ஆதி சங்கரர்
நாம் காலப்பிரமானவாரியாகக் கதை சொல்லி வரும் பொழுது..
ஒரு சில உலக நாயகர்களுடைய காலம் எந்தக் காலம் என்று குழம்புகிறோம்!
அவர்களை எந்தக் காலக் கட்டத்தில் சேர்ப்பது?
அந்தக் குழப்பத்தால்.. அவர்களைப் பற்றி எழுதாமல் போக நேரிடுமோ?
இந்த அச்சம் நம்மைத் தாக்குவதால்..
இந்த நாயகரைப் பற்றி எழுதுவோம்.
இன்றே!
இப்பொழுதே..
அது சரி..
யாரவர்?
ஞான சூரியன்..
தத்துவ ஞானி..
வேதாந்த வித்தகர்..
ஹிந்து மதத்தின் மாபெரும் சிற்பி..
சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆதி சங்கரர்..
நமது நாயகர்.
இவரைப் பற்றி எழுத..
இவரைப் பற்றி மிகவும் ஆராய்ந்திருக்கும் இலக்கியவாதி
‘அசோக் சுப்பிரமணியம்’ இந்த இதழை எழுதிச் சிறப்பித்துள்ளார்:
அவர் இன்று – ஆதி சங்கரரது காலத்தை நிர்ணயம் சொல்வது குறித்து எழுதுகிறார்.
இனி அசோக்கின் வார்த்தைகள்:
—————————————————————————————————————————————————–
ஆதி சங்கரர் எந்தக் காலம்?
கி.மு.வா? கி.பி.யா?
சரித்திரத்தில் சாதித்தவர்களை விடவும், சரித்திரமே இதுதான் என்று சாதிப்பவர்களைத்தான் இப்போது உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது.
நம் சரித்திர முன்னோர்கள், கல்வெட்டுக்களைச் செதுக்கியபோதும்..
தாமிரப் பட்டயங்களை எழுதியபோதும், பெரிய பெரிய கோவில்களைக் கட்டியபோதும், முதுமக்கட் தாழிகளைப் புதைத்துவைத்தபோதும்..
பின்னால் அகழ்வாராய்ச்சி செய்து நம்மைப் பற்றிக் கதைகள் புனைவார்கள்…(புருடா என்றாலும் சரியே) – சரித்திரத்தின் பக்கங்களில் நம்பெயர்களை உலவ விடுவார்கள் என்றோ, அல்லது இதையே ஒரு தொழிலாகச் செய்வார்கள் என்றோ நினைத்திருக்க மாட்டார்கள்..
அட..கதை எழுதுபவர்களாவது பரவாயில்லை.. தொலையட்டும்.. ஆனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் என்று ஒரு இனம் இருக்கிறதே.. இவர்களைப் பற்றி எந்த சரித்திரத்தில் எழுத.! பலரும் புருடாவிலேயே முனைவர் பட்டம் பெற்றவர்கள்..
மூளைச் சலவையிலும் முனைவர் பட்டம் வேறு (இலவச இணைப்பாக)..
அது கிடக்கட்டும் விடுங்கள்.
அத்வைதம் என்ற சொல்லுக்கான பொருள் தெரியுமா..?
நானே சொல்லிவிடுகிறேன்..
”இரண்டில்லாது”
அதாவது ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டும் மாயையால்தான் இரண்டாகத் தோன்றுகின்றன என்பதே அது!
வாஸ்தவத்தில் இரண்டுமே ஒன்றுதான்..
இந்த மனுசனாகிய ஜீவாத்மாவுக்குத்தான் கடவுளாகிய பரமாத்மாவும், தானும் வேறு வேறு என்கிற நினைப்பு.. அதுவே ஒரு பெரிய கனவாகிய மாயைதான்..
என்ன க்ரிஸ்டோபார் நோலனுடைய “இன்ஸெப்ஷன்” பட லெவலுக்கு இருக்கிறதே என்று நினைப்பீர்கள்..
ஆனால் பாருங்க!
கற்பனையே கற்பனைக்கு இடம் தரும் என்று சொல்வது போல..
இதனால் விசிஷ்டாத்வைதம், த்வைதம் அப்படீன்னு மேலும் சித்தாந்தங்கள்…
( தலை கிறுகிறுத்தால்.. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு.. மேலே தொடரவும்).
அத்வைதம் என்னும், இன்னுங்கூட பலராலும் முழுவதுமாக விளங்கிக்கொள்ள முடியாதத் தத்துவச் சிகரத்தைக் கொடுத்தவர்தான்..
ஆதி சங்கரர்..
திருவிளையாடல் பட தருமி கணக்காக, சுரத்தே இல்லாமல்…
“ஆமா. அதுக்கென்ன, இப்போ..?” என்று கேட்காமல் மேலே படிக்கவும்.
இந்தியத் தத்துவ மரபின் தந்தை அப்படிஎன்று எங்கே பெருமை வந்துவிடுமோ என்று பயந்து. அவரை சரித்திரத்தின் பின்பங்கங்களுக்குத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டார்கள் – மேலை நாட்டு, குறிப்பாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள்..
அதுல அவங்களுக்கென்னய்யா ஆதாயம்னு நீங்க நினைக்கலாம்.. கேட்கலாம்..
இருக்கே.!
மதத்தை ஒரு கட்சியைப் போல் வளர்ப்பவர்களுக்கு, பாரதத்தில் அநாதிகாலமாக இருந்துவருவதாகக் கூறப்படும் ஸனாதன மதமும், இதிகாச, புராணங்களும் அவற்றின் தொன்மையும் இடைஞ்சல்தானே?
வியாபாரத்திற்குக் குந்தகம்தானே ?.
அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்.
அவர்களின் ஆராய்ச்சி உள்நோக்கமுடையது என்பது அதிகபட்சமாக வைத்துக்கொண்டாலும். குறைந்தபட்சம் தங்களை உயர்ந்த இனமாகவும்,
ஏற்கனவே நாகரீகமில்லாத காட்டுமிராண்டிகள் என்று நம்மை அடிமைப் படுத்தியதை.. நியாயப்படுத்துவதற்காகவது அது பயனாகுமல்லவா?
சரி.. ஆதி சங்கரர் பிறந்த காலத்துக்கு வருவோம்.
பொதுவாக மேற்கத்தியர்களின் ஆராய்ச்சிபடி கி.பி 788-820 என்பதை அவரது காலமாகக் கணிக்கிறார்கள்.
அதற்குச் சான்றாக அவர்கள் நமது சரித்திர நேரக்கோட்டையே நேர்கோடாக இல்லாமல் கோணல் கோடாக்கியது வேறுகதை.
கல்ஹணர் என்னும் காஷ்மீரக் கவி எழுதிய “ராஜ தரங்கிணி” என்கிற நூலிலும்..
நேபாள ராஜவமிசாவளி நூலிலும், இலங்கையில் தொகுக்கப்பட்ட பௌத்த “மஹாவம்ஸ”, நூலிலும் ஜைன நூல்களின் கொடுக்கப்பட்டிருக்கும் சில மேற்கோள்களிலும்படி.. மஹாபாரதக் காலத்திற்குப் பின் வந்த ராஜ வமிசத் தகவல்கள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன.
ஆனால் பொதுவாக எல்லா சங்கர மடங்களிலும், உள்ள குருபரம்பரை வரிசைகள்படி..
அவர் பிறந்தது கலியில் 2593-லிருந்து 2625 வரை என்று தெரிகிறது..
அதாவது கி.மு. 509-477.
இது புத்தர் காலமாகிய கி.மு. 563-483க்கு அருகிலேயே வந்துவிடுகிறது.
அதாவது புத்தரின் 54 வயதிலே சங்கரர் பிறந்து புத்தர் மஹாபரி நிர்வாணம் அடைந்து 5 ஆண்டுகளுக்குப் பின் மறைந்ததாகக் கணக்கு வருகிறது.
இன்னொரு கணக்குப்படி புத்தரே சங்கரரின் மறைவுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே பிறந்து ( கி.மு. 480), கி.மு 400-களில் மறைந்ததாக சொல்லப்படுகிறது.
மகாவீரரோ கி.மு. 599-527 அல்லது கி.மு. 540- 468 என்கிறது சரித்திர ஆராய்ச்சி!
இவர் 72 ஆண்டுகள் வாழ்ந்ததாக கணக்கு.
ஆக புத்தர் , மஹாவீரர் மறைந்து 18 வருடங்களுக்கு அப்புறமோ அல்லது சங்கரர் வாழ்ந்த காலத்திலோ வாழ்ந்திருக்க வேண்டும்..
சங்கரர் சமண மதக்கொள்கைகளையும், புத்தமதக் கொள்கைகளையும் கண்டனம் செய்திருந்தால். அது அவர்களுடைய மறைவுக்குப் பிறகே இருந்திருக்க முடியும்.
இல்லையென்றால் மண்டனமிசிரரோடு வாதம் புரிந்தார்போல், அவர்களோடேயே அவர் வாதம் புரிந்திருக்கமுடியுமே!
இதையெல்லாம் வைத்து சங்கரரை ரொம்பவும் பின்னாடி (ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பின்னால்) கொண்டுவந்துவிட்டால் ஆராய்ச்சி முடிவுற்றதாக ஆகிவிடுமா?
அங்கும் பல ஓட்டைகள்!
கேட்கவேண்டிய.. ஆனால் கேட்கப்படாத கேள்விகள் இருக்கின்றனவே?
மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களும், ஓரியண்டலிஸ்டுகளும் ஒரு பக்கம் இருக்கட்டும்.
அவர்கள் காட்டும் சந்திரகுப்த மௌரியனின் தொடங்கி மேலும், கீழுமாக அரச வமிசங்களை நிர்ணயித்து.. பல கேள்விகளுக்கு பதில் தேடாமலேயே, சொல்லாமலேயே அரைகுறையாக ஆராய்ச்சி செய்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அவர்கள் லிஸ்ட் – செல்யூகஸ் நிகேடரை மையமாக வைத்து..
புத்த/ஜீனர்களின் சரித்திரங்களை ஒட்டி சந்திரகுப்த மௌரியன், பாஹ்யான், ஹுவான் சுவாங், காளிதாஸர் காலம், பூர்ணவர்மன் என்று ஏதோ ஊர் பேர் தெரியாத மன்னன் என்று எல்லாவற்றையும் அவர்கள் வசதிக்கேற்ப பின்னும் முன்னும் தள்ளி ..
நம்பத்தகுந்தமாதிரியான கதைப்புனைவை சரித்திர ஆராய்ச்சி என்னும் பெயரில் முன்வைக்கிறது..
அவர்களே சொல்லும் 788-820 காலக் கட்டத்தில்..
காஞ்சியிலே பல்லவ நந்திவர்மன் 2க்குப் பிறகு வந்த தந்திவர்மன் ஆண்டிருக்கிறான்.
அதே காலகட்டத்தில் சோழர்களின் மறுமலர்ச்சி விஜயாலய சோழனிலிருந்து (848-891) தொடங்குமுன். பாண்டிய நெடுஞ்சடையன்/வரகுணவர்மன் (765-815) ஆண்டிருக்கிறான்.
சேர நாட்டின் சரித்திரமே ஏறக்குறைய 6-8 நூற்றாண்டுகளில் காணப்படவில்லை.
குலசேகர வர்மாக்கள் எட்டாவது நூற்றாண்டிலிருந்து வரும்வரை. சோழர்கள், பாண்டியர்கள் என்று இவர்கள் வசம்தான் கேரளா/சேரநாடு இருந்திருக்கிறது.
தென்னிந்தியாவில் ஒரு இளந்துறவி பிறந்து. புயலாகப் புறப்பட்டு,
பத்ரிநாத், கேதாரநாத், காஷ்மீர், துவாரகா, பூரி, காஞ்சி, திருச்செந்தூர், கன்னியாகுமரிவரைக்கும். பாதயாத்திரையாகவே சென்று, பலரை வாதங்களில் தோற்கடித்தார் என்றால்..அவரைப் பற்றிய சமகால மன்னர்களோடு தொடர்புடைய சரித்திரங்கள் எங்குமே காணாமல் போய்விடுமா?
அவரே கூட அதே காலத்தவராக அவருக்குச் சிறிது காலத்துக்கு முன்பே இருந்திருக்கக் கூடிய.. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், பரஞ்சோதியார் போன்றோரைப் பற்றிகூட சிறிதளவும் கேள்விப்படாமலா இருந்திருப்பார்?
குறிப்பிடாமல் இருந்திருப்பாரா? அவருக்குப் பின்வந்த கியாதி பெற்ற சோழ, பாண்டியர்கள் கூடவா அவற்றைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்?
அது சரி! எத்தனையோ பேர் தெரியாத மதங்களையெல்லாம் கண்டனம் பண்ணிய ஆதிசங்கரர்..கிறிஸ்து பிறந்து முதலாம் நூற்றாண்டிலேயே அவரது சொந்த நாட்டிலேயே வேறூன்றத் தொடங்கிவிட்ட கிறிஸ்துவ மதத்தை ..
விட்டுவைத்திருப்பாரா?
620 களிலேயே கேரளாவிலேயே சேரமான் பெருமாள் அரசர் ஒருவர் மெக்காவுக்கே சென்று .நபிகள் நாயகத்தைப் பார்த்து, மதம் மாறி, பின்பு கேரளாவுக்குத் திரும்பி..
சேரமான் ஜும்மா மசூதியைக் கட்டி இஸ்லாத்தை கேரளாவுக்குக்கொண்டு வந்துவிட்டாரே. அவருக்குப் பின்னாளில் வந்த சங்கரர், அதைக் கேள்விப்பட்டு, கை கட்டிக் கொண்டிருந்திருப்பாரா?
வாதுக்கு அழைத்து ஒரு கை பார்த்திருக்கமாட்டார்?
அதுவும் அந்த அரசர் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கா நல்லூர் தாலுக்காவிலே இருந்துகொண்டு ஆண்டவர்! காலடிக்கு வெகு சமீபம்!
காஞ்சிப்பெரியவர் “சங்கரரின் கால நிர்ணயம்” என்கிற தலைப்பிலே 26 அத்தியாயங்களில் அடுக்கடுக்காக வைத்திருக்கிற கேள்விகளும், வாதங்களும் பல முக்கியமான கேள்விகளை வைக்கின்றனவே!
ஏன் அவற்றையெல்லாம் இந்த சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை?
வட இந்திய சரித்திரங்களை வக்கணையாக எழுதியவர்கள்..
தென்னகச் சரித்திரங்களுக்கு அவ்வளவாக மெனக்கெடாததேன்.. ?
ஏன்.. ஏன்.. ஏன் என்று கேட்க எத்தனையோ கேள்விகள் இருந்தாலும்..
அத்வதைக் கட்சிக்காரர்களே, இதில் த்வைதிகளாகப் பிளவுபட்டு..
தாங்கள் சார்ந்த மடமே உயர்ந்தது என்று நிற்கிறார்களே..
அதை எங்கே போய் முட்டிக்கொள்வது?
இந்திய சரித்திரத்தை சமகால வட இந்திய தென்னிந்திய ஆட்சியாளர்கள், சமய நெறியாளர்கள்.. இலக்கிய, நீதிநெறி, பக்தி இலக்கியங்கள் இவற்றின் துணைக்கொண்டு, நடுநிலை நோக்கோடு யார் ஆராயப்போகிறார்கள்?
அயோத்தியில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களே இல்லையென்று சொன்னவர்கலல்லவா அவர்கள் .
என்னப்பா! ஏதோ பெரிசாக ஆரம்பித்துவிட்டு, கடைசியில் ஆராச்சிக்கான சான்றுகளைக் கூறாமால் நீயும் ஒரு புதுக்கதையைச் சொல்லிவிட்டுப் போகிறாயே!
பொசுக்கென்று மங்களம் பாடிவிட்டாயே என்று கேட்பவர்களுக்கு.:
ஐயா! இது போன்ற பலவிஷயங்களை கிரகித்துக்கொண்டு.. எல்லாவற்றையும் ஒப்பு நோக்கி.. இப்படி இருந்திருக்கலாமா, அப்படி இருந்திருக்கலாமா என்று அலசிவிட்டு..
இப்படியும் இருந்திருக்கலாம் என்று ஒரு அதிவினய ஹேஷ்யமாகவே முடிக்கவேண்டும்..
உறுதியாகச் சொல்ல.. எனக்குத்தான் சரித்திர ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டம் உள்ளதா?
கேள்விகளைக் கேளுங்கள்..
பதில்களைத் தேடுங்கள்..
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு முடிவு செய்யுங்கள்!
அல்லது முழித்துக்கொண்டே இருங்கள்!
*************************************************************************************************************************************
அசோக்கின் வரிகள் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’. இல்லை (அவர் கோவித்துக்கொள்ளப் போகிறார்.
(அத்வைதத்தின் படி .. ‘துண்டு’ ஒன்று தானோ)
ஜோக்ஸ் அபார்ட்!
அவரது வார்த்தைகள் பட்டவர்த்தனமாக .. பல கேள்விகளை எழுப்புகிறது..
கேள்விகளால் ஓரு வேள்வியை செய்கிறார்!
‘கேள்வி பிறந்தது இன்று .. நல்ல பதில் கிடைப்பது என்று? – என்று தோன்றுகிறது.
அசோக்கின் எழுத்துக்கு நன்றி.
இந்தப் பீடிகைக்குப் பிறகு , சரித்திரம் ‘ஆதி சங்கரர்’ என்ற இந்த யுக புருஷரைப்பற்றி இன்னும் எழுதத் துடிக்கிறது..