படம் : நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
0
முகக் கவசத்தால் மறைத்த
முகமென்றாலும்,
கண்கள் வழியேனும்
கண்டுகொள்ள முடிகிறது…
குழந்தைகளின் சிரிப்புகளை.
00
தடைசெய்யப்பட்ட பகுதி என்றாலும்
ஒரு நாளைக்கு இருமுறையேனும்
தன் விருப்ப இடத்தில் வந்து
கால் மடக்கிப் படுத்துக் கொள்கிறது…
தெரு நாய்.
000
தொலைக்காட்சிகளின்
‘பிரேக்கிங் நியூஸ்’ கேட்டபடியே
சாப்பிடும் கணங்களில்,
தொண்டைக்குழிக்குக் கீழே
இறங்க மறுக்கின்றன…
சோற்றுருண்டைகள்.
0000
வீட்டை விட்டு
யாரும் வெளியே வருவதேயில்லை.
வெறிச்சோடி கிடக்கின்ற
ஆளரவமற்ற சாலைகள்.
பூட்டியே கிடக்கின்றன…
மளிகைக் கடைகள், ஓட்டல்கள்.
மதிய சோற்றுக்காக
மதில்மேல் அமர்ந்து
குரல் கொடுக்கும் காகத்திடம்
எப்படிச் சொல்ல..?
சமைத்து மூன்று நாட்களாகி விட்ட
வறுமையின் கோரத் தாண்டவத்தை.
0000
விலகியே இருங்கள்.
கை குலுக்காதீர்கள்.
கைக்குட்டையால் மூடியே
தும்முங்கள்.
பொது இடங்களில்
எச்சில் துப்பாதீர்கள்.
முகக் கவசம் அணியுங்கள்.
ஆட்சியாளர்கள் அள்ளிவிடும்
புள்ளி விவரங்களைக் கேட்டபடி இருக்க,
கண்களையும் காதுகளையும் மட்டுமாவது
திறந்து வையுங்கள்.