குமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்

 

மூன்றாவது சர்க்கம்

தாம்பத்ய வாழ்வில் ரதி-மன்மதனை போல ...

மன்மதனைக் கண்ட இந்திரனும் மனமகிழ்ந்து அருகில் அழைத்தனன்  

தனக்கு நிகராய்   ஆசனம் அளித்து அருகிலே  அமரச் செய்தனன்  

 

மன்மதனும் இந்திரனைத்  தலைவணங்கி பெருமையுடன் பேசலுற்றான்

 

“ தேவதேவரே! தங்களுக்குப் பணிபுரிய எனக்கு  ஆணையிடுங்கள்! 

இந்திர பதவி நாடி  தவம்செய்பவரைக்  காமத்தில் வீழ்த்த வேண்டுமா ?

மோட்சத்தை நாடி ஓடிவரும் பகைவரை மோகத்தில் ஆழ்த்த வேண்டுமா?

அர்த்த தர்மங்கள் அறிந்த அரக்கரை காமநதியில் மூழ்கடிக்க வேண்டுமா?

விரும்பியவ பெண் பதிவிரதை ஆயினும்  தானேதழுவி நாடிவர வேண்டுமா?    

ஊடல்புரியும்  காதல் பெண் மீண்டும்  கொஞ்சி  வர  வேண்டுமா?

வஜ்ராயுதம் ஓய்வு பெறட்டும் என் மலராயுதம்  சேவை புரியட்டும்!

சிவனையும் மயக்கிவிடும் என்அம்பிற்குமுன்  வேறெவர் நிற்க இயலும்? “

 

மன்மதன் வீரியம் நன்கறிந்த இந்திரன் உளம் மகிழ்ந்து உரைக்கலானான்

 

“சிவபிரானையும் மயக்க முடியும் என்ற உனது சொல் நனவாக வேண்டும்

குமரன் பிறந்து அசுரவதம்புரிய சிவபிரான் தவக்கோலம் நீங்கிடல் வேண்டும்

தேவர்கள்  தவிப்பை ஆற்றும்  மலர்க்கணை உன்னிடத்தில் மட்டுமே  உள்ளது

மனத்தை அடக்கிய பார்வதி புலன்களை அடக்கிய சிவனுக்காகப்  பிறந்தவள்

இமயத்தில் தவம்புரியும் பிரானுக்குப் பார்வதி பணிவிடை செய்கின்றனள்   

பார்வதி பேரழகு  சிவனை வசீகரிக்க விதைக்கு நீர் போல நீ உதவவேண்டும்

தேவரும் செயஇயலா இச்செயல் நின் பெருமையின் புகழை அதிகரிக்கும்   

தேவர்கள் யாசிக்கும் இதனை நீ முடித்தால்  மூவுலகிற்கும் நன்மை கிட்டும்

 

இந்திரன் ஆணையை சிரமேற்ற மன்மதன் அதை நிறைவேற்ற விரைந்தனன்

மதனின் தோழன் வசந்தனும் சிவவனத்தில் வசந்தருதுவை  வரவழைத்தனன்

சூரியன் வடதிசை ஏக தென்திசை நாயகி பெருமூச்சுடன்  தென்றல் வீசிட  

பெண்களின் பாதம்  பட்டால் துளிர்க்கும் அசோக மரமும் பூத்துக் குலுங்கிட    

வண்டுகள் அமர்ந்த மாம்பூவும் தளிரும்  மன்மதபாணமென உருவெடுக்க  

காதலர் மனங்கவரும் பொன்னிறக் கொன்றை மலரும் பூத்துத் திளைக்க

வனதேவதை உடம்பில் காதல்  நகக்குறிபோல் சிவந்த  மொக்குகள் துடிக்க

வசந்தஅழகியின் திலகமென  திலகப்பூ பூக்க  இதழென மாந்தளிர்  மின்னிட

பூக்களின் மகரந்தம் துள்ளியோடும் மான்களின் கண்பட்டு ஓட்டம் தடைபட  

மாந்தளிர் சுவைத்த குயிலின் கூவலை மன்மத அழைப்பென காதலி மயங்கிட

நெய்மறந்த இதழ்  சாந்துபடா கன்னம் கொண்ட இயற்கைஅழகிகள் கெஞ்ச

சிவன் உறை  வனத்தில் வசந்தகாலம் திடீரென வந்திட மக்கள்  மயங்கினர்   

 

ரதியுடன் மன்மதன் பவனி வந்திட உயிரினம் அனைத்தும்  காதலில் கலந்தன   

இணைவண்டுகள் சேர்ந்து தேனருந்தின  இணைமான்கள் தடவிச்  சுகித்தன     

பெண்யானை துதிக்கையால் ஆண் யானைக்கு வாசநீரை ஊட்டின  

சக்கரவாகமும் தான் ருசித்த தாமரைத்தண்டை பேடை இதழில் தந்தன  

பூந்தேன் அருந்திய காதல் பெண்கள் பாடியாடிட  வியர்வை துளிர்த்தன  

காதலரும் ஒவ்வொரு  பாடல் துவங்கையில் நெகிழ்ந்து  முத்தமிட

பூங்கொத்து முலையாக  தளிர்கள்  இதழாக  கிளைகள் கைகளாக அமைந்த

கொடிக் காதலி  காதலன்மரங்களுடன்  பின்னிப் பிணைந்து சுகம் பெற்றன

 

 

காதலில் கானகமே களிக்கையில் கலையாத  மனத்துடன் சிவனும் இருந்தார் 

கொடிவாயில் நந்தியும்  உதட்டில் விரல் வைத்து மற்றவற்றை அடக்கி நிற்க

கானகத்து  உயிர்களெல்லாம்  சித்திரமாய் சமைந்து அடங்கி ஒடுங்கின

 

நந்தியின் பார்வை விலக்கிய  மன்மதனும் கொடிவீட்டின்கண் சென்றான்.      

புலனை அடக்கிப் புலித்தோலில் அமர்ந்த  பிரானைக் கண்ணாரக் கண்டான்

 

சலனமற்ற கால்கள் , நிமிர்ந்த மார்பு,  குவிந்த  கரம் அவர் அமர்ந்தகோலம்

பாம்புச் சடை, காதில்  ஜபமாலை ,  மான்தோல் உடை  அவர் அணிந்தகோலம்

அச்சுறுத்தும்  விழிகள்,  நுனிமூக்கு  நோக்கும்பார்வை அவர் இருந்தகோலம்    

காற்றினை அடக்கி சலனமற்ற மேகமாய் கடலாய் தீபமாய் அமைந்தகோலம்  

நெற்றிக்கண் ஒளிவீசி  சந்திரனைப் பழிக்கும்வண்ணம் ஒளிர்ந்த கோலம்

மனத்தை நிலைநிறுத்தி தியானக் கண்ணால்  ஆத்மனைக்   கண்டகோலம்

 

கோலங்கள் கண்ணுற்ற  மன்மதன் வில்லம்பு கரம் நழுவ சோர்ந்து நின்றான்

பார்வதிதேவி பணிவிடைக்கு வரக்கண்டு அழிந்த பலம் திரும்பப் பெற்றான்

பொன்னகை ஏதுமின்றி மலரையே அணியாய் அணிந்த பேரழகி அவள்

தனத்தின் கனத்தால் துவண்ட இடைகொண்டு கொடியென வந்தவள் அவள்  

மகிழம்பூமேகலை அடிக்கடி இடைநழுவ பிடித்த வண்ணமே  வந்தவள் அவள் 

முகமலர் நாடி செவ்விதழ் தேடும்  வண்டைச் செண்டால் விரட்டியவள் அவள்

 

பார்வதியின் பேரழகு சிவனை வெல்லுமென மன்மதன் உறுதி கொண்டான்

அவள் வருகையும்  சிவனின் தவமுடிவும்  ஒரே கணத்தில் நிகழ்ந்தன

மூச்சைஅடக்கி யோகத்தில் இருந்த சிவன் மெதுவாக அதனைக் கலைத்தார் 

சிவன் அனுமதிபெற்ற நந்திதேவர் பார்வதியை பணிசெயப்  பணித்தார் 

பார்வதியின் தோழிகள் இருவர்  சிவனின் பாதங்களை மலரால் அர்ச்சிக்க

தலையில் சூடிய நறுமலர் தளர தேவியும் சிவனை விழுந்து வணங்கினாள்

‘பிறிதொரு பெண்ணைத் தேடாத கணவனை அடைவாய்’ என வாழ்த்தினார்    

அதுசமயம், சிவன்மேல் அம்பு எய்ய மன்மதனும்  தருணம் பார்த்திருந்தான்      

 

வணங்கியபார்வதி தாமரைமாலையை தன்கரத்தால் சிவனிடம் அளித்தாள்   

மாலையை சிவன் ஏற்கும் அத்தருணம் மதனும் அம்பைத்   தொடுத்தான்

உடனே காதல் துளிர்க்க பார்வதி முகத்தை சிவனும் ஆவலுடன் பார்த்தார்

பார்வதியும் மெய்சிலிர்த்து நாணிக் கடைக்கண்ணால் சிவனைநோக்கினாள் 

புலன்களை அடக்கி ஆண்ட சிவபிரான் சலனத்தின் காரணம் தேடினார் 

மலரம்பால்  தாக்க விழையும்  மன்மதனைக் கணத்தில் கண்டு கொண்டார்

கோபத்தில் வெகுண்ட சிவபிரான் நெற்றிக்கண்ணில் தீப்பொறி பிறந்தது

மறைந்த தேவர்கள் இறைஞ்சுமுன் சிவனார்   நெருப்பு மதனை எரித்தது

சாம்பலான கணவனைக் காண இயலா ரதியும் அதே கணத்தில் மயங்கினள்   

கோபாக்னி தெறிக்க சிவபிரானும்  இடத்தைவிடுத்து  சேவகருடன் அகன்றார்   

இமவானின் எண்ணம் அழிந்தது பார்வதியின் அழகு அவமதிக்கப்பட்டது

மயங்கி விழுந்த பார்வதியை இமவான் கையிலேந்தி இல்லம் சென்றான்

 

( நான்காம் சர்க்கம் அடுத்த இதழில் )

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.