுக் கொண்டால் மதி மயங்குமே !

மோர் மிளகாய் என்று சொன்னால் முறுக்கேறுமே !

ஆவக்காய் சேர்த்தடித்தால் ஆஹா சொர்க்கமே !

எலுமிச்சை என்றாலும் நன்றாய் சேருமே !

 

தட்டில் சாதம் குறையக் குறைய இன்பம் ஏறுமே !

உண்ட உணவில் திருப்தி நிலை உருவாகுமே !

எத்தனை முறை உண்டாலும் அதே ஆனந்தம்

அம்மா கை தயிர் சாதம் பரமானந்தம் !  

 

 

 

 

 

 

காலையிலே!- தில்லைவேந்தன்

 

(சான் பிரான்சிஸ்கோவில் வீட்டிலிருந்து  நான் எடுத்த  காலையிலே  )

.                     காலையிலே!

கொஞ்சம் கதிரொளி, கொஞ்சம் இளவளி
     கூடிட வேண்டும் காலையிலே
பஞ்சின் ஒருதுளி பரவும் வான்வெளி
     பார்த்திட வேண்டும் காலையிலே
கெஞ்சும் குயிலொலி,கொஞ்சும் கிளியொலி
     கேட்டிட வேண்டும் காலையிலே
மிஞ்சும் பனிமலி பச்சைப் புல்வெளி
     மிதித்திட வேண்டும் காலையிலே.

கொஞ்சம் மலர்மணம், கொஞ்சம் மண்மணம்
     குலவிட வேண்டும் காலையிலே
துஞ்சும் இருளினம் இல்லை மறுகணம்
     தோய்ந்திட வேண்டும் காலையிலே
செஞ்சொல் பனுவல்கள் செய்து தமிழினில்
     திளைத்திட  வேண்டும் காலையிலே  ்
நெஞ்சின் கவலைகள், நேற்றின் திவலைகள்
     நீங்கிட  வேண்டும்   காலையிலே

                                                 

சின்ன சின்ன ஆசை !   – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

  Chinna Chinna Aasai DVDHD Roja 1080p HD - YouTube

 

அன்பு மலர்கள் மலர்ந்து

அமைதி நிலவ வேண்டும்

ஆன்மீக அன்பர்கள் கூடி

ஆன்ம பலம் பெற வேண்டும்

 

இன்னிசை  எழுப்பி புவியில்

இன்பம் பெற வேண்டும்

ஈன்றவளை தெய்வம் 

என்று நினைக்க வேண்டும்

 

உண்மை தன்மையுணர்ந்து

வாழ்வில் உயர்வடைய வேண்டும்

ஊனம் கண்டாலும் நேயமுடன்

நல்லுறவோடு பழக வேண்டும்

 

எவ்வுயிரும் தன் உயிர்போல்

நினைக்கும் உள்ளம் வேண்டும்

ஏற்றமிகும் பாரதம் என 

எங்கும் பேசப்பட வேண்டும்

 

ஐயம் தெளிவுபட நல்ல 

கல்வி கற்க வேண்டும்

ஒற்றுமை எங்கும் நிலவி  

ஓரினமென நினைக்க வேண்டும்

 

ஒளவை மொழி அமுதமொழி 

அனைவரும் உணர வேண்டும்

எ:.குபோல் வீரம் எங்கும்

உலகில் உறுதிபட வேண்டும்

 

உலகில்

அன்பு விதையைத்தூவி

பண்பு நீரைப் பாய்ச்சி 

உழைப்பு உரமிட்டு 

ஆன்மீக மனிதநேய 

பயிரை வளர்த்தால் 

அல்லவை தேய்ந்து உலகில் 

நல்லவை பெருகும் !

 

        

காதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்

கொரானா காலத்தில்  அவர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே எடுக்கப்பட்ட குறும் நகைச்சுவைப் படம். 

காத்தாடி சார் வழக்கம்போல கலக்குகிறார் !

நீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்

இவர்  ஒரு எழுத்தாளர் .நாடகத் தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர்.
40ஆண்டுகளாக மேடை நாடகங்கள் நடத்தி வருகின்றார் .
இவர்  எழுதி இதுவரை 13 நூல்கள் வந்துள்ளன.
அவற்றில் சில…
மினியேச்சர் மகாபாரதம்,
இயக்குநர் சிகரம் கேபி,
விதுர நீதியும் வள்ளுவ நீதியும்,
தமிழ் நாடகமேடை தோற்றமும் வளர்ச்சியும்,
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்,
வள்ளுவத்தில் உவமை உலா,
பூவா தலையா (சிறுகதைகள் தொகுப்பு)
பாரதரத்னா என்ற நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருது பெற்றுள்ளார் .
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் “வாழ்நாள் சாதனையாளர்”விருது, சென்னை கல்சுரலின் “நாடகக் கலா சிரோமணி’ விருதுகளையும் பெற்றுள்ளார் 

எத்தனை கோடி இன்பம் | Ethanai kodi inbam vaithai ...

இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.

சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.

நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.

சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்…கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.

நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்…கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.

அளவான சாப்பாடு

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)

உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.

மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.

மனம் களங்கம் இல்லை என்றாலே…மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.

நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.

பாரதி இன்பமாய் நினைத்தவை…எதை எதைத் தெரியுமா?

தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்

இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்

ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது…இன்பமாய் வாழ்வோம்.

இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு…வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

புது நிறம் – வளவ. துரையன்

                  

 

 தெரிந்தே இறங்கிய

  ஆழமான நதியில்

  அமிழ்ந்து கொண்டிருக்கிறேன்

 

நீரைக் குடித்துக் கொண்டு

உராயும் மீன்களை உதறியும்

போய்க்கொண்டிருக்கிறேன்.

 

முத்துகுளிப்பவன் போல

சிப்பிகளைக் கொண்டுவந்து

குவிப்பேன் என நீ காத்துக்கொண்டிருக்கிறாய்

 

இன்னமும் வெளிவரும் குமிழ்கள்

என் இருப்பை உணர்த்தலாம்

 

பல பெரிய சுறாக்கள்

பொறாமைக் கண்களுடன்

ஆனால் புன்சிரிப்புடன்போகின்றன.

 

என்மேல் படரும் பாசிகள் 

எனக்குப் புது நிறம் அளிக்கின்றன.

 

எந்த நிறமாய் மாறினாலும்

நீ என்னை அறிந்து விடுவாய்

ஆழத்திலேயே அமிழ்ந்து விடலாமா

என யோசிக்கிறேன்

 

 

ஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி

‘விண்ணைத் தாண்டி வருவாயா ?’

படத்தின் தாக்கம் மறைய பலருக்கு பல நாட்கள் ஆகலாம்.

ஆனால் கார்த்திக்கும் ஜெஸ்ஸிக்கும், -, எஸ் டி ஆருக்கும், திரிஷாவுக்கும் ,  கவுதம் மேனனுக்கும்ஏ ஆர் ரஹ்மானுக்கும் அதன்    தாக்கம் எப்போதும் இருக்கும் 

பார்த்து மகிழுங்கள் !

கார்த்திக் டயல் செய்த எண் !

என்ன அருமையான குறும்படம்

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

Dr. J. Bhaskaran Tamil Novels | Tamil ebooks online | Pustaka
சாது மிரண்டால்! – அறுபதுகளின் தமிழ் த்ரில்லர்!! 
55 வருடங்களுக்கு முன் வந்த ஒரு தமிழ்த்திரைப்படம் – அன்றைய ‘த்ரில்லர்’ வகைப் படம் – சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்ற பெரிய நட்சத்திரங்கள் இல்லாத, படம்! நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம்!
குவிகம் இலக்கிய வாசல் சமீபத்தில் நடத்திய ‘ஜூம்’ மீட்டிங் வித்தியாசமானது – “தனக்குப் பிடித்த ஒரு படம் பற்றி, ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும்”, ஏழு படங்கள் பேசப்பட்டன! நான் பேசிய படத்தின் சிறு ஆரம்பக் குறிப்புதான் மேலே உள்ளது!
1958ல் அன்றைய மெட்ராஸில், ஓடும் காரில் வங்கி ஊழியர் ஒருவர் பணத்துக்காகக் கொல்லப் பட்டார் – கொன்றது அவரது நண்பர்களே! சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருப்பவர்கள்அவர்கள். வங்கி ஊழியர், பெரிய தொகையை தி நகர் கிளைக்கு. எடுத்து வரும்போது காரிலேயே கொலை செய்யப்படுகிறார். ‘சூரியநாராயணன் கொலை வழக்கு’ என மிகவும் பேசப்பட்ட முக்கியமான வழக்கு அது!
அன்றைய பிரபல இயக்குனர் பீம்சிங், இந்தக் கொலையை மையமாக வைத்து, பல எதிர்பாராத திருப்பங்களுடன், அருமையான ‘கிரைம் த்ரில்லர்’ ஒன்றை உருவாக்கித் தனது உதவி இயக்குனர்கள், திருமலை – மகாலிங்கம் இயக்கத்தில், மெல்லிசை இரட்டையரில் ஒருவரான டி.கே. ராமமூர்த்தியின் இசையில் தயாரித்த படம்தான் ” சாது மிரண்டால்“.
வினாயகா சொஸைடி பேங்க் காஷியர் சாதுவான பசுபதி. நேர்மைக்கும், அன்புக்கும், கருணைக்கும் உதாரணமானவர்! அவரது குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுக்கும் டீச்சர் கல்பனா. குடும்ப நண்பரும், டாக்ஸி டிரைவரும் ஆன கபாலி, அவரது காதலி கற்பகம் மற்றும் பேங்க் ஏஜெண்ட் (மானேஜர்) இவர்கள் பரஸ்பரம் அறிமுகமான நல்லவர்கள்!
கொலை, கொள்ளை, திருட்டு, குழந்தைகள் கடத்தல் செய்யும் நரசிம்மன் போலீசால் தேடப்பட்டு வருபவன். பசுபதியின் பால்ய சிநேகிதன். நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்கும் நரசிம்மனை நம்புகிறார் பசுபதி – பசுபதியிடம் வலிப்பு வருவதைப் போல் நடித்து, மெழுகில் பேங்க் சாவியைப் பிரதி எடுத்து, இரவோடிரவாக பணத்தைக் கொள்ளையடிக்கிறான் – அமெரிக்காவில் இது போன்ற கொள்ளையைப் பற்றி மானேஜர் சொல்லியிருப்பதும், டாக்சி டிரைவர் நரசிம்மனைப் பற்றி எச்சரித்ததும் மனதைக் குழப்ப, இரவில் பேங்க் வந்து பார்க்கும் பசுபதி, செக்யூரிடி கொலை செய்யப்பட்டிருப்பதையும், பணம் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதையும் கண்டு, பதறுகிறார். பணப் பெட்டியுடன் நரசிம்மனைப் பார்த்து, கெஞ்சுகிறார் – பேச்சு முற்றி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் நரசிம்மனை எதிர்பாராமல் சுட்டுவிடுகிறார். இது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கபாலியின் காரில் நடக்கிறது – பின் சீட்டில் கீழே நரசிம்மன் பிணம் – பிணமிருப்பது தெரியாமல் கபாலி வண்டி ஓட்டுவதும், வண்டியில் ஏறும் சவாரி ஒவ்வொன்றும் பயந்து அலறி ஓட, ஒரு பாதிரியார் மட்டும், போலீஸுக்குத் தகவல் தருகிறார்! போலீஸ், விபரம் அறிந்து நரசிம்மனின் கூட்டாளிகளைப் பிடித்தார்களா? பணம் என்னவாயிற்று? பசுபதி மீது விழுகின்ற திருட்டு மற்றும் கொலைக் குற்றம் என்னவாயிற்று? என்பது மீதித் திரைப்படத்தில் வருகிறது!
ஒரு கிரைம் நடப்பது, பார்வையாளர்களுக்குத் தெரியும். படத்தில் வரும் பாத்திரங்கள் எப்படித் தெரிந்து கொள்கிறார்கள் என்பதைச் சொல்லுவதில் தான் டைரக்டரின் திறமை இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு வந்த இந்தப் படம் இன்றும் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதற்கு, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாவற்றிலும் இருக்கும் ‘அர்ப்பணிப்பு’ தான் காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது!
பசுபதியாக டி ஆர் ராமச்சந்திரன் (அருமையான நடிப்பு), பேங்க் ஏஜண்டாக சகஸ்ரநாமம் (பண்பட்ட நடிப்பு), நரசிம்மனாக ஓ ஏ கே தேவர் (வில்லனாக சிறப்பு), கபாலியாக நாகேஷ், காதலியாக மனோரமா (என்ன ஒரு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர், டைமிங் – செம ஜோடி!),குழந்தைகளாக குட்டி பத்மினி, மாஸ்டர் பிரபாகர், டாக்சி பயணிகளாக, பாலையா, டைபிஸ்ட் கோபு, ஏ கருணாநிதி, ஏ.வீரப்பன், ராமாராவ், உசிலை மணி, வி நாகைய்யா என நட்சத்திரக் கூட்டம்! ஒரு மிகையான நடிப்போ, அநாவசியமான வசனமோ கிடையாது!
நான் முதன் முதலாகத் தனியாகச் சென்று தியேட்டரில் பார்த்த படம் சாது மிரண்டால்! சிதம்பரம் நடராஜா டாக்கீஸில், சூடான கோடைக் கால மாட்னி ஷோ! முன் பென்ச் (35 பைசா டிக்கட்!) – வியர்வை, பீடி, சிகரெட் நாற்றம், ப்ரொஜெக்டர் ரூம் சதுர ஓட்டையிலிருந்து திரைக்கு வரும் ஒளிக் கற்றையில், சுருளாகச் செல்லும் பீடிப் புகை, இடையே விற்கப் படும் சோடேலர், வர்க்கி, கமர்கட் – இத்தனைக்கும் நடுவில், நாகேஷ் என்னும் அந்த மகா கலைஞனின் பரம இரசிகனாக ஆனேன் நான்! மீண்டும் 55 வருடங்களுக்குப் பிறகு, இன்றும் யூ ட்யூபில் பார்க்கும் போது, அன்று சிறுவனாக இரசித்த அதே மனநிலை, மகிழ்ச்சி, வியப்பு – அதே மலர்ச்சியுடன் சிரித்தேன் நான்!
ஏ வீரப்பன் தன் பெயரைப் போட்டுக்கொள்ளவில்லையெனினும், வசனம் எழுதியது அவர்தான் என்று வாமனன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். (‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்துக்கும் இவர்தான் வசனம் – சமீபத்திய கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ ஜோக்கும் இவர் எழுதியதே என்பது உபரிச் செய்தி!).
நரசிம்மனிடமிருந்து பணப் பெட்டியைப் பிடுங்க, பசுபதி போராட, அப்போது நரசிம்மன் சொல்வது: “ என்ன சாது மிரளுதா பசுபதி? நீ வெறும் பசுதான், நான் சிம்மம் – நரசிம்மன்” என்றபடி கைத்துப்பாகியை எடுப்பது சிச்சுவேஷனுக்கேற்ற வசனம்!
கதையோட்டத்தில், போகிற போக்கில் வந்து விழும் நகைச்சுவை வசனங்களுக்கு அளவேயில்லை! புது மணத் தம்பதியாக வீரப்பனும் அவர் மனைவியும் காரில் பேசிக்கொள்வதும், வழியில் ஒரு பேட்டை ரவுடியிடம் நாகேஷ் படும் பாடும், பிணத்தைப் பார்த்து புது மணத் தம்பதிகள் அலறியடித்து ஓடுவதும் இன்றும் இரசிக்கத் தக்கதாய் இருக்கிறது!
பாகவதர் பாலையா ‘யாரோ, இவர் யாரோ’ பாடியபடி பயப்படுவதும், மேக் அப் மேன் ஏ கருணாநிதி, கையில் பொம்மைத் தலையுடன் மிரளுவதும், ஃபாதர் நாகையா வழியில் இறக்கி விடச் சொல்ல, “என்ன ஃபாதர், மேரி மாதா கோவில்ல இறக்கி விடச் சொன்னீங்க, இந்துக் கோவில் முன்னால இறங்கறீங்க (அன்றைய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)” என்று நாகேஷ் கேட்க, “எந்த மதமா இருந்தால் என்னப்பா, தெய்வம் ஒண்ணுதானே” என்கிறார் ஃபாதர்.
டாக்சியில் பிணத்தைப் பார்த்து, நாகேஷ் எகிறி குதிக்க, மனோரமாவும் அவரும் பேசும் பேச்சு நகைச்சுவையின் உச்சம். “பேசாம, போலீஸ் ஸ்டேஷன்லெ போய் சொல்லிடலாம்யா” – மனோரமா. உடனே நாகேஷ் “ பின்ன இதுங்கூட பேசிக்கிட்டேவா போக முடியும்?”
“நீதான் டாக்சிலே மறந்த சாமானெல்லாம் போலீஸ் ஸ்டேஷன்லெ கொண்டு குடுப்பியேய்யா” – மனோரமா.
“அதெல்லாம் மறந்த சாமான். இது இறந்த சாமான் இல்லே” என்பார் நாகேஷ்.
அன்றைய மெட்ராஸின், மவுண்ட் ரோட், மன்ரோ சிலை, நேப்பியர் பாலம், கடற்கரை ரோட், பீச்சில் அறுகோண ரேடியோ ஒலிபரப்பும் இடம், சென்ட்ரல் ஸ்டேஷன், பெசண்ட் நகர் பீச் – அருமையான நாஸ்டாஜியா!
1947 வருட மாடல் ‘Chevy fleetmaster’ – நீளமான மூக்குடன், கோழி முடை வடிவ கார் (MSW 7593) – மேலே மஞ்சள், கீழே கறுப்புக் கலர் டாக்சி – இடது பக்கம் மீட்டர் – ‘ஃபார் ஹயர்’ சைன் டிஸ்கை, ‘டிங்’ சத்தத்துடன் திருப்பி, மீட்டர் போடுவது – படத்தில் ஒரு முக்கியமான பாத்திரமாகவே வரும் டாக்சி, மெட்ராஸ் வீதிகளில் வலம் வந்த நாட்களை நினைவூட்டுவது சுகம்!
பாலமுரளி கிருஷ்ணா, ஏ எல் ராகவன், எல் ஆர் ஈஸ்வரி, எஸ் வி பொன்னுசாமி ஆகியோர் பாடியுள்ள பாடல்களை எழுதியுள்ளவர்கள் ஆலங்குடி சோமுவும், தஞ்சை வாணனும் – அளவான, த்ரில்லர் படத்திற்கேற்ற இசை டி.கே.ராமமூர்த்தி!
ஒரு பழைய படம், ஏராளமான சிந்தனைகளை, மனத்திரையில் ஓடவிடுகிறது என்றால், அந்தப் படத்தின் வார்ப்பு அவ்வளவு சிறப்பானது என்று பொருள்!
அப்போது வாழ்க்கை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும், அதிக குழப்பங்கள் இல்லாமலும் இருந்தது – அதர்மம் இருந்தாலும், தர்மமே வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது! நம்பாதவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்!