நம்பிக்கையின் மறுபக்கம்!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவை ‘நம்பிக்கை’. ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் பல காரியங்களை நாம் செய்கிறோம். நம்பிக்கைகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். ஒருவரின் நம்பிக்கை, மற்றொருவரின் மூட நம்பிக்கையாய் இருக்கலாம். ஆனால் நம்பிக்கையின்றி வாழ்வதே கடினம் – நாளை நாம் இருப்போம் என்பதே நம்பிக்கைதானே!
தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகள் “கச்சேரி” (காலச்சுவடு – பதிப்பகம்) – சமீபத்தில் வாசித்தேன். அதில் ‘புஷ்கரணி’ என்ற சிறுகதை (1943 ல் எழுதியது!) – கும்பகோணம் ‘மாமாக்’ குளம் (மகாமகக்குளம்) புண்ணிய தீர்த்தம் பற்றி வருகிறது. கதை சொல்லிக்கு அந்த குளத்தின் மகிமைகளில் நம்பிக்கை கிடையாது. மேலும் அதில் குளிப்பதை நினைத்தாலே அவர் உடம்பு நடுங்குகிறது. தேசத்தின் பல மூலைகளிலிருந்தும் ஜனங்கள் வந்து, துணிகளைத் துவைத்து, தங்கள் உடம்பைத் தேய்த்துத் தேய்த்து அவர்கள் பாவங்களை வழித்து விடுவதைப் பார்த்தால், அவரால் நம்பவே முடியவில்லை – கனவு போல் தோன்றுகிறது. அவர்களது சகிப்புத் தன்மை வியக்க வைக்கிறது!
சர்வதேச பாபங்கள் எல்லாம் அதில் கரைந்திருக்கின்றன. யாத்ரிகர்களின் விசித்ர வேஷ்டி அழுக்குகளை யெல்லாம் அந்தப் புண்ய தீர்த்தம் ஆட்கொண்டிருக்கின்றது! இதைவிட வேறென்ன லக்ஷணம் வேண்டும்? “இவ்வளவு நீருடன் உன் பாபங்களைக் கரைக்க நான் சித்தமாயிருக்கையில், இன்னும் கிணற்றடித் தவளையாகக் காலங்கழிக்கும் மூடா……” என்று அவரை நிந்திக்கிறதாம் குளம் – இருபது வருஷமாக அதில் (ஓரிரண்டு முறைக்கு மேல்) தன் உடம்பை நனைத்ததாக நினைவேயில்லை என்கிறார்!
‘நீ ஏன் ஸ்னானம் பண்றதில்லை இதில்? பழகப் பழகப் பாலும் புளிக்கும்பாளே, அதுமாதிரி ஆயிட்டுதோ?’ என்ற கேள்விக்கு, ‘பழகிப் பழகி உங்களுக்குப் புளியே இனிக்கிறபோது….’ என்கிறார்.
இந்த சிந்தனைகளுக்கெல்லாம் காரணம், அவரது துண்டினை, பாட்டி அந்தக் குளத்தில் சிரத்தையாக ‘அறஞ்சிண்டு’ வந்ததுதான்! அதனால் துண்டுக்கு வந்த வாசமும், பழுப்பு நிறமும் இவரை மிகவும் பாதிக்கின்றன – சலவைக்குத்தான் போட வேண்டும் என்று நினைக்கிறார்.
இந்தப் பாப புண்ணியங்களைத் தாண்டி, அந்தக் குளத்தை வர்ணிக்கும் தி.ஜா. வின் கைகளில் முத்தமிடத் தோன்றுகிறது! சுற்றிலும் பதினாறு அழகிய மண்டபங்கள், வட்டமிடும் நாரைக் கூட்டம், சூரியனின் இந்திர ஜாலங்கள், மின்சார ஒளி நெளிந்து குலுங்குவது, வண்டி விளக்கின் மினுக்கொளி நீர்ப் பரப்பில் நீண்டு நீந்துவது, புண்ய தீர்த்தத்தின் காம்பீர்யம் அதனால் மனதில் பெருகும் சாந்தம் – எதிர் வீட்டுத் திண்ணையில் ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து, அந்தக் குளத்தை இரசித்துக் கொண்டே இருப்போமா எனத் தோன்றும் விவரணை!
இவ்வளவு பேர் அசுத்தம் செய்தாலும், அழுகிய அங்கங்களை நனைக்கும் வியாதியஸ்தனைக் கூட கவனிக்காமல் ஸ்னானம் செய்கிறார்களே என்று சொல்லி, முத்தாய்ப்பாய்ப் பழங்கதை ஒன்றைச் சொல்கிறார் – கங்கையில் இரண்டு தொண்டுக் கிழங்கள் குளிக்க, தாத்தா ஆற்றோடு அடித்துச் செல்லப் படுகிறார். பாட்டி அலற, அருகே குளித்துக்கொண்டிருந்தவர்கள் கிழவரை மீட்கப் போகிறார்கள். அப்போது பாட்டி, ‘ஜன்மாவில் ஒரு பாபம்கூடச் செய்யாதவர்கள்தான் அவரைத் தொடலாம்’ என்கிறாள். எல்லோரும் எப்படி மனதறிந்து பொய் சொல்வது என்று நினைத்து, அப்படியே நின்றுவிடுகிறார்கள்! பாட்டி ‘பாபம் செய்யாதவர்கள் இல்லையா இங்கே’ என்று அலறுகிறாள்.
பல் தேய்க்காமல், வாயில் புகையிலையுடன், இரவு தாசி வீட்டில் கழித்துவிட்டு வரும் ஒருவன், பாட்டியின் குரல் கேட்டு, கங்கையில் ஒரு முழுக்கு போட்டான் – கிழவரைக் கரையில் இழுத்துப் போட்டான் – முழுக்கில் பாபம் தொலைந்தது, கிழவரும் பிழைத்துவிட்டார். அருகே குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு முகத்தில் ஈயாடவில்லை!
புஷ்கர்ணியிலோ, கங்கையிலோ முழுகி எழுந்தால் பாபம் போகும் என்பது ஒரு நம்பிக்கை – இப்போது மீண்டும் முதல் பாராவைப் படிக்கலாம்!
1945 ல் எம் வி வெங்கட்ராம், எம் விக்ரஹவிநாசன் என்ற பெயரில் ‘சிவாஜி’ யில் எழுதிய கவிதையை, இக்கதைக் கருவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்!
மகாமகம் வந்தது.
மகாமகம் இன்று வந்தது – ஆஹா !
மனம் மிகக் குளிர்ந்தது
பாசியிற் புதைந்திருந்த
புஷ்கரணி புனிதமாம் !
நாசி மூடும் நாற்றமின்று
மோட்ச வாசல் திறக்குதாம்!
………
……..
கண்ணால் கல்லில் மூழ்குவர் !
குளத்தில் உடலை அலசுவர் !
பண்ணும் பாபம் போக்குதற்குப்
பார்த்திருந்த சந்தர்ப்பம் !
மகாமகம் இன்று வந்தது – ஆஹா !
மடமை மிகவும் மலிந்தது !
மீண்டும் முதல் பாராவைப் படிக்கவும்! நம்பிக்கைகள், நம்பிக்கைகள் …..
(ஆதாரம்: 1) கச்சேரி – சிறுகதைகள் – தி,ஜானகிராமன் – காலச்சுவடு பதிப்பகம் .
2) காலச்சுவடு ஜூலை 2020 இதழ் )
Pingback: கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன். — குவிகம் | Mon site officiel / My official website