புத்தக வெளியீட்டு விழா
சந்திரமோகன் எழுதிய புத்தகம் ” சில நினைவுகள், சில கதைகள், சில கட்டுரைகள் ” .
அதன் வெளியீட்டு விழா, இனிதே நடந்தேறியது.
விழாவுக்கு தலைமை தாங்கி முதல் பிரதியை திரு. கேசவ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
அவர் படித்து பெரியவனாகி இந்த நூலைப்பற்றி பேசுவதாக கூறி பலத்த கை தட்டல்களுக்கிடையே அமர்ந்தார்.
விழாவிற்கு ஶ்ரீராம், ராஜி, அதிதி ஆகியோர் திரளாக வந்திருந்து நூலாசிரியரை வாழ்த்தினர்.
சந்திரமோகன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது
இது ஒரு குவிகம் வெளியீடு !
இந்தப் புத்தக்கத்தைப் பற்றிய முதல் கருத்து:
நினைவுகளுக்கென்று தனி அலைவரிசை உண்டு. அவை எப்போதும் தனி மனிதனுக்குச் சொந்தமானவை.
ஆனால் எப்போது அவற்றை வார்த்தைகளில் வடிக்கிறோமோ அப்போது அவை உலகிற்கே சொந்தமாகிவிடுகின்றன.
அதுதான் சந்திரமோகனின் இந்தப் புத்தகத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
அவர் கற்றதையும் பெற்றதையும் நினைவுகளாக, கதைகளாக, கட்டுரைகளாக அள்ளித் தெளித்திருக்கிறார் – விவசாயி நிலத்தில் விதைகளை விதைப்பதுபோல. சாரல்போல எளிய நடையில் நீர் வார்க்கிறார்.
சந்திரமோகனுக்கு அனுபவ அறிவு ஏராளம்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பல நிறுவனங்களில் நிதித்துறைத் தலைவராக இருந்து தற்போது சொந்த நிறுவனம் அமைத்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வருகிறார்.
நல்ல மகனாக , நல்ல நண்பனாக , நல்ல உறவினராக , நல்ல கணவராக, நல்ல தந்தையாக , நல்ல அதிகாரியாக, நல்ல நிர்வாகியாக, நல்ல மனிதராக சந்திரமோகன் இருந்து வருகிறார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டும் தெரியும்.
இந்தப் புத்தகத்தைப் படித்தபின் அனைவருக்கும் அந்த உண்மை புலப்படும்.
ஆனால் இந்தப் புத்தகத்தின் நோக்கம் அது அல்ல.
படிப்பவர் மனதில் புதிய நெற்கதிர் விளைய வேண்டும்.
கண்டிப்பாக விளையும்! அதில் சந்தேகமில்லை!!