தீரன், அரவிந்தன், பொன்முடி, வளவன், மணிவண்ணன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களைத் தவிர, இயற்பெயரிலும் பல படைப்புகளைப் படைத்தவர். சிறுகதை, நெடுங்கதை, நாவல், கட்டுரை, கவிதை, விமர்சனங்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல தளங்களில் எழுதியவர். தினமணிக் கதிர், வார இதழ், கதைக்கதிர் உள்ளிட்ட இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் ‘தீபம்’ என்னும் இலக்கிய இதழைச் சிறப்பாக நடத்தி ‘தீபம்’ பார்த்தசாரதி என்றும் அறியப்பட்டவர்.
தனது கருத்துகளைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் அச்சமின்றியும் எழுதவும் மேடையில் பேசவும் தயங்காதவர். ‘பொய் முகங்கள்’, ‘முள்வேலிகள்’, ‘சுதந்திரக் கனவுகள்’, ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’, ‘துளசி மாடம்’, ‘மணிபல்லவம்’, ‘நித்திலவல்லி’, ‘பாண்டிமாதேவி’, ‘ராணி மங்கம்மாள்’ முதலிய புதினங்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட நூறு நூல்கள் வெளிவந்துள்ளன.
சாகித்ய அகடமியின் விருதினைப் பெற்றவர். அகடமியின் தமிழ்ப் பிரிவு உறுப்பினராகச் செயல்பட்டுக் குறிப்பிடத்தக்கப் பணிகளை ஆற்றியவர்.
********
இவரது பின்னக் கணக்கில் தகராறு என்னும் கதை இப்படித் தொடங்குகிறது
எனக்குச் சந்தேகமாயிருந்தது. நேருக்கு நேர் கேட்டு விடலாம் போலவும் தோன்றியது. அப்படிக் கேட்பது நாகரிகமாகவும் நாசூக்காகவும் இருக்காதோ என்று தயக்கமாகவும் இருந்தது. மனசு குழம்பியது. இரண்டு மூன்று ஆபரேஷனுக்குப் பின் இப்போது எனக்குக் கண் பார்வை மங்கி விட்டது. அந்த இடமோ புதுடில்லியின் ராஷ்டிரபதி பவன் அசோகா ஹால்.
என்று தொடங்குகிறது..
அசோகா ஹாலில் சமஸ்கிருத பண்டிதர்களைக் கௌரவித்து விருதுவழங்கும் விழாவில் விருது பெற இருந்த பண்டிதர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மனிதரைப் பற்றிய சந்தேகம் கதைசொல்லிக்கு. இவருக்கு முன்னமே தெரிந்தவரும் தற்சமயம் பல ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லாத ராம்மோகன் ராவ் என்பவர்தான் அந்த மனிதர் என்று இவருக்குச் சந்தேகம் வருகிறது. விருதாளர்கள் பட்டியலில் ராம்மோகன் ராவ் என்னும் பெயரும் இருப்பது என்னவோ உண்மை. இந்த ராம்மோகன் ராவ் வேறொருவராகவும் இருக்கலாம். அல்லது முகமும் தோற்றமும் முதுமையால் மாறுதல் அடைந்திருக்கலாம்.
இருவரும் தஞ்சை உயர்நிலைப்பள்ளியில் சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்துப் படித்தவர்கள். அதிலும் ராம்மோகனின் தந்தை ஒரு சமஸ்கிருத விற்பன்னர். வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக்கொடுத்து ராம்மோகனை ஒரு சம்ஸ்கிருத மேதையாகவே ஆக்கியிருந்தார். பள்ளிப்படிப்பு முடிந்து இருவரும் கும்பகோணம் கல்லூரியிலும் ஒன்றாகப் படித்தவர்கள்.
ராம்மோகனுக்கு கணக்கு வராது. பின்னக்கணக்கு என்றாலோ வரவே வராது.
பின்னப்படுத்திப் பார்ப்பதே அவனுக்குப் பிடிக்காது.பள்ளிக்கூடத்தில் வாங்கித் தின்பதற்கு அல்லது வேறு எதற்காவது முழு ரூபாயோ முழு அணாவோ எதைக் கொண்டு வந்தாலும் அதை அவன் மாற்றவே மாட்டான். அதை அப்படியே வைத்துக் கொண்டு என்னிடமாவதோ வேறு யாரிடமாவதோ கடன் கேட்பான். முழுசை மாற்ற அவனுக்குத் தெரியாது. பிடிக்காது. காரணம் பின்னக் கணக்கில் அவனுக்கு எப்போதுமே குழப்பம்.
ஒரு ரூபாயிலிருந்து கால் ரூபாயை மாற்றி விட்டால் மீதம் என்ன?’ என்று அந்த நாளில் ராம்மனோகரனைக் கேட்டால் மீதத்தைச் சொல்வதற்குப் பதில், “ஒரு முழு ரூபாயை ஏன் மாற்ற வேண்டும்? அது அப்படியே ஒரு முழு ரூபாயாகவே இருந்து தொலைத்து விட்டுப் போகட்டுமே” என்று தான் பதில் சொல்வான்.
ஜனாதிபதி வந்துவிட்டார். நிகழ்ச்சியில் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. விருது மற்றும் இதர சன்மானங்களுடன் பேழைகள் தயாராக இருக்கின்றன. இவரோ நண்பனின் நினைவுகளில் மூழ்குகிறார்
முழுமையைப் பின்னப் படுத்துவது அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. கும்பகோணம் கல்லூரியில் படிக்கிற காலத்தில் காவேரியைக் கடந்து அக்கரைக்குப் போக என்று காலேஜில் சேர்ந்த முதல் நாள் ஒரு முழு வெள்ளி ரூபாய் கொண்டு வந்தான் அவன். எனக்குத் தெரிந்தவரை அந்த முழு வெள்ளி ரூபாயைக் காலேஜ் படிப்பு முடிந்து வெளியேறி டி.ஸி. வாங்கிக் கொண்டு போகிற வரை ராம் மனோகரன் மாற்றவே இல்லை. நானோ வேறு சிநேகிதர்களோதான் ‘போட்டுக்கு அவனுக்காகச் சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தோம்.
இன்டர்மீடியட் முடிந்து ராம்மோகனின் பட்டப்படிப்பு திருச்சியில் தொடர்கிறது. கதை சொல்லி வைகுண்ட ஏகாதசிக்காக ஸ்ரீரங்கம் போயிருந்தபோது மீண்டும் சந்திக்கிறார்கள்.
நான் அங்கே அவனுடைய விருந்தாளி என்று பேர். ஆனால் டவுன் பஸ் ஏறும்போது, ஹோட்டலில் டிபனுக்குப் பில் கொடுக்கும் போது எல்லாச் சமயங்களிலும், “டேய் எங்கிட்ட முழு அஞ்சு ரூபா நோட்டா இருக்குடா… சில்லறையா இல்லே… நீயே கொடுத்திடு” என்று வழக்கம் போல் ராம் மனோகர் செலவையெல்லாம் என் தலையில் கட்டிவிட்டான்.
அவனுடைய முழு நோட்டை மாற்றவேயில்லை. முழுசை மாற்றக் கூடாது என்னும் ! அவனுடைய வாழ்க்கைத் தத்துவம் திருச்சிக்குப் போன பின்னும் கூட மாறியதாகத் தெரியவில்லை.
ராம்மோகனின் முன்னோர்கள் மன்னர் சரபோஜி காலத்தில் புனா நகரிலிருந்து தஞ்சையில் குடியேறிய புகழ்பெற்ற ‘சித்பவன்’ என்கிற வம்சாவளியினர். முழுசைக் குறைத்தால் புரியாது என்று பின்னக் கணக்கை ஆசாரக் குறைவாகவே கருதி விட்டார்களோ என்றும் சந்தேகம் வருகிறது கதைசொல்லிக்கு.
ஜனாதிபதியின் உரை தொடங்குகிறது. இவருக்கு மீண்டும் நண்பனின் நினைவுகள் வட்டமிடுகின்றன. வைகுண்ட ஏகாதசி அனுபவத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இருவரும் திருப்பதியில் சந்திக்கிறார்கள். தற்செயலாக ஒரே சமயத்தில் குடும்பத்தோடு தரிசனத்திற்கு வந்திருக்கிறார்கள். சென்னைக்குப் போகவேண்டிய இரு குடும்பங்களும் ரேணிகுண்டாவில் சென்னை செல்ல இரயில் ஏறுகிறார்கள்.
“என்னிடம் முழு நூறு ரூபாய் நோட்டா இருக்கு! அதைப் போயி மாத்த வேண்டாம்னு பார்க்கறேன். நீயே எனக்கும் என் ஒய்ஃபுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்திடு” என்றார்.
எக்காரணம் கொண்டும் முழுசை மாத்தக் கூடாது என்னும் கொள்கை புரொபஸராகி சம்பாதிக்கும் இன்றும் ராம் மனோகர் ராவை விட்டுப் போகவில்லை என்று தெரிந்தது.அது ஒரு ரூபாயோ, ஐந்து ரூபாயோ, நூறு ரூபாயோ, எதுவானாலும் மாற்றிப் பின்னமாக்கிச் செலவழித்து விடக் கூடாது என்பதில் ராவ் அப்படியேதான் இருந்தார்.
விருது வழங்குதல் நடக்கிறது. மீண்டும் தேசியகீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி முடிவடிகிறது. டீயும் பிஸ்கட்டும் வழங்கப்படுகிறது. ராம்மோகனை குறிவைத்துப் போகிறார். அவர் அருகிலிருந்தவரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
“சாஸ்திரிகளே! நான் கரோல் பாக் போயாகணும். எங்கிட்ட நூறு ரூபாய் நோட்டாக இருக்கு. அதை மாத்த வேண்டாம்னு பார்க்கறேன்… சில்லறையாக ஒரு ரெண்டு ரூபா இருந்தாக் கொடுங்க… மெட்ராஸ் போறப்போ ரயில்லே திரும்பத் தந்துடறேன். ”நான் விசாரிக்க வேண்டிய அவசியமே நேரவில்லை . அது சத்தியமாக என் பால்ய சிநேகிதன் ராம் மனோகர் ராவ்தான். நிச்சயமாக வேறு யாரும் இல்லை. வேறு யாராகவும் இருக்க முடியாது. எழுபத்தேழு வயதான பின்பும் இன்றும் பின்னக் கணக்கில் அவருக்குத் தகராறு இருந்தது. முழுசை மாற்றினால் குழப்பம் என்ற அவருடைய நிரந்தர வாழ்க்கைத் தத்துவமும் அப்படியேதான் இருந்தது.
பாண்டித்யமும் கஞ்சத்தனமும் உடன் பிறந்தவையோ அல்லது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘ஷைலாக்’கும் ‘மைதாசு’ம் மறைந்திருக்கிறார்களோ என்றெல்லாம் யோசிக்கிறார் கதைசொல்லி.
நான் ராவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரையும் என்னோடு அழைத்துச் செல்வதாக இருந்தால் முழுசாக இருக்கும் பத்து ரூபாயைக் கண்டிப்பாக மாற்ற வேண்டி நேரிடலாம். அது மட்டுமில்லை. அவரைக் கூட அழைத்துக் கொண்டு என் வீட்டுக்குப் போன பின் நான் மேலும் பல முழு பத்து ரூபாய்களை மாற்றும்படி ஆனாலும் ஆகிவிடக்கூடும். அதற்கு நான் தயாராக இல்லை . முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற்பட்டு விட்டது. அந்தத் தத்துவத்தின் குருநாதருக்கு முன்னிலையிலேயே அந்த வாசனா ஞானம் என்னுள் பிறந்ததுதான் ஆச்சர்யம்.
என்று கதை முடிகிறது.
* * * * *
‘தீபம்’ பார்த்தசாரதி அழகுத் தமிழ் நடைக்கும், ஆணித்தரமான கருத்துகளுக்கும், சமுதாயத்தின் தவறுகள் குறித்த சாடலுக்கும் அறியப்பட்டவர். மேலும் தனிச்சிறப்பு வாய்ந்த சரித்திர நவீனங்களும் மிகப் பரவலான ரசிகர்கூட்டத்தைப் பெற்றவை. இந்தக் கதையில் மெலிதான நகைச்சுவை மிளிர்கிறது.
‘அனுதாபக் கூட்டம்’ என்னும் இன்னொரு கதையும் நினைவுவிற்கு வருகிறது மறைந்த தியாகியின் வறுமையில் வாடும் குடும்பத்திற்காக நிதி திரட்டுகிறார்கள், ஆனால் அந்தப் பணத்தைக் கொண்டு அவருக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்கிறார்கள். மணிமண்டபம் நிறுவ அமைக்கப்பட்ட குழுவிற்கு தியாகியின் மனைவி எழுதம் கடிதம் இது:-
‘தாங்கள் என் கணவர் பெயரில் கட்ட இருக்கும் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் தோண்டியதும் எங்களுக்குத் தகவல் தெரிவித்தால் நானும் என்னுடைய மணமாகாத இரு பெண்களும் அங்கு வருகிறோம். எங்களை உள்ளே தள்ளி மூடிவிட்டு அதன்மேல் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் போடுவதுதான் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். தயவு செய்து அப்படியே செய்யக் கோருகிறேன்.’