ஏந்தான் இந்தப் பொழுது விடிஞ்சதுன்னே! தெரியல. அதிகால நாலு மணிக்கெல்லாம் சத்தம் காதப் பொளந்தது. பொழுதெல்லாம் வயல்ல எறங்கி வேலபாத்துட்டு, கொஞ்ச நேரம் கண்ணே அசரவிடமாட்டேங்கிறாளே இந்த சிரிக்கி மவ.
தலமாட்டுல இருந்த துண்ட எடுத்து தோள்ள போட்டுக்கிட்டு, வீட்டு முன்னால இருந்த தொட்டியில மொகத்தக் கழுவினார் மயில்சாமி. தலையின் இரு பிக்கவாட்டிலும் லேசா நரச்ச முடி! அது அவருக்குத் தனியொரு அழகைத் தந்தது. முறுக்கு மீசையை இடது கையால நீவிவிட்டு நடந்து வர்ரப்பக் கம்பீரமானத் தோற்றம். உழைப்பைத்தவிர மற்ற எதையும் விரும்பாத மனசு. துண்ட தலையில கட்டிக்கிட்டு வயக்காட்டுக்குப் போரப்ப, மல்லிகா கையால ஒரு சொம்பு நீராகாரம் குடிச்சுட்டுப் போறது அவருடைய வழக்கம். மொதனா இரவு காச்சின சோத்துல தண்ணீ ஊத்தி வச்சு; அத மறுநா காலையில உப்புப் போட்டுக் கலக்கிக் குடிச்சா ஒட்டம்பே கலகலப்பா இருக்கும். அது! உழைப்பாளிகளின் உடல் ஆரோக்கிய ரகசியம்.
சுத்தமான மனுசன் கல்யாணம் பண்ண நாள்ளேயிருந்து மல்லிகாவ கை நீட்டி அடிச்சது கெடையாது. கோபம் வர்ரப்பெல்லாம் அவளுடைய ஊரப்பத்திக் கொற சொல்லி கிண்டலடிக்கிறதுனா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவளும் உடனே சிரித்து அவரின் கோபத்தை அடக்கிவிடுவாள். இது! மனைவிகளின் ரகசியங்களில் ஒன்றுதானே!.
மயில்சாமிக்குத் தன் ஒரே மகள படிக்க வச்சுப் பெரிய ஆப்பிசராக்கணும்கிற ஆசை நிறைய இருந்துச்சு. ஆனா! பொருளாதாரம் அதுக்கு எடம் கொடுக்கல. ஏதோ அரசாங்க காலேஜ்ல காசு கொரவுன்னு சொன்னதுனால அங்கே சேர்த்துவிட்டார்.
ஓம் மகள! காலேஜ்ல படிக்க வக்கிரியாமோ! யென்று பண்ணையார் கேக்கும் போதெல்லாம், ஆமாங்கய்யா! என்னமோ நான் படிக்கிறேன்னு சொன்னிச்சு; அதம் நம்ம ஊருக்குப் புதுசா வந்திருக்க கேவுர்மண்ட் காலேஜ்ல சேத்துவிட்டேங்க, யென்று சொல்லுவார்.
மையில்சாமி மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியது கெடையாது. ஏன்! மாலதி பன்னெண்டாம் வகுப்புல, மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவுல முதலிடம் பிடிச்சதுகூட அவருக்குப் பெரிதாகத் தெரியாது. ஆனால்? மாவட்டக் கலெக்டரு மெட்ரிக்குலேசன் ஸ்கூல்லே மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்குப் பரிசு கொடுத்தது மட்டும் தெரியும். ஏன்னா? அந்த மாணவி பண்ணையாரின் மகள். அங்கேயே கைக்கூலியாகக் கிடப்பவனுக்குத் தெரியாமலா இருக்கும். பிறகு எப்படி தன் மகள் வாங்கிய மதிப்பெண் தெரியும்.
மாலதி வாங்கிய மதிப்பெண்ணால்தான் கல்லூரியில் சீட் கிடைத்தது என்பது கூட மயில்சாமிக்குத் தெரியாது. ஏதோ! தன் குடும்ப நெலையை மனசுல வச்சுக்கிட்டுப் பெரிய வாத்தியாருங்க உதவி பண்ணினாங்க என்று மனதிற்குள்ளே நெனச்சுப் பெருமைப் பட்டுக்குவார்.
மாலதி , ஒல்லியான உருவம், அதற்கு எதிர்வினையாக அவளது பெரிய கண்கள். கீச்சென்ற உச்சரிப்போடு தலையை அசைத்து, அசைத்துப் பேசும் கிளியழகு. இருபது முடிந்து இருபத்தொறு வயது இருக்கும். இளங்கலை வணிகம் படித்து முடித்துவிட்டாள். ஆனால்; அவளிடம் படிச்சிருக்கோமேங்கிற கர்வம் மட்டும் என்னைக்குமே இருந்ததில்லை. நீளமானத் தலைமுடி அதனை, வகிடெடுத்து சீவி, முதுகுக்குப் பின்னாடி வைக்கோல் திரிபோல ஊசலாட்டம் போடும் சடையழகு. இயல்பானத் தோற்றம். ஆம்! சோழர்காலச் சிற்பந்தான் அவள்.
ஒரே மக என்பதாலே வீட்டுல செல்லந்தான் போங்க; எப்பப்பாத்தாலும் அப்பாகூட அன்போடு பேசுவது. ஆனால்! அம்மாமீது சற்று பாசம் குறைவுதான். இது சமுதாயத்தில் இயல்புதானே!
மல்லிகாவுக்குக் கவலையெல்லாம் மகளப் பத்திதான். ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு’ ஒரு பொட்டப்புள்ளைய பெத்துவச்சிருக்கோம்கிறதுதான். மாலதிக்கு அம்மாமீது சற்று பாசம் குறைவுன்னாளும், அம்மாவோட சமையலத் தவிர வேறு எங்கேயும் சாப்பிடப் பிடிக்காது. மல்லிகாவின் கைப்பக்குவம் அப்புடி. அதனால்தான் மயில்சாமி கைநீட்டி அடிக்கிறதில்லை போலும்.
மாலதி தன் வீட்ல இருந்து சுமார் ஐந்து மையில் தொலைவிலுள்ள ஒரு பிரைமரி ஸ்கூல்ல ஆசிரியராக வேலை பாக்கிறாள். கல்லூரியில் படிக்கிறப்ப தன் தோழிகளிடம் சொல்லுவா, நான் படிச்சு முடிச்சாவுடனே பெரிய நிறுவனத்தில வேல பாத்து கை நிறைய சம்பாதிக்கணும்னு. இது அவளுடைய கணவாகவும் இருந்தது. ஆனா! அதுக்கும் ரெக்காமண்டேசன் வேணும்கிறது பிறகுதான் அவளுக்குப் புரிந்தது.
பிள்ளைகளின் கனவு பெற்றோருடைய பொருளாதாரத்தில் சிக்கித்தவிப்பது, நவீன யுகத்தில் இயல்புதானே.
கிடைத்ததை ஏற்றுக் கொண்டு நம்பிக்கையோடு வாழவேண்டும் என்பதை உணர்ந்தவள் மாலதி. அதனால்தான், தான் வேலைபார்க்கும் ஸ்கூல்லேயே ஒரு முன்மாதிரி டீச்சரா இருக்கணுங்கிற ஆர்வம் அவளுக்குள்ளே அதிகமாக இருந்தது.
ஸ்கூல்ல இருக்கிற குழந்தைகளுக்குத் தாயாகவே மாறிப்போனால் அவள். யாருக்குத்தான் பிடிக்காது? அந்த மழழைகளின் பேச்சுக்களும் அசைவுகளும். ‘குட்மார்னிங் மிஸ்’ என்ற அக்குழந்தைகளின் ஆங்கில உச்சரிப்பில் தன்னையே மூழ்கடித்துக் கொள்வாள். மழழைகளிடம் அவள் காட்டும் பரிவு, குடும்ப வறுமைக்கு ஆறுதல் மொழியாக இருந்தது.
ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு, வீட்டுக்குக் கெலம்புரத்துக்காக அந்த ஸ்கூல் முன்னாடியே நின்றுகொண்டிருந்தாள். அவ்வழியே அதிகமான பேருந்து போக்குவரத்து கெடையாது. ‘ஷேர் ஆட்டோதான்’ பிரதான வண்டி.
நீண்ட நேரம் காத்துக்கொட்டிருந்தாள். பிறகு ஒரு ஆட்டோ வருவதை மகிழ்வோடு பார்த்தாள். எழுபேரை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த அந்த வண்டியைப் பார்த்து கைநீட்டி நிறுத்தினாள். இவள் அருகில் நின்றது. அதுல ஏறி அமர்ந்தாள். அது! மார்கழி மாதம் ஐந்தரை மணிக்கெல்லாம் பனி விழ ஆரம்பித்துவிடும். எட்டுபேர் நெருங்க உக்கார்ந்ததால் குளிர் அந்த அளவுக்கு இல்லை.
ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்த எழுபேருமே மில்லுல வேலை பாக்குற கூலியாளுக. இவங்க தெனமும் அந்த வண்டியிலதான் வருவாங்க. ஏன்னா? வேலை முடியரதுக்கும் வண்டி எடுக்கிறதுக்கும் நேரம் சரியாக இருக்கும் அதனாலதான். இந்த வண்டியை விட்டுட்டா அடுத்தவண்டிக்கு டிக்கெட் சேர்ரவரைக்கும் நிக்கணும். கொஞ்சம் நேரமாகவே வீட்டுக்குப் போய்டலாம்னு அந்த வண்டில போறதே அவர்களுக்குப் பழகிப் போச்சு.
ஸ்கூல விட்டு வண்டி கிளம்பும்போதே சக்கரத்தின் வேகம் ரோட்டை ‘குறுக்கும் நெடுக்குமாக’ அளவெடுக்க ஆரம்பித்தது. ஆம்! டிரைவர் மது குடித்திருந்தால் வண்டிக்குத் தெல்லாட்டம் வரத்தானே செய்யும்.
அந்த, கூலி வேலை செய்யும் பெண்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. தங்கள் கணவன்மார்களும் தினமும் இதே நிலையில்தானே வீடுவந்து சேர்க்கின்றனர். இந்தப் பழக்கத்தால்தான் இவர்கள் தினமும் இப்படி ஒரு மரண பயணத்தை மேற்கொள்கின்றனர்.
ஷேர் ஆட்டோவுக்குத் தலை சுற்றியதில் சாலையோரத்தில் ‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதே’ என பளிச்சிட்ட வாசகம் கண்ணில் தட்டுப்படவில்லை. அதனால்தான் என்னவோ, ஆட்டோ அதன் மீது எறி நின்றது. அதில் பயணம் செய்த அனைவருக்கும் தலை, கை, கால் என பல இடங்களில் இரத்தக் காயம் ஏற்பட்டது, மாலதியைத் தவிர.
மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான பேருந்துகள் தவிர மற்ற நிறுவனங்களுக்கு வசதியாக அதிவேகத்தில் செல்லக்கூடிய சரக்கு லாரிகள் அதிகம் செல்லும் சாலை அது. பெரும்பாலும் சாலை விரிவுபடுத்துவது என்பது கார்ப்புரேட் நிறுவனங்களுக்காகதானே!
ஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி எறியப்பட்ட மாலதி, எழுந்திரிக்க முடியாத மயக்கத்தில் கிடந்தாள். சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சற்று மயக்கம் தெளிந்து கண் இமைகளைத் திறந்தாள், லாரி வருவது அவளுக்கு மங்களாகத் தெரிந்தது. அருகில் வந்து அவளைத் தாண்டி நிற்காமல் சென்றது அந்த லாரி. அலறித் துடித்தாள். கண்ணில் நீர் தாரை தாரையாகக் கொட்டியது. தன் இரு கைகளாலும் இருத் தொடைப் பகுதியையும் பிடித்துக்கொண்டு அலறிக் கொண்டே இருந்தாள்.
ஆம்! அந்த சரக்கு லாரி மாலதியின் கால்கள் மீது எறி சென்றது. மயக்கம் தெளிந்தாலும் மரண வேதனை அவளுக்கு.
‘சரக்கு லாரி’ என்பதால் நீக்காமல் சென்றதோ! இல்லை, அதன் பின்னால் ‘தேர்தல் அவசரம்’ என்று எழுதப்பட்டிருந்தது. நூறு சதவீத வாக்கினை உறுதிபடுத்தியதா அந்த விபத்து.
மாலதி! வீட்டின் மூலையில் ஊனமாகக் கிடகிக்கிறாள், பெற்றோருக்குப் பாரமாக என்று ஊரெல்லாம் ஒரே பேச்சு. அவளது கண்ணீரிலும் பெற்றோர்கள் கண்ணீரிலும் கனவுகள் ஒவ்வொன்றாய் கரைந்த வண்ணமாக இருந்தன.
மகிழ்ச்சி நல்ல முயற்சி……. சொற்களில் தொடர் பிழை உள்ளது
LikeLike