சிறு குழந்தைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் நான் வகுப்பு எடுக்கும் நாட்களில் நடந்தது இது. குழந்தைகள் வளர்ச்சி பற்றிய பாடங்கள் நடத்திக் கொண்டிருந்தேன். இது எனக்கு மிகவும் பிடித்த பகுதி. காரணம், இந்தப் பகுதியை ஆசிரியர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு செயல் படுத்தினால், குழந்தைகளின் மிக ஆரம்ப காலகட்டத்திலேயே அவர்களின் மனநலத் திறமைகளை மேம்படுத்தி, “வரும்முன் காப்போம்” நிலைநாட்ட முடியும். வாழ்நாள் முழுவதும் சிக்கலான சூழ்நிலைகளைச் சந்திக்கும் மனோதிடம் அடைவார்கள்.
இந்த பாடத்திட்டங்கள் சொல்லித் தருவதில் என்னுடைய கூர்ந்த ஆர்வம் வெளிப்படையாகத் தெரியும். வகுப்பில் இருப்பவர்களிடமும் இது தொற்றிக் கொண்டு விடும், மாணவிகள் அனைவரும் அந்த ஒரு மணிநேரமும் மிகவும் மலர்ந்து, சுறுசுறுப்பாகப் பாடத்தில் கவனம் செலுத்துவார்கள். இன்றும், என் மாணவிகள் அந்த பாடங்களைத் தெக்குத் தெளிவாக விவரிப்பது உண்டு.
இந்த விவரங்களைச் சொல்வது காரணமாகத்தான். அந்த வகுப்பில் பல்லவி என்ற மாணவி எப்போதுமே நிறைய உற்சாகத்துடன் இருப்பாள். இந்தப் பட்டத்தை வாங்கியதும் தன்னார்வ நிறுவனம் ஒன்று ஆரம்பிக்க உத்தேசித்துச் சேர்ந்திருந்தாள். முப்பது வயது, காதல் கல்யாணம். ஆர்த்தி, மைத்திரி என இரு பெண் குழந்தைகள், எட்டு வயதும், நன்கு வயதும். கணவர், மதன், தனியார் நிர்வாகத்தில் மேலாளர் வேலை. கைநிறைய சம்பளம். வசதியான வாழ்க்கை. வகுப்புக்குச் சொந்த வாகனத்தில் வருபவள். பக்கத்தில் வசிக்கும் சக மாணவிகளை அழைத்து வருவாள். இளகிய மனம் உடையவள்.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் பல்லவி, ஒரு நாள் கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களைப் பாதி தான் முடித்துக் கொடுத்தாள். இதை அவளுடைய கவனத்திற்குக் கொண்டு வந்ததும் முகத்தைச் சுளித்து எடுத்துக் கொண்டாள், ஆனால் முடிக்கவில்லை. அவளைத் தனியாக அழைத்துக் கேட்டதற்கு ஏனோதானோ என்று பதில். என் மனம் சங்கடப் பட்டது.
அவளைக் கவனிக்க ஆரம்பித்தேன். பல்லவியின் ஆடை அலங்காரம் குறைந்தது. தலையை நன்றாக வாரி அடர்த்தியான முடியை ஐந்து கால் ஆறு கால் பின்னல் போடுபவள், வெறுமனே விட்டாள். இதே நேரத்தில், அவளுடைய சகமாணவிகள் சிலர் என்னை மாலை வேளையில் தொலைப்பேசியில் அழைத்து, பல்லவியைப் பற்றி ஏதோ கவலையாக இருக்கிறது எனப் பகிர்ந்தார்கள்.
பாடத்தைக் கலந்துரையாடல் போல் நடத்துவது என் பாணி. மாணவியரின் கேள்விகள், சந்தேகங்கள் தெளிவாகும். பல்லவி கேள்விக்கு மேல் கேள்வி கேட்பாள், விவாதம் போல். இப்போது அப்படியே விட்டேத்தியாக இருந்தாள். ஒரு வாரம் ஓடியது. பல்லவி இப்படி இருந்ததே இல்லை.
பாடம் எடுக்கும் போது பலவிதமான மனநல காக்கும் குறிப்புகள் தருவது என் பழக்கம். பல்லவி ஏதோ தவிப்பில் இருக்கிறாளோ என்று, அதை மையமாக மனதில் வைத்துக் கொண்டு பல விஷயங்களை விவரித்தேன். முக்கியமாக, எந்த பிரச்சினையாக இருந்தாலும் வழி உண்டு என்றும், எந்த நிலையிலும் நாம் தனியாக இல்லை என்றும் எடுத்துரைத்தேன். ஏனெனில் பல்லவி மன அழுத்தத்தில் இருப்பதாக என்னுடைய கணிப்பு.
திடீர் என்று ஒரு திங்கட்கிழமை ஊருக்குப் போவதாகத் தோழியிடம் சொல்லிக் கொண்டு வகுப்பிற்கு வரவில்லை. அன்று பல்லவி வராததைக் குறித்து கவலையாக இருப்பதாகப் பல மாணவிகள் சொன்னார்கள். மாணவிகள் அறிந்ததுதான், காலையில் வகுப்புகள் எடுப்பேன், மாலையில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் மனநல ஆலோசகராகப் பணி புரிகிறேன் என்று.
நான் எதிர்பார்த்தது போலவே அன்று மாலை பல்லவி என்னை தொலைப்பேசியில் அழைத்தாள். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு விம்மி விம்மி அழுதாள். பக்கத்தில் ஏதோ குரல் கேட்டது. உடனே ஸ்பீக்கர் தொலைப்பேசியில் போடச் சொன்னேன். பல்லவி தினம் அழைத்து வரும் இன்னொரு மாணவி அவளைச் சமாதானம் செய்து, பேச ஊக்குவித்துக் கொண்டிருந்தாள்.
இந்த வகுப்பில் இது ஒரு பெரிய வரப்பிரசாதம். ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு இருப்பார்கள். தேவைப்படும் போது ஒட்டு மொத்தமாக கை கொடுப்பார்கள்.
பல்லவி அழுது கொண்டே விவரித்தாள். கல்யாணம் ஆகி ஒன்பது வருடமாக தன்னுடைய பெற்றோர், அண்ணன், மாமனார் மாமியார் வியக்கும் அளவிற்குச் சந்தோஷமாக இருந்தார்கள், எந்த இடைஞ்சலும் இல்லாமல்.
பல்லவிக்கு, எல்லாம் சேர்த்து வைத்தது போல் இப்போது அவளுடைய கணவன் மதனுடைய குழுவில் சேர்ந்த புஷ்பா என்பவளால் சலனங்கள். அவர்கள் இருவரும் இரவு உணவு உண்ணப் பல நாட்கள் வெளியே போனதுண்டு. புஷ்பா தனியாக இருப்பதால் மதன் கூடப் போகிறான் என்று பல்லவி எண்ணினாள்.
.
புஷ்பா மதனுடன் வீட்டிற்கு வந்து பலமணி நேரம் இருப்பாள். புத்தகம், பாடல்கள், வேலையைப் பற்றிய பல உரையாடல் இருவர் இடையில் ஏற்படும். பல்லவி ஏதாவது சொன்னால், புஷ்பா “இல்லை, உனக்கு இதெல்லாம் புரியாது” எனச் சொல்ல, மதன் நகைத்தது பல்லவியை மிகவும் பாதித்தது. புஷ்பா போன பிறகு கூட மதனிடம் பேசக் கூச்சப் பட்டாள். கல்யாணம் ஆகி இப்போது தான் முதல் முதலில் ஒரு திரை விழுந்தது.
பல்லவியை இது சமைத்துத் தா, அது செய் என்று மதன் கேட்பான். பல்லவி சமையல் நன்றாகச் செய்வதால் இதுபோன்ற வேண்டுகோள் விடுவதும் அவள் செய்வதும் உண்டு.
மதன் மொளனமாக இருப்பது, மெதுவாகப் பல்லவி மனதைக் குடைந்தது. அவர்கள் இருவரும் மிக அருகில் அமர்வது, ஏதோ செய்தது. மாமியாரும் இதைப் பற்றி மதனிடம் பேசப் பார்த்தாள். அவன் தட்டிக் கழித்து விட்டான். புஷ்பாவைப் பற்றி பெருமையாகப் பேசுவது, “அவளைப் பார், கத்துக்கோ” என்றது அதிகரிக்க, பல்லவி சோகமடைந்தாள். மதன் குழந்தைகளிடமும் பற்று இல்லாமல் இருந்தான்.
இல்லற வாழ்க்கை கையிலிருந்து நழுவிப் போகிறதோ? நான் தான் தேவையில்லையோ? என்ற எண்ணம் வளர, அப்படித்தான் என்ற முடிவிற்கு வந்தாள். மனம் உடைந்து போனாள். எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆர்த்தி-மைத்திரியைப் பார்க்கும் போதெல்லாம் இன்னும் வாடினாள்.
நடந்து வரும் அனைத்துக்கும் பல்லவி தன்னையே பழி கூறிக்கொண்டு வெறுத்துப் போய் இருந்தாள். நான் பல்லவியைத் தான் ஏன் அவ்வாறு யோசிக்கிறோம் என்று ஆராயச் சொன்னேன். தயங்கினாள். தன் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை, தற்கொலை செய்து கொள்ளலாம் என்றாள்.
யாருடைய தன்நலத்திற்கோ பல்லவி எதற்காக தன் வாழ்க்கையை அழிக்க நினைக்க வேண்டும்? இப்படி எதற்காக யோசிக்க வேண்டும்? எதையோ நினைத்து மதன் பல்லவியை ஏதேதோ சொல்வதால், அவள் தனது உயிரை அவ்வளவு துச்சமாக நினைத்து தற்கொலை என்ற எண்ணத்திற்கு வந்தாள். அவளுடைய ஸெஷன்களில் இதைப் பற்றி இன்னும் ஆழமாக ஆராய்ந்தோம். யாரோ செய்யும் சூழ்ச்சி, அது நாம் செய்யும் குற்றம் என்று கொண்டால் அவர்கள் நம்மை இன்னும் கீழே தள்ளச் செய்வார்கள் என்பதைப் பல்லவி புரிந்து கொண்டாள்.
இப்படி சங்கடப் படுவோரின் மனநிலை உயிரைத் துச்சமாக நினைத்து தன்னை மாய்த்து விடத் தூண்டும். இந்த தருணத்தில் நாம் அவர்களுக்குத் துணையாக நின்று, அவர்களிடம் இருக்கும் மனோபலத்தை நினைவூட்ட வேண்டும். ஜாம்பவான் அனுமனை நினைவூட்டுவது போல்.
பல்லவியை இந்த காலகட்டத்தில் எவ்வாறு வாழ்ந்து வருகிறாள் என்றதை விவரிக்கச் சொன்னேன். ஆரம்பித்தாள். மாலையில் நாற்பத்து ஜந்து நிமிடங்களுக்கு. அந்த வாரம் வகுப்பிற்கு வராததால், பாடங்களைக் குறித்துக் கொண்டு சந்தேகங்கள் இருந்தால், என்னிடம் கேட்கச் சொன்னேன். இது ஸெஷன் முடிந்த பின்னரே. பதினைந்து நிமிடங்கள் இதற்கு ஒதுக்கி வைத்தேன்.
படிப்பைச் சேர்த்ததற்குக் காரணம் இருந்தது. பல்லவியின் குறிக்கோள் நிறுவனம் ஆரம்பிப்பது. அதை நினைவூட்டினால், நிராகரிப்பாள். அதற்குப் பதிலாகப் பாடத்தில் மனதைச் செலுத்தி, தன்னுடைய வாழ்விலும் ஒரு அர்த்தம் உருவாக்கக் காத்திருப்பதைப் போகப் போக உணருவாள் என்பதுதான்.
ஸெஷன்களில் ஆர்த்தி, மைத்திரியும் பங்கு கொள்ள வைத்தேன். பெற்றோர் செயலை புரிந்து கொள்ளும் வயதில்லையே. ஆனால் ஏதோ தவறாக நடக்கிறது என்ற உணர்ச்சிகள் இருக்கும், நடப்பது உள்மனத்தில் பதியும், பிற்காலத்தில் வெவ்வேறு விதங்களில் பாதிக்கக் கூடும். இருவருக்கும் பல்வேறு கலை வடிவில் இருவரின் மனநிலை கணித்து, அதைச் சமாதானம் செய்வதைத் தொடங்கினேன்.
இவையெல்லாமே அதே வாரத்தில் ஓர் அவசர சிகிச்சை செய்வது போல் செய்தேன். எங்கள் தொழிலில் தேவை இருக்கும் போது இப்படிச் செய்வது உண்டு. உடல் நலன் அவசரத்திற்கு ஐ.சீ.யூ உபயோகிப்பது போல.
பல்லவியுடன் அவள் எதற்காக இவ்வாறு துவண்டு போனாள் என்றதை எடுத்துக் கொண்டோம். இக்கட்டானது, மதனே தன்னை உதாசீனப் படுத்தியது தான் என்பது வெளிவந்தது. இதையே ஆராய்ந்தோம். அவள் தனது அழகு, திறன்கள் வெளிப்படுத்துவது எல்லாம் மதனுக்காக என்று ஏற்றுக் கொண்டிருந்தாள். மதனின் கவனத்தை புஷ்பா ஈர்க்க, தன்னை வேற்றுமையில் தள்ளிக் கொண்டாள்.
உறவுகள் நம் சுயமதிப்பை மெருகேற்றி விடும். ஆனால் அதற்கு அடிப்படை நம் பங்கு தான் இருக்க வேண்டும். இதில், தன்னுடைய பங்கை நிராகரித்து விட்டதனால் பல்லவி மன அழுத்தத்தின் விதை விதைத்தாள். நாம் தன்னை மதிக்கவும், தனக்காக யோசிக்கவும் வேண்டும். நாமே நம்மைக் கால்மிதி போல் உபயோகித்தால் மற்றவர்களும் அதையே கடைப்பிடிப்பார்கள். இதைத் தனக்கு நடந்த சம்பவத்திலிருந்து உணர, பல்லவி தான் அம்மாவாகவும் இருப்பதைக் கோட்டை விட்டதை உணர்ந்தாள். ஆர்த்தி, மைத்திரி இருவரும் அடம் பிடிக்காமலிருந்ததை உணர்ந்தாள். நாம் இதெல்லாம் செய்கிறோம், இதுவும் நம் வாழ்வில் முக்கியம், அர்த்தம் என்று கண்டு கொண்டாள்.
பல்லவி ஆர்த்தி, மைத்திரிக்குக் கதைசொல்லி, பப்பெட் விரல்களில் வரைந்து பல விளையாட்டு காட்டி, பாடி, திரும்பப் பழைய படி மாற ஆரம்பித்தாள்.
பலன் அளித்தது. இந்த சில ஸெஷன்களில் பல்லவியிடம் பல மாற்றங்கள் தென்பட்டது. இதை உடனடியாக கவனித்தான் மதன். ஸ்தம்பித்தான். என்னை அழைத்தான். ஆலோசிக்க வேண்டும் என்றான். ஒப்புக்கொண்டேன்.
ஸெஷன்கள் ஆரம்பமான மூன்றே நாட்களில் இதுவரை நடந்த பலவற்றைப் பகிர்ந்து கொண்டான். புஷ்பா தனக்கு அத்தனை கவனம் தந்தது தன் ஆண்மையை மேம்படுத்த, அதை அப்படியே விட்டதாக ஒப்புக்கொண்டான். தனக்குள் இருக்கும் அந்த “ஏதோ இல்லை” என்பதைப் பற்றிப் பேசத் தேவை என்றதை உணர்த்தினேன்.
பல்லவி கேலியாக அவனுக்கு “மேல் மெனோபாஸ்” (male menopause) என்று ஒரு நாள் சொன்னது வெட்கமும் கோபமும் ஊட்டியதாகச் சொன்னான். அதுனாலேயும் புஷ்பா பல்லவியைத் தாழ்வாகப் பேச விட்டான் என்று ஒப்புக் கொண்டான். பல்லவியுடன் அவன் உறவின் ஆழத்தை ஆராய்ந்தோம். இத்தனை நாட்கள் ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டதை நினைவூட்ட, அவர்கள் உறவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
தன்னால் எந்த அளவிற்கு குடும்ப நிம்மதி குலைந்து போயிற்று என்பதை உணர்ந்தான். திரும்பப் பழைய படி இருக்க முயல ஆரம்பித்தான்
இதெல்லாம் பல்லவிக்கு புது சக்தியைத் தந்தது. தன்னுடைய நிலையைப் பற்றிப் புஷ்பாவிடம் பேசத் தயாரானாள். எதற்காக என்ற தெளிவு முக்கியமானது. முதலில் பழிவாங்க என்று எண்ணினாள். அப்படி என்றால் அவளுக்கும் புஷ்பாவிற்கும் என்ன வித்தியாசம்? புஷ்பா தாழ்ந்தாள் என்று பல்லவி நினைத்தாள். அவள் சரிந்த பாதாளத்திற்குப் பல்லவியும் போக வேண்டுமா என்றதை ஆராய்ந்தோம். செய்தாலும், அதனால் யாருக்கு லாபம்? இந்த கோட்பாடுகள் அவசியமானது.
நம் வெற்றி பெற மற்றவரைக் கீழே இழுப்பது வெற்றி அல்ல.
வேறு வழிகளை ஆராயச் செய்தேன். அதிலிருந்து வந்தது, புஷ்பாவை வீட்டிற்கு அழைத்து, பேசிப் புரிய வைக்கலாம் என்ற முடிவு. இதுதான் பல்லவியின் தேர்வு. அவள் கோபம், அழுகை இல்லாமல் எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்குப் பல ரோல் ப்ளே பயிற்சி. ஒவ்வொரு முறையும் அழுதாள். கடைசியில் புஷ்பாவை சந்தித்து விளக்கி, தனக்கு மட்டும் அல்ல எந்த குடும்ப வாழ்விலும் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று எடுத்துப் புரிய வைத்தாள்.
Case Studies in Social Work Practice, 3rd Edition
Craig W. LeCroy (Editor) ISBN: 978-1-118-12834-3 March 2014 432 Pages
Pingback: “ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் — குவிகம் | Mon site officiel / My