காலம் மாறிவிட்டதா?
ஒரு சிறுகதை எழுதப் பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. ஆரம்பிக்கலாம் என்றால் முதலில் தோன்றியது இதுதான்.
இடம்
சோறு வைக்கும்
நேரந்தவறாமல் வருகின்ற
காகம் கட்டாயம்
கடிகாரம் பார்க்கிறது
ஆனால்
நாட்காட்டி பார்க்குமா ?
விடுமுறை நாளிலும்
அதே நேரத்துக்கு
வந்து கரைகிறது
நாள் கிழமை
தெரியாது அதற்கு
எனக்கோ
சனிக்கிழமை ஆஞ்சநேயர்
வெள்ளிக்கிழமை அம்பாள் கோயில்
வியாழன் என்றால் கட்டாயம் சாய்பாபா
தவிர
பிரதோஷம், ஏகாதசி
நாள் கிழமை தெரியாவிட்டால்
கோவில் வாசலில்
இடம்பிடிக்க
முந்திக்கொள்ள முடியுமா?
பிழைப்பைப் பார்க்க வேண்டாமா?
‘என்னடா இது சிறுகதை சொல்லிவிட்டு அரைகுறைக் கவிதை எழுதினால் எப்படி?’ என்று யோசிக்கிறீர்களா? வருகின்ற கவிதைகளில் 90% இப்படித்தானே இருக்கின்றன. வரிகள் பிரிக்காமல், தேவைப்படும் இடங்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி மற்றும் முழு புள்ளி சேர்த்து விட்டால் சிறுகதை ஆகிவிடும் அல்லவா?
என்ன கொஞ்சம் கோவில் வாசல்படி அல்லது குளத்தின் படிக்கட்டு, அதில் கிடக்கும் தேய்ந்துபோன சவுக்காரம், குளியல் சோப்பு, மஞ்சள் துண்டு, பல்பொடி மடித்த காகிதம், யாரோ மறந்துவிட்டுப் போன பனியன், துண்டு என்றெல்லாம் கொஞ்சம் விவரிக்க வேண்டி இருக்கும்.
கூடவே இருக்கும் பிச்சைக்காரர்கள், தர்மம் செய்பவர்கள், செய்யாமல் போய்விடும் மற்றவர்கள், வாசலில் தேங்காய் பழம் அர்ச்சனை தட்டு விற்பவர்கள் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து குறுநாவல் ஆக்கலாம்.
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி அத்தியாயங்கள் எண் போட்டு தொடர்கதையாக அல்லது நாவலாக உருமாற்றம் செய்வதும் சாத்தியம்தான். தொடர்கதை என்றால் ஒரு அத்தியாயம் முடிக்கும்போது ஒரு சர்ப்ரைஸ் நல்லது ஆவலைத் தூண்டும் ஏதோ விஷயம் தேடிப் போடவேண்டும்.
கதை என்றால் ஏதேனும் கொஞ்சம் நிகழ்வு வேண்டாமா? கூட இருந்த பிச்சைக்காரர்களில் யாரிடமோ ஏமாந்து போய் இப்படி கதியற்றுபோன கிழவியின் கதையை எழுதிக் கொள்ளலாம். சிலர் கதை என்றால் அதில் ஒரு நீதி இருக்க வேண்டுமே என்று கேட்பார்கள் அல்லவா? ஆகவே அப்படி ஏமாற்றியவன் தானும் அழிந்து போனதை கோடிட்டுக் காண்பித்தால் போயிற்று.
இது போன்ற எழுத்து வித்தைக்காரர்கள் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது அந்தக்கால மஞ்சரி ஆசிரியர் தி.ஜ.ர எழுதிய கட்டுரை ஒன்றும் இதைத்தான் சொல்லியிருந்தது.
யார் சொன்னார்கள் காலம் மாறிவிட்டது என்று?
* * * * *
பின் குறிப்பு:-
சோறு வைக்கும் நேரந்தவறாமல் வருகின்ற காகம் கட்டாயம் கடிகாரம் பார்க்கிறது. ஆனால் நாட்காட்டி பார்க்குமா ? விடுமுறை நாளிலும் அதே நேரத்துக்கு வந்து கரைகிறது. நாள் கிழமை தெரியாது அதற்கு. எனக்கோ சனிக்கிழமை ஆஞ்சநேயர், வெள்ளிக்கிழமை அம்பாள் கோயில், வியாழன் என்றால் கட்டாயம் சாய்பாபா, தவிர பிரதோஷம், ஏகாதசி …. நாள் கிழமை தெரியாவிட்டால் கோவில் வாசலில் இடம்பிடிக்க முந்திக்கொள்ள முடியுமா? பிழைப்பைப் பார்க்க வேண்டாமா?
(ஆரம்பத்தில் இருந்த கவிதை கட்டுரையாகிறது. ஒன்றுமில்லை வரிகள் பிரிக்கப்படவில்லை அவ்வளவுதான்.)