குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
இந்த மாதத்திலிருந்து “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடல்கள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
பிள்ளையார் ! பிள்ளையார் !
பிள்ளையார் ! பிள்ளையார் !
எங்கள் வீட்டுப் பிள்ளையார் !
என்னைக் காக்கும் பிள்ளையார் !
எனக்குத் துணையே பிள்ளையார் !
ஓமின் வடிவம் பிள்ளையார் !
தடைகள் நீக்கும் பிள்ளையார் !
ஔவைப் பாட்டி வாயினால்
அகவல் தந்த பிள்ளையார் !
என்னை பார்க்கும் பிள்ளையார் !
எழிலாய் சிரிக்கும் பிள்ளையார் !
தும்பிக்கைக் கொண்ட பிள்ளையார் !
நம்பிக்கை தரும் பிள்ளையார் !
அம்மா அப்பா இருவரின்
அன்பைப் பெற்ற பிள்ளையார் !
அகில உலகைச் சுற்ற அவரை
சுற்றி வந்த பிள்ளையார் !
பானை வயிற்று பிள்ளையார் !
பாசமுள்ள பிள்ளையார் !
தோப்புக்கரணம் போடுவேன் !
தினமும் நானும் போற்றுவேன் !
- அம்மா அப்பா !
அம்மா அப்பா வாருங்கள் – என்
அன்பைச் சொல்வேன் வாருங்கள் !
எனக்கு எல்லாம் நீங்கள்தான் –
இருவருமே இரு கண்கள்தான் !
சுற்றிச் சுற்றி வருகின்றீர் –
பரிவாய்ப் பார்த்துக் கொள்கின்றீர் !
வேண்டுவதெல்லாம் தருகின்றீர் – என்
விளையாட்டில் சேர்ந்து கொள்கின்றீர் !
பார்த்துப் பார்த்துப் பல வேளை –
பிடித்ததையெல்லாம் தருகின்றீர் !
சேர்த்தே அணைத்துக் கொள்கின்றீர் – எனக்கு
செல்ல முத்தங்கள் தருகின்றீர் !
கண்ணே மணியே என்கின்றீர் !
கட்டி அணைத்துக் கொள்கின்றீர் !
கதைகள் பலவும் சொல்கின்றீர் – என்
கைப்பிடித்தழைத்துச் செல்கின்றீர் !
கோயிலில் கடவுள் இருக்கின்றார் !
கும்பிட்டால் கோடி தருகின்றார் !
கண் முன்னே இரு தெய்வங்கள் –
அம்மா அப்பா நீங்கள்தான் !
அம்மா அப்பா சொல்வதையே –
தவறாமல் நான் கேட்டிடுவேன் !
சொன்னபடியே செய்திடுவேன் – நல்ல
பெயரை நானும் எடுத்திடுவேன் !
Too good
LikeLike